தேர்தல் முடிவுகள்o

தேர்தல் முடிவுகள்

rahul-gandhi
அன்று காலை யாரும் என்னை எழுப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக நீண்ட நேரம் தூங்கி விட்டேன் போலிருக்கு! எழுந்து அறையை விட்டு வெளியில் வரும்போது நேரம் மதியம் 11 மணி. அதிர்ந்து விட்டேன்! நேரமானதை விட, டிவி ஓடாமல் வீடு அமைதியாக இருப்பதைப் பார்த்து!
மனைவியிடம் ஏன் டிவி ரிப்பேரா என்றேன். இல்லையே? எந்த சேனல் வைத்தாலும் தேர்தல் முடிவுகளா இருக்கு! அதான் போடலை என்றார்!
என்னது? இன்னைக்கு ரிஸல்ட்டா?!!!!!
ஓடிச் சென்று டிவியைப் போட்டேன்.
கண்ணில் பட்ட முதல் செய்தி!
கன்னியாகுமரி, தேனி, தென்காசியில் காங்கிரஸ் முன்னிலை!
கண்களைத் துடைத்துக் கொண்டேன். எதற்கும் இருக்கட்டும் என வேறு சானல் மாற்றினேன்.
அதில் தமிழகத்தில் முதல் சுற்றுக்குப் பிறகான முன்னிலை நிலவரம் என்று
காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் எனப் போட்டிருந்தது.
பதறிப்போய் டைம்ஸ் நவ் சானலுக்குச் சென்றேன்.
அங்கே தேசிய அளவில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும், இதர இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மாநில கட்சிகள் முன்னிலை வகிப்பதாகவும் செய்திகள் இருந்தன!
மேலும், நரேந்திர மோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் பின் தங்கி இருப்பதாகவும் ஃப்ளாஷ் நியூஸ் சொன்னது!
சத்தியமா இது கனவுதான் என்று என்னைத் தேற்றிக் கொண்ட வேளையில் மனைவி காஃபியைக் கொண்டு வந்து வைத்தார்! எடுத்துக் குடித்தேன்! காஃபி வழக்கம்போல சுமாராகத்தான் இருந்தது. ஆக இது கனவில்லை!
அப்படியே உறைந்துப் போய் உட்கார்ந்து விட்டேன்!
நேரமாக ஆக பல முன்னிலைகள், முடிவுகள் வரத் தொடங்கின!
தமிழ்நாட்டில் அதிகபட்ச வாக்கு வித்தியாசமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக வெற்றி பெற, ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், போன்றோர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வித்தியாசம் பெற்று வெற்றி பெறுகிறார்கள்!
உச்சக்கட்டச் செய்தியாக, பாண்டிச்சேரியில் நாரயணசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாஸிட் இழந்துப் போகிறார்கள்!
எனக்கு நிஜமாக நெஞ்சடைத்துப் போகிறது!
தேசியளவில், நிலவரம் பெரும் கலவரமாக இருக்கிறது. தென் இந்தியா முழுமையுமாக காங்கிரஸ் தனக்காக துடைத்து எடுத்துக் கொண்டுவிட, வட இந்தியாவிலும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப் பட்ட பெரும்பாலோர் வெற்றி முகத்தில் இருக்கின்றனர்.
திடீரென பிபிஸி சானல் நினைவுக்கு வர, அங்கே ஓடுகிறேன்! ஒட்டு மொத்த உலக மீடியாவும் இந்தியாவில்! உலகின் எந்த ஊடகமும், கருத்துக் கணிப்பும் கணிக்காத முடிவுகளை இந்திய மக்கள் அளித்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நியூயார்க் டைம்ஸ் நிருபர் மார்க் ஸ்பென்ஸர்ஸ்.
நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என பாஜகவின் ஒரு தலைவர் தெரிவித்தக் கருத்தினை இந்திய மக்கள் தங்களின் ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் மதவாதம் பேசிக் கொண்டிருந்த அத்தனைத் தலைவர்களையும் தோற்கடித்து உள்ளதாகவும் சி.என்.என் நிருபர் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து விட்டுருக்கின்றன. காங்கிரஸ் கட்சி மட்டும் தனியாக 325 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் 350க்கும் மேலாகப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறுகிறது.
எதிர்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியுற, புது முகங்கள், படித்த இளைஞர்கள், குற்றப் பின்னணி அற்ற வேட்பாளர்கள் மட்டும் அங்கே வெற்றி பெற்று வருகிறார்கள்.
எதிர்கட்சி, ஆளும்கட்சி , மீடியா என அனைவரும் அப்படியே அதிர்ச்சியுற்றுப் போயிருக்க, நாராயணசாமி மட்டும் முதலில் சுதாரித்துக் கொண்டு சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளிக்கிறார். இன்னும் 15 நாட்களில் கூடங்குளம் இரண்டாம் உலை முழுமையாக இயங்கும் எனவும், 15 மாதங்களில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும், 15 வருடங்களில் தமிழகத்தின் மீதமிருக்கும் ஊர்களான மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் வேலூரிலும் அணு உலைகள் நிறுவப் படும் எனவும் அவர் அறிவிக்க, அவருடனே காரில் வந்த சிலர் சுற்றிலும் நின்று கைத்தட்டுகின்றனர்.
இந்தியாவின் ஒரே பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, வாரனாசியில் மயிரிழையில் வெற்றிபெற, எதிர்பாராத விதமாக தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தோல்வியுறுகிறார். இந்த அசாதாரணமான சூழலில், தனது சேவை குஜராத் மாநிலத்துக்குத் தேவைப் படுவதால், தான் வெற்றி பெற்ற வாரனாசி தொகுதியயும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து விட்டு, மீண்டும் முதல்வர் பதவிக்கே செல்லப் போவதாக அறிவிக்கிறார்.
பாஜகவுக்கு வாக்களியுங்கள்! அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்! மீதமுள்ள இடங்களில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்க்கே வாக்களியுங்கள் என சொல்லிக் கொண்டிருந்த சோ ராமசாமி, நிற்காமல் சிரித்துக் கொண்டிருப்பதால் அவரை மருத்துமனையில் சேர்த்திருப்பதாக ஒரு பட்டைச் செய்தி அடியில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மோடி பிரதமரான அடுத்த வாரத்திலேயே வைகோ தமிழக முதல்வராவார் என்றும், அதற்கடுத்த வாரத்தில் தமிழகமெங்கும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப் படும் என்றும், அந்த இடங்களில் எல்லாம் ராட்டையில் நூல் நூற்க இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப் படும் என்று உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்த தமிழருவி மணியன் இனி அரசியலில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதார ஆலோசகராகப் பணிபுரியப் போவதாக அறிவிக்கிறார்.
தில்லி செங்கோட்டையின் முன்பாக பிரதமர் பதவியேற்பு விழா நடக்கிறது! நாட்டின் இளம் பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்கிறார். உலகிலேயே இளம் வயதில் பிரதமராக பொறுப்பேற்கும் ராகுல் காந்தியை நேரில் வாழ்த்த, உலக நாடுகளின் அத்தனை தலைவர்களும் அங்கே வந்து குழுமியுள்ளனர்.
அப்போது சோனியா காந்தி எதிரில் வெறும் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார். அருகில், அவரை விட மகிழ்ச்சியாக அத்வானி, ஜஸ்வந்த்சிங் போன்றவர் அமர்ந்துள்ளனர். மன்மோகன் சிங் மட்டும் சந்தோஷம் தாளாமல் தாரை தாரையாய் ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல்,அவருடன் இருந்த எந்த மந்திரிக்கும் மீண்டும் பதவிகள் வழங்கப் படாமல், முற்றிலும் புதிய இளைஞர்கள் கொண்ட மந்திரிசபையாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் மேலும் ஒருமுறை குமுறிக் கொண்டு அழுகிறார்.
புதிய பாரதப் பிரதமர் ராகுல் காந்தி இப்போது ஒலிபெருக்கி முன்பாக வருகிறார். அவர் பேச்சைக் கேட்க உலகம் மொத்தமும் தொலைக்காட்சி முன்பாக காத்திருக்கின்றனர். பிரதமர் பேசத் துவங்குகிறார்.
‘இது ஒரு அசாத்தியமான வெற்றி! யாருமே எதிர்பாராத மக்கள் தீர்ப்பு இது!
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தருணத்தில் நான் இதன் காரணகர்த்தாவான ஒருவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்கேபி கருணா மட்டும் இப்படியான ஒரு அற்புதமானக் கனவைக் கண்டிராவிட்டால், நான் இங்கே இப்போது பிரதமராக நின்று கொண்டிருக்க மாட்டேன்! மீண்டும் காங்கிரஸ் ஆட்சியும் வந்திருக்காது! ‘
இந்தியா மொத்தமும் சட்டென திரும்பி ‘தேசத்துரோகி’ என்பது என்னைப் பார்க்க நான் வெலவெலத்துப் போய் அமர்ந்துள்ளேன்!
‘இப்படி ஒரே கனவில் எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் விரோதியாகி விட்டேனே?’
– எஸ்கேபி கருணா.
( தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் ஒரு இடம் கிடைக்கும் என்ற ‘எக்ஸிட் போல்’ ரிஸல்ட் ஒன்றினைக் கண்டேன்! அதை நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டேன் போலிருக்கு!)

17 thoughts on “தேர்தல் முடிவுகள்o

  1. Excellent இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தருணத்தில் நான் இதன் காரணகர்த்தாவான ஒருவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்கேபி கருணா மட்டும் இப்படியான ஒரு அற்புதமானக் கனவைக் கண்டிராவிட்டால், I can’t stop laughing

  2. கலக்கல் கருணா ! ஒரே.. இந்தியனின் கனவு…

  3. பகல் கனவு பலிக்காது என்பதால் தான் இவ்வாறு கனவு கண்டீரோ?????அருமையான எழுத்தாக்கம்…..

  4. //காஃபி வழக்கம்போல சுமாராகத்தான் இருந்தது. ஆக இது கனவில்லை!//
    வீட்ல இன்னும் படிக்கலை போல!

  5. # காஃபி வழக்கம் போல் சுமாராகத்தான் இருந்தது.ஆக இது கனவில்லை#
    #அப்போது சோனியா காந்தி எதிரில் வெறும் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார். அருகில், அவரை விட மகிழ்ச்சியாக அத்வானி, ஜஸ்வந்த்சிங் போன்றவர் அமர்ந்துள்ளனர். மன்மோகன் சிங் மட்டும் சந்தோஷம் தாளாமல் தாரை தாரையாய் ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். #
    # இந்தியா மொத்தமும் சட்டென திரும்பி ‘தேசத்துரோகி’ என்பது என்னைப் பார்க்க நான் வெலவெலத்துப் போய் அமர்ந்துள்ளேன்! #
    Simply great and supper !!
    M.S.Rajendiran – Tiruvannamalai.

  6. Nice punch. நாராயணசாமி மட்டும் முதலில் சுதாரித்துக் கொண்டு சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளிக்கிறார். இன்னும் 15 நாட்களில் கூடங்குளம் இரண்டாம் உலை முழுமையாக இயங்கும் எனவும், 15 மாதங்களில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும், 15 வருடங்களில் தமிழகத்தின் மீதமிருக்கும் ஊர்களான மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் வேலூரிலும் அணு உலைகள் நிறுவப் படும் எனவும் அவர் அறிவிக்க, அவருடனே காரில் வந்த சிலர் சுற்றிலும் நின்று கைத்தட்டுகின்றனர்.

  7. as a i was reading ur article, i thought that the article is a satire. it was ordinary satire until i came the last but one para. and then i burst into uncontrollable laughter. so karuna is of course not an ordinary writer. great. keep writing.

  8. எனக்கு அப்பவே ஒரு சின்ன சந்தேகம்! அபுதாபி பெராரி வேர்ல்டில் உள்ள ரோலர் கோஸ்டரில் பயந்துகொண்டே சென்றாயே! அதன் விளைவாக இருக்கும்! 16ஆம் தேதிக்குப்பிறகு சரியாகிவிடும்!!!! Nothing to worry!!!

  9. ரொம்ப நாளா எங்க திருநெல்வேலி ஆளுங்களுக்குதான் குசும்பு ஜாஸ்தி அப்படின்னு நினைத்து இருந்தேன், எங்க எல்லோருக்கும் டெபொசிட் போச்சு,
    உலக அளவிலான லொள்ளு போட்டியில் நீங்களே வெற்றி அடைந்தீர்கள் என்று எனக்கு கொடுக்கப் பட்ட, சரி நானே எடுத்துக் கிட்ட அதிகாரத்தை வைத்து அறிவிக்கிறேன் )))

  10. as usual ROFL ;-)
    // காஃபி வழக்கம்போல சுமாராகத்தான் இருந்தது. ஆக இது கனவில்லை! //
    your wife must be a saint :-)
    amas32

  11. இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமாம்… :) :)

  12. இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமாம்…

  13. நல்ல பன்ச்!!!
    அவ்வப்போது இதுபோல் வெளியிடப்படும் இம்மாதிரிப் பதிவுகள்தான் அயர்ந்து தூங்கிவிட யத்தனிக்கும் சமூக விளிப்புணர்வை மீண்டும் மீட்டெடுக்கிறது… நன்றி கருணா!

  14. செம கலக்கல் கருணா. கற்பனையும் ஃப்ளோவும் சூப்பர். என்ன ஒரு கிண்டல் உங்க எழுத்து. எது எப்படியோ நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளரானதை யாராலும் மறுக்க முடியாது. வாழ்த்துக்கள்.

  15. //திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்கேபி கருணா மட்டும் இப்படியான ஒரு அற்புதமானக் கனவைக் கண்டிராவிட்டால், நான் இங்கே இப்போது பிரதமராக நின்று கொண்டிருக்க மாட்டேன்! மீண்டும் காங்கிரஸ் ஆட்சியும் வந்திருக்காது! ‘///
    நான் விழுந்து விழுந்து சிரித்ததில் பலமான அடி விழுந்தது காங்கிரசுக்கு :-)
    வருங்கால அமெரிக்க ஜனாதிபதி எஸ்.கே.பி. கருணா சார் அவர்கள் வாழ்க!. (அந்த கனவு மட்டும் உண்மையானால் நீங்கள் அமெரிக்க ஜனாதிபதி ஆவது உறுதி ! உறுதி ! )

Comments are closed.