Mar
22

ததும்பும் நீர் நினைவுகள்

 

நீரின்றி அமையாது….  

 

நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் பழகிப் போய்விட்டது.

என் மகள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் ஓடியாட வசதியாகவும், பல ரக வெளிநாட்டு கிளி வகைகள் மற்றும் குருவி வகைகளுக்கான இயற்கையான கூண்டு அமைக்கப் பட்டிருக்கும் இடமாக இப்போதைய இடம் அமைந்திருப்பது ஒரு கூடுதல் வசதி.

அங்கு இருக்கும் சில பெரிய வேப்பமரங்களில் வசிக்கும் பல நூறு பச்சைக் கிளிகள், உடன் வசிக்கும் அரிய செம்போத்து பறவைகள், அருகில் இருக்கும் குன்றில் இருந்து கொண்டு எந்நேரமும் எங்கள் வீட்டையே சுற்றி வரும் நூற்றுக்கணக்கான குரங்குகள், அபூர்வமாக பெரிய மலையில் இருந்து இறங்கி வந்து இங்கே காலார நடை பயிலும் சிங்க முக குரங்குகள், ஏராளமான மைனாக்கள், எந்நேரமும் சர்வ நிச்சயமாக பார்க்க முடியும் மரங்கொத்தி பறவைகள், நெற்பயிர் நிலமெங்கும் அமர்ந்திருக்கும் கொக்குகளும், சில நாரைகளும்..என நான் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நேரில் பார்த்தால் மட்டுமே உங்களால் நம்பமுடியும்.

காலை, மாலையில் எனக்கான நடைப் பயிற்சி செய்ய ஏராளமான இடம், சுத்தமான காற்று, எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் பறவைகளின் சத்தம், அதற்கு பல நூறு தென்னை மரங்களின் தலையசைப்புகள், மாலை சூரியனின் இளம் சிவப்பு, இரவினில் தவளைகளின் பெரும் சத்தம் என இந்த இடம் எனக்கான குட்டி சொர்க்கம்.

ஒவ்வொரு நாளும் நான் பணி முடிந்து திரும்பி வீட்டுக்கு வருவது, எனக்கு ஒவ்வொரு முறையும் விடுமுறைக்காக புதுப்புது இடத்துக்கு செல்வதைப் போன்ற ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. நகருக்கு மிக அருகில் இருந்தும் கூட, ஒரு வசீகரமான தனிமையை தன்னிடம் தக்க வைத்திருக்கும் எங்கள் பண்ணை தோட்டம்தான் இப்போதைக்கு என்னுடைய மனம் கவர்ந்த இடமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இதே தோட்டத்தில்தான், எனது அப்பா அம்மா புதைக்கப்பட்ட சமாதிகள் இருப்பது ஒரு முக்கியமான, உணர்வுபூர்வமான காரணம் ஆகும்.

இந்த பண்ணைத் தோட்டத்தினிலேயே, எனக்கான ஒரு புதிய வீடு கட்டுவதாக ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் துவக்கப் பட்டிருக்கின்றன. புதிதாக கட்டப்பட இருக்கும் புதிய வீடு, நவீனமாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும், விசாலமாக, காற்றோட்டமாக, பசுமை வீடாக, வாஸ்து தோஸ்து என இன்னும் என்னன்னமோவாக எல்லாம் இருக்க வேண்டும் என அனைவரும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நான், இந்த இடத்தினில் ஏற்கனவே கிடைக்கும் நிறைய காற்று, சூரிய வெளிச்சம், ஏராளமான ஆகாயத்துடன், நல்ல நீர்வளமும் இருக்க வேண்டும் என மிகவும் விருப்பப் பட்டேன். இரண்டு மிகப் பெரிய கிணறுகள் இங்கு அமைந்திருந்தாலும் கூட, வீடு அமைய இருக்கும் இடத்தினிலிருந்து வீட்டுக்குத் தேவையான அளவு சுத்தமான நிலத்தடி நீர் ஆழ்துளை மூலம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை.

ஒரு மாபெரும் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் என்பதால், வேண்டும் இடத்தினில் எல்லாம், வேண்டிய நீர் கிடைக்கும் என்ற நிலை இங்கு இல்லை. பாறைகளுக்கு இடையேயான நீரின் ஓட்டத்தை துல்லியமாக கணித்து சொல்ல இன்னமும் எந்த அறிவியலும் உத்தரவாதம் அளிக்க வில்லை. எங்கள் ஊரின் நில அமைப்பில்,பொதுவாக, அறுபது அடி முதல், நூற்று இருபது அடிக்குள் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், அப்படி நீர் கிடைக்கவில்லையென்றால், பின் எத்தனை அடி உள்ளே சென்றாலும் நீர் கிடைக்காது என்றும் அனுபவசாலியான எனது மாமா சொல்வார்.

சென்ற வாரத்தில் ஒரு நாள், ஆழ்துளை கிணறு அமைக்கும் இரண்டு இராட்சத வண்டிகள் வரவழைக்கப் பட்டன. முதல் முயற்சியாக வடகிழக்கு மூலையில் ஒரு இடத்தினை தேர்வு செய்து பூமியை துளைத்தனர். முதல் அடி முதல் நானூறு அடி வரை கருங்கல்லின் மிகச் சன்னமான தூள்கள் மட்டும் வந்து கொண்டே இருந்தது. நீரைக் காணோம். முதல் முயற்சி தோல்வி.

அடுத்து இடம் தேர்வு செய்யப் பட்டு மீண்டும் ஒரு முறை பூமி துளைக்கப் பட்டது. கீழே முழுவதும் பாறை இருக்கிறது என்பது மீண்டுமொருமுறை உறுதி செய்யப் பட்டது.

லேசான மனசோர்வு தலை காட்டத் துவங்கியது. எனது தங்கை தொலைபேசியில் அழைத்து, கவலைப் படாதே! நம் குடும்பத்துக்கு எப்போதுமே தண்ணீர் இராசி உண்டு! சீக்கிரம் கிடைத்து விடும் என்று ஆறுதல் சொன்னார்.

அங்கே தண்ணீர் எடுத்தே தீர வேண்டும் என்பதில் எனது மாமாவுக்கு மிகுந்த முனைப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கு பூமியின் கீழே நமது கண்ணுக்குத் தெரியாத நிலப்பரப்பின் நிதர்சனங்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

பிறகொரு நாள், ஒரு நல்ல காலை வெளிச்சத்தில், தெளிந்த மனத்துடன் நானும், அவரும் ஒன்றாக அங்கு சென்றடைந்தோம். மீண்டும் ஆழ்துளை இடுவதற்காக அங்கு அனைவரும் தயாராக காத்திருந்தனர். நீயே சென்று, உன் விருப்பப் படி இரண்டு இடத்தை தேர்வு செய் என்று எனது மாமா என்னிடம் சொன்னார். மனம் போன போக்கில் ஒரு இடத்தை சொல்லி இங்கே போடுங்கள் என்று சொன்னேன். வேலை ஆரம்பிக்கப் பட்டது.

அனைவரும் ஆர்வத்துடன் அந்த வெண்ணிறப் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனது மாமா துளையிடும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பூமியின் நில அமைப்புக்கேற்ப துளையிடும் சத்தம் மாறும் என்பது அவரின் அவதானிப்பு. நான் மட்டும், இந்த இடத்தினில், இப்போது தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், இங்கே வீடு கட்டும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும் என அந்தக் கணத்தில் தீவிரமான முடிவெடுத்தேன்.

பளீரென்ற அந்த சூரிய வெளிச்சத்தில் மலையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு நாரைக் கூட்டத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கணத்தில், எனக்கான நீரின் சத்தம் எனது ஆழ்மனதுக்குள் கேட்டது. துல்லியமான அந்த நீரின் அலசல் அந்தக் கணத்தில் துளையிடப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியின் உள்ளிருந்தும் கேட்கத் தொடங்கியது.

பாறைகளினூடே தண்ணீரை அந்த இயந்திரம் தொடும் சத்தம் கேட்டு மாமா எனது தோளை இறுகிப் பிடித்துக் கொண்டார். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரின் முகத்திலும் வெளிச்சம் புன்சிரிப்பாய் மலர்ந்து கொண்டிருந்தது.

ஏதோ ஒரு மாயக் கணத்தில், எனது தாய் தந்தையின் ஆசியுடன், அந்த பூமியிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. பாறை, நீர், பாறை, நீர் என மாறி மாறி தண்ணீர் கட்டுக்கடங்காமல் பொங்கி பொங்கி வந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அங்கே அனைவரிடமும் நிலவிய உற்சாகத்தினை என்னால் எழுத்தினில் கொண்டு வர முடியாது.
என் மாமா என்னை இறுகக் கட்டிக் கொண்டார். உனக்கு ரொம்ப நல்ல தண்ணீர் ராசி இருக்குடா கண்ணு! நமக்கு வேண்டும் போதெல்லாம் தண்ணீர் கிடைத்திருக்கிறது என்று தமது பழைய அனுபத்தையெல்லாம் நினைவுப் படுத்திச் சொன்னார்.

நூறு அடிக்கு மேலேயே அங்கு துளையிட முடியாத அளவுக்கு தண்ணீர் வந்து விட்டது. போதும் என்ற அளவுக்கு தண்ணீர் கிடைத்து விட்டாலும், எதற்கும் இருக்கட்டும், இன்னொரு இடத்தைக் காட்டு என்றார்கள். நேரெதிர் திசையை சொன்னேன். அங்கும் பிறகு ஏராளமான தண்ணீர் கிடைத்தது.

சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, காலணிகளை கழற்றி விட்டு விட்டு பொங்கி வரும் நீரின் அருகே சென்றேன். சற்று செந்நிறமாக, குளிர்ச்சியாக இருந்த அந்த நீரை எனது இரு கைகளினாலும் அள்ளிக் கொண்டேன். தண்ணீரின் மேலே வானமும், தண்ணீரின் உள்ளே பூமியையும் என்னால் பார்க்க முடிந்தது. சட்டென ஒரு கை நீரை அள்ளிப் பருகினேன்.

இனி, அது எனக்கும் எனது சந்ததிக்குமான உயிர்நீர்.

 

 

 

 

 

 

 

 

 

Mar
11

உயிர் நீர்

 

வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரும் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் இடையேயான வெளிச்சம் மட்டும் மங்காமலேயிருந்தது.

பகல் இன்னமும் முடியவில்லை என பறவைகள் கூட்டுக்குத் திரும்பாமல் தனது இரையைத் தேடிக் கொண்டிருக்க, இரவு கவிழத் துவங்கி விட்டதென ஓநாய்களும், சிறுத்தைகளும், தனக்கான வேட்டையைத் தேடி நிலமெங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்தக் காட்சி தேர்ந்த வேடனுக்கும் மிகுந்த அச்சமூட்டுபவையாக இருந்தது.

சூரியன் இல்லை. நிலவு இல்லை. மேகங்கள் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. ஆதலால் வானம் என்ற ஒன்றும் இல்லாமலே இருந்த காட்சி மக்களுக்கு மரணத்துக்கு பிறகான தனது ஊழ்வினை போல காட்சியளித்தது. கேள்விகளின் பாரம் தாங்காமல் மக்கள் அனைவரும் திரண்டு சென்று வியாச முனிவரிடம் முறையிட்டனர்.

தர்மத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு, இந்த உலகம் இதுவரை காணாத ஒரு பெரும் போர் நடக்க இருக்கிறது என்று சொன்னார். எதன் பொருட்டு என்று மீண்டும் ஒரு முறை கேட்டனர் அந்த வார்த்தையின் கனம் அறியாத அம்மக்கள் . வனம் புகுந்து திரும்பி வந்தால் மீண்டும் அவர்களுக்கான இராஜ்ஜியத்தை அளிப்பதாக சொன்ன துரியோதனன், இப்போது அதனை பாண்டவர்களுக்கு அளிக்க மறுப்பதால் இந்தப் போர் என்றார் வியாசர்.

வாக்கைக் காப்பாற்றாமல் போவனதற்காகவா இயற்கையை அழித்து இத்தனை பெரிய போர் என்று அந்த எளிய மக்கள் திகைத்து நின்றனர். தர்மத்தை அழிப்பதற்கான முதல் அம்பு அல்லவா வாக்குத் தவறுதல் என்றார் மாமுனி. குவியும் படைகளுக்காக உங்கள் பயிர்களையும், கால்நடைகளையும் அப்படியே விட்டு விட்டு நீங்கள் சென்று காட்டினுள் புகுந்து கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களில் பாரதப் போர் என்றார்.

 

தொலைவினில் இருக்கும் துவரகாவில் ஆண்கள் யாருமற்று தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கொண்டிருந்தது. போருக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறான் கண்ணன் என்றனர் துவராகவின் மாளிகைக் காவலர்கள். இன்று அவனை சந்தித்தே தீர வேண்டும் என்னும் பதைப்புடன் வருணன் வெளியில் காத்துக் கொண்டிருக்க, பாலின் பெரும் சுகந்தம் ஏதும் காற்றினில் இல்லாமல், கோகுலாபுரி தனது அடையாளத்தை முற்றிலுமாக இழந்திருந்தது.

வெளியே வந்த கண்ணன் முதலில் கண்டது வருணனைதான். அவைக்குள்ளே அழைத்து அவன் வந்திருப்பதின் காரணம் கேட்க, பஞ்ச பூதங்களின் சகல இயக்கங்களையும் நிறுத்தி வைக்க இந்திரனுக்கு உத்தரவிட்டிருப்பதன் பொருள் என்னவென்று அறிந்து கொள்ளலாமா? என்றான்.

நீ மழைக்காமல் இருக்க வேண்டிய காரணம் எதுவென்று மட்டும் சொல்கிறேன் கேள் என்றான் கண்ணன்.

ஏனென்று வருணன் கேட்க, போரிட உலர் நிலம் வேண்டாமா? என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான்.

இது வரை இப்படி நடந்ததில்லையே கண்ணா? மழை இல்லாமல் ஆறுகளுக்கு எப்படி நீர் வரும்?

போரின் குருதி பெரும் புனலாய் மாறி பொங்கி வரும். கவலை விடு வருணா!

காடுகளுக்கு, மலைகளுக்கு?

போரிடும் வீரம் சொரிந்த படை வீரர்களின் வியர்வைத் துளிகள் அக்குறையை போக்கி விடுமே!

வீடுகளில் பசித்து அழும் குழந்தைகளுக்கு உணவு சமைக்க, சமையல் பாத்திரங்களை நிரப்பவேனும் மழை நீர் வேண்டாமா கண்ணா?

தனது தகப்பனை, சகோதரனை, ஆருயிர் கணவனை இழந்து பெண்கள் ஆறாய் வடிக்கும் கண்ணீர் இருக்கும் வரை இனி ஒரு யுகத்துக்கு அந்த கவலை வேண்டாம் உமக்கு என்றான்.

திகைத்து நின்றான் வருணன். தருமத்தின் இறுதிப் போரில் எனக்கான இடமே இல்லையா கண்ணா என்றான்.

போர் என்பதே அதர்மம்தானே! அதர்மம் தழைக்கும் எந்த இடத்திலும் உனக்கான தேவை இல்லை வருணா. இந்த யுகத்தின் நோக்கம் தர்மம். நோக்கமில்லாமல் வாழ்வதற்கு மனித இனம் அனுமதிக்கப் படவில்லை இன்னும். மேலும் சொல்கிறேன் கேள்!

வருணா! பொய்க்காமல் நீ பொழியும் மழையால் ஆறாக, குளமாக பெருகி அதில் வரும் நீரால் உயிர் வளர்க்கும் இந்த இனம் தர்மத்தின் பாதையிலிருந்து விலக விலக, நீ மழைப்பதை குறைத்துக் கொண்டே வருவாயாக.

ஒடிச் செல்லும் நீரை அள்ளிக் பெருகும் கைகள், அதர்மம் தலை தூக்கும் காலங்களில் தேங்கிக் கிடக்கும் நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் குடிக்கும் காலம் வரும். சமவெளிகளை விட்டு பயிரிட மேடுகளையும், மலைகளையும் தேடி மனிதர்கள் ஓடுவர். தண்ணீருக்காக பூமியின் பாறைப் பிளவுகளை குனிந்து நோட்டமிட்டுக் கொண்டு, தம் வாழ்நாளை கழிப்பதே இனி மனிதர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது.

தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும். அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரே தீர்மானிக்கட்டும்.

தகுதியில்லாத மனிதன் அடையும் புகழ் எப்படி ஒரு புகையைப் போல நிலைக்காமலிருக்குமோ அப்படியே தர்மமில்லாத மனிதனுக்கு கிடைக்கும் நீரும் ஆகட்டும்.

வருணா! இனி, யுகம் யுகமாக, உனது கடமை தவறாமல் பூமியெல்லாம் நீ பொழிந்து வந்த நீர் வெறும் மழை நீர் அல்ல. இனி அது அவர்கள் வாழ்வின் உயிர் நீர்!!

மெய் சிலிர்த்துப் போன வருணன், பின்னகர்ந்து பவ்யமாக சர்வம் கிருஷ்ணார்ப்பணம்என்றான்.

போருக்கு ஆயுத்தமாக பார்த்தனின் சங்கொலி அப்போது அண்ட வெளியெங்கும் ஒலித்தது.

 

 

 

Dec
29

புத்தாண்டு பரிசு..

 

புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட அறம்புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் பொறியியல் கல்லூரியின் பேராசியர்களில் பலர் தத்தம் துறையினில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு பி.எச்.டி முடித்தவர்கள். பல ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களாக பணி புரிகிறவர்கள், இளைஞர்கள், மணமானவர்கள், தற்போதுதான் படிப்பினை முடித்து விட்டு, புதிய கனவுகளோடு பணியினில் சேர்ந்தவர்கள், மணமாகாத ஆண்கள், பெண்கள் என அத்தனை பேருக்கும் நான் அளித்த ஒரே பரிசு புத்தகம்.

ஜெயமோகனின் இந்த அறம் புத்தகம், இவர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு விதமான மன எழுச்சியினை அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இவர்களும், என்னைப் போலவே ஏதோ ஒரு விதத்தில் இந்த புத்தகத்தில் வரும் கதைகளில் தம்மை பொருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இத்தனை பேரில், மிகக் குறைந்த சதவீதம் பேர் படித்து, அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த கதைகள் பிடித்திருந்தாலும் எனக்கு சம்மதமே. இலக்கியம் என்றொரு அற்புத உலகின் வாசலை இவர்களில் ஒரு ச்ிலருக்கேனும் திறந்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சி.

இவ்வளவு பேருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட புத்தகத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று உங்கள் பேராசிரியர்களுக்கு ஒரு சிறிய கட்டுரையாக எழுதிக் கொடுங்கள்! அதை நான் இந்த புத்தகத்திலேயே இணைத்து தருகிறேன் என்று எனது நண்பர்கள் பவா செல்லதுரையும், ஷைலஜாவும் கூறினார்கள். அதன்படி, நான் எழுதி, புத்தகத்தில் இணைக்கப் பட்டிருக்கும் எனது அறிமுக உரையினை கீழே கொடுத்திருக்கிறேன்.

அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

எனது அறிமுக உரை:

மீண்டும் ஒரு புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் நிற்கிறோம். என்ன விலை கொடுத்தாலும் கடந்து போன நாட்களை நம்மால் மீண்டும் திருப்பி கொணர இயலாது. அதே போல் எதிர் வரும் நாட்களில் நமக்கான எந்த இரகசியத்தை காலம் ஒளித்து வைத்திருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. இடையில் இருப்பது இந்த நொடி ஒன்று மட்டுமே. இந்த ஒரு நொடிக்கான வாழ்க்கையை நாம் எந்த மாதிரியான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே, எதிர்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

வெற்றிகரமான வாழ்வாக நாம் கருதுவது, வசதியான வாழ்க்கையை மட்டுமே. தேவைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் நமது வாழ்க்கையில், எப்போதும் எதன் பின்னாலோ ஓடிக் கொண்டே இருப்பதே நமது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி, தேடிப் பெறும் எதுவுமே, அதை விட இன்னொன்றை நமக்கு ஒரு புதிய இலக்காக நிர்ணயத்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இலக்குகள் மாறுகிறதே தவிர எப்போதுமே ஓட்டம் நிற்பதில்லை. நம் வாழ்நாள் முழுமைக்குமான ஓட்டம் அது.

பொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது. அதற்கு சான்றாக, மகாத்மாவையோ, சுபாஷ் சந்திர போஸையோ, பகத் சிங்கையோ காட்டுவதை விட, நமக்கு அருகில் வாழ்ந்த, நாம் அறிந்து கொள்ள மறந்த எளிய உண்மை மனிதர்களை காட்டுகிறது இந்த அறம் புத்தகம்.

இந்த புத்தகத்தில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் எனக்கு அறம், வணங்கான், யானை டாக்டர், சோற்றுக் கணக்கு, நூறு நாற்காலிகள், கோட்டி, மற்றும் உலகம் யாவையும் போன்ற கதைகள் மிகவும் பிடித்திருந்தன. அதிலும் யானை டாக்டர் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அதில் வரும் டாக்டர் கே போன்ற மனிதரைப் பற்றி இது நாள் வரை அறிந்து கொள்ளாமலே இருந்திருக்கிறோமே என்று மிகவும் வெட்கப்பட்டேன்.

நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது, வேறு சில கதைகள் வேறு பல காரணங்களுக்காக உங்களுக்கு பிடித்திருக்கலாம். உண்மை மனிதர்களின் கதைகளாகிய இவைகள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு இடத்திலாவது நம்மை நாமே ஒரு அகப் பரிசோதனை செய்து கொள்ள தூண்டும். அந்த உணர்வு நமது பண்பாட்டின் தொடர்ச்சி.

நமது வாழ்க்கை பல ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாற்றின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நமது வேர் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வினாலும், கடும் உழைப்பினாலும் தம்மை வாழ்வினில் நிலை நிறுத்திக் கொண்ட பல நூறு எளிய மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது. நமது இரத்தத்தின் மூலக் கூறுகள் நமது நிறம், உயரம், எடை போன்ற புறப் பொருள்களை மட்டுமே தலைமுறை, தலைமுறையாக கடத்தி வரவில்லை. இது போன்ற அறம் சார்ந்த அக உணர்வுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அறம் என்பது புரியாத அர்த்தம் கொண்ட ஒரு பழமையான தமிழ் வார்த்தையல்ல. அது நமது கடமையினை நாம் சரியாக செய்து முடிப்பதை குறிப்பிடுவது. இந்த கதைகளில் வரும் மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சரி என்று பட்டதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் செய்து முடித்தவர்கள். இந்த புத்தகத்தின் மூலம் காலம் கடந்தும் வரலாற்றின் பக்கங்களில் நிலை கொண்டு விட்டார்கள்.

ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் பொறுப்பில் இருக்கும் நானும், அங்கு கல்வி பயிற்றுவிக்கும் வாய்ப்பினை நீங்களும் பெற்றிருப்பது ஏதோ ஒரு தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அடுத்த தலைமுறையினை கட்டி இணைப்பதற்காக காலம் பிணைத்திருக்கும் ஒரு சங்கிலித் தொடர் என்றே நான் நம்மை கருதுகிறேன்.

அறம் சார்ந்த வாழ்க்கை நம்முடையது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பினை வாழ்க்கை நமக்கு எப்போதுமே அளித்து வருகிறது. ஒரே ஒரு இளம் தலைமுறையின் மனதினை நாம் வென்றால்கூட நமது வாழ்க்கை இந்த புத்தகத்தில் வரும் மனிதர்களின் வாழ்வினைப் போல அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த புத்தகம் ஏதோ ஒரு சில உண்மை மனிதர்களைப் பற்றிய கட்டுரை தொகுப்பு மட்டும் அல்ல. தமிழில் இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த கதை வரிசை ஆகும். இதனை எழுதிய ஜெயமோகன் நமது காலத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர் என்று எப்போதுமே நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

இந்த கதைகளை நான் படிக்கும் போது, நீங்களும் இந்த கதைகளை தவறாமல் படிக்க வேண்டும் என்று விருப்பப் பட்டேன். இந்த அறம் புத்தகத்தை உங்களுக்கு புத்தாண்டு பரிசாக கொடுப்பதில் எனக்கு ஒரு பெருமிதம் உண்டு. புதிய வருடம் நம் அனைவருக்கும் மிகச் சிறப்பான வருடமாக அமைய எனது வாழ்த்துக்கள்..

உரை நிறைவு.

 

 

 

 

 

 

Dec
19

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

 

ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.

அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.

எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.

சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.

ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.

அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள். 

எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.

 

 

Dec
01

அறம் புத்தகம் வெளியீட்டு விழா

 

நண்பர்களே!

பல ஆயிரம் வாசகர்களை ஒன்றரை மாத காலம் ஒரு உன்னத மனநிலையில் நிறுத்திருந்தது என்று இந்த அறம் புத்தகத்தின் அட்டையில் ஒரு இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது நான் என் பல நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்தாம். ஷைலஜாவும் அதே போல உணர்ந்திருப்பது, பப்ளிஷர் அல்லாத அவரின் வாசக மனதை காட்டுகிறது. அவர் ஒரு போதும் தொழில் முறை பப்ளிஷர் ஆக முடியாது என்னும் என்னுடைய கருத்தையும் உறுதி செய்கிறது.

அறம், சோற்றுக் கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள் போன்ற மிகச் சிறந்த கதைகள் என்னை ஈர்த்து கட்டிப் போட்டிருந்தாலும், வணங்கான் கதை எனக்கு தனிப்பட்ட ஒரு சிலிர்ப்பை கொடுத்தது. புத்தகம் வந்தவுடன், மீண்டும் அனைத்துக் கதைகளையும் படிக்கும்போது, அதற்கான காரணம் எனக்கு புரிந்தது. ஆம்! வணங்கான் ஒரு மிகச் சரியான திரைக்கதை வடிவத்தில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

திரைக்கதைக்கு தேவையானது மிகச் சிறப்பான ஆரம்பம். கறுத்தான் அதாவது வணங்கானின் அப்பா ஜமீன் அடிமைத் தனத்திலிருந்து தப்பி வெளிவந்து, ஒரு சிறிய நகரத்தில் இட்லி கடையில் வேலைக்கு சேர்வது வரை என்னால் காட்சிப் படுத்தி பார்க்க முடிகிறது. உண்மையிலேயே பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த எட்டு திக்கும் மத யானைகள் கதையில், பூலிங்கம் தனது கிராமத்தில், வைக்கோல் படப்பையை கொளுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறுவதுதான், நான் இதற்கு முன் படித்திருந்த சிறப்பான துவக்கம்.

பிறகு, கறுத்தான் எழுத படிக்க கற்றுக் கொள்வது, தனது ஆதர்ச நாயகனாக நேசமணியை முதன்முறை பார்ப்பது, பின் அரசாங்க உத்யோகத்தில் சேர்வது என்று, கதை நேர்த்தியாக நகர்ந்து கொண்டே போகிறது. இப்போது கதைக்கு தேவையானது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை. அது அந்த ஊர் ஜமீந்தார் வடிவில் வந்து சேர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டல்கள் அதிகமான போது கறுத்தான், அதாவது, கதையின் நாயகன் ஒரு முடிவெடுத்தாக வேண்டியிருக்கிறது. அந்த உக்கிரமான தருணத்தில் கறுத்தான், தன்னை மிரட்டும் தலையாரியிடம் சொல்வது

முடிஞ்சா கூட்டிட்டு போடா! சூரியன் அணையாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதோட வேலைக்காரனை பாதுகாக்குற சக்தி இருக்கா இல்லையான்னு பார்த்திருவோம்“. இது ஒரு சூப்பர் டயலாக். கதை அடுத்த கட்டத்துக்கு போகிறது.

ஜமீந்தாரின் கணக்குப் பிள்ளையே நேரிலேயே வந்து மிரட்டும் போது சொல்வதுதான் கதைக்கு மிகத் தேவையான மையப் புள்ளி.

உமக்கெல்லாம் கணக்கு வேலைன்னா பல அர்த்தம் உண்டு. அதை வச்சு நீர் என்ன ஆட்டமும் ஆடலாம். நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்த பிடி எனக்கும், எனக்கு பின்னால வர ஏழு தலைமுறைக்கும் உண்டான பிடி. இப்ப இந்த பிடிய விட்டுட்டனா எட்டு தலை முறைகளும் கீழ விழுந்துடும்

உண்மையில், இந்த மாதிரியான சக்தி வாய்ந்த மையப் புள்ளி இல்லாமல்தான் நாம் பார்க்கும் சிறந்த உலகப் படங்கள் கூட இருக்கிறது.

பிறகு, நேசமணி நேரில் வருவதும், யானை மீதேற்றி கறுத்தானை ஜமீன் இல்லத்துக்கு அழைத்து செல்வதும், அதன் பின் கறுத்தான் தனது வாழ்க்கையில் ஜெயிப்பதும் ஒரு காட்சிப் படுத்தலுக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத மிக சொகுசான கதை.

நண்பர்களே! இந்த கதையை ஒரு திரைக்கதையாக நான் பார்த்து பேசுவது எந்த விதத்திலும் அதன் தற்போதைய வடிவத்தை குறை சொல்வதாக கருத வேண்டாம்.

ஒரு மகத்தான மனிதனின் கதையை ஜெயமோகன் எழுதியிருக்கும் விதம் எப்படி ஒரு திரைக் கதைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை சுட்டி காட்டுவதற்காகத்தான் இதை நான் சொன்னேன்.

எனது அப்பாவும், இதே போல ஒரு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பிழைக்க வந்தவர். சொத்து பிரிக்கும் போது, தனது தம்பி மனைவி ஏதோ சொன்னார்கள் என்பதற்காக, தனது பங்கையும் அவரின் தம்பிக்கே எழுதி வைத்து விட்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு ஒற்றை பசு மாட்டுடன், நகரத்துக்கு பிழைக்க வந்ததாக சொல்வார்.

இப்படி இந்த அறம் கதைகளை படிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தன்னை அந்த கதையுனுள் பொறுத்திக் கொள்ள முடிகிறது. அதுவே இந்த கதைகளின் வெற்றி ஆகும். நூறு நாற்காலிகள் கதை மட்டும் அதில் ஒரு தனி வகை என்று கருதுகிறேன்.

நான் பள்ளியில் படிக்கும் போது, எங்களது பஸ் கம்பனிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு தமிழ் ஆசிரியர் வருவார். அவர் கையில் இருக்கும் 40 பக்க நோட்டு புத்தகத்தில், நெருக்கமாக வெண்பா எழுதப் பட்டிருக்கும். அதை ஒரு போதும் என் அப்பா படிப்பதில்லை. தனது கையில் வாங்கி அதை புரட்டிப் பார்த்து விட்டு அவருக்கு 25ரூபாய் கொடுக்க சொல்வார். 1980களில் அது கணிசமான பணம். எனக்கும், எங்களது கணக்கு பிள்ளை ஐயருக்கும் உண்மையிலேயே வயிறு எறியும். அப்போதெல்லாம் எனக்கு பாக்கட் மணி தினந்தோறும் 5 ரூபாய். எங்கள் கணக்கு பிள்ளைக்கு தினந்தோறும் 15 ரூபாய் மற்றும் 600 ரூபாய் சம்பளம்.

எனது அப்பா இல்லாத நேரங்களில் அந்த தமிழ் ஆசிரியர் வந்தால் அவரை அமர வைத்து கடுமையாக கிண்டல் செய்வது எங்கள் வழக்கம். அவர் பதிலுக்கு ஒரு பேச்சு கூட பேச மாட்டார். அமைதியாக அமர்ந்திருப்பார். எனது அப்பா வந்த உடன், தனது பையிலிருந்த அந்த நோட்டு புத்தகம் வெளியில் வரும். தனக்கான 25 ரூபாயை பெற்றுக் கொண்டு பேசாமால் போய்விடுவார்.

ஒரு நாள், எதற்கோ என் அப்பா தனது கல்லாப் பெட்டியின் சாவியை கொடுத்து என்னவோ எடுத்து வர சொன்னார். திறந்து அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு, கதவை மூடப் போன எனக்கு அந்த நோட்டுப் புத்தகம் கண்ணில் பட்டது. அதை எடுத்து புரட்டிப் பார்த்தேன். இன்னமும் அந்த கணம் எனக்கு தெளிவாக நினைவில் இருக்கிறது. நீல கலர் எழுத்தில் மிக நெருக்கமாக எழுதப் பட்டிருந்த பல வெண்பாக்களில் அவ்வப்போது அல்லது அடிக்கடி சிகப்புக் கலரில் வனிதாமணி என்று எழுதப் பட்டிருந்தது. படித்துப் பார்க்காமலே ஏன் அவர் பணம் கொடுக்க சொன்னார் என்ற காரணம் எனக்கு ஓரளவு புரிந்தது. எனது அம்மாவின் பெயர் வனிதாமணி.

பின்னாளில், வேறு எதற்கோ கோபித்து கொண்டு சென்றிருந்த கணக்கு பிள்ளை ஐயரை சமாதானம் செய்து அழைத்து வர வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. திரும்பி வந்த அவர் சொன்ன ஒரு காரணம், சும்மா 40 பக்க நோட்டில் கிறுக்கி கொண்டு வரும் வாத்திக்கு பணம் கொடுக்கும் என் முதலாளி எனக்கு ஏன் நான் கேட்கும் போது கொடுப்பதில்லை?

எனது அப்பா அப்போது சொன்னது, ஐயரே! அவன் படிச்சவன். அதுவும் தமிழ் படிச்சவன். அவன் சாபம் விட்டா நான், நீ யாரும் தாங்க மாட்டம்யா!

அறம் கதை எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது நீங்கள் உணருவீர்கள். இப்படி நமக்கு தெரிந்த, கேள்வி பட்ட, அல்லது தெரியாத, கேள்வி படாத அற்புத மனிதர்களைப் பற்றி கதைகள் இவை.

ஆங்கிலத்தில் Chicken soup for Soul என்ற வகையில் இப்படி ஒரு கதை வரிசை உண்டு. அதாவது அந்த கதை, கட்டுரைகளை படித்தோமானால், அதில் இருக்கும் கதை மாந்தர்கள் செய்யும் தியாகங்கள், அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஆகியவை, படித்து முடித்தவுடன், நம்மை அழ வைத்திருக்கும். நம்மை நெகிழ்ச்சியாக மாற்றி, நமக்கு இருக்கும் தற்கால சங்கடஙகள் அனைத்துமே அவைகளுக்கு முன் ஏதும் இல்லை என்று எண்ண வைப்பதுதான் அவைகளின் நோக்கம்.

பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன, அவை அனைத்துமே படித்த உடன் நாம் மறந்து விடுவோம். நம் மனதில் ஆழத்தில் ஊடுருவி சென்று அங்கே தங்கி நிற்கும் தகுதியினை சில கதைகளே பெறுகின்றன. அவைகளையே நான் இலக்கியம் என்று கருதுகிறேன்.

அறம் கதை வரிசை வெறுமே Chicken soup for soul கதைகள் அல்ல! இந்த கதைகள் எழுதப் பட்டிருப்பது ஜெயமோகன் என்னும் தேர்ந்த எழுத்தாளனால்.

கூரைக்கு பிடித்த தீ போன்றது பசி என்னும் சொற்றடர், மொத்த கதையினையும் உருவகப் படுத்தி நம் கண் முன்னே நிறுத்தி விடுகிறது. இதற்கு மேல் ஒரு வார்த்தை எனக்கு சொன்னாலும் அது அதிகம்தான். அந்த ஒரு வாக்கியம் கதையின் அடி நாதத்தை எனக்கு புரிய வைக்கிறது.

எனக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் இந்த ஒரு கதையை தவிர்த்து, மற்ற எல்லா கதைகளிலும் இப்படியான உயிர் சொற்றடர்களை என்னால் குறிப்பிட முடியும். எனக்கு பின் பேசும் அனைவரும் அதைத்தான் செய்ய இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த அறம் புத்தகம், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் என்று நான் கருதுகிறேன். என்னுடைய புத்தக அறையில், திருக்குறள், கம்பன், அகம் மற்றும் புறம், பாரதி என்ற வரிசையில் நான் இந்த புத்தகத்தை வைப்பேன்.

ஒரு வாசகனாக இந்த புத்தகம் உருப் பெருவதை என் கண் முன்னே பார்த்த வகையிலும், இக் கதைகளை எழுதிய எழுத்தாளரை நான் அறிவேன் என்ற முறையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த புத்தக வெளியீட்டு விழாவினில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்ற நினைவிலும் நான் எப்போதுமே பெருமைப்பட்டுக் கொள்வேன்

அனைவருக்கும் நன்றி

26.11.2011 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அறம் புத்தக வெளியீட்டு விழாவினில் நான் பேசிய உரை..

 

 

Nov
24

அனஸ்தீசியா..

அனஸ்தீசியா.

கேலனின் கருநிற பித்த நீர் கூற்று பொய் என்றாகிப் போனபின், கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து குணமாக்குவது என்பது ஒரளவு சாத்தியமே என்று அனைத்து மருத்துவர்களும் கருதினர். ஆனால், மருத்துவ உலகம், அத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு அப்போது தயாராக இல்லை என்பதே உண்மை.

1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான ஜான் ஹண்டர், லண்டனில் இருந்த தனது மருத்துவமனையில் தனது நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பிக்கிறார். அதற்கான முன்னோட்டமாக, அவர் பல நூறு மனித பிணங்களுக்கும், இறந்த விலங்குகளின் உடலிலும் பல அறுவை சிகிச்சைகளை செய்து பார்க்கிறார். அவரின் இடைவிடாத பயிற்சியின் காரணமாக அவரால், மிக வேகமாக உடலின் பல பாகங்களை அறுத்து, உள்ளிருந்த கான்ஸர் கட்டியினை கைகளால் தொட முடிந்தது. ஒரு வேளை அந்த கட்டி அசைக்க முடியும் கட்டியாக இருப்பின், அதனை அறுவை சிகிச்சையின் மூலம் பத்திரமான அகற்றவும் முடிந்தது.

அந்த கட்டி அசைக்க முடிந்த கட்டியாக (movable) இருப்பின் மட்டுமே அவர் இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று பரிந்துரைத்தார். அந்த கட்டி அசைக்க முடியாத (immovable) கட்டியாக இருப்பின், அவர் அறுவை சிகிச்சையினை பரிந்துரைக்க வில்லை. அந்த கட்டியினை அறுத்து வெளிக் கொணரத் தேவைப்படும் நேரம் அதிகமாக தேவைப்படும். அத்தனை நேரம் நோயாளியால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்பதே அதற்கு காரணம். மயக்க மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிராத காலம் அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1846 முதல்1867 வரையிலான காலகட்டத்தில், மருத்துவ உலகில் இரு பெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அவற்றில் முதல் கண்டு பிடிப்பு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வகைகள்.

1846ஆம் ஆண்டு, மாசுச்செஸ்ட் பொது மருத்துவமனையில் உள்ள மைய மண்டபத்தில் சில நூறு மருத்துவர்கள் குழுமியிருந்தனர். அக்டோபர் மாதம் 16ஆம் தேதி, காலை பத்து மணியளவில் அந்த பரிசோதனை நிகழ்த்தப் பட்டது. பாஸ்டனில் இருந்த வந்திருந்த அந்த பல் மருத்துவர் வில்லியம் மார்ட்டன் ஒரு சிறிய புகை நிரம்பியிருந்த கண்ணாடி குப்பியிலிருந்து ஈத்தர் எனப்படும் திரவத்தை ஒரு குழாயின் வழியாக வெளிக் கொணர்ந்தார். அதிலிருந்து வெளிவந்த அந்தப் புகையினை, அங்கே படுக்க வைக்கப் பட்டிருந்த நோயாளினை முகரச் செய்தார்.

எட்வர்ட் அப்பாட் என்னும் அந்த நோயாளி அதை முகர்ந்த சில நொடிகளிலேயே ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று விட்டான். அப்போது, அங்கிருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், மிக வேகமாக செயல் பட்டு, அவனது கழுத்தின் ஒரு துளையிட்டு, அவனது தொண்டைக்குள்ளே இருந்த ஒரு பெரிய இரத்தக் கட்டியினை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார். உடன், அந்த இடத்தில் சில தையல்களும் போட்டு இரத்தத்தைக் கட்டுப் படுத்தினார். சில நிமிடங்கள் கழித்த எட்வர்ட் அப்பாட் கண் விழித்தான்.

எனக்கு அறுவை சிகிச்சை செய்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், அப்போது என்னால் கொஞ்சம் கூட வலியை உணர முடியவில்லை என்று பின்பு அங்கு கூடியிருந்த மருத்துவர்களிடையே கூறினான்.

உலகின் முதல் மயக்க மருந்து கொடுத்து வலி தெரியாமல் செய்யப் படும் அறுவை சிகிச்சை முறை அங்கே நடந்தேறியது. அந்த மைய மண்டபத்தில் இருந்த மருத்துவர்கள் மட்டுமல்லாது உலகின் பிற பகுதிகளில் இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு புதிய கதவு திறந்தது.

அனஸ்திசியா கண்டு பிடிக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை நிபுணர்களால், மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை, நீண்ட நேரம் செய்ய முடிந்தது. இது உடலின் பல நோய்களும் அறுவை சிகிச்சைகளின் மூலமாக குணமாக்குவதற்கு வழி வகுத்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவர்கள் கண்டு வந்த ஒரு அற்புத கனவு இதன் மூலம் நிறைவேறியது.

 

 

Nov
11

ஜெயமோகன் வந்திருந்தார்..

 

சென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டார் இருவருமே, ஒருவரை ஒருவர் ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்திருந்ததாலோ, அல்லது எல்லா ஏற்பாட்டினையும் பொது நண்பர்கள் சிலர் பார்த்துக் கொண்டதால் வந்த சவுகரியத்தினாலோ, அனைவருமே மிக இயல்பாக இருந்தனர்.

கவிஞர் தேவதேவனும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த அவரின் புல்லின் பெருமிதம் கவிதையை அவரிடமே காட்டி சில விளக்கங்களை பெற்றுக் கொண்டேன். நீண்ட நாள் மனதில் தங்கியிருந்த அந்த கவிதைக்கு இன்னும் புதிய வெளிச்சம் கிடைத்தது.

ஜெயமோகனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறிய அவகாசத்திலும் புது புது தகவல்களாக அவர் சொல்லிக் கொண்டே போனது எனக்கு வியப்பாக இருந்தது. மலையாளிகள் இன்னமும் சாப்பாட்டினில் ஏறத்தாழ முப்பது வகையான கிழங்கு வகைகளை சமைக்கிறார்கள் என்பதுடன், ஒவ்வொரு வகை கிழங்காக அதன் பெயர், வடிவம், சுவை என்று சொல்லிக் கொண்டே போனார். அவரின் நுணுக்கமான அவதானிப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது.

மறுநாள் திருமணம் முடிந்த மதியம் அவருடைய அறைக்கு சென்றேன். அவருடைய நண்பர்கள் பலர் சூழ அங்கு அமர்ந்து ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் அப்படி பேசிக் கொண்டிருந்ததாக யாரோ சொன்னார்கள். சற்று முன்னமே சென்றிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. விவாதம் அணுமின்சாரத்தை பற்றிய எனது கட்டுரைக்கு எப்படியோ வந்து சேர்ந்தது. ஜெயமோகன் என்னுடைய அந்த கட்டுரையை ஏற்கனவே படித்து இருந்திருக்கிறார்

விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை இன்னமும் வேகமாக, சற்று ஆவேசமாகவும் சொன்னேன் என்று கருதுகிறேன். அத்தனை பேரில், ஒரே ஒருவர் மட்டும் என்னை ஆதரித்து சில கருத்துக்களை சொல்லிக் கொண்டு வந்தார். சற்று நீண்ட நேரம் நான் பேசி பல கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்தவுடன் ஜெயமோகன் பேச ஆரம்பித்தார்.

அவர் அணுஉலைகளை தான் ஏன் ஏற்க இயலாது என்பதைப் பற்றி அவரின் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தார். முதலில் அணுமின்சாரத்தைப் பற்றி, பின் உலகின் உள்ள பல அணு உலைகளைப் பற்றி, அதன் பின் இருக்கும் அரசியலைப் பற்றி என ஒரு தேர்ந்த கட்டுரையைப் போல அழகாக வரிசைப் படுத்தி பேச ஆரம்பித்தார். மெல்லிய குரலில் அப்படி ஒரு தீர்க்கமான கருத்துக்களை நான் கேட்டிருந்ததில்லை. விவாதம் என்றாலே எனக்கு குரல் உயர்த்தி பேசுவதுதான்!

அவரின் ஒவ்வொரு கருத்துக்கும் என்னிடம் மாற்றுக் கருத்து இருந்தபோதிலும், அந்த தேர்ந்த பேச்சினில் குறிக்கிட்டு பேச எனக்கு விருப்பம் இல்லை. அந்த அறையே அவரின் பேச்சினில் கட்டுண்டு இருக்கும் போது, அவருக்கும் என்னைப் போலவே அணுமின் உலைகளை ஆதரிக்கும் கருத்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று மிகவும் ஆசைப்பட்டேன்.

அந்த இரண்டு நாள் சந்திப்பிலும், ஜெயமோகனின் வாசகர்கள் அவரை எப்படி ஆராதிக்கிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. எப்போதும் யாராவது அவருடன் பேசியபடியே இருந்தார்கள். ஒரு எழுத்தாளனை அவரது வாசகர்கள் இப்படி கொண்டாடுவது, எனக்குப் பிடித்திருந்தது.

அவரின் புதிய புத்தகமான அறம்அந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பரிசாக அளிக்கப் பட்டது. எனக்கு மிகவும் பிடித்த பல கதைகள் அந்த புத்தகத்தில் இருக்கிறது. அப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவினில் பேசுமாறு என்னையும் அழைத்திருக்கிறார்கள். யார் அந்த அரிய ஆலோசனையை தந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வாசகர் என்ற முறையில் எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் பட்டதாக நண்பர் அரங்கசாமி சொன்னார்.

விரைவில் ஈரோட்டில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியில், என்ன பேச போகிறேன் என்பதை தெரிந்து கொள்ள எனக்கே மிகவும் ஆர்வமாக உள்ளது.

 

 

 

Oct
30

கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

 

கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

 

இந்த அணு உலை அத்தனை முக்கியமென்றால், இதனை போயஸ் தோட்டத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் ரோட்டிலேயோ அமைத்துக் கொள்ளட்டுமே?

சமீபத்தில் வலைத் தளங்களில் நான் படித்த பல ஆவேசமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இடிந்தகரையில் ஒரு பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டதும், கூடங்குளம் அணுமின் நிலையத்தினை உடனே இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து இருப்பதும் நம் சுற்று சூழல் ஆர்வலர்களை இது போன்ற மேலும் பல வினோதமான கேள்விகளை கேட்கத் தூண்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல், நமது நாடு எதிர் கொண்டிருக்கும் மிகப் பெரிய மின்சக்தி தேவைக்கான பல நூறு இலவச யோசனைகளும் நமக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் செயல் படுத்த முடியுமானால், இப்போது இருக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களையே கூட நாம் மூடிவிடலாமோ என்று எனக்குத் தோன்றியது. பதினைந்தாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்து, பல வருடங்கள் சர்வதேச அளவில் அணு சக்தி திறன் கொண்ட நாடுகளுடன் மிக நீண்ட போராட்டம் நடத்தி பெற்ற இந்த இரண்டு அணு உலைகளை உடனே இழுத்து மூட வேண்டும் என்பது, எனக்கு அர்த்தமற்ற, சாத்தியமற்ற கோரிக்கையாகவே தெரிகிறது.

உண்மையில், இப்போது கட்டி முடிக்கப் பட்டுள்ள இரண்டு அணு உலைகளுக்கு பிறகு, மேலும் ஆறு அணுமின் உலைகள் இதே கூடங்குளத்தில் கட்ட மத்திய அரசு பூர்வாங்க அனுமதி அளித்து உள்ளது. தென்னிந்தியா முழுமைக்குமான மின் தேவையை கூடங்குளம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கைகா போன்ற அணு மின் நிலையங்கள் மூலமாக பெருமளவு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசு திட்டமிடுகிறது.

ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு பிறகு, அணுமின் உற்பத்தி சார்ந்த முடிவுகள் அறிவியியல் துறை நிபுணர்களிடம் இருந்து, சுற்று சூழல் ஆர்வலர்கள் கையில் சென்று விட்டது. அது தவறில்லை. எல்லா சந்தேகங்களுக்கும் அறிவியியல் விளக்கம் அளித்தாக வேண்டும். அதுவும், பொதுமக்களின் உயிருக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து என்ற சந்தேகங்கள் எழுந்த பிறகு, அரசுக்கும், அறிவியியல் நிபுணர்களுக்கும் இதில் முழு பொறுப்பு உள்ளது.

ஆனால், போராட்டக் குழுவினர், மக்கள் ஆதரவு வேண்டி பேசும் பேச்சுகள் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அனைவரும் அச்சமுறும் வகையில் உள்ளதாக கருதுகிறேன். அணுமின் நிலையத்தைப் பற்றி அவர்களின் பல சந்தேகங்கள், அர்த்தமற்றதாகவே உள்ளது.

அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால், அடுத்த முப்பது நிமிடங்களில், 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் சென்று விட வேண்டும், (மன்னிக்கவும்! ஓடி விட வேண்டும் ) என்று அரசே சொல்கிறதே? என்பது அவர்களின் ஒரு முக்கிய கேள்வி.

எந்த ஒரு சாதாரண இருமல் மருந்து வாங்கினால் கூட பாட்டிலுடன் கூடிய சீட்டினை படித்துப் பார்த்தால் இது போன்ற மிகப் பெரிய எச்சரிக்கைகள் காணக் கிடைக்கும். இவையெல்லாம் சட்ட பூர்வ தேவைக்கானது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வருட காலமாக மிக பாதுகாப்பாக அணு மின்சாரம் தயாரிக்கும் நாடு நாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1969ஆம் ஆண்டு முதல் தாராப்பூர் அணுமின் நிலையத்திலும், 1986ஆம் ஆண்டு முதல் நம் கல்பாக்கத்திலும் அணுமின் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறோம். எத்தனை முறை மக்கள் பாதுகாப்பு கருதி 60 கிலோமீட்டர் தொலைவிற்கு விரட்டப் பட்டனர்?

முதலில் நமது நாட்டின் தற்போதைய, எதிர்கால மின்சாரத் தேவையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் மின்சாரத்தைக் காட்டிலும், பல மடங்கு அல்லது பற்பல மடங்கு மின்சாரம் நமக்கு தேவை என்பதை முதலில் நாம் ஒப்புக் கொள்கிறோமா?

ஆமாம்! தேவை அதிகம்தான். அதற்காக மக்களின் உயிரை பணயம் வைக்க சொல்கிறீர்களா? என்று கேட்பவர்களுக்கு ஒரு நேரடியான பதில். ஆம்! வேறு வழியில்லை என்பதுதான்.

நமது நாட்டின் தற்போதைய மின் தேவையில் 68% பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்கள்தான். 8%மின் உற்பத்தி இயற்கை எரிவாயு மூலமாகவும், 14% மின் உற்பத்தி புனல் மின் நிலையங்கள் மூலமாகவும், வெறும் 2.5% மின்சாரம் மட்டுமே அணு மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது என்று தேசிய எரிசக்தி துறையின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.

அதாவது, நமக்கு கிடைக்கும் மின்சாரம் சுற்று சூழலை மாசுபடுத்தாத, பிற தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தினை ஏற்படுத்தாத மாசில்லாத மின்சாரமா?(Clean Energy) என்று பார்ப்போமானால், மேற்சொன்ன பட்டியலை பின்னோக்கி பார்க்க வேண்டும்.

மாசில்லாத மின்சாரம் என்கிற வகையில் முதலில் நமக்கு கிடைப்பது காற்றாலைகளின் மூலமாகவும், சூரிய சக்தியின் மூலமாகவும் கிடைக்கும் மின்சாரம்தான். பெரும் பொருட்செலவில் அவைகளை நாம் நிர்மாணித்திருந்தாலும் கூட அவற்றின் உற்பத்தி திறனை கட்டுப் படுத்துவது பெரும்பாலும் நிலையில்லாத பருவநிலைதான். ஆனாலும் கூட மாசில்லா மின்சக்தி என்ற வகையில் இம்முறையில் கிடைக்கும் மின்சாரம் நம்மை பொறுத்தவரை விலை மதிப்பில்லா மின்சாரம் என்றே கொள்ள வேண்டும்.

அடுத்து, புனல் மின்நிலையம் மூலம் கிடைக்கும் ஹைட்ரோ பவர். இதற்கு நமக்கு தேவை ஏராளமான நீர்வளம் மற்றும் அவற்றை சேர்த்து வைக்கும் அளவிற்கு மிகக் பெரிய நீர்தேக்கங்கள். இவையெல்லாம் இருந்தாலும் இதற்கு ஆதாரமாக பொய்த்துப் போகாத பருவமழை மிக முக்கியத் தேவை. நமது நாட்டில் இதை நம்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், நர்மதா அணைத் திட்டத்திற்கு பிறகு பெரிய அளவிலான திட்டங்களை யாரும் சிந்திக்க துணிய மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

ஏராளமான இயற்கை எரிவாயு நம் நாட்டில் உள்ளது என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எரிவாயு இன்னும் வரவில்லை. இதை நம்பி பெரிய அளவிலான மின்திட்டங்கள் எதையும் இப்போதைக்கு செயல் படுத்த முடியாது என்பதே உண்மை.

தற்சமயம், நம் தேவையினை பெருமளவில் பூர்த்தி செய்வது, நிலக்கரியினை கொண்டு உருவாக்கப் படும் அனல் மின்நிலையங்கள் தான். இவ்வகை மின்நிலையங்கள் சுற்று சூழலுக்கு எத்தனை ஆபத்தானது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

ஒவ்வொரு அனல் மின்நிலையமும், ஒரு மாபெரும் அரக்கனைப் போல தொடர்ந்து காற்றினை மாசுபடுத்தி, புவி வெப்பத்தினை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றன. நிலக்கரியினை தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்கள் மூலமும் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால், உலகெமெங்கும் நிலக்கரியினை கொண்டு செல்லும் போக்குவரத்துக்கான எரிபொருள் தேவை மறுபுறம்.

தனது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், நமது சுற்று சூழலை பலி கேட்கும் இவ்வகை மின் நிலையங்கள்தான், நமக்கு தற்சமயம் இருக்கும் ஒரே வழியாக உள்ளது.

மாறாக அணுமின் நிலையத்தினை பற்றி பார்ப்போம். இந்த வார்த்தையை படித்த உடனேயே, உங்கள் வயிற்றில் ஒரு பந்து சுற்றிக் கொள்ளுமேயானால், உங்களுக்கு அணுகுண்டிற்கும், அணுமின் நிலையத்திற்குமான வித்தியாசம் தெரியவில்லை என்று அர்த்தமாகிறது.

அணுகுண்டு, அணு சக்தியினை கட்டற்ற முறையில் வெடிக்க செய்து பேரழிவு ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட ஒன்று. மாறாக, அணு மின் உலைகள், மிகவும் கட்டுப்படுத்தப் பட்ட அணுசக்தியினை உண்டாக்கி அவற்றின் மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்காக வடிவமைக்கப் படுகிறது.

உலகமெங்கும் இவை இரண்டுமே 60 ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளில் இருந்து வருகிறது. ஹிரோஷிமா, நாகசாகியை தவிர்த்து அணுகுண்டு வேறு எங்கும் வெடிக்க வில்லை. உண்மையில் கட்டற்ற அணு சக்தியினை வெளிப்படுத்தி பேரழிவு ஏற்படுத்தக் கூடிய அணுகுண்டுகளை நமது நாடு மட்டுமல்லாமல் பல நாடுகள் செய்து ஆங்காங்கே மறைத்து வைத்துள்ளனர். அந்த பேராபத்துகளைப் பற்றி நாம் பேச மறுக்கிறோம்

செர்னோபிலை தவிர்த்து அணுஉலை விபத்தும் வேறெங்கும் நடக்க வில்லை. செர்னோபில் விபத்துக்கு பிறகும் கூட உலகின் பல நாடுகளில் அணுமின் உலைகளை அமைத்து மின்சாரம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

அணுமின்சாரம் மாசற்ற மின்சாரம் என்று உலகின் பல சுற்று சூழல் அமைப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளது. அணு உலைக்கு எரிபொருள் கொண்டு செல்ல கப்பல், இரயில் போன்ற பெரிய போக்குவரத்து வசதிகள் தேவையில்லை. மின் உற்பத்தியின்போது, சாம்பல் போன்ற உபகழிவுகள் ஏதும் வெளிப்படுவதில்லை. நீராவியைத் தவிர வேறு எந்த புகையும் வெளிப்பட்டு காற்று மண்டலத்தை மாசு படுத்துவதில்லை.

அணுமின் உற்பத்திக்கு, அணு உலையில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நம் விரல் கனமுள்ள சதுரமான கம்பி வடிவத்தில் இருக்கும். பல கம்பிகளை இணைத்துக் கட்டி அணு உலைக்கான எரிபொருளாக அவற்றை பயன்படுத்துவார்கள். அதன் மொத்த நீளம் 14.5 அடியாகவும், எடை 320 கிலோவாகவும் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ஒரு கம்பியின் சுட்டு விரல் கனத்தில் உள்ள யுரேனியத்தில், 17000 கன அடி இயற்கை எரிவாயுக்கான சக்தி உள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

அடுத்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கான யுரேனியம் நம் உலகில் உள்ளதால், எரிபொருள் தேவை எப்போதுமே ஒரு சிக்கலாக இருக்காது. ஆனால், அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப் பட்ட பிறகு அந்த எரிபொருளான யுரேனியம் கம்பிகளை அதன் பிறகு, அதிலிருந்து கதிர்வீச்சுகள் வராமல், கட்டுப் படுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு மிகப் பெரிய சவால்.

மிகவும் பாதுகாப்பான முறையில், கனநீருக்கு அடியில் அடுத்த பல நூறு ஆண்டுகள் அந்த பழைய யுரேனியம் ராடுகளை வைத்து பாதுகாக்க வேண்டியிருக்கும். அந்த வகையில்தான், அணு மின் உலைகள், செலவு மிக்கதாகவும், அபாயம் நிறைந்ததாகவும் கருதப் படுகின்றன.

இந்தியா மட்டுமல்லாமல், அணுமின் தயாரிக்கும் உலகின் பல மேலை நாடுகளுக்கும் இதுதான் பெரிய சவால். ஆனால், இது நாள் வரை அனைத்து நாடுகளும் அந்த பாதுகாப்பு பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றன. ஒரு பரிசோதனையின்போது அணுஉலை வெடித்து சிதறின செர்னோபிலில் கூட இந்த பாதுகாப்பு ஏற்பாடு வெற்றிகரமாக செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.

Human existence is a necessary evil என்பார்கள். அந்த வகையில், இனி மின்சாரம் இல்லாமல் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழமுடியாத நிலைக்கு வந்து விட்ட பின், நாம் தயாரிக்கும் மின்சாரம் சுற்று சூழலுக்கு மாசு இல்லா மின்சாரமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதுவும், மிக அதிகமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலத்தில், அணுசக்தியினை புறக்கணிப்பது நிச்சயம் சரியல்ல

அணுமின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என் பல அநாவசியமான சந்தேகங்கள் மக்களிடையே எழுப்பப் பட்டு வருகின்றன. அதற்கு தகுந்த விளக்கங்கள் கூறி அவர்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது, அரசின் கடமை மட்டுமல்ல. அந்த பொறுப்பு அறிவியியல் துறையை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் உண்டு.

என்னளவில், நான் எதிர்கொண்ட கேள்விகள் சிலவற்றிற்கு பதில் அளிக்க முயல்கிறேன்.

1. உலகின் பல நாடுகளுக்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஆஸ்திரேலியாவில் ஏன் ஒரு அணுஉலை கூட இல்லை?

ஆஸ்திரேலியா இயற்கை வளங்கள் மிகுந்த ஒரு மிகப் பெரிய நாடு. அதன் மக்கள் தொகை வெறும் 2 கோடிபேர் தான். அதனால், அவர்களின் தேவை மிகக் குறைவு. அந்த தேவையை அவர்கள் மற்ற வளங்களை வைத்தே மிக சுலபமாக ஈடுகட்டுகிறார்கள். அணுமின் உலைகள் என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடிய ஒன்று என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இருப்பின், தனது நாட்டின் சுற்று சூழல் மாசு படுவதைக் கருதி, இந்த ஆண்டில் பெரிய அணுஉலைகளை நிர்மாணிக்கும் பணிகளைத் துவக்கி இருக்கிறார்கள்.

                    2.இவ்வளவு செலவு பிடிக்கும் அணுஉலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிக விலை கொண்டதாக இருக்குமேஇது தேவையா? நம் நாட்டிற்கு இது பொருந்துமா?

மின்சாரம் என்பது வாழ்வின் ஒரு பகுதியாகி விட்ட நிலையில் அது எவ்வளவு விலையில் தயாரிக்கப் படுகிறது என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. அது சுத்தமான மின்சாரமா என்பதுதான் நமக்கு தேவையான கேள்வியாக இருக்கும். மேலும், மக்களிடம் செல்லும்போது, அவர்களுக்கு கட்டுப் படியாகும் விலையில் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

                    3.அணு மின் உலைகளின் அருகே மக்கள் வசிக்க முடியாது என்பதும், அவர்களின் அனைத்து வாழ்வாதரங்களும் பாதிக்கப்படும்  என்பதும் உண்மையா?

உலகமெங்கும் உள்ள அணு மின் உலைகளுக்கு அருகில் கடந்த அறுபது ஆண்டு காலமாக மக்கள் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலையம், நமது சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அணுமின் உலைகள் குடியிருப்புகளின் நடுவேகூட அமைக்கப் பட்டுள்ளது.

அணுஉலைகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சு வெகுவாக கட்டுப்படுத்தப் பட்டு, மக்களுக்கு ஆபத்து இல்லாத அளவிலேயே அமைக்கப் படும். எத்தனை விஞ்ஞானிகள்,பொறியாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அணுமின் நிலையத்தினுள் பணிபுரிகிறார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

                    4.எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பினும் பூகம்பம் போன்ற பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வது?

உண்மைதான்! யாரும் பூகம்பம் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட பேரழிவுகளை எல்லா அணுமின் உலைகளும் தாங்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. ஜப்பான் நாடு பூகம்பம் அடிக்கடி ஏற்படும் நாடு. அதற்கேற்றபடி அங்குள்ள அணுஉலைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். இருந்தும் அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தினால் ஃபுகுஷிமாவில் பெரிய அளவிளான அணு உலை விபத்து நேரிட இருந்து, கடைசி நிமிடத்தில் காப்பாற்றப் பட்டது.

நம் நாட்டிலும் கூட அத்தனை பெரிய பூகம்பங்கள் வராது என்று யாரும் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஓரளவிற்கு பெரிய இயற்கை அழிவுகளை தாங்கக் கூடிய வகையில்தான் எல்லா வகையான பெரிய கட்டிடங்களும், பாலங்கள், விமான நிலையங்கள் மற்றும் அணைக் கட்டுகள் வடிமைக்கப் பட்டு கட்டப் பட்டுள்ளன.

நமது முன்னோர்கள் கட்டிய கோவில் கோபுரங்களாகட்டும், உலக அதிசயங்களான, பிரமிட், தாஜ்மகால் போன்ற எந்த கட்டிடங்களுமே ஓரளவிற்கு மேல் பூகம்பங்களை தாங்கி நிற்க முடியாது . இருந்தும், நாம் நமது அறிவியல் திறனின் மீது நம்பிக்கை வைத்து வானுயற கட்டிடங்களை கட்டிக் கொண்டேதான் போகிறோம்.

நான் நமது அறிவியல் திறனை நம்புகிறேன்.

                    5. ஃபுகிஷிமா, செர்னோபில், மூன்று மைல் தீவு போன்ற இடங்களில் நடந்த அணு விபத்திற்கு பிறகு அங்கே இருக்கும் கதிர்வீச்சு  பல நூறு ஆண்டுகள், ஏன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீங்காதிருக்குமாமே?

உண்மையில், மேற்சொன்ன மூன்று இடங்களிலும் தற்சமயம் மனிதர்கள் வாழவே இல்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்க்கைச் சூழலே நிலவுகிறது என்பது உண்மை. மூன்று இடங்களிலுமே, விபத்திற்கு பிறகும் கூட மீதமுள்ள அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுதான் வருகிறது. மூன்று மைல் தீவில் ஒரு அணு உலையிலும், செர்னோபிலில் முன்று அணு உலைகளிலும் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது.

                    6. இவ்வளவு நியாயம் பேசும் நீங்கள் ஏன் போயஸ் தோட்டத்திலோ அல்லது டில்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டிலேயோ இந்த அணுமின் உலையை அமைத்துக் கொள்ளக் கூடாது?

அணு உலையினை முதல்வரோ அல்லது பிரதமரோ தங்கள் வீட்டுக்கு அருகில் அமைத்துக் கொள்வார்களா என்பது தெரியாது. அது சாத்தியமும் அல்ல. ஒரு வேளை அணுமின் நிலையத்துக்கு அருகில் வசிப்பவர்கள் மட்டுமே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்றால், அவர்கள் நிச்சயம் கூடங்குளத்துக்கு குடி வந்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இயல்பானது. அவர்களின் வாழ்வாதரத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதுமான அச்சத்தின்பால் இந்த போராட்டம் எழுப்பப் பட்டுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்குவது நமது அரசுகளின் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தகுந்த உத்திரவாதம் அளிப்பதுடன், அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் அரசு போக்க வேண்டும். அவர்களை வெளிநாடுகளின் உள்ள அணுமின் நிலையங்களுக்கும், குறிப்பாக செர்னோபில், ஃபுகுஷிமா நகரங்களுக்கும் அழைத்து சென்று பாதிப்புகளையும் பார்வையிட வைக்க வேண்டும்.

மொத்தத்தில், அரசு பொதுமக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும். எதையும் மூடி மறைக்காமல், அனைத்து சாதகங்களையும், பாதகங்களையும் அவர்கள் முன் வைக்க வேண்டும். கூடங்குளம் மக்கள் மட்டுமல்லாமல், நாட்டின் இதர பகுதி மக்களுக்கும் இந்த அணுகுமுறை முன்மாதிரியாக அமையும் என்று நம்புகிறேன்.

ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் துரதிஷ்டவசமாக நேர்மாறாக இருக்கிறது. அதிலும், பிரதமர், கூடங்குளம் கூட்டுக் குழுவினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசும் முன்னரே, திட்டம் நிறைவேறியாக வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியது பெரும் மோசடித் தனமானது. இது போன்ற செயல்கள் மக்களிடையே அரசுகளின் மீது பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

இது போன்ற பின் வாசல் வழிகளைத் தவிர்த்து, நேர்மையான, உண்மையான பேச்சுவார்த்தைகளை, பொதுமக்களின் மீது நம்பிக்கை வைத்து, அரசு நடத்துமேயானால், இதில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்

நண்பர்களே! நான் அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் அதனால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று கூறவில்லை. அணுமின் உலைகளின் மிகுந்த பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு அத்தகைய விபத்துகளை நியாயப் படுத்தவும் இல்லை. உண்மையில், அணுமின் உலைகளில், ஏதேனும் பெரிய விபத்து நேரிட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை முழுவதும் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால், அணுமின் நிலையங்களில் ஏதேனும் எதிர்பாராத விபத்து நேரிடின், அதற்காக அங்கு செய்யப் பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக நம்புகிறேன். மேலும்,

விபத்து ஏதும் நேராமல் அணுமின் உலைகள் இயங்க முடியும் என்னும் அறிவியியல் உத்திரவாதத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

Oct
30

மயானங்களைத் தேடி

மயானங்களைத் தேடி

1533ஆம் ஆண்டின் அந்தக் குளிர் காலத்தில், ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் என்னும் அந்த பத்தொன்பது வயது இளைஞன் பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் பல்கலைகழகத்திற்கு சர்ஜரி படிக்க வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கவரப்பட்டிருந்த கேலனின் (anatomy) உடல்கூறியல் மற்றும் (pathology) நோய்கூறியல் (என் மொழிபெயர்ப்பு சரியா?) படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் பாரிஸ் நகருக்கு வந்திருந்தான். வெசாலியஸ் வந்து சேர்ந்த நேரம், அவனது பல்கலைகழத்தில், உடல் கூறியல் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இறந்த உடல்களை பகுப்பாய்வு செய்ய எந்த வசதிகளும் இல்லாத நிலையில், அவனது ஆய்வுக் கூடம் மிக மோசமாக இருந்தது. மொத்த மனித உடலுக்கான ஒரு நல்ல வரைபடம் கூட இல்லாத நிலையை கண்டு அவன் மிகவும் மனம் நொந்துப் போனான்.

மனித உடலுக்கான ஒரு வரைபடத்தை தானே உருவாக்குவது என்று முடிவு செய்தான். அந்தக் கணத்திலிருந்து அவன் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்ல வேண்டும். பிணங்களைத் தேடி ஊர் ஊராக அலையத் தொடங்கினான். பாரிஸ் நகரில் உள்ள ஓவ்வொரு சுடுகாடும் அவனுக்கு அத்துப் படியானது. பல நூறு பிணங்களை அறுத்து ஆராய்ச்சி செய்து, சில ஓவியர்களின் துணையுடன் அவன் தனது வரை படத்தை வரைய ஆரம்பித்தான். 1538ஆம் ஆண்டு முதல், அவன் தயாரித்த மனித உடலுக்கான வரைபடத்தை, தகடாகவும், வரைபடமாகவும் வெளியிடத் துவங்கினான்.

இறந்த பிணங்கள் அவனது வரைபடத்தின் மூலமாக உயிருடன் வெளிவரத் துவங்கின. மனித உடலில் ஓடும் நரம்புகளை, இரத்த நாளங்களை, அவைகள் சென்று சேரும் இடங்களை எல்லாம் மிகத் தத்ரூபமாக பதிவாகியிருந்தன. CT ஸ்கானர் இல்லாத அந்த காலத்திலேயே மனித மூளையை குறுக்கும் நெடுக்காக அதிலிருந்த மிக சிக்கலான பாகங்களைக் கூட தெளிவாக குறிப்பிடும் வகையில் அவை அமைந்திருந்தன. அவனின் அந்த முயற்சி தேவையின் அடிப்படையில் அமைந்த மிக அறிவார்ந்த முயற்சியாக இருந்தன.

இப்போது அவனுக்கு மிகப் பெரிய சிக்கல் ஒன்று காத்திருந்தது. அவனது இந்த முயற்சியில் ஹிப்போகிரட் மற்றும் கேலன் கூறியது போல அந்த நான்கு வகையான திரவங்களை கண்டறிய வேண்டியிருந்தது. அதில், முதல் மூன்று வகையான திரவத்தை ( இரத்தம், மஞ்சள் பித்த நீர், சளி ) கண்டறிந்த வெசாலியஸுக்கு, கருநிற பித்த நீரை மட்டும் மனித உடலில் கண்டு பிடிக்க முடியவேயில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், எத்தனையோ எண்ணற்ற பிணங்களை பரிசோதனை செய்து பார்த்தும், மனித உடலில் எங்கும் கரு நிற திரவத்தை பார்க்கவே முடியவில்லை.

வெசாலியஸ் மேல் படிப்பு படிக்க வந்தது, கேலனின் பெயரில் ஏற்படுத்தப் பட்டிருந்த கல்வி உதவித் தொகையால்தான். அவன் தனது வாழ்நாள் முழுவதும் கேலனின் அறிவியல் கூற்றினை படித்து, அதை ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டு வந்தவன். ஆனால், கேலனின் புகழ்பெற்ற அந்த கருநிற பித்த திரவத்தை மட்டும் அவனால் கண்டுபிடிக்க முடியவேயில்லை. கான்ஸர் நோய்க்கு காரணம் என்று உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் நம்பிக் கொண்டிருந்த கருநிற திரவம் கண்டு பிடிக்க முடியாமலேயே போயிற்று.

கான்ஸர் நோய் உடலில் உள்ள ஒரு கருநிற பித்த திரவம் அளவிற்கு அதிகமாக சுரக்க ஆரம்பிப்பதால் ஏற்படுகிறது என்றும், எனவே அந்த கான்ஸர் கட்டியினை அறுவை சிகிச்சை செய்தாலும், மீண்டும் அந்த நீர் அங்கு வந்து நிரப்பிக் கொள்ளும் என்றும் மருத்துவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்க்கப் பட்டது. முற்றிய கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சையும் ஒரு வித தீர்வு என்னும் புதிய நம்பிக்கை கீற்று உருவானது.

கேலனின் கூற்றினை மெய்ப்பிக்க வேண்டி ஆரம்பிக்கப் பட்ட வெசாலியஸின் ஆய்வு, கடைசியில் கேலனின் கூற்று தவறானது என்று நிருபித்துக் காட்டியது.

 

Oct
28

பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

 

பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்.

 

நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா! நான் பாரதிராஜா பேசுகிறேன்! என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது கரகரத்த குரலால் 35 ஆண்டுகளாக கட்டி வைத்திருக்கும் இயக்குநர், தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்த முதல் நிஜ சினிமாவின் படைப்பாளி பாரதிராஜாதான் அழைக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் என்னை லேசாக சிலிர்க்க வைக்கும் அவரின் குரல். சொல்லுங்க சார்! என்றேன்.

எங்கே உன்னை ஆளையே காணோம்? பவா எழுதிய கட்டுரையை படித்தாயா? என்னிடன் உன் நம்பர் மட்டும்தான் இருக்கிறது. பவா நம்பரை கொஞ்சம் சொல்லு என்று பேசிக் கொண்டே போனார். நீண்ட நாட்கள் கழித்து அவருடன் பேசுகிறேன். ஒரு வழியாக சமாளித்து பேசி முடித்து விட்டு சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.

எனது நண்பர் பவா.செல்லதுரை, தனது வாழ்வில் தான் பழகிய மனிதர்களைப் பற்றி மீடியா வாய்ஸ் பத்திரிக்கையில், ஒரு அனுபவத் தொடர் ஒன்றினை எழுதி வருகிறார். தமிழில் முன் எப்போதும், நமக்குத் தெரிந்த பல பிரபலங்களைப் பற்றி இப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான தொடர், நான் அறிந்து வந்ததில்லை. பவாவின் மொழி, மனிதர்களை கூர்ந்து கவனித்த அவரின் அவதானிப்பு, ஒரு போதும் யாரிடமும் எதிர்மறைத் தன்மையினை கவனித்திராத அவரின் வெள்ளந்தித் தனம் இவை அனைத்தும் சேர்ந்து இந்த வகைக் கட்டுரைகளை ஒரு இலக்கியத் தரத்திற்கும் மேலான ஒருவித உணர்வுத் தளத்திற்கு கொண்டு செல்கிறது. மிகவும் அனுபவித்து படித்து வருகிறேன்.

இந்த வாரம் அவர் இயக்குநர் பாரதிராஜாவைப் பற்றி வழக்கம் போல் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். அந்த கட்டுரையைப் படித்தவுடன், எனக்கு பாரதிராஜாவுடன் நடந்த பல சந்திப்புகள் நினைவுக்கு வந்தன. ஏனோ, அவரைப் பற்றி நானும் எனது அனுபவங்களை உடனடியாக எழுதி விட வேண்டும் என்று தோன்றியது. நீண்ட நாள் நினைவுகள் பல உணர்ச்சிப் பூர்வமாக வெளிவரத் துவங்கியது ஒரு விதத்தில் பவாவின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்றுதான் தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் எல்லா பள்ளி மாணவர்களைப் போல நாங்களும் பெரும் சினிமா மோகம் கொண்டு அலைந்து கொண்டிருந்த காலம் அது. எல்லா கமல் படங்களையும் வெளியான நாளன்றே பார்த்து விட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நண்பர்கள் குழுவின் வாழ்நாள் லட்சியம். எல்லாப் பள்ளியிலும் அ பிரிவு, ஆ பிரிவு என்று இருப்பதை போல, எங்கள் வகுப்பில் கமல் பிரிவு, ரஜினி பிரிவு என்று இருந்தது. அப்போதெல்லாம், ஒரே நாளில்தான் கமல் படமும், ரஜினி படமும் வெளிவரும். பெரும்பாலும் கமல் படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும், ரஜினி படங்கள்தான் தவறாமல் நூறு நாட்களுக்கு மேல் ஓடும். முதல் நாளன்றே, எங்களுக்கு எந்த படம் எத்தனை நாட்கள் ஓடும் என்று கணிக்கக் கூடிய ஆற்றல் இருந்தமையால் படங்கள் வெளிவந்த மறு நாள் அன்று தொங்கி போன முகத்துடன் வகுப்புக்குள் நுழைவேம். ரஜினி ரசிகர்கள் அன்று முழுவதும் உற்சாகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் ஏன் இந்த கமல் ஒரு ஓடுகின்ற மாதிரியான படங்களில் நடிக்காமல், வெறும் நல்ல படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார் என்று டீக் கடைகளில், பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டே ஆவேசமாக விவாதித்துக் கொண்டிருப்போம்.

சினிமா எங்கள் எண்ணம், செயல் எல்லாவற்றிலும், எங்களை பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த அக்காலக் கட்டத்தில், கமலுக்கு பின் எங்களின் ஆதர்சம், பாரதிராஜாவும், இளையராஜாவும்தான். மூன்றாம் பிறையில் எங்கள் கமலுக்கு தேசிய விருது பெற்று தரும் வரையில் பாலுமகேந்திரா எல்லாம் எங்கள் பட்டியலிலேயே இல்லை. அதன் பின், பாக்யராஜ், டி.ராஜேந்தர் எல்லாம் வந்து இவர்களைவிட பெரும் வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்தனர். அது சினிமாவின் பொற்காலம் என்பது அத்தனை உண்மை.

எங்கள் பட்டியலில், எங்கள் மனம் கவர்ந்தவர்கள் எத்தனேயோ பேர் சேர்ந்து கொண்டே போனாலும், நாங்கள் முதன் முதலில், இயக்குநர் பாரதிராஜாவை அவர்களைத்தான் நேரில் பார்த்தோம். அந்த நாள் கூட நன்றாக நினைவில் இருக்கிறது. அது 1984ஆம் ஆண்டு, நாங்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு கோடை வெயிலில் சென்னையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த காலம். கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திற்கு, நான் எனது நண்பர்கள் இளங்கோ, தினகருடன், சென்று நுழைவுச் சீட்டு வாங்க வரிசையில் முதல் ஆளாகக் காத்திருந்தேன். எங்கள் மூவரைத் தவிர வேறு யாருமே இல்லாத அந்த மாலை வேளையில், திடீரென்று, ஒரு வெளி நாட்டுக் காரில், பாரதிராஜா வந்து இறங்கினார். உடன் அவர் மனைவியும், கூட மகன் மனோஜும் இருந்தனர்.

அந்த நிமிடம் முதல் எங்களுக்கு பித்து பிடித்து போல ஆகி விட்டது. கோளரங்கத்திலும் எங்கள் மூவரைத் தவிர பாரதிராஜா குடும்பம் மட்டும்தான். அவரின் இருக்கைக்கு பின் உட்கார்ந்து கொண்டு நாங்கள், மேலே காட்டிய நட்சத்திரங்களைப் பார்க்காமல், முன்னே அமர்ந்திருந்த எங்கள் ஆதர்ச இயக்குநரையே பார்த்துக் கொண்டிருந்தோம். காட்சி முடிந்து வெளியே வந்தபின்னும் அவரின் மீதான எனது கண்கள் விலகவேயில்லை. காரில் சென்று அமரப் போன அவர், திடீரென என்னை கைக் காட்டி அருகில் அழைத்தார்.

திகைத்து போய் அவர் அருகில் சென்ற என்னை, ஏண்டா! உள்ளே என்னவென்றால் காட்சியைப் பார்க்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்? இங்கேயும் இப்படியே பார்க்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்றார். நான், வார்த்தைகள் வெளி வராமல், திக்கியபடி உங்கள் ரசிகன் சார் நான் என்றேன். மிகவும் சாந்தமாகி, என்னை அருகில் அழைத்து, லேசாக கட்டியணைத்த படி, முதுகில் தட்டிக் கொடுத்தார். எனது நண்பர்கள் நடப்பவற்றை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்அவர் தட்டி கொடுத்த அந்த சட்டையை நான் சில மாதங்கள் துவைக்காமல் என் முன்னே மாட்டி வைத்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அதே பாரதிராஜாவை பின்னாட்களில், பல சந்தர்ப்பங்களில் நான் சந்திக்கப் போகிறேன் என்றோ, என் மேல் பெரும் அன்பு காட்டக் கூடிய ஒரு நண்பராக அவர் இருப்பார் என்றோ, அந்தக் கணத்தில் நாங்கள் யாரும் அறிந்திருக்க வில்லை. வாழ்க்கை அது போகிற போக்கில் ஆடி விட்டு போகும் தாயக் கட்டையில், ஏதோ ஒரு எண் என் பக்கம் விழுந்தது. சினிமாவில் சேர்ந்து ஒரு இயக்குநராக மாறியே தீர வேண்டும் என்ற எனது லட்சியம் மயிரிழையில் தவறி, பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தேன்

பின்பு, பல வருடங்கள் கழித்து, இயக்குநர் மனோபாலா எனக்கு நெருக்கமான நண்பராக ஆனப் பிறகு, பல முறை, பல இடங்களில் நான் பாரதிராஜாவை சந்தித்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில், என்னை, அவர் என்னை தனது நெருங்கிய உள் வட்டத்தினுள் அழைத்து அமர்த்திக் கொண்டார். என்னை எப்போது, எந்த சூழ்நிலையில் பார்த்தாலும், வாடா! திருவண்ணாமலை தாதா என்று அருகில் அழைத்து நெருக்கமாக கட்டி அணைத்துக் கொள்வார். அத்தனை நெருக்கத்தில் அவரின் உள்ளே இருந்த அந்த முரட்டுக் குழந்தையை பல முறை கண்டு ரசித்திருக்கிறேன்.

1996ஆம் ஆண்டின் ஏதோ ஒரு நாள் இரவு பாரதிராஜா என்னை அவருடன் ஒரு விருந்துக்கு அழைத்து சென்றார். அது, நடிகர் ப்ரகாஷ்ராஜின் வீடு. அப்போது, இருவர் திரைப்படம் வந்திருக்க வில்லை. ப்ரகாஷ்ராஜ் எங்கள் அனைவரையும் வரவேற்று, உற்சாகமாக கையில் மதுக் கோப்பையுடனும், சிகரெட்டுடனும் உலவிக் கொண்டிருந்தார். ஒரு அறையில், அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர் சுதாங்கனுடன், பாரதிராஜா ஏதோ தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தார். நானும், மனோபாலாவும் அறையை விட்டு வெளியே வந்த போது ப்ரகாஷ்ராஜ் தனது கைக் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.

அவர் கையில் சிகரெட்டுடன், குழந்தையை வைத்துக் கொண்டு இருந்தது எனக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. எனக்கோ ப்ரகாஷ்ராஜ் அப்போதுதான் அறிமுகம். எனவே, நேராக பாரதிராஜாவிடன் சென்று ஒரு சிறுவனைப் போல முறையிட்டேன். என்னுடன், ஒரு புயலைப் போல வெளியே வந்த பாரதிராஜா, ப்ரகாஷ்ராஜை அழைத்து, ஒன்று சிகரெட் பிடி, அல்லது குழந்தையை தூக்கு. இரண்டையும் ஒன்றாக நாங்கள் சினிமாவில் கூட காட்ட மாட்டோம் என்று சற்றே கோபமாக சொன்னார். பதறி போன ப்ரகாஷ்ராஜ் தனது மனைவியிடம் குழந்தையை கொடுத்தவர், நாங்கள் உணவருந்தி முடித்து வெளியே செல்லும் வரை புகை பிடிக்கவுமில்லை.

அன்று இரவு, பாரதிராஜாவை அவரின் வீட்டில் விட்டு கிளம்பும்போது, என்னை அழைத்தவர் அத்தனை பேர் அங்கு இருக்கும்போது உனக்கு மட்டும் அந்த குழந்தைதான் கண்ணில் பட்டதே! அதற்குதானடா இலக்கியம் படித்திருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை, அதற்கு எதற்கு இலக்கியம் படித்திருக்க வேண்டும் என்று!!

தமிழ் திரைப் படங்கள் மட்டுமன்றி ,பிற மொழி படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு, அதிலும் பல உலக திரைப் படங்களை பல பார்த்த பிறகும், என்னளவில் பாரதிராஜாவைப் போல வேறு எந்த இயக்குநரும் என்னை பாதித்ததில்லை. அவர் அளவிற்கு தமிழக மக்களிடையே பிரபலமடைந்த இயக்குநரும் இதுவரை யாருமில்லை. அவர் முகம் ஒரு பெரும் புகழ் பெற்ற கதாநாயகனின் முகத்தைப் போல மக்களால் இன்னமும் பார்க்கப் படுகிறது. அதுவும், ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று கனவு கொண்டிருந்த என்னைப் போன்ற பலருக்கு அவர்தான் நிஜமான ஹீரோ.

இயல்பாகவே மிகவும் துணிச்சல் மிக்கவர் பாரதிராஜா. எப்போதும், எதற்காகவும் பிறரிடம் அடங்கிப் போக மாட்டார். ஒரு முறை அவரின் மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் பாலுமகேந்திராவிற்கு திரைப்பட யூனியனால் ஒரு அவமானம் நேர்ந்த போது நிஜமாகவே பொங்கி எழுந்தார். அவரின் அந்த கோபம், பல ஆண்டுகள் பழமை வாய்ந்த திரைப்பட யூனியனுக்கு மாற்றாக, தமிழ் சினிமாவிற்கு மட்டுமேயான படைப்பாளிகள் சங்கத்தை துவக்கும் அளவிற்கு சென்றது. அந்த நிமிடம் வரை அப்படி ஒரு மாற்று அமைப்பு துவக்கப் பட முடியும் என்று இதற்கு முன் இருந்த பல மூத்த கலைஞர்கள் நினைத்துப் பார்த்தது கூட இல்லை.

அந்த நாட்களில், ஒரு திரைப்பட இயக்குநராக மட்டுமே அறியப் பட்டிருந்த பாரதிராஜா, தனிப் பட்ட முறையில் எத்தனை பெரிய ஆளுமை என்பதை என்னைப் போன்ற பலர் தெரிந்து கொண்டனர். ஒரு நாள் இரவு திருவண்ணாமலையில் இருந்த என்னை தொலைபேசியில் அழைத்த பாரதிராஜா, கருணா, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். பதறிப் போன நான் என்ன சார், என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரே நாள் பட பிடிப்பு நடத்தி முடித்தால் போதும், பார்த்திபனின் படத்தை ரிலீஸ் செய்து விடலாம். ஆனால், இங்கே சென்னையில், பாதுகாப்பாக பட பிடிப்பு நடத்தும் சூழல் இல்லை. உனது ஊரில் ஏதேனும் ஏற்பாடு செய்து தருகிறாயா என்று கேட்டார். நானும், உடனே, இங்கே அனுப்புங்கள் சார், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்தேன்.

எங்கள் ஊரின் எல்லா நுழைவாயில்களையும் எனது நண்பர்கள் பாதுகாக்க, எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்றினில், பார்த்திபன் தனது படமான அபிமன்யுவை இரவோடு இரவாக எடுத்து முடித்தார். திருவண்ணாமலை அரிசி ஆலை, திரைப் படத்தின் இறுதி காட்சியில் கொடுங்கையூர் குடோனாக வந்தது, திரைப் படத்திற்கு மட்டுமே உரிய விநோத குணாதிசயம். எல்லா தடைகளையும் தாண்டி அந்த சூழலில் படம் சொன்ன தேதியில் வெளிவந்தது, பாரதிராஜாவிற்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. என்னை அவரின் அலுவலகத்திற்கு அழைத்து, எல்லோர் முன்பும் அவர் வழக்கம் போல கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.

இத்தனை வருடங்களில், அவரை நான் பல சந்தர்ப்பங்களில், பல இடங்களில் சந்திருக்கிறேன். இடைப் பட்ட நாட்களில், எனக்கு திரைப்படத் துறையில் பல நண்பர்கள் கிடைத்திருந்தாலும், அவர் அளவிற்கு என்னிடம் யாரும் உரிமையாக பழகியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைத் துறையினை சார்ந்த எனது நண்பர்கள், மனோபாலா, பார்த்திபன், லிங்குசாமி, மிஷ்கின் போன்ற அனைவருக்குமே, பாரதிராஜா போன்ற ஒரு பெரிய இயக்குநருடனான எனது நட்பு இன்னமும் ஒரு வியப்பான விஷயமாகவே இருக்கிறது.

அந்த அபிமன்யு படபிடிப்பிற்கு பின் ஒரு முறை படபிடிப்பு நடந்த அதே அரிசி ஆலையில் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்து கொண்டாடினோம். ஏறக்குறைய தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் அவர் மிகுந்த உற்சாகத்துடன், என்னையும், பவாவையும் தனது இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு வலம் வந்தது எங்களுக்கு மிகுந்த பெருமையளித்தது.

அவர் மிகவும் நெகிழ்ந்திருந்த ஒரு கணத்தில் நான் அவரிடம், சார்! என்னை முதன் முதலில் எங்கு பார்த்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டேன். அவர், எங்கே என்று என்னை திருப்பிக் கேட்டார். பதினைந்து வருடத்திற்கு முன்பு பிர்லா கோளரங்கத்திற்கு அவர் வந்திருந்ததை நினைவு படுத்தினேன். மனோஜை அவர் அங்கு அழைத்து வந்திருந்தது அவருக்கு நினைவிருந்தது. அப்போது, உங்களையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகனை அழைத்து கடிந்து கொண்டீர்களே அதுதான் நான் என்றேன். என்னை சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு அந்த சம்பவம் எனக்கு நினைவில்லையே! என்றார். நினைவிருக்கிறது என்று சொல்லியிருந்தால் நான் நம்பியிருந்திருக்க மாட்டேன். மகா கலைஞர்கள் எதனாலும், எதன் பொருட்டும் பொய் சொல்வதில்லை

திருவண்ணாமலைக்கு பாரதிராஜா எப்போது வந்தாலும் என்னையும், பவா செல்லதுரையையும் அழைத்து கொள்வார். கடைசியாக சில வருடங்களுக்கு முன் வந்தபோது, அவரின் ஹோட்டல் அறையினில் எங்களுக்குள் நடந்த விவாதங்கள் வார்த்தைக்கு வார்த்தை எனக்கு நினைவிருக்கிறது.

சில படங்களின் தோல்விகளுக்கு பின் அவர் சற்றே மனம் வருத்தமுற்றிருந்த நேரம் அது. ஏதோ சில காரணத்தினால், அவர் எம்.ஜி.ஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதாவுடனான அவரின் நட்பு மற்றும் நெருக்கம் குறித்தே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தார். அத்தகைய நட்புகள் எங்கள் முன் அவரின் ஆளுமையினை மேம்படுத்தி காட்டும் என்று அவர் நினைத்தது போல எங்களுக்குத் தோன்றியது.

அவரின் சாதனைகள் காலத்தை கடந்தவை. இனி அவர் பெறப் போகும் எந்த வெற்றிகளும், அல்லது அவர் சந்திட்ட எந்த தோல்வியும் அவருக்கான இடத்தினை நிர்ணயக்க முடியாது என்று நம்புகிறேன்.

அந்த அறையுனுள் இருந்த ஒற்றை நாற்காலியில் அவரை அமர வைத்து, அந்த மகாக் கலைஞனின் காலடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஏன் தெரியாமல் போனது, அவரின் இடம் என்னைப் போன்ற பல ஆயிரம் ரசிகர்களின் இதயத்தில் என்பது?

 

 

 

Older posts «