கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

 
கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.
 
இந்த அணு உலை அத்தனை முக்கியமென்றால், இதனை போயஸ் தோட்டத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் ரோட்டிலேயோ அமைத்துக் கொள்ளட்டுமே?
சமீபத்தில் வலைத் தளங்களில் நான் படித்த பல ஆவேசமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இடிந்தகரையில் ஒரு பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டதும், கூடங்குளம் அணுமின் நிலையத்தினை உடனே இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து இருப்பதும் நம் சுற்று சூழல் ஆர்வலர்களை இது போன்ற மேலும் பல வினோதமான கேள்விகளை கேட்கத் தூண்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல், நமது நாடு எதிர் கொண்டிருக்கும் மிகப் பெரிய மின்சக்தி தேவைக்கான பல நூறு இலவச யோசனைகளும் நமக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் செயல் படுத்த முடியுமானால், இப்போது இருக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களையே கூட நாம் மூடிவிடலாமோ என்று எனக்குத் தோன்றியது. பதினைந்தாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்து, பல வருடங்கள் சர்வதேச அளவில் அணு சக்தி திறன் கொண்ட நாடுகளுடன் மிக நீண்ட போராட்டம் நடத்தி பெற்ற இந்த இரண்டு அணு உலைகளை உடனே இழுத்து மூட வேண்டும் என்பது, எனக்கு அர்த்தமற்ற, சாத்தியமற்ற கோரிக்கையாகவே தெரிகிறது.
உண்மையில், இப்போது கட்டி முடிக்கப் பட்டுள்ள இரண்டு அணு உலைகளுக்கு பிறகு, மேலும் ஆறு அணுமின் உலைகள் இதே கூடங்குளத்தில் கட்ட மத்திய அரசு பூர்வாங்க அனுமதி அளித்து உள்ளது. தென்னிந்தியா முழுமைக்குமான மின் தேவையை கூடங்குளம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கைகா போன்ற அணு மின் நிலையங்கள் மூலமாக பெருமளவு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசு திட்டமிடுகிறது.
ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு பிறகு, அணுமின் உற்பத்தி சார்ந்த முடிவுகள் அறிவியியல் துறை நிபுணர்களிடம் இருந்து, சுற்று சூழல் ஆர்வலர்கள் கையில் சென்று விட்டது. அது தவறில்லை. எல்லா சந்தேகங்களுக்கும் அறிவியியல் விளக்கம் அளித்தாக வேண்டும். அதுவும், பொதுமக்களின் உயிருக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து என்ற சந்தேகங்கள் எழுந்த பிறகு, அரசுக்கும், அறிவியியல் நிபுணர்களுக்கும் இதில் முழு பொறுப்பு உள்ளது.
ஆனால், போராட்டக் குழுவினர், மக்கள் ஆதரவு வேண்டி பேசும் பேச்சுகள் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அனைவரும் அச்சமுறும் வகையில் உள்ளதாக கருதுகிறேன். அணுமின் நிலையத்தைப் பற்றி அவர்களின் பல சந்தேகங்கள், அர்த்தமற்றதாகவே உள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால், அடுத்த முப்பது நிமிடங்களில், 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் சென்று விட வேண்டும், (மன்னிக்கவும்! ஓடி விட வேண்டும் ) என்று அரசே சொல்கிறதே? என்பது அவர்களின் ஒரு முக்கிய கேள்வி.
எந்த ஒரு சாதாரண இருமல் மருந்து வாங்கினால் கூட பாட்டிலுடன் கூடிய சீட்டினை படித்துப் பார்த்தால் இது போன்ற மிகப் பெரிய எச்சரிக்கைகள் காணக் கிடைக்கும். இவையெல்லாம் சட்ட பூர்வ தேவைக்கானது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வருட காலமாக மிக பாதுகாப்பாக அணு மின்சாரம் தயாரிக்கும் நாடு நாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1969ஆம் ஆண்டு முதல் தாராப்பூர் அணுமின் நிலையத்திலும், 1986ஆம் ஆண்டு முதல் நம் கல்பாக்கத்திலும் அணுமின் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறோம். எத்தனை முறை மக்கள் பாதுகாப்பு கருதி 60 கிலோமீட்டர் தொலைவிற்கு விரட்டப் பட்டனர்?
முதலில் நமது நாட்டின் தற்போதைய, எதிர்கால மின்சாரத் தேவையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் மின்சாரத்தைக் காட்டிலும், பல மடங்கு அல்லது பற்பல மடங்கு மின்சாரம் நமக்கு தேவை என்பதை முதலில் நாம் ஒப்புக் கொள்கிறோமா?
ஆமாம்! தேவை அதிகம்தான். அதற்காக மக்களின் உயிரை பணயம் வைக்க சொல்கிறீர்களா? என்று கேட்பவர்களுக்கு ஒரு நேரடியான பதில். ஆம்! வேறு வழியில்லை என்பதுதான்.
நமது நாட்டின் தற்போதைய மின் தேவையில் 68% பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்கள்தான். 8%மின் உற்பத்தி இயற்கை எரிவாயு மூலமாகவும், 14% மின் உற்பத்தி புனல் மின் நிலையங்கள் மூலமாகவும், வெறும் 2.5% மின்சாரம் மட்டுமே அணு மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது என்று தேசிய எரிசக்தி துறையின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.
அதாவது, நமக்கு கிடைக்கும் மின்சாரம் சுற்று சூழலை மாசுபடுத்தாத, பிற தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தினை ஏற்படுத்தாத மாசில்லாத மின்சாரமா?(Clean Energy) என்று பார்ப்போமானால், மேற்சொன்ன பட்டியலை பின்னோக்கி பார்க்க வேண்டும்.
மாசில்லாத மின்சாரம் என்கிற வகையில் முதலில் நமக்கு கிடைப்பது காற்றாலைகளின் மூலமாகவும், சூரிய சக்தியின் மூலமாகவும் கிடைக்கும் மின்சாரம்தான். பெரும் பொருட்செலவில் அவைகளை நாம் நிர்மாணித்திருந்தாலும் கூட அவற்றின் உற்பத்தி திறனை கட்டுப் படுத்துவது பெரும்பாலும் நிலையில்லாத பருவநிலைதான். ஆனாலும் கூட மாசில்லா மின்சக்தி என்ற வகையில் இம்முறையில் கிடைக்கும் மின்சாரம் நம்மை பொறுத்தவரை விலை மதிப்பில்லா மின்சாரம் என்றே கொள்ள வேண்டும்.
அடுத்து, புனல் மின்நிலையம் மூலம் கிடைக்கும் ஹைட்ரோ பவர். இதற்கு நமக்கு தேவை ஏராளமான நீர்வளம் மற்றும் அவற்றை சேர்த்து வைக்கும் அளவிற்கு மிகக் பெரிய நீர்தேக்கங்கள். இவையெல்லாம் இருந்தாலும் இதற்கு ஆதாரமாக பொய்த்துப் போகாத பருவமழை மிக முக்கியத் தேவை. நமது நாட்டில் இதை நம்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும், நர்மதா அணைத் திட்டத்திற்கு பிறகு பெரிய அளவிலான திட்டங்களை யாரும் சிந்திக்க துணிய மாட்டார்கள் என்பது நிதர்சனம்.
ஏராளமான இயற்கை எரிவாயு நம் நாட்டில் உள்ளது என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எரிவாயு இன்னும் வரவில்லை. இதை நம்பி பெரிய அளவிலான மின்திட்டங்கள் எதையும் இப்போதைக்கு செயல் படுத்த முடியாது என்பதே உண்மை.
தற்சமயம், நம் தேவையினை பெருமளவில் பூர்த்தி செய்வது, நிலக்கரியினை கொண்டு உருவாக்கப் படும் அனல் மின்நிலையங்கள் தான். இவ்வகை மின்நிலையங்கள் சுற்று சூழலுக்கு எத்தனை ஆபத்தானது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
ஒவ்வொரு அனல் மின்நிலையமும், ஒரு மாபெரும் அரக்கனைப் போல தொடர்ந்து காற்றினை மாசுபடுத்தி, புவி வெப்பத்தினை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றன. நிலக்கரியினை தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்கள் மூலமும் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால், உலகெமெங்கும் நிலக்கரியினை கொண்டு செல்லும் போக்குவரத்துக்கான எரிபொருள் தேவை மறுபுறம்.
தனது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், நமது சுற்று சூழலை பலி கேட்கும் இவ்வகை மின் நிலையங்கள்தான், நமக்கு தற்சமயம் இருக்கும் ஒரே வழியாக உள்ளது.
மாறாக அணுமின் நிலையத்தினை பற்றி பார்ப்போம். இந்த வார்த்தையை படித்த உடனேயே, உங்கள் வயிற்றில் ஒரு பந்து சுற்றிக் கொள்ளுமேயானால், உங்களுக்கு அணுகுண்டிற்கும், அணுமின் நிலையத்திற்குமான வித்தியாசம் தெரியவில்லை என்று அர்த்தமாகிறது.
அணுகுண்டு, அணு சக்தியினை கட்டற்ற முறையில் வெடிக்க செய்து பேரழிவு ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட ஒன்று. மாறாக, அணு மின் உலைகள், மிகவும் கட்டுப்படுத்தப் பட்ட அணுசக்தியினை உண்டாக்கி அவற்றின் மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்காக வடிவமைக்கப் படுகிறது.
உலகமெங்கும் இவை இரண்டுமே 60 ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளில் இருந்து வருகிறது. ஹிரோஷிமா, நாகசாகியை தவிர்த்து அணுகுண்டு வேறு எங்கும் வெடிக்க வில்லை. உண்மையில் கட்டற்ற அணு சக்தியினை வெளிப்படுத்தி பேரழிவு ஏற்படுத்தக் கூடிய அணுகுண்டுகளை நமது நாடு மட்டுமல்லாமல் பல நாடுகள் செய்து ஆங்காங்கே மறைத்து வைத்துள்ளனர். அந்த பேராபத்துகளைப் பற்றி நாம் பேச மறுக்கிறோம்
செர்னோபிலை தவிர்த்து அணுஉலை விபத்தும் வேறெங்கும் நடக்க வில்லை. செர்னோபில் விபத்துக்கு பிறகும் கூட உலகின் பல நாடுகளில் அணுமின் உலைகளை அமைத்து மின்சாரம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அணுமின்சாரம் மாசற்ற மின்சாரம் என்று உலகின் பல சுற்று சூழல் அமைப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளது. அணு உலைக்கு எரிபொருள் கொண்டு செல்ல கப்பல், இரயில் போன்ற பெரிய போக்குவரத்து வசதிகள் தேவையில்லை. மின் உற்பத்தியின்போது, சாம்பல் போன்ற உபகழிவுகள் ஏதும் வெளிப்படுவதில்லை. நீராவியைத் தவிர வேறு எந்த புகையும் வெளிப்பட்டு காற்று மண்டலத்தை மாசு படுத்துவதில்லை.
அணுமின் உற்பத்திக்கு, அணு உலையில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நம் விரல் கனமுள்ள சதுரமான கம்பி வடிவத்தில் இருக்கும். பல கம்பிகளை இணைத்துக் கட்டி அணு உலைக்கான எரிபொருளாக அவற்றை பயன்படுத்துவார்கள். அதன் மொத்த நீளம் 14.5 அடியாகவும், எடை 320 கிலோவாகவும் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ஒரு கம்பியின் சுட்டு விரல் கனத்தில் உள்ள யுரேனியத்தில், 17000 கன அடி இயற்கை எரிவாயுக்கான சக்தி உள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.
அடுத்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கான யுரேனியம் நம் உலகில் உள்ளதால், எரிபொருள் தேவை எப்போதுமே ஒரு சிக்கலாக இருக்காது. ஆனால், அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப் பட்ட பிறகு அந்த எரிபொருளான யுரேனியம் கம்பிகளை அதன் பிறகு, அதிலிருந்து கதிர்வீச்சுகள் வராமல், கட்டுப் படுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு மிகப் பெரிய சவால்.
மிகவும் பாதுகாப்பான முறையில், கனநீருக்கு அடியில் அடுத்த பல நூறு ஆண்டுகள் அந்த பழைய யுரேனியம் ராடுகளை வைத்து பாதுகாக்க வேண்டியிருக்கும். அந்த வகையில்தான், அணு மின் உலைகள், செலவு மிக்கதாகவும், அபாயம் நிறைந்ததாகவும் கருதப் படுகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், அணுமின் தயாரிக்கும் உலகின் பல மேலை நாடுகளுக்கும் இதுதான் பெரிய சவால். ஆனால், இது நாள் வரை அனைத்து நாடுகளும் அந்த பாதுகாப்பு பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றன. ஒரு பரிசோதனையின்போது அணுஉலை வெடித்து சிதறின செர்னோபிலில் கூட இந்த பாதுகாப்பு ஏற்பாடு வெற்றிகரமாக செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.
Human existence is a necessary evil என்பார்கள். அந்த வகையில், இனி மின்சாரம் இல்லாமல் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழமுடியாத நிலைக்கு வந்து விட்ட பின், நாம் தயாரிக்கும் மின்சாரம் சுற்று சூழலுக்கு மாசு இல்லா மின்சாரமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதுவும், மிக அதிகமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலத்தில், அணுசக்தியினை புறக்கணிப்பது நிச்சயம் சரியல்ல
அணுமின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என் பல அநாவசியமான சந்தேகங்கள் மக்களிடையே எழுப்பப் பட்டு வருகின்றன. அதற்கு தகுந்த விளக்கங்கள் கூறி அவர்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது, அரசின் கடமை மட்டுமல்ல. அந்த பொறுப்பு அறிவியியல் துறையை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் உண்டு.
என்னளவில், நான் எதிர்கொண்ட கேள்விகள் சிலவற்றிற்கு பதில் அளிக்க முயல்கிறேன்.
1. உலகின் பல நாடுகளுக்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஆஸ்திரேலியாவில் ஏன் ஒரு அணுஉலை கூட இல்லை?
ஆஸ்திரேலியா இயற்கை வளங்கள் மிகுந்த ஒரு மிகப் பெரிய நாடு. அதன் மக்கள் தொகை வெறும் 2 கோடிபேர் தான். அதனால், அவர்களின் தேவை மிகக் குறைவு. அந்த தேவையை அவர்கள் மற்ற வளங்களை வைத்தே மிக சுலபமாக ஈடுகட்டுகிறார்கள். அணுமின் உலைகள் என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடிய ஒன்று என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இருப்பின், தனது நாட்டின் சுற்று சூழல் மாசு படுவதைக் கருதி, இந்த ஆண்டில் பெரிய அணுஉலைகளை நிர்மாணிக்கும் பணிகளைத் துவக்கி இருக்கிறார்கள்.
                    2.இவ்வளவு செலவு பிடிக்கும் அணுஉலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிக விலை கொண்டதாக இருக்குமேஇது தேவையா? நம் நாட்டிற்கு இது பொருந்துமா?
மின்சாரம் என்பது வாழ்வின் ஒரு பகுதியாகி விட்ட நிலையில் அது எவ்வளவு விலையில் தயாரிக்கப் படுகிறது என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. அது சுத்தமான மின்சாரமா என்பதுதான் நமக்கு தேவையான கேள்வியாக இருக்கும். மேலும், மக்களிடம் செல்லும்போது, அவர்களுக்கு கட்டுப் படியாகும் விலையில் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
                    3.அணு மின் உலைகளின் அருகே மக்கள் வசிக்க முடியாது என்பதும், அவர்களின் அனைத்து வாழ்வாதரங்களும் பாதிக்கப்படும்  என்பதும் உண்மையா?
உலகமெங்கும் உள்ள அணு மின் உலைகளுக்கு அருகில் கடந்த அறுபது ஆண்டு காலமாக மக்கள் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலையம், நமது சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அணுமின் உலைகள் குடியிருப்புகளின் நடுவேகூட அமைக்கப் பட்டுள்ளது.
அணுஉலைகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சு வெகுவாக கட்டுப்படுத்தப் பட்டு, மக்களுக்கு ஆபத்து இல்லாத அளவிலேயே அமைக்கப் படும். எத்தனை விஞ்ஞானிகள்,பொறியாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அணுமின் நிலையத்தினுள் பணிபுரிகிறார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
                    4.எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பினும் பூகம்பம் போன்ற பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வது?
உண்மைதான்! யாரும் பூகம்பம் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட பேரழிவுகளை எல்லா அணுமின் உலைகளும் தாங்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. ஜப்பான் நாடு பூகம்பம் அடிக்கடி ஏற்படும் நாடு. அதற்கேற்றபடி அங்குள்ள அணுஉலைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். இருந்தும் அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தினால் ஃபுகுஷிமாவில் பெரிய அளவிளான அணு உலை விபத்து நேரிட இருந்து, கடைசி நிமிடத்தில் காப்பாற்றப் பட்டது.
நம் நாட்டிலும் கூட அத்தனை பெரிய பூகம்பங்கள் வராது என்று யாரும் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஓரளவிற்கு பெரிய இயற்கை அழிவுகளை தாங்கக் கூடிய வகையில்தான் எல்லா வகையான பெரிய கட்டிடங்களும், பாலங்கள், விமான நிலையங்கள் மற்றும் அணைக் கட்டுகள் வடிமைக்கப் பட்டு கட்டப் பட்டுள்ளன.
நமது முன்னோர்கள் கட்டிய கோவில் கோபுரங்களாகட்டும், உலக அதிசயங்களான, பிரமிட், தாஜ்மகால் போன்ற எந்த கட்டிடங்களுமே ஓரளவிற்கு மேல் பூகம்பங்களை தாங்கி நிற்க முடியாது . இருந்தும், நாம் நமது அறிவியல் திறனின் மீது நம்பிக்கை வைத்து வானுயற கட்டிடங்களை கட்டிக் கொண்டேதான் போகிறோம்.
நான் நமது அறிவியல் திறனை நம்புகிறேன்.
                    5. ஃபுகிஷிமா, செர்னோபில், மூன்று மைல் தீவு போன்ற இடங்களில் நடந்த அணு விபத்திற்கு பிறகு அங்கே இருக்கும் கதிர்வீச்சு  பல நூறு ஆண்டுகள், ஏன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீங்காதிருக்குமாமே?
உண்மையில், மேற்சொன்ன மூன்று இடங்களிலும் தற்சமயம் மனிதர்கள் வாழவே இல்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்க்கைச் சூழலே நிலவுகிறது என்பது உண்மை. மூன்று இடங்களிலுமே, விபத்திற்கு பிறகும் கூட மீதமுள்ள அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுதான் வருகிறது. மூன்று மைல் தீவில் ஒரு அணு உலையிலும், செர்னோபிலில் முன்று அணு உலைகளிலும் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது.
                    6. இவ்வளவு நியாயம் பேசும் நீங்கள் ஏன் போயஸ் தோட்டத்திலோ அல்லது டில்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டிலேயோ இந்த அணுமின் உலையை அமைத்துக் கொள்ளக் கூடாது?
அணு உலையினை முதல்வரோ அல்லது பிரதமரோ தங்கள் வீட்டுக்கு அருகில் அமைத்துக் கொள்வார்களா என்பது தெரியாது. அது சாத்தியமும் அல்ல. ஒரு வேளை அணுமின் நிலையத்துக்கு அருகில் வசிப்பவர்கள் மட்டுமே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்றால், அவர்கள் நிச்சயம் கூடங்குளத்துக்கு குடி வந்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இயல்பானது. அவர்களின் வாழ்வாதரத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதுமான அச்சத்தின்பால் இந்த போராட்டம் எழுப்பப் பட்டுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்குவது நமது அரசுகளின் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தகுந்த உத்திரவாதம் அளிப்பதுடன், அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் அரசு போக்க வேண்டும். அவர்களை வெளிநாடுகளின் உள்ள அணுமின் நிலையங்களுக்கும், குறிப்பாக செர்னோபில், ஃபுகுஷிமா நகரங்களுக்கும் அழைத்து சென்று பாதிப்புகளையும் பார்வையிட வைக்க வேண்டும்.
மொத்தத்தில், அரசு பொதுமக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும். எதையும் மூடி மறைக்காமல், அனைத்து சாதகங்களையும், பாதகங்களையும் அவர்கள் முன் வைக்க வேண்டும். கூடங்குளம் மக்கள் மட்டுமல்லாமல், நாட்டின் இதர பகுதி மக்களுக்கும் இந்த அணுகுமுறை முன்மாதிரியாக அமையும் என்று நம்புகிறேன்.
ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் துரதிஷ்டவசமாக நேர்மாறாக இருக்கிறது. அதிலும், பிரதமர், கூடங்குளம் கூட்டுக் குழுவினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசும் முன்னரே, திட்டம் நிறைவேறியாக வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியது பெரும் மோசடித் தனமானது. இது போன்ற செயல்கள் மக்களிடையே அரசுகளின் மீது பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.
இது போன்ற பின் வாசல் வழிகளைத் தவிர்த்து, நேர்மையான, உண்மையான பேச்சுவார்த்தைகளை, பொதுமக்களின் மீது நம்பிக்கை வைத்து, அரசு நடத்துமேயானால், இதில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்
நண்பர்களே! நான் அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் அதனால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று கூறவில்லை. அணுமின் உலைகளின் மிகுந்த பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு அத்தகைய விபத்துகளை நியாயப் படுத்தவும் இல்லை. உண்மையில், அணுமின் உலைகளில், ஏதேனும் பெரிய விபத்து நேரிட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை முழுவதும் ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால், அணுமின் நிலையங்களில் ஏதேனும் எதிர்பாராத விபத்து நேரிடின், அதற்காக அங்கு செய்யப் பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக நம்புகிறேன். மேலும்,
விபத்து ஏதும் நேராமல் அணுமின் உலைகள் இயங்க முடியும் என்னும் அறிவியியல் உத்திரவாதத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 

21 thoughts on “கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

  1. ஐயா.. தாங்களே குறிப்பிட்டு உள்ளபடி முதலில் பொது மக்களின் உயிரும், வாழ்வாதாரமும், எதிர்கால நம்பிக்கையும்தான் முக்கியம். மருந்து பாட்டிலில் குறிப்பிடுவது சட்டபூர்வ தேவைக்கல்ல. அப்படி எடுத்துக் கொள்வதானால் அது தவறு நிகழும் பட்சத்தில் நிறுவனங்களின் சட்டப் பாதுகாப்பாக அமையுமே தவிர மருந்தை உபயோகிப்பவர்களின் பாதுகாப்புக்காக அல்ல. பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிபடுத்த குறைந்த பட்ச பரிட்சார்த்த முயற்சியாக 30 நிமிடங்களில் 60 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க முடியும் என்பதை யாராவது முதலில் ஓடிக்காட்டி நிச்சயப்படுத்த வேண்டுமல்லவா ? ஒரு சாராரின் உயிரை பணயம் வைத்து மற்றொரு சாராரின் தேவையை பூர்த்தி செய்வது எந்த விதத்தில் நியாயம் ? எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் மக்களிடையே சமநிலையை உருவாக்க முடியாத விஞ்ஞான கண்டுபிடிப்புகளாலோ, உற்பத்திகளாலோ எந்த பலனும் இல்லை. இன்றைய நிலையில் மக்களின் வாழ்வாதாரம், உணவு பிரச்சினை, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு, இதெல்லாம் தீர்ந்த பின் மின் உற்பத்திக்கு பாடுபடலாம். அணு விபத்து நடந்த இடங்கள் மட்டுமல்ல மீதமுள்ள இடங்களிலும் சராசரியான இயல்பு வாழ்க்கையை மக்கள் வாழ்வதாக எண்ணிக் கொண்டு இருப்பது மிகை படுத்தப்பட்ட ஒன்று.
    தலை வலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும்.

    1. ப்ரகாஷ்,
      அணு உலை வெடித்து விபத்து நடந்த ஒரே இடம், செர்னோபில்தான். அங்கே, மக்கள் இன்னமும் வசித்து வருவதையும், அங்கே இன்னமும் அணுஉலை செயல்பட்டு வருவதையும் நீங்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
      மூன்று மைல் தீவு மற்றும், ஃபுகுஷிமாவில் நடந்தது, கனநீர் வெளியேறியதும் மட்டும் குளிர்நீர் கொண்டு செல்லும் பாதைகள் தடைபட்டதுமே. அங்கும் மக்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். மேலும் அந்த அணு உலைகளும்
      தொடர்ந்து இயங்கி வருகின்றன. எதுவும் மிகைப் படுத்த பட்ட செய்தியல்ல. வலைதளங்களில் நீங்களே உறுதி செய்து கொள்ளலாம். மேலும், நானும் இணைப்புகளை தருகிறேன்.
      உலகின் மிக வளர்ந்த நாடுகளில்கூட மக்களுக்கு தேவைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவையெல்லாம் தீர்ந்த பிறகு புதிய திட்டங்களை செயல் படுத்தலாம் என்பது நியாயமான வாதமா.
      இன்னும் 50 ஆண்டுகளில் எண்ணை வளம் தீர்ந்த பிறகு, இன்னும் சில நூறு ஆண்டுகளில் நிலக்கரி தீர்ந்த பிறகு, இந்த உலகு தனது எரிசக்தி முழுமையான தேவைக்கு அணுமின் நிலையங்களைத்தானே நாடப் போகிறது.
      மற்றபடி, பாதுகாப்பு தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அதே கவலைகள் எனக்கும் இருக்கிறது.
      மாற்றுக் கருத்துக்கு நன்றி. தொடந்து விவாதிப்போம்.

    2. நீங்கள் சொல்லும் மக்களின் வாழ்வாதாரம், உணவு பிரச்சினை, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு மின்சாரம் மிக, மிக முக்கியமாக தேவைப்படுகிறதே நண்பரே! என்றோ வரும் (வராது என்று நம்புவோம்) அணு உலை விபத்திற்க்காக பயந்துகொண்டு அனல் மின்சாரத்திற்கு தேவையான கரி மூலமும் எரித்தபின் வரும் சாம்பல் மூலமும் பல்வேறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் வாழும் மனித இனத்திற்கு கூட எத்துனை வகையான நோய்கள் பரவுகின்றன தெரியுமா? புனல் மின்சாரத்திற்கு தேவையான நீரை ஒரே இடத்தில் தேக்கி வைப்பதனால் ஏற்படும் நிலமாறுபாடுகளை நாம் ஏன் அவதானிக்க தவறுகிறோம்? நிலநடுக்கத்திற்கு இதுதானே முக்கிய நிகழ்வு. எனவே, மிகச்சிக்கனமாக உற்பத்தி செலவுள்ள அணு மின்சாரமே இப்பொழுது நம் நாட்டிற்கு மிகச்சிறந்த தீர்வு.

  2. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை என்பது உள்ளூர் வாசிகளினால் உருவாக்கப்பட்டது. இதை எதிர்ப்பவர்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் தானே தவிர விஞ்ஞானிகளோ அல்லது அறிவியல் அறிஞர்களோ அல்ல. மக்களை திசை திருப்பும் சில தீய அரசியல் சக்திகள் தான் இதன் பின்புலம். இந்த அணு மின் நிலையம் துவக்குவதற்கு முன், மத்திய அரசு இந்த பகுதியின் சுற்றி உள்ள பகுதிகளில் சாலை வசதி, பள்ளிக்கூட வசதி, கழிப்பிட வசதி ஆகியனவற்றை செய்து கொடுத்தது. அப்போதெல்லாம் எதிர்க்காத இந்த போராட்ட குழு இப்போது மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலானோர் செல் போன் பயன்படுத்துகின்றனர். இந்த செல் போன் – ஐ அதிகம் பயன்படுத்துவதால் எவ்வளவு தீமைகள் விளையும் என்பதை அனைவரும் அறிவர். இருப்பினும் யார் செல் போன் – ஐ பயன்படுத்தாமல் உள்ளனர்? அதை போல, தமிழக அரசு இந்த அணுமின் நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் கருதி தக்க நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டுமே தவிர இரட்டை நிலையை மேற்கொள்ள கூடாது.

  3. அன்புடன் வணக்கம் நண்பரே! பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் ஒரு நன்மை!! தீமை!!! உண்டு அது தவிக்க முடியாது வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படத்தான் செயுய்ம் கவனமாக செல்க!!..தலை கவசம் அணிக!! ..மெதுவாக செல்க.!!!. போக்குவரத்து விதிகளை!! மீறாது செயல்படுக!!!.. ….விவசாயத்திற்கு பூச்சி மருந்து.ம.னிதர்கள் உண்டால் விஷம் .. யாரும் உபயோகிக்காமல் இருப்பதில்லை விவசாயதிர்க்கு??
    ஒரு போராட்ட நண்பர் திருமணம் நிச்சயமான் பின்பு மணமகனுக்கு எய்ட்ஸ் என அறிந்தால் மணம் முடிப்பீர்கள???என சொல்லி இருந்தார்..
    நல்ல கருத்துதான் !!!!! ஏன் நிச்சியம் பண்ணும்முன்னாரே அந்த மணமகனை பற்றி தீரவிசாரித்த பின்பு நிச்சியம் பண்ணி இருக்கலாமே???
    தற்போது கூடங்குளம் மின் நிலையத்தில் சோதனை முறையல் மின் உற்பத்தி செய்தாகி விட்டது.. நீங்கள் கூறியது போல் உபயோகபடுதபட்ட
    உறனியம் கம்பிகள் குளிர் ஊட்டபெற்று கொண்டிருக்கிறது .. சரிதானா??இப்போது அணு மின் நிலையத்தை மூடு??? என்றால் அதில் இருக்கும் உறனியம் நிலை என்ன ?? விபத்தை விட சீரழிவு.!!!!.தற்போது இருக்கும் அரசியல் வியாதிகள் தன்கென்ன வந்தது என போகும் ஜென்மங்கள் ..ஏற்கெனெவே அங்கு உள்ள ரஷ்யா விஞ்ஞானிகள் ஊருக்கு சென்று விட்டனர்.. ???உள்ளூர் விஞ்ஞானிகள் ???..[ குறை சொல்ல வில்லை ]இந்த வகை அணு உலைய்ல் அனுபவம் இருக்குமா??சிந்தயுங்கள் நண்பர்களே .. தலை வலி காய்ச்சல் தனக்கு வந்தால்தான் தெரியும் ?? உண்மை!!!நானும் சுமார் 100..km..தொலைவில் உள்ளேன்..[வான்வெளி தூரம்] .இதை எப்பிடி கையாளலாம் ???என்று சிந்தித்து ஒரு தீர்வுடன் செயல்படுங்கள் விவாதத்திற்கு இடம் அளித்த கருணா நண்பருக்கு நன்றி…

  4. அங்கும் மக்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். மேலும் அந்த அணு உலைகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன//
    இதை எப்படி சராசரி, இயல்பு வாழ்க்கை என எடுத்துக் கொள்ள முடியும்?

    1. அணு உலைகளுக்கு வெகு அருகிலும் கூட மக்கள் வசிக்கலாம். உலகின் பல இடங்களிலும் அப்படிப் பட்ட இடங்களில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதை இயல்பான வாழ்க்கையாகவே நான் கருதுகிறேன்.

  5. Sir, this is quite good. With another round of editing, you can easily make it for the common man and please send it to Kumudam or Ananda Vigadan (it is my suggestion, but the end decision is upto you). I dont know to view this in relation to polotical point and the emotions of common man, which you know very well than others. Thanks.

  6. திரு ஜெயமோகன் எழுத்துக்களோடு எனக்கு முரண்பட்ட ஒரு விஷயம் இந்த அணு உலை பற்றியது. இந்த அணு உலை வரமே என்று சொல்லும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்

  7. தலை வலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும்.

    1. அதாவது நீங்கள் சொல்ல வருவது, அணு உலைக்கு அருகில் வசிக்கும் மக்களின் உணர்வுகள், தேவைகள் வெகு தூரத்தில் இருக்கும் என்னைப் போன்றோர்க்கு புரியாது என்பதையா?
      ஒரு வேளை இருக்கலாம். நிச்சயம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி.

  8. Using LPG for domestic purpose is quite dangerous than the conventional method. Are we not using it? Its as similar as that.

  9. ஆமாம்! தேவை அதிகம்தான். அதற்காக மக்களின் உயிரை பணயம் வைக்க சொல்கிறீர்களா? என்று கேட்பவர்களுக்கு ஒரு நேரடியான பதில். ஆம்! வேறு வழியில்லை என்பதுதான்.
    anu ulaikka mattum alla veru yetharkka um entha karuthai yerka mudiyathu………….

  10. # அணுமின் நிலையங்களில் ஏதேனும் எதிர்பாராத விபத்து நேரிடின், அதற்காக அங்கு செய்யப் பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக நம்புகிறேன் #
    போபாலில் விபத்து நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் கழிவுகளை இன்னும் இந்த அரசால் அகற்ற முடியவில்லை….இந்த அரசை நம்பி எப்படி அணுஉலையை இயங்க அனுமதிப்பது???????????
    http://writersamas.blogspot.in/2012/10/blog-post_2482.html
    தங்களின் பதிலை எதிர்பார்கிக்றேன்!!!!

    1. நண்பரே,
      போபாலில் நடந்தது விஷவாயுக் கசிவு! அணுக் கதிரியக்கம் அல்ல.
      மேலும்,யூனியன் கார்பைட் நிறுவனத்தை அரசு இழுத்து மூடி விட்டது. முதலாளிகள் தங்கள் நாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். (அனுப்பி வைக்கப்பட்டனர்!).
      இந்த அரசியல் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்யும்.
      அணுமின் நிலையங்களை நான் ஆதரிப்பது, அது ஒரு க்ளீன் எனர்ஜி கேந்திரம் என்பதால்.
      நீங்கள் எல்லாம் எதிர்க்கும் அந்தப் பாதுக்காப்பு காரணங்களை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
      அதே நேரத்தில் விஞ்சானத்தையும் நம்புகிறேன். நேர்மறை சிந்தனை.
      நன்றி.

      1. பதிலுக்கு நன்றி.
        அறிவியலை நானும் எதிர்ப்பவன் அல்ல…..இந்த விஞ்ஞானத்தை இந்தியாவால் கையாள முடியாது என்பதுதான் என்னுடைய எண்ணம்….ஒரு இந்திய குடிமகனாக எனக்கு இந்தியா மீது நம்பிக்கை இல்லை.
        போபாலில் நடந்தது விசவாயு கசிவுதான்….அதற்கே இந்த இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லையே…….பிறகு எப்படி நம்பிக்கை வரும்!!!!!!!!!!!!!

  11. நீங்கள் இந்த பதிவை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆயிற்று. இன்னும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை… சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி. இனி என்ன நடக்கிறது பார்ப்போம் … அன்புடன் …. சுதா

  12. அண்ணண் கருணாவின் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை பார்த்து பழகிய எனக்கு, இதை படிக்கும்போது மிகுந்த வேதனையாக இருந்தது.
    1) அணு மின் நிலையம் அங்கு வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியது அந்த பகுதி மக்களே, அந்த உரிமையை அரசு அவர்களுக்கு கொடுக்கவில்லை
    2) விஷ வாயுவைவிட கதிரியக்கத்தை சாதரணமாக பார்ப்பது வியப்பளிக்கிறது
    3) ” க்ளீன் எனர்ஜி” பற்றி பேசும் நாம் வசதியாக சூரிய சக்தி மறந்து விடுகிறோம்
    4) இங்கு அணு உலை வேண்டும் என்று சொல்லும் நம்மில் பலர், நம் வீட்டின் முன் மின்சார வாரியத்தின் “டிரான்ஸ்பார்மரை” கூட வைக்க அனுமதிப்பதில்லை
    5) அணு கழிவைக் கூட வைக்க அனுமதிக்கவில்லை அண்டை மாநிலம்
    6) மின் உற்பத்தி தொடங்கிய உடன், கரண்ட் பொங்கிவரும் என்று கூறிய நாம் இன்றும் மின்வெட்டில்.
    7) சமீபத்தில் நடந்த விபத்தின் உண்மை நிலை இன்றும் நமக்கு தெரியாது
    இன்னும் பேசலாம், ஆனாலும் எனக்கு அணு உலை வேண்டும்

    1. நிறைய விஷயங்கள் பேச, எழுத, விவாதிக்க இது தொடர்பாக இருக்கிறதுதான்.
      வருத்தப் பட அவசியமில்லை.
      எனது கருத்து எனக்கு.
      உங்கள் கருத்து உங்களுக்கு.
      பொறுத்திருந்து பார்ப்போம்.
      கருணா.

Comments are closed.