நீலத் திமிங்கிலம்

நீலத் திமிங்கிலம்

கடலின் மொத்த நீலத்தையும் வானம் உள் வாங்கியிருந்தது. சூரிய வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருக்கும் நண்பகல் நேரம் அது! நடுக் கடலில் தன்னந்தனியே அந்தப் படகு மெல்ல ஆடி, அசைந்து கொண்டிருக்கிறது. அதன் மீது, அரை நிஜார் அணிந்து கொண்டு சில வெற்று மார்பு வெள்ளைக்காரர்கள் தங்கள் கையிலிருக்கும் நீள லென்ஸ் காமிராவைக் கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென, கடலின் உள்ளேயிருந்து ஒரு பூதாகரமான உருவம் மேலெழுந்து, அதன் உடல் முழுமையும் சில கணங்கள் காற்றில் மிதக்க விட்டு, திடுமென மீண்டும் கடலுக்குள் விழ, அப்போது எழுந்த பேரலைகளினுள்ளே, ஒரு சிறு துளியாக அந்தப் படகு அசைந்தாடுகிறது. சமுத்திரத்தின் மாபெரும் பரப்பினை தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் அந்த நீலத் திமிங்கிலம் மீண்டும் ஒரு மூச்சு விட, சில நூறு அடிகள் உயரத்திற்கு அங்கே தண்ணீர் பீய்ச்சியடிக்கப் படுகிறது.
இந்த மாதிரியான திமிங்கிலக் காட்சிகளை நேஷனல் ஜியாகிரபிக், டிஸ்கவரி சானல்களில் பார்ப்பதுதான் எனது முழு நேர பொழுது போக்காக இருந்தக் காலம் ஒன்று உண்டு. அதுவும், சமீபத்தில் ஹெச்டி சேனல்கள் வந்த பிறகு, கடல்சார் காட்சிகளை ஒரு முறைக் கூட தவற விடுவதேயில்லை. அதுவும் அந்த நீலத் திமிங்கிலம்! அதன் ஆளுமையால், ஒரு தேவதையைப் போல என்னை முழுமையாக ஈர்த்து வைத்திருந்தது. நடுக் கடலினில், அதன் வாழ்விடத்தில் அந்த அற்புத ஜீவராசியை ஒரு முறையேனும் நேரில் பார்த்து விட வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசைகளில் ஒன்று!
இந்தக் கோடை விடுமுறைக்கு நானும், எனது நண்பனும் தத்தம் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா செல்வது என்று முடிவெடுக்கப் பட்டவுடன், ஏற்கனவே ஒரு முறை அங்கு சென்று வந்தவன் என்ற முறையில், பிரயாண ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு என்னிடம் அளிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு வாரகாலமாக இணையத்தில் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது எதேச்சையாக சிட்னியில் திமிங்கிலம் காணுலா (Whale Watching) என்ற ஒரு அரை நாள் சுற்றுலா இருப்பதை அறிந்து கொண்டேன்.
அதுவரை, சாதாரணமாக இருந்த என் அட்ரிலின் சுரப்பி திடீரென விழித்துக் கொண்டு, தனது 25 வகையான ஹார்மோன்களையும் சுரக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரித்து, எனது இதயத் துடிப்பின் சத்தம் எனது காதுகளுக்கே கேட்கத் துவங்கியது. என் நெற்றி வியர்த்து, கண்கள் விரிந்தன. ஆனால், நான் பதட்டம் அடையவில்லை! முன்பொரு முறை, ஒரு திரைப்படத்தின் தனிக் காட்சியின் போது எனக்குப் பக்கத்து இருக்கையில் அனுஷ்கா வந்து அமர்ந்த போதுகூட இதே போலத்தான் எனக்கு ஆனது. எனவே வியர்வையைத் துடைத்துக் கொண்டு, அந்த வலைப்பக்கத்தையும், ஒரு தனிக் குறியீடு செய்து வைத்துக் கொண்டேன்.
சுற்றுப்பயணத்தின் நடுவே, சிட்னியில் ஒரு நாளை இதற்கென ஒதுக்கி வைத்தே, பயண நிரலை வடிவமைத்திருந்தேன். குழுவில் வேறு யாருக்கும் இந்த விஷயம் முன்னமே பகிரப்படவில்லை! கடலுக்குள் செல்வதற்கு பயந்து கொண்டு மறுத்து விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கிருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் செல்லும்போது, அவரவர் கனவில் என்ன வந்ததென்று எனக்குத் தெரியாது! நடுவானில், எனது கனவில் நானும் எனது நீலத் திமிங்கிலமும் அருகருகே நீந்தி விளையாடிக் கொண்டிருந்தோம்.
பிரிஸ்பேனில் இறங்கி, கோல்ட் கோஸ்டுக்கு சென்று, பிறகு கெயிர்ன்ஸ் சென்று, சிட்னி செல்வதற்குள் 10 நாட்கள் ஆகி விட்டது. அந்த பொன்னான வாய்ப்புக்காக நான் குறித்திருந்த அந்த நாள் மே மாதம் 23ஆம் தேதி! முந்தின நாள் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், பிள்ளைகள் நாளை எங்கே போகப் போகிறோம் எனக் கேட்டார்கள்! திமிங்கிலம் பார்க்கக் கடலுக்குச் செல்லப் போகிறோம் என்று பதிலளித்தேன். இடைப்பட்ட பத்து நாட்களில், பல முறை கடலைப் பார்த்திருந்ததாலும், ஒரு முறை, நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்குள்ளேயே சென்று வந்திருந்ததாலும், கடல் மீதிருந்த பயம் போய் விட்டிருந்தது போல! அப்படியா? சரி! குட் நைட்! என்று சொல்லிச் சென்று விட்டார்கள்.
அதிகாலையிலேயே எழுந்து 56ஆவது மாடியிலிருந்த எங்கள் தங்குமிடத்திலிருந்து வெளியில் பார்த்தேன்! முந்தின நாள் பகல் பொழுதினில் லேசான வெயிலும், மிதமான குளிரும் கொண்டிருந்த சிட்னி நகரம் முழுவதையும் இப்போது, கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு, மழை பொழிந்து கொண்டிருந்தது! அவ்வப்போது வீசும் பலத்தக் கடல் காற்றில் மழை வேகமாக அசைந்தபடியே கீழே பொழியும் காட்சி அத்தனைக் காலையில் பார்க்க அற்புதமாகத்தான் இருந்தது. ஆனால், இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த சாதகமற்ற வானிலையில் நாங்கள் திமிங்கிலம் பார்க்க பசிஃபிக் கடலுக்குள் போக வேண்டும் என்ற நினைப்புதான் என் வயிற்றை இறுகப் பிடித்தது!
எங்கள் பயண திட்டப்படி, சரியாக காலை 8 மணிக்கு சிட்னி, சர்குலர் குவே என்னும் படகுத்துறையில், மாஸ்டர் ஸ்டெப்ஸ் என்ற இடத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். நேரமில்லாதக் காரணத்தினால், காலை உணவை தவிர்க்கச் சொல்லி, ஒருவழியாக அனைவரையும் புறப்படச் செய்து, கிடைத்த பேருந்தைப் பிடித்து சர்குலர் குவே சென்றடைந்தோம்! ஆஸ்திரேலியாவில், முதன்முறையாக, கூகுள் கூட கண்டு பிடிக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்பதை கண்டறிந்தேன்! அதுதான் எனது பதிவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த மாஸ்டர்ஸ் ஸ்டெப்ஸ்! இதற்குள் மழை லேசாகக் குறைந்து, குளிர் மிக அதிகமாகி விட்டிருந்தது.
நல்ல வேளையாக, Whale Watching, Sydney என்று பெரிதாக பெயர் எழுதப்பட்டிருந்த சிறிய படகு ஒன்று அங்கே வந்து சேர்ந்தது. அவர்கள் என்னை நோக்கி கைகாட்ட, ஒரு நிம்மதி பெருமூச்சுடன், அனைவரையும் அழைத்துக் கொண்டு அருகே சென்றேன். அந்த நேரத்தில், அதே போன்று Whale Watching, Sydney என்று எழுதப்பட்ட இன்னொரு பெரிய, நவீன ரகப் படகு ஒன்றும் அருகில் வந்து நின்றது. ஐ! சூப்பர் போட்! இதிலேதான் போகப் போறோமா டாடி? என்று குதூகலத்துடன் கேட்டான். இல்லைடா! இந்த பழைய படகில்தான் போகிறோம். நம் படகுதான் முதலில் போகுமாம் என்று சொல்லியபடி, அனைவரையும் ஏற்றிவிட்டேன்.
எங்கள் குழுவில் ஒன்பது பேர். ஏற்கனவே படகில் ஒரு ஜப்பானியக் குடும்பம் இருந்தது! அவர்கள் நாலு பேர்! வழியில் இன்னொரு படகுத்துறையில் ஸ்பெயினைச் சேர்ந்த இருவர் ஏறிக் கொண்டனர். ஆக நூறு பேர் பயணிக்கக் கூடிய அந்தப் படகில் மொத்தம் நாங்கள் 15 பேர் மட்டும்தான் அந்த நாள் திமிங்கிலக் காணுலாவிற்கு! படகின் கேப்டன் வழமையான ஆஸ்திரேலிய உற்சாகத்துடன், சத்தமாக குட்மார்னிங் சொல்லி எங்களை வரவேற்க, குதூகலத்துடன் எங்கள் பயணம் தொடங்கியது.IMG_2379
கேப்டனின் உதவியாளர் ஒருவர், படகில் இருக்கும் சொற்ப பேர்களுக்காக, விமானத்தில் பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களை ஒரு டெமோ காட்டுவார்களே, அப்படி ஒரு லைஃப் ஜாக்கெட்டை வைத்து டெமோ காட்டினார்! ஒரு படகில் இப்படியான செயல்முறை விளக்கம் ஒன்றை நான் பார்ப்பது இதுவே முதல்முறை! நாங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மூலையில் சாய்ந்து படுத்துக் கொண்டு, அதை மிக அசிரத்தையாகப் பார்த்தோம். படகு மெல்ல மிதந்தபடி, சிட்னியின் புகழ்பெற்ற ஒபேரா ஹவுஸைக் கடந்து, ஹார்பர் ப்ரிட்ஜ் வழியாக மாநகரை விட்டு வெளியேறத் துவங்கியது.
மழை விட்டிருந்தது. எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவத்தின் நுழைவாயில் இருக்கும் உற்சாகத்துடன் படகுக்கு வெளியில் வந்து, ஹார்பர் ப்ரிட்ஜ் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனது மகன் மட்டும், ஒரு நவீனமான புதிய படகை விட்டு, பழையப் படகினில் அவனை அழைத்துச் செல்வது குறித்து, உற்சாகம் இழந்து அமர்ந்திருந்தான். மெல்ல படகின் ஆட்டம் அதிகரிக்கத் துவங்கியது. கேப்டனின் உதவியாள் மீண்டும் கீழிறங்கி வந்து, ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, அதனுள் இருந்த பேப்பர் பேக் சிலவற்றை எடுத்து, ஆளுக்கு ஒன்று தந்தான். இது எதற்கு என்று யாரோ கேட்டதற்கு, இதற்குள்ளாகத்தான் நீங்கள் வாந்தி எடுக்க வேண்டும் என்றான். மலர்ந்த முகங்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்தடைந்தது.
குடும்பத்தினரின் கவனத்தை திசைதிருப்ப எண்ணி, நான் எனது மகனின் அருகில் சென்றேன். எடுத்தவுடன், ஏன் இந்த பழைய போட்டில் எங்களை அழைத்து செல்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்டான். அவனிடம் எதையேனும் சொல்லி சமாதானப்படுத்த வேண்டுமேயென்று, ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன். கதை என்றவுடன், அம்பியிடம் இருந்து வெளியே வரும் அந்நியன் போல மெல்ல என்னுள்ளே இருந்த எழுத்தாளன் வெளியில் வந்தான்.
அவனை சமாதானப்படுத்துவதற்காக நான் சொன்னது ஒரு அற்புதமான புறநானூற்றுச் செய்யுள்! அவ்வையார், அதியமானை காணச் செல்கிறார்! அப்போது, அதியமானுக்கும், அடுத்த நாட்டு அரசன் தொண்டைமானுக்கும் ஒரு போர் மூள இருக்கிறது! அன்றைய போர் மரபுப்படி, போருக்கு முன்னர், ஒரு கடைசி கட்ட சமாதானப் பேச்சு நடத்த வேண்டும். அதற்காக, தன் சார்பில் தூது செல்லுமாறு அவ்வையை, அதியமான் கேட்டுக் கொள்கிறான். அவ்வையும், தொண்டைமானை சென்று சந்திக்கிறார்.
தொண்டைமானோ, அவ்வையை ஆரவாரமாக வரவேற்று, தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே, பல ஆயிரம் வாள்களும், வேல்களும், கேடயங்களும், அம்புகளும் புத்தம் புதிதாக செய்யப் பட்டு, ஒழுங்குமுறையாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. தொண்டைமான், அவ்வையை பார்த்து, எப்படி இருக்கிறது என்னுடைய படைக்கலன் (ஆயுதக் கிடங்கு) என்று கேட்கிறான்.
அரசே! தொண்டைமான்!(இந்த இடத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாணியில் படியுங்கள்!) உன்னுடைய படைக்கலன் அற்புதமாக, உனது தேவைக்கும் மேலான ஆயுதங்களைக் கொண்டு உள்ளது. உனது படை வீரர்களோ, போருக்கே பிறந்தவர்கள் போல நெஞ்சு நிமிர்ந்து காட்சியளிக்கின்றனர்! ஆனால், அங்கே அதியமானின் படைக்கலனிலோ, வேல்கம்புகள் கூர் முறிந்தும், வாட்கள் வளைந்து நெளிந்தும் கிடக்கின்றன! அரசன் முதல் கடைசி படைவீரன் வரை மார்பிலும், உடலிலும் ஏராளமான காயங்களுடன் இரத்தம் பூசிய மேனியுடன் இருக்கிறார்கள்!
அவ்வையின் அந்தப் பாடலின் அர்த்தம் புரிந்த தொண்டைமான், அவ்வையிடம் தன் தவறுக்கு வருந்தி, போரை கைவிட்டு, அதியமானின் நட்பை வேண்டுவான்.
இந்தக் கதையை கேட்ட என் மகன், அவன் ஒரு லூஸு போலிருக்கு! பவர்ஃபுல் ராஜாதானே போரில் ஜெயிப்பான்? எதற்காக நிறைய புது ஆயுதங்கள் வைத்திருக்கிற தொண்டைமான், பழைய ஆயுதங்கள் வைத்திருக்கிற அதியமானைக் கண்டு பயப்பட வேண்டும்? என்றான். அதற்கு நான், அதியமானின் ஆயுதங்கள் ஏற்கனவே பல முறை போரில் பயன்படுத்தப் பட்டதால்தான் அவைகள் பழையதாகி விட்டன! எனவே, அதியமானின் போர் வீரர்களுக்கு போர் பயிற்சி நிறைய உண்டு. இங்கே, தொண்டைமானிடமோ அனைத்து ஆயுதங்களும் புத்தம் புதிதாக இருப்பதால், இவை எதுவுமே இதற்கு முன்பு உபயோகப்படுத்தப் படவில்லை! எனவே, தொண்டைமானின் படைவீரர்களுக்கு போர் பயிற்சி ஏதும் கிடையாது. எனவே, போர் நடந்தால் அதியமான் வெல்வது உறுதி என்பதால், தொண்டைமான் சமாதானத்துக்கு வந்தான் என்று அந்த செய்யுளின் உட்பொருளை சொல்லி முடித்தேன்.
இப்போது, படகின் குதியாட்டம் மிகவும் அதிகரித்திருந்தது. அனைவரும் எதையேனும் இறுக்கமாக பிடித்தால்தான், இருக்கையிலேயே உட்கார முடியும் என்னும் நிலை! என் மொத்தக் குடும்பமும், நான் சொன்ன கதையை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் மகன் மட்டும், சமாதானமடையாமல், இந்தக் கதைக்கும், நாம பழைய ஓட்டைப் படகில் போவதற்கும் என்ன சம்பந்தம் என்றான்? மவனே! காரியத்திலேயே குறியா இருக்கானே என்றெண்ணியபடி, தொடர்பு நிறைய இருக்குடா என்றேன்.
நாம் கடலுக்குள்ளே, திமிங்கிலம் பார்க்கப் போகிறோம். திமிங்கிலம் எங்கே இருக்கும் என்று இந்த மாதிரி பழைய படகோட கேப்டனுக்குதான் சரியா தெரிஞ்சிருக்கும்! ஏன்னா! இவர்தான் அடிக்கடி கடலுக்குள்ளே போய் வந்திருப்பார்! அதனால, நல்லாவும் ஓட்டுவார்! நாமளும் சேஃபா போய், சீக்கிரம் திமிங்கிலத்தை பார்த்து விட்டு திரும்பிடலாம்! ஆனால், அந்த புது படகு இருக்கே! அது அடிக்கடி கடலுக்குள் போயிருக்காது! எனவே, அந்த கேப்டனுக்கும் அனுபவம் இருக்காது! So! இந்த பழைய படகுதான் நமக்கு நல்லது என்று முன்கூட்டியே திட்டம் போட்டுத்தான், டாடி இதை செலக்ட் பண்ணியிருக்கேண்டா! என்றேன் பெருமையுடன்!
சங்கப்பாடலையும், சொந்தச் சோகத்தையும் நான் முடிச்சு போட்ட விதத்தைக் கண்டு எனது நண்பன் தன் வாயைப் பிளந்து என்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், எங்கள் படகின் மிக அருகில், அந்தப் புதிய படகு கடந்து சென்றது. கடந்து சென்றது என்றால், லேசான காற்றில் மிதக்கும் பஞ்சு போல, வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல, வானை கிழித்துக் கொண்டு பறந்து செல்லும் பறவை போல, பெண் பார்க்க வருபவர்களுக்கு காஃபி கொடுத்து விட்டு திரும்ப செல்லும் பெண்ணைப் போல, அத்தனை நாசூக்காக, அலுங்காமல், குலுங்காமல், எங்களைக் கடந்து சென்றது. இத்தனைக்கும், எங்களுக்கு ஒரு மணி நேரம் பிந்தி கிளம்பிய படகு அது!
நான் மிகவும் உணர்ச்சிகரமாக சொன்ன புறநானுற்றுக் கதை ஜப்பான்காரனுக்கும் புரிந்திருக்கும் போல! எனது ஒட்டுமொத்த குடும்பத்துடன், அவன் குடும்பமும் சேர்ந்து என்னை முறைத்துப் பார்த்தார்கள். நான் வாந்தி எடுக்கக் கொடுத்தப் பையைத் தேடும் சாக்கில் தலையை குனிந்து கொண்டேன். வ்வ்வ்வ்வாக்! என்றொரு சத்தம் பெரிதாகக் கேட்டது! நமக்கு வாந்தி வரவில்லையே? சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன்! கடலிலேயே பிறந்து, வளர்ந்து, உலகம் முழுவதையும் தங்கள் கடற்படையால் வென்ற ஸ்பானிஷ் நாட்டுப் பெண்ணொருத்தி அங்கே வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள். IMG_2471
கேப்டன் ஒலிபெருக்கியில் பேச ஆரம்பித்தார். இதுவரை முகத்துவாரத்தில் சென்று கொண்டிருந்த படகு, இன்னும் சற்று நேரத்தில் கடலுக்குள் நுழையப் போவதாகவும், இன்றைய வானிலை மோசமாக இருப்பதால், படகு சற்று அதிகமாகவே ஆடும்! ஆனால் பயப்படத் தேவையில்லை என்றும் சொல்லி எங்கள் அனைவருக்கும் பீதி கிளப்பினார். படகு கடலுக்குள் செல்வதை மிகத் தெளிவாக எங்களால் உணர முடிந்தது. இதற்கு முன்பு, அலைகளினால் மேலெழும்பும் படகு மீண்டும் கீழே விழ சில நொடிகள்தான் ஆனது. இப்போது, அது நிமிடக் கணக்காக நீண்டது!
யாரோ முனகும் சத்தம் கேட்டது! திரும்பிப் பார்த்தால், எனது மகன், அவன் அம்மாவின் மடியில் குப்புறப் படுத்துக் கொண்டு ஏதோ முனகிக் கொண்டிருந்தான். அருகில் சென்று உற்றுக் கேட்டேன். ஓம் சாய்! ஓம் சாய்! என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது, மீண்டும் ஒரு பெரிய அலை வந்து படகைத் தூக்கியடிக்க, சத்தமாக அருணாச்சலா! அருணாச்சலா! என்று டியூனை மாற்றிக் கொண்டான். கடந்த ஆறு மாத காலமாக தீவிர நாத்திகனாக இருந்து, கடவுள் மறுப்பை அவனுடைய அம்மாவுக்கு போதித்துக் கொண்டிருந்தவனுக்கே இந்த கதியென்றால், மற்றவர்களின் கதி? IMG_2472
கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது என்று சொல்வது ஒரு அண்டர்ஸ்டேட்மெண்ட்! பெரிய, பெரிய அலைகள் தொடர்ந்து வந்து எங்கள் படகைத் தாக்க, படகு மேலெழுந்து கீழே விழும் சத்தம் எங்கள் உயிரை ஊடுருவியது. மரண பயம் என்பார்களே, அது எனது மொத்தக் குடும்பத்தினரின் கண்களிலும் தெரிந்தது. நிலைமையை சமாளிக்க எண்ணி, என் நண்பனிடம், போருக்கு செல்லும் வீரனுக்கு இந்த மாதிரி சோதனையெல்லாம் சாதாரணம்டா! என்று கவுண்டமணி பாணியில் ஜோக்கடித்தேன்.
அதுவரை, குப்புறப் படுத்திருந்த எனது மகன் எழுந்து சும்மா! பீதியில உளராதீங்க டாடி! போர்வீரன் போருக்கு போகும்போது அவன் மட்டும்தான் போவான்! இப்படி மொத்தக் குடும்பத்தையும் கூட்டிச் செல்ல மாட்டான்! என்று சொல்லி விட்டு திரும்பப் படுத்தான். நான் அமைதியாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். கடும் வலியை கடக்க, அந்த வலியையே கூர்ந்து கவனிப்பதுதான் சரியான வழி என்று ஜெயமோகன் எங்கோ எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. அதன்படி, நானும் கடல் பயத்தைக் கடக்க, ஜன்னலின் வழியே அந்தக் கடலையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒரு சின்ன ஃப்ளாஷ் கட் அடித்து, இந்த திமிங்கிலக் காணுலாவைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். குறைந்த எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள்தான் அங்கேயுள்ள கடலில் வசிக்கிறது என்றும், நாம் அதனைத் தேடி சென்றுதான் பார்க்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால், உண்மை என்னவென்றால், உலகின் சரிபாதிக் கடலில் வசிக்கும் அனைத்துத் திமிங்கிலங்களும், ஏப்ரல் மாதம் முதல், ஜூன் மாதம் வரையிலான காலத்தில், கிழக்கு ஆஸ்திரேலிய கடல் நீரோட்டத்தைப் (East Australian Current) பயன்படுத்தி, தங்கள் இன விருத்திக்காக ஆஸ்திரேலிய கடற்கரையைக் கடந்து செல்லும். ஒன்றல்ல! இரண்டல்ல! இந்த மூன்று மாத காலத்தில் ஏறத்தாழ இருபதனாயிரம் திமிங்கிலங்கள் அப்படி இடம் பெயர்ந்து செல்கின்றனவாம்!
இந்தக் குறிப்பிட்ட கடல் நீரோட்டம், சிட்னி கடற்கரையிலிருந்து வெறும் ஐந்து மைல் தொலைவிலேயே அமைந்திருப்பதால், இந்தக் காலக் கட்டத்தில், திமிங்கிலத்தை அங்கே பார்ப்பது வெகு சாதாரணமாம்! சாதாரணமாக, கடற்கரையிலேயே ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து உற்று கவனித்தால் பார்த்து விட வேண்டிய திமிங்கிலத்தைதான், நான் இப்படி எங்கள் குடும்பத்தினருடன் உயிரை பணயம் வைத்து பார்க்க வந்திருக்கிறேன். இந்த விஷயத்தை நான் இப்போது உங்களிடம் சொல்கிறேனே தவிர என் குடும்பத்தினரிடம் இதுவரை சொல்லவில்லை.
இப்போது, மீண்டும் கேப்டன் ஒலிபெருக்கியில் பேசினார். சாதாரணமாக இந்த இடத்தில்தான் திமிங்கிலங்கள் தென்படும். துரதிஷ்டவசமாக, இன்று எதுவுமே காணக் கிடைக்கவில்லை! எனவே, நாம் இன்னும் தொலைவுக்கு, ஆழ்கடலுக்குள் செல்கிறோம் என்று சொல்லிக் கொண்டே, படகை வேகப் படுத்தினார். ஒவ்வொரு முறை படகு மேலே எழும்பும் போதும், மூச்சைப் பிடித்துக் கொண்டு, கீழே கடலில் விழுந்த பின்பு மூச்சை விட்டுக் கொண்டிருந்தேன். அந்த உதவியாளர் படகின் பாதுகாப்பு வசதிகளைக் குறித்து முதலில் விளக்கியபோது, கவனிக்காமல் அலட்சியமாக இருந்தோமே என்று மிகவும் வருந்தியக் கணம் அது.
எழுந்து நின்று, மேலே இருக்கும் அந்த பிடிகளைப் பிடித்துக் கொண்டு, மெல்ல படகை ஒரு சுற்று வந்தேன். வாந்தியெடுத்தப் பின்பு அந்தப் பைகளை உள்ளே போடுவதற்காக ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குப்பைக் கூடையினை, கேப்டனின் உதவியாளர், இப்போது எங்கள் அனைவருக்கும் நடுவே இழுத்து வைத்திருந்தார். அங்கே மிகவும் பரிச்சயமாகிவிட்டிருந்த வ்வ்வ்வ்வாக் என்ற சத்தமெல்லாம் நின்று போய், அனைவரும் ஆளுக்கு ஒரு இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படியே எத்தனை நேரம் சென்றது என்று தெரியவில்லை! எப்படியும் ஒரு யுகம் கழிந்திருக்கும்! திடீரென்று, காப்டன் ஒலிபெருக்கியில் உற்சாகக் குரல் எழுப்பினார். திமிங்கிலத்தை பார்த்து விட்டாராம். ஜப்பான்காரன் மட்டும், தனது தலையை ஒருமுறைத் தூக்கிப் பார்த்து விட்டு, மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டான். அந்த மொத்தப் படகிலும் தூங்காமலும், வாந்தியெடுக்காமலும் இருந்தது நானும், எனது மனைவியும், எனது நண்பனும்தான். படகின் பலத்த குலுங்கலின் நடுவே, நாங்கள் மட்டும் எதையெதையோ பிடித்துக் கொண்டு ஒருவாறாக படகின் மேல்தளத்திற்கு சென்றோம். இப்போது பலத்து தூறலுக்கிடையே, லேசான வெயிலும் அடித்துக் கொண்டிருந்தது.
கேப்டன் சுட்டிக் காட்டிய திசையையே பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று கடலினுள்ளேயிருந்து ஒரு பெரிய குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிப்பது போல, தண்ணீர் மேலெழ, ஒரு திமிங்கிலம் சோம்பலாகத் தண்ணீரின் மேலெழுந்து உள் சென்றது. அது முழுவதுமாக நீரினுள் மறையும் முன்பு கடைசியாக ஒரு முறை அதன் வால் தண்ணீரை அடித்து சிதறடிக்க, எதிர் வெயிலில் ஒரு சின்ன வானவில் தோன்றி மறைந்தது. கடவுளைக் கண்டேன்! IMG_2425IMG_2432IMG_2438
மனித இனம் தோன்றுவதற்கும் 45 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், பூமியிலே உருபெற்ற பாலூட்டி அது! இன்னமும் பரிமாண வளர்ச்சியில் எந்த ஒரு பெரிய மாற்றமும் தேவையின்றி, இயற்கையின் ஒரு பெரும் வெற்றிப் படைப்பாக விளங்கிக் கொண்டிருக்கும் அதி புத்திசாலி ஜீவராசி அது! நான் பார்க்க வந்த நீலத் திமிங்கிலம் வகையை சார்ந்தது அல்ல அது! ஹம்ப்பேக் என்ற வேறொரு பிரிவைச் சார்ந்த திமிங்கிலமாக இருப்பினும், எனக்குள்ளே எழுந்த ஒரு பெரும் மனயெழுச்சியினை அது சற்றும் மட்டுப் படுத்தவில்லை!
திமிங்கிலம் நீர் வாழ் பிராணியாக இருந்தாலும், அவற்றால், தண்ணீருக்குள் மூச்சு விட முடியாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையேனும், மூச்சுக் காற்றுக்காக அது தண்ணீருக்கு மேலே வந்துதான் ஆக வேண்டும். எனவே ஒரு முறை திமிங்கிலத்தை பார்த்து விட்டால், அதன் பாதை அறிந்து அதைத் தொடர்வது சுலபம். ஒரு முப்பது நிமிடங்கள், அந்தத் திமிங்கிலம் நீருக்கு வெளியில் வருவது, பின்பு உள்ளே செல்வதுமாக எங்களுக்கு விளையாட்டுக் காட்டியது.
ஒரு பெரிய சாகச அனுபவத்தின் இறுதியில், பெரிதாக ஏதோ ஒன்றினை சாதித்த மனநிலையுடன் கரைக்கு திரும்ப வந்து சேர்ந்தேன். கரைக்கு வந்த பின்பு, ஒவ்வொருவராக எழுந்து, எங்களின் பொருட்களை சேகரித்துக் கொண்டு இறங்கத் தயாரானோம். நடுவானில் விமானத்தில் ஒரு பெரிய கோளாறு ஏற்பட்டு, ஒருவாறாக தரையிறங்கிய மனநிலையில் அனைவரும் இருந்தோம். எங்களைப் படகில் ஏற்றிக் கொண்ட படகுத்துறைக்கு வந்தடையும் போதுதான் கவனித்தேன். அந்தப் படகுத் துறையின் பெயரை தண்ணீரிலிருந்து பார்க்கும்படியாக எழுதி வைத்திருந்தார்கள்! ஆம்! மாஸ்டர்ஸ் ஸ்டெப்!
அப்படியென்றால் என்னடா? என்றான் நண்பன். ஆங்! அதுவா? ஒரு முறை இப்படிப்பட்ட மோசமான வானிலையில் கடலுக்குள் சென்று உயிருடன் திரும்பி வருபவர்கள்தான் நிஜமாகவே மாஸ்டராம்! அதனால், அவர்கள் கால் வைத்து இறங்கும் இடம் மாஸ்டர்ஸ் ஸ்டெப்பாம் என்றேன். கடித்தாலும், இந்த விளக்கம் நிஜம் போலத்தான் தோன்றியது.
தூக்கம் கலையாமல், படகிலிருந்து தள்ளாடிக் கொண்டே கீழே இறங்கிய எனது மகனிடம் சென்று டேய்! நான் திமிங்கிலத்தை பார்த்தேனே! என்றேன். அவன் பயங்கர கடுப்புடன், நீங்கள் திமிங்கிலத்தைப் பார்த்தீர்கள்! திமிங்கிலம் உங்களைப் பார்த்ததா? என்றான்.
நான் யோசித்தேன்! ஆமாம்! அந்தத் திமிங்கிலம் என்னைப் பார்த்திருக்குமா?!!
அதற்கென்ன! இன்னொரு முறை கடலுக்குள் சென்று திமிங்கிலத்திடமே கேட்டு விட்டால் போச்சு!

30 thoughts on “நீலத் திமிங்கிலம்

  1. ஹஹஹஹா :)) சரித்திரம் சொல்லியும் மகனை தேத்த முடியாம போச்சே ! அருமை . படிப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் புறப்படுபவர்களுக்கும் ஒரு நற்செய்தி. பயணங்கள் முடிவதில்லை :))) வாழ்க வளர்க

  2. பெங்களூரு NICE ரோடில் 120 கிமீ ஸ்பீடில் கார் ட்ரைவ் பண்ணுவது போல ஒரு சூப்பரான உணர்வு இந்த கட்டுரையை படிக்கும்போது. படங்களும் அருமை. உங்கள் பயணங்களும், இத்தகைய கட்டுரைகளும் தொடரட்டும் !!!

  3. தங்களின் இந்த பயணக் கட்டுரை அருமை..
    உலகம் சுற்றிய மணியன் சாரின் கட்டுரைக்கு பிறகு உங்களின் இந்த எழுத்து நடை அவரின் பயனகட்டுரையை போல அழகாக இருந்தது. ஆஸ்ட்ரேலியாவை கண் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அவ்வை,அதியமான்,தொண்டைமான் கதை சூப்பர்…
    வாழ்த்துக்கள்….

    1. பார்த்தீங்களா! நம்மை மணியன் ரேஞ்சுக்கு யாரும் கம்பேர் பண்ணிடக் கூடாதுன்னுதான், நான் பயணக் கட்டுரையே எழுதுவதில்லை! இது வெறும் அனுபவக் கட்டுரைதாங்க!
      பாராட்டுக்கு நன்றி!

  4. Hi sir,
    Without theater, I felt seeing thrill film………..
    Nice Journey……
    U never forget about this incident at any situation in your life………..

  5. Enakku pidithamana katturai mr.karuna…..ungaludan payanam seidhathu polavey irunthathu……anbana kudumbam chutti paiyan…….nijamagavey am so happy sir……

  6. நல்லதொரு பயண…Sorry, அனுபவக்கட்டுரை. புதிதாக கடல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் வழக்கமான சிரமம்தான். சிறார்களுடன் பயணம் மேற்கொண்டதால் ஏற்பட்ட அயர்ச்சியாக இருக்கும். மற்றபடி கட்டுரை நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!!

  7. பழைய படகுக்காக அதியமான் – அவ்வையார்…கதையைக் கையாண்ட
    விதம் அற்புதம்…( பெரும்பாலும் பயணக் கட்டுரைகள்…ஏதாவது
    ஒரு இடத்தில் வெளி நாட்டைப்பற்றி உயர்த்தி போராடிப்பார்கள்…)
    புறநானுறு.. East Australian Current …ஹம்ப்பேக் வகை….
    தடம் புரளாமல்இழுத்துக் கொண்டு போகும் எழுத்து நடை..ஒரு மாஸ்டர்ஸ் ஸ்டெப்….
    உங்கள் எழுத்தும் கூடவே நம் புதிய நட்பும் தொடரட்டும்….!
    அன்புடன்…. நாணா

  8. “நான் மிகவும் உணர்ச்சிகரமாக சொன்ன புறநானுற்றுக் கதை ஜப்பான்காரனுக்கும் புரிந்திருக்கும் போல! எனது ஒட்டுமொத்த குடும்பத்துடன், அவன் குடும்பமும் சேர்ந்து என்னை முறைத்துப் பார்த்தார்கள்.”
    Sema Sir!

  9. சார்! நீங்க ரொம்ப மோசம். திமிங்கலத்த பாத்த கதையோட நிப்பாட்டிட்டீங்க… மொத்த பயணக் கதையையும் சொல்லுங்க!
    (உங்கள் எழுத்தின் சுவாரசியம் அருமையாகத் தான் இருந்தது என்றாலும், உங்கள் எழுத்து இப்படித் தான் இருக்கும் என்பது கொஞ்சம் அநுமானத்துக்கு வந்து விட்ட படியால் கவர்னரின் ஹெலிகாப்டர் அளவுக்கு ஈர்க்கவில்லை என்பதையும் மறுக்க முடியாது!)

    1. இந்தக் கட்டுரையையே, நீங்க ட்விட்டரில் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருந்ததால்தான் நான் எழுதினேன்!
      இந்த பிரச்சனை எல்லா எழுத்தாளருக்கும் வரும் என்று நினைக்கிறேன்!
      எழுத்து நடை என்பது கையெழுத்து மாதிரி! ஒரு முறை அமைந்து விட்டால், அதை பெரிதாக மாற்றிக் கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன்.
      மற்றபடி சுவாரஸ்யமாக எழுதுவது என்பது, எழுதப்படும் சப்ஜெக்டையும், எழுதும்போது இருக்கும் மனநிலையையும் பொறுத்தது. அதை நான் கட்டுக்குள்
      வைத்துக் கொள்ள முடியும்.
      நானும் முயல்கிறேன்!
      மற்றபடி, தொடர்ந்து என்னை எழுதத் தூண்டியதற்கு நெஞ்சார்ந்த நன்றி!

  10. “எங்கள் படகின் மிக அருகில், அந்தப் புதிய படகு கடந்து சென்றது. கடந்து சென்றது என்றால், லேசான காற்றில் மிதக்கும் பஞ்சு போல, வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல, வானை கிழித்துக் கொண்டு பறந்து செல்லும் பறவை போல, பெண் பார்க்க வருபவர்களுக்கு காஃபி கொடுத்து விட்டு திரும்ப செல்லும் பெண்ணைப் போல” what a comparison!!!!… 1000 likes for it.. Really u pictured everything through your words and you have a great sense of humor sir..

  11. நீங்கள் வெளிநாட்டில் இருந்து பேஸ் புக்கில் எழுதியதை போலவே எழுதுங்கள்
    இந்த நடையிலேயே எழுதுங்கள் இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் பத்து
    ஆண்டுகள் கழித்து எஸ் கே பி கல்லூரியில் படிக்கவரும் மாணவர்கள்
    படிக்கட்டும் அவர்களுக்கு வெளிநாட்டு அனுபவங்கள் தெரியவரும் அதன்பின்
    அவர்கள் அந்த நாடுகளுக்கு போகும்போது நம் கல்லூரி லைப்ரரியில் படித்தோமே என்று
    நினைவுக்கு வரும் .எழுதாமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு நஷ்டம்
    எனவே செலவையோ நேரத்தையோ பார்க்காமல் எழுதவும் உங்களால் மட்டுமே
    எழுத முடியும்.

  12. பயண அனுபவக் கட்டுரை அருமையாக வருகிறது உங்களுக்கு! மகனை சமாளித்த(?!) விதமும், நிகழ்வுகளை விவரித்த விதமும் மிக அருமை. சமீபத்தில்தான் உங்கள் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எளிய நடையில் இருக்கிறது.

  13. சங்க பாடலையும் சோக கதையும் பயண கட்டுரைல் திகில் நிறைந்த இடத்தில் கூறி கட்டுரைகு மெருகு ஏற்றியுள்ளிர்கள்.
    அருணாச்சலா! அருணாச்சலா! என்று டியூனை மாற்றிக் கொண்டான். கடந்த ஆறு மாத காலமாக தீவிர நாத்திகனாக இருந்து, கடவுள் மறுப்பை அவனுடைய அம்மாவுக்கு போதித்துக் கொண்டிருந்தவனுக்கே இந்த கதியென்றால், மற்றவர்களின் கதி?
    நாத்திகம் நிலைக்காது என்ற தத்துவத்தை உங்கள் கட்டுரைல் தெரிந்தோ தெரியாமலோ வெளிபடுதியுள்ளிர்கள்
    அருமையான கட்டுரை. படிக்கும்போது சீரிபுதான் மீஞ்ச்யது

  14. Australia’கு போய்,அங்கயிருந்தும் ஔவையாரை disturb பண்ண உங்கள் தமிழ் பற்று,நெஞ்சை நெகிழவைக்கிறது.
    தமிழக மாணவர்கள் ஒரு நல்ல தமிழ்ப் பேராசிரியரை தவறவிட்டிருந்தாலும்,தமிழ்இலக்கியம் ஒரு நல்ல வாசகனைப் பெற்றிருக்கிறது.

  15. Dear Karuna Sir,
    Your narration is too good. The Thrilling is on hype as line by line goes. Its only by best writers can bring the whole scenery through writing. I stunned to read the that the whale is existing from 45 million yrs ago. It makes me to realize about the god. Every one if they think abt Australia they remember only Kangaroos. But u have made all to remember about Whales n Aus. that 20k whales passing across the Australian sea.. The Trip ends with an punch dialogue of ur son. Hope he enjoyed the rest of the tour..

  16. Very nice to read your Travel Experience with much more comedy. Thanks for your sharing sir…

  17. sir,ஒரு சந்தேகம்.வானத்தின் நீல நிறத்தை நீர்ப்பரப்பு எதிரொளிப்பதால் தானே கடல் நீல நிறமாக காணப்படுகிறது .ஏன் //கடலின் மொத்த நீலத்தையும் வானம் உள் வாங்கியிருந்தது// என எழுதியுள்ளீர்கள் ?

    1. வானத்திற்கென்று ஒரு நிறம் கிடையாது! பெரும்பாலும் கடலின் மேல் பரப்பிலிருக்கும் நுண்ணுயிர்கள், சூரிய வெளிச்சத்தை உள் வாங்கி, நீல நிறத்தில் ஜொலிக்கத் தொடங்கும். (அதாவது, ஒளியின் அனைத்து நிறங்களையும் உள் வாங்கி, பதிலுக்கு நீலத்தை மட்டும் பிரதிபலிக்கும்!) எனவே, வானமும், கண்ணாடி போல, கடலின் நீலத்தைப் பிரதிபலிப்பதால்தான், நமக்கு அது நீல வானம்!
      கூகுள் பண்ணிப் பாருங்கள்! மேலும் பல விவரங்கள் கிடைக்கும்! :)

      1. நன்றி ,தங்கள் பதிலுக்கும் இந்த மிக அருமையான கட்டுரைக்கும்

  18. கடும் வலியை கடக்க, அந்த வலியையே கூர்ந்து கவனிப்பதுதான் சரியான வழி என்று ஜெயமோகன் எங்கோ எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.
    அண்ணே, இது ஓஷோ’வோட அக்மார்க் தத்துவம் மற்றும் தியானமுறை. :)
    @isai_

Comments are closed.