இளம் பிஞ்சுகளுக்கும் கூட..

இளம் பிஞ்சுகளுக்கும் கூட..
1860ஆம் ஆண்டு, டாக்டர் விர்ச்சோவின் மாணவர் ஆண்டன் பீர்மர் சரித்திரத்தின் முதல் சிறுவர்களுக்கான இரத்த புற்று நோயை சந்திக்கிறார். மரியா ஸ்பேயர், மிக சுறுசுறுப்பான ஐந்து வயது குழந்தை. தனது உடலில் நிறைய இரத்த கீறல்களுடன் இவரிடம் கொண்டு வரப் பட்டது அந்தக் குழந்தை. அடுத்த நாள் பீர்மர், அக் குழந்தையின் வீட்டுக்கு சென்று பார்க்கும் போது, இரத்த கீறல்கள் உடல் முழுதும் இருந்ததுடன், கழுத்து பிடிப்பும், கடும் காய்ச்சலும் இருந்தது. பீர்மர், அக் குழந்தையின் உடலில் இருந்து, பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக் கொண்டு திரும்பினார். பரிசோதனையில் மிகத் தீவிரமான இரத்த புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. பீர்மர், அன்று மாலை அந்த குழந்தையை பார்க்க செல்லும்போது, அந்தக் குழந்தை இறந்து பல மணி நேரம் ஆகி இருந்தது.
வேறொறு குழந்தையான கார்லாவின் நோய், வேறுவிதமான தனித்துவத்தை கொண்டிருந்தது. வளர்ந்த மனிதர்களிடம் சராசரியாக ஒரு மில்லி லிட்டர் இரத்தத்தில், ஐந்தாயிரம் வெள்ளை இரத்த அணுக்கள் இருக்கும். கார்லாவின் இரத்தத்தில், தொண்ணூறு ஆயிரம் அணுக்கள். அதாவது இருபது மடங்கு அதிகம். இதிலும் 95% அணுக்கள் வெடி அணுக்கள் ஆகும். அதாவது, தப்பிதமான கான்ஸர் (லிம்போ) அணுக்கள்.வெள்ளை இரத்த அணுக்கள், நமது உடலில் உள்ள போன் மேரோ எனப்படும், எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகிறது. கார்லாவின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுத்த திசுவை பரிசோதித்ததில் அவை அசாதாரணமாக இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. பொதுவாக, நம் உடலில் எலும்பு மஜ்ஜை திசு என்பது மிகவும் ஒழுங்காக வடிவமைக்கப் பட்டு, நேர்த்தியாக இயங்கக் கூடியது. மனித உடலுக்கான இரத்தம் இங்கிருந்துதான் உருவாகிறது.
கார்லாவின் எலும்பு மஜ்ஜை, முழுக்க முழுக்க தப்பிதமான, கேன்ஸர் செல்களால் நிரப்பப் பட்டிருந்தன. புதிய இரத்தம் எதையும் அவை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு இடம் அனைத்தும் நிரம்பியிருந்தன. சிவப்பு இரத்த அணுக்களே இல்லாததால், உடலுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல இயலவில்லை. மேலும்,இரத்தம் உறையாமல் பாதுகாக்க கூடிய ப்ளேட்லெட்ஸ் யாவும் நிலை குலைந்து போயிருந்தன.
கார்லாவிற்கு உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும். அவளின் லுக்கேகியாவை அழிக்க கடுமையான கீமோதெரபி கொடுக்க வேண்டும். ஆனால், அச் சிகிச்சை, அவளின் மிச்சம் இருக்கும் நல்ல இரத்த அணுக்களையும் அழித்துவிடும். அவளை மீட்க வேண்டுமானால், நாம் அவளை மேலும் நோயின் ஆழத்திற்கு தள்ள வேண்டும். கார்லாவிற்கு இருக்கும் ஒரே வழியோ, இதில் மேலும் மூழ்கி எழ வேண்டும்
சிட்னி ஃபேபர் ( Sidney Faber) 1903ம் ஆண்டு, நியூயார்க் நகரில், சரியாக டாக்டர் விர்ச்சோவ் இறந்த ஒரு வருடம் கழித்து பிறந்தார். ஜெர்மனியில் மருத்துவம் படித்து, மேல் படிப்புக்காக ஹார்வார்டு வந்தடைந்தார். படிப்பை முடித்து, பாஸ்டனில் உள்ள சிறுவர்களுக்கான மருத்துவமனையில் பேதாலஜிஸ்டாக இணைந்தார். அப்போது அவர் சிறுவர்களுக்கான இரத்த கட்டிகளை ஆராய்ந்து எழுதிய தி போஸ்ட்மார்ட்டம் எக்ஸாமினேஷன்என்னும் புத்தகம் இன்றளவும், மருத்துவத் துறையில் ஒரு க்ளாஸிக் புத்தகமாக கருதப் படுகிறது.
1947ஆம் ஆண்டு ஃபேபர், தனது ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு பார்சலை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் சிந்தனையெல்லாம் குழந்தைகளுக்கான லுக்கீமியா நோயைப் பற்றியே இருந்தது. அனைத்து வகை கேன்ஸர்களிலும், இளம் சிறார்களுக்கான இரத்த புற்று நோய் அவரை கவனத்தை ஈர்த்தது. இரத்த புற்று நோயில் உள்ள ஒரே சுவாரஸ்யம், அதை அளவிட முடியும் என்பதே!
அறிவியல் எண்ணிக்கையில்தான் ஆரம்பிக்கிறது. ஒரு பரிணாமத்தினை புரிந்து கொள்ள முதலில் அதை விளக்க வேண்டும். புரியும்படி விளக்க வேண்டுமானால் அது முதலில் ஒரு அளவுக்குள் கொண்டு வர வேண்டும். மிகவும் குழப்புகிறேன் என்று தெரிகிறது.
சரி! எல்லா வகைப் புற்று நோயும் ஏதேனும் ஒரு கட்டியாக மனித உடலில் எங்கோ ஒரு இடத்தில் உருவாகிறது.இப்போது உள்ள சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற அறிவியியல் கருவிகள் இல்லாத காலத்தில், அந்த கட்டிகளை துல்லியமாக அளவிட முடிந்திருக்காது. இல்லையா? அறுவை சிகிச்சைக்கு பிறகே ஒரளவேனும் அந்த கட்டிகளை அளவிட முடிந்திருக்கும். ஆனால். இரத்த புற்று நோய் அப்படி அல்ல! அதில் உள்ள புற்று நோய் அணுக்களை மைக்ராஸ்கோப் மூலமாக சுலபமாக பார்க்க முடியும்.
இப்போது, மருந்துகளை உடலில் செலுத்தி, அதன் வீரியத்தை சோதனை செய்து பார்க்க முடிந்தது. அதாவது, விதவிதமான மருந்துகளை செலுத்தி,பின் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், கேன்ஸர் அணுக்கள் அதிகமாகிறதா? அல்லது குறைகிறதா? என்று கவனித்தார்கள். இதன் மூலம் செலுத்தப் பட்ட மருந்தின் பயன்கள் தெரிய வந்தது. முதல் முறையாக கேன்ஸர் நோய்க்கான மருந்துகளை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி துவங்கியது.
ஒரு டிசம்பர் மாதத்தில், டாக்டர் ஃபேபர் மிகவும் எதிர் பார்த்துக் காத்திருந்த பார்சல் அவரை வந்து சேர்ந்தது. அதில், இருந்த புதிய வகை கெமிகல்ஸ் அடங்கிய கண்ணாடி குப்பிகளை மிக கவனமாக எடுத்தார். அந்த பார்சல் இதுவரை நிலவி வந்த கான்ஸர் நோய் பற்றிய பார்வையை முற்றலும் மாற்றி அமைக்கப் போகிறது.

2 thoughts on “இளம் பிஞ்சுகளுக்கும் கூட..

  1. An Engineer turning as a Doctor.
    Good to see this sir. Attitude of updating your knowledge on the social affairs and habit of learning new skills is really inspiring sir..

  2. உண்மையிலேயே மிக அற்புதமான பயனுள்ள கட்டுரை. நீங்களே தேடித்தேடி உங்களுக்கான மொழியை கண்டடைந்திருக்கிறீர்கள். என்னோடு சேர்த்து இப்பதிவைப் படித்த எல்லோர் சார்பிலும் இதயபூர்வமான வாழ்த்துக்கள் கருணா…

Comments are closed.