பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

 
பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்.
 
நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா! நான் பாரதிராஜா பேசுகிறேன்! என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது கரகரத்த குரலால் 35 ஆண்டுகளாக கட்டி வைத்திருக்கும் இயக்குநர், தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்த முதல் நிஜ சினிமாவின் படைப்பாளி பாரதிராஜாதான் அழைக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் என்னை லேசாக சிலிர்க்க வைக்கும் அவரின் குரல். சொல்லுங்க சார்! என்றேன்.
எங்கே உன்னை ஆளையே காணோம்? பவா எழுதிய கட்டுரையை படித்தாயா? என்னிடன் உன் நம்பர் மட்டும்தான் இருக்கிறது. பவா நம்பரை கொஞ்சம் சொல்லு என்று பேசிக் கொண்டே போனார். நீண்ட நாட்கள் கழித்து அவருடன் பேசுகிறேன். ஒரு வழியாக சமாளித்து பேசி முடித்து விட்டு சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
எனது நண்பர் பவா.செல்லதுரை, தனது வாழ்வில் தான் பழகிய மனிதர்களைப் பற்றி மீடியா வாய்ஸ் பத்திரிக்கையில், ஒரு அனுபவத் தொடர் ஒன்றினை எழுதி வருகிறார். தமிழில் முன் எப்போதும், நமக்குத் தெரிந்த பல பிரபலங்களைப் பற்றி இப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான தொடர், நான் அறிந்து வந்ததில்லை. பவாவின் மொழி, மனிதர்களை கூர்ந்து கவனித்த அவரின் அவதானிப்பு, ஒரு போதும் யாரிடமும் எதிர்மறைத் தன்மையினை கவனித்திராத அவரின் வெள்ளந்தித் தனம் இவை அனைத்தும் சேர்ந்து இந்த வகைக் கட்டுரைகளை ஒரு இலக்கியத் தரத்திற்கும் மேலான ஒருவித உணர்வுத் தளத்திற்கு கொண்டு செல்கிறது. மிகவும் அனுபவித்து படித்து வருகிறேன்.
இந்த வாரம் அவர் இயக்குநர் பாரதிராஜாவைப் பற்றி வழக்கம் போல் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். அந்த கட்டுரையைப் படித்தவுடன், எனக்கு பாரதிராஜாவுடன் நடந்த பல சந்திப்புகள் நினைவுக்கு வந்தன. ஏனோ, அவரைப் பற்றி நானும் எனது அனுபவங்களை உடனடியாக எழுதி விட வேண்டும் என்று தோன்றியது. நீண்ட நாள் நினைவுகள் பல உணர்ச்சிப் பூர்வமாக வெளிவரத் துவங்கியது ஒரு விதத்தில் பவாவின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்றுதான் தோன்றுகிறது.
தமிழ்நாட்டின் எல்லா பள்ளி மாணவர்களைப் போல நாங்களும் பெரும் சினிமா மோகம் கொண்டு அலைந்து கொண்டிருந்த காலம் அது. எல்லா கமல் படங்களையும் வெளியான நாளன்றே பார்த்து விட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நண்பர்கள் குழுவின் வாழ்நாள் லட்சியம். எல்லாப் பள்ளியிலும் அ பிரிவு, ஆ பிரிவு என்று இருப்பதை போல, எங்கள் வகுப்பில் கமல் பிரிவு, ரஜினி பிரிவு என்று இருந்தது. அப்போதெல்லாம், ஒரே நாளில்தான் கமல் படமும், ரஜினி படமும் வெளிவரும். பெரும்பாலும் கமல் படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும், ரஜினி படங்கள்தான் தவறாமல் நூறு நாட்களுக்கு மேல் ஓடும். முதல் நாளன்றே, எங்களுக்கு எந்த படம் எத்தனை நாட்கள் ஓடும் என்று கணிக்கக் கூடிய ஆற்றல் இருந்தமையால் படங்கள் வெளிவந்த மறு நாள் அன்று தொங்கி போன முகத்துடன் வகுப்புக்குள் நுழைவேம். ரஜினி ரசிகர்கள் அன்று முழுவதும் உற்சாகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் ஏன் இந்த கமல் ஒரு ஓடுகின்ற மாதிரியான படங்களில் நடிக்காமல், வெறும் நல்ல படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார் என்று டீக் கடைகளில், பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டே ஆவேசமாக விவாதித்துக் கொண்டிருப்போம்.
சினிமா எங்கள் எண்ணம், செயல் எல்லாவற்றிலும், எங்களை பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த அக்காலக் கட்டத்தில், கமலுக்கு பின் எங்களின் ஆதர்சம், பாரதிராஜாவும், இளையராஜாவும்தான். மூன்றாம் பிறையில் எங்கள் கமலுக்கு தேசிய விருது பெற்று தரும் வரையில் பாலுமகேந்திரா எல்லாம் எங்கள் பட்டியலிலேயே இல்லை. அதன் பின், பாக்யராஜ், டி.ராஜேந்தர் எல்லாம் வந்து இவர்களைவிட பெரும் வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்தனர். அது சினிமாவின் பொற்காலம் என்பது அத்தனை உண்மை.
எங்கள் பட்டியலில், எங்கள் மனம் கவர்ந்தவர்கள் எத்தனேயோ பேர் சேர்ந்து கொண்டே போனாலும், நாங்கள் முதன் முதலில், இயக்குநர் பாரதிராஜாவை அவர்களைத்தான் நேரில் பார்த்தோம். அந்த நாள் கூட நன்றாக நினைவில் இருக்கிறது. அது 1984ஆம் ஆண்டு, நாங்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு கோடை வெயிலில் சென்னையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த காலம். கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திற்கு, நான் எனது நண்பர்கள் இளங்கோ, தினகருடன், சென்று நுழைவுச் சீட்டு வாங்க வரிசையில் முதல் ஆளாகக் காத்திருந்தேன். எங்கள் மூவரைத் தவிர வேறு யாருமே இல்லாத அந்த மாலை வேளையில், திடீரென்று, ஒரு வெளி நாட்டுக் காரில், பாரதிராஜா வந்து இறங்கினார். உடன் அவர் மனைவியும், கூட மகன் மனோஜும் இருந்தனர்.
அந்த நிமிடம் முதல் எங்களுக்கு பித்து பிடித்து போல ஆகி விட்டது. கோளரங்கத்திலும் எங்கள் மூவரைத் தவிர பாரதிராஜா குடும்பம் மட்டும்தான். அவரின் இருக்கைக்கு பின் உட்கார்ந்து கொண்டு நாங்கள், மேலே காட்டிய நட்சத்திரங்களைப் பார்க்காமல், முன்னே அமர்ந்திருந்த எங்கள் ஆதர்ச இயக்குநரையே பார்த்துக் கொண்டிருந்தோம். காட்சி முடிந்து வெளியே வந்தபின்னும் அவரின் மீதான எனது கண்கள் விலகவேயில்லை. காரில் சென்று அமரப் போன அவர், திடீரென என்னை கைக் காட்டி அருகில் அழைத்தார்.
திகைத்து போய் அவர் அருகில் சென்ற என்னை, ஏண்டா! உள்ளே என்னவென்றால் காட்சியைப் பார்க்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்? இங்கேயும் இப்படியே பார்க்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்றார். நான், வார்த்தைகள் வெளி வராமல், திக்கியபடி உங்கள் ரசிகன் சார் நான் என்றேன். மிகவும் சாந்தமாகி, என்னை அருகில் அழைத்து, லேசாக கட்டியணைத்த படி, முதுகில் தட்டிக் கொடுத்தார். எனது நண்பர்கள் நடப்பவற்றை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்அவர் தட்டி கொடுத்த அந்த சட்டையை நான் சில மாதங்கள் துவைக்காமல் என் முன்னே மாட்டி வைத்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அதே பாரதிராஜாவை பின்னாட்களில், பல சந்தர்ப்பங்களில் நான் சந்திக்கப் போகிறேன் என்றோ, என் மேல் பெரும் அன்பு காட்டக் கூடிய ஒரு நண்பராக அவர் இருப்பார் என்றோ, அந்தக் கணத்தில் நாங்கள் யாரும் அறிந்திருக்க வில்லை. வாழ்க்கை அது போகிற போக்கில் ஆடி விட்டு போகும் தாயக் கட்டையில், ஏதோ ஒரு எண் என் பக்கம் விழுந்தது. சினிமாவில் சேர்ந்து ஒரு இயக்குநராக மாறியே தீர வேண்டும் என்ற எனது லட்சியம் மயிரிழையில் தவறி, பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தேன்
பின்பு, பல வருடங்கள் கழித்து, இயக்குநர் மனோபாலா எனக்கு நெருக்கமான நண்பராக ஆனப் பிறகு, பல முறை, பல இடங்களில் நான் பாரதிராஜாவை சந்தித்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில், என்னை, அவர் என்னை தனது நெருங்கிய உள் வட்டத்தினுள் அழைத்து அமர்த்திக் கொண்டார். என்னை எப்போது, எந்த சூழ்நிலையில் பார்த்தாலும், வாடா! திருவண்ணாமலை தாதா என்று அருகில் அழைத்து நெருக்கமாக கட்டி அணைத்துக் கொள்வார். அத்தனை நெருக்கத்தில் அவரின் உள்ளே இருந்த அந்த முரட்டுக் குழந்தையை பல முறை கண்டு ரசித்திருக்கிறேன்.
1996ஆம் ஆண்டின் ஏதோ ஒரு நாள் இரவு பாரதிராஜா என்னை அவருடன் ஒரு விருந்துக்கு அழைத்து சென்றார். அது, நடிகர் ப்ரகாஷ்ராஜின் வீடு. அப்போது, இருவர் திரைப்படம் வந்திருக்க வில்லை. ப்ரகாஷ்ராஜ் எங்கள் அனைவரையும் வரவேற்று, உற்சாகமாக கையில் மதுக் கோப்பையுடனும், சிகரெட்டுடனும் உலவிக் கொண்டிருந்தார். ஒரு அறையில், அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர் சுதாங்கனுடன், பாரதிராஜா ஏதோ தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தார். நானும், மனோபாலாவும் அறையை விட்டு வெளியே வந்த போது ப்ரகாஷ்ராஜ் தனது கைக் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.
அவர் கையில் சிகரெட்டுடன், குழந்தையை வைத்துக் கொண்டு இருந்தது எனக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. எனக்கோ ப்ரகாஷ்ராஜ் அப்போதுதான் அறிமுகம். எனவே, நேராக பாரதிராஜாவிடன் சென்று ஒரு சிறுவனைப் போல முறையிட்டேன். என்னுடன், ஒரு புயலைப் போல வெளியே வந்த பாரதிராஜா, ப்ரகாஷ்ராஜை அழைத்து, ஒன்று சிகரெட் பிடி, அல்லது குழந்தையை தூக்கு. இரண்டையும் ஒன்றாக நாங்கள் சினிமாவில் கூட காட்ட மாட்டோம் என்று சற்றே கோபமாக சொன்னார். பதறி போன ப்ரகாஷ்ராஜ் தனது மனைவியிடம் குழந்தையை கொடுத்தவர், நாங்கள் உணவருந்தி முடித்து வெளியே செல்லும் வரை புகை பிடிக்கவுமில்லை.
அன்று இரவு, பாரதிராஜாவை அவரின் வீட்டில் விட்டு கிளம்பும்போது, என்னை அழைத்தவர் அத்தனை பேர் அங்கு இருக்கும்போது உனக்கு மட்டும் அந்த குழந்தைதான் கண்ணில் பட்டதே! அதற்குதானடா இலக்கியம் படித்திருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை, அதற்கு எதற்கு இலக்கியம் படித்திருக்க வேண்டும் என்று!!
தமிழ் திரைப் படங்கள் மட்டுமன்றி ,பிற மொழி படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு, அதிலும் பல உலக திரைப் படங்களை பல பார்த்த பிறகும், என்னளவில் பாரதிராஜாவைப் போல வேறு எந்த இயக்குநரும் என்னை பாதித்ததில்லை. அவர் அளவிற்கு தமிழக மக்களிடையே பிரபலமடைந்த இயக்குநரும் இதுவரை யாருமில்லை. அவர் முகம் ஒரு பெரும் புகழ் பெற்ற கதாநாயகனின் முகத்தைப் போல மக்களால் இன்னமும் பார்க்கப் படுகிறது. அதுவும், ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று கனவு கொண்டிருந்த என்னைப் போன்ற பலருக்கு அவர்தான் நிஜமான ஹீரோ.
இயல்பாகவே மிகவும் துணிச்சல் மிக்கவர் பாரதிராஜா. எப்போதும், எதற்காகவும் பிறரிடம் அடங்கிப் போக மாட்டார். ஒரு முறை அவரின் மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் பாலுமகேந்திராவிற்கு திரைப்பட யூனியனால் ஒரு அவமானம் நேர்ந்த போது நிஜமாகவே பொங்கி எழுந்தார். அவரின் அந்த கோபம், பல ஆண்டுகள் பழமை வாய்ந்த திரைப்பட யூனியனுக்கு மாற்றாக, தமிழ் சினிமாவிற்கு மட்டுமேயான படைப்பாளிகள் சங்கத்தை துவக்கும் அளவிற்கு சென்றது. அந்த நிமிடம் வரை அப்படி ஒரு மாற்று அமைப்பு துவக்கப் பட முடியும் என்று இதற்கு முன் இருந்த பல மூத்த கலைஞர்கள் நினைத்துப் பார்த்தது கூட இல்லை.
அந்த நாட்களில், ஒரு திரைப்பட இயக்குநராக மட்டுமே அறியப் பட்டிருந்த பாரதிராஜா, தனிப் பட்ட முறையில் எத்தனை பெரிய ஆளுமை என்பதை என்னைப் போன்ற பலர் தெரிந்து கொண்டனர். ஒரு நாள் இரவு திருவண்ணாமலையில் இருந்த என்னை தொலைபேசியில் அழைத்த பாரதிராஜா, கருணா, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். பதறிப் போன நான் என்ன சார், என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரே நாள் பட பிடிப்பு நடத்தி முடித்தால் போதும், பார்த்திபனின் படத்தை ரிலீஸ் செய்து விடலாம். ஆனால், இங்கே சென்னையில், பாதுகாப்பாக பட பிடிப்பு நடத்தும் சூழல் இல்லை. உனது ஊரில் ஏதேனும் ஏற்பாடு செய்து தருகிறாயா என்று கேட்டார். நானும், உடனே, இங்கே அனுப்புங்கள் சார், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்தேன்.
எங்கள் ஊரின் எல்லா நுழைவாயில்களையும் எனது நண்பர்கள் பாதுகாக்க, எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்றினில், பார்த்திபன் தனது படமான அபிமன்யுவை இரவோடு இரவாக எடுத்து முடித்தார். திருவண்ணாமலை அரிசி ஆலை, திரைப் படத்தின் இறுதி காட்சியில் கொடுங்கையூர் குடோனாக வந்தது, திரைப் படத்திற்கு மட்டுமே உரிய விநோத குணாதிசயம். எல்லா தடைகளையும் தாண்டி அந்த சூழலில் படம் சொன்ன தேதியில் வெளிவந்தது, பாரதிராஜாவிற்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. என்னை அவரின் அலுவலகத்திற்கு அழைத்து, எல்லோர் முன்பும் அவர் வழக்கம் போல கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.
இத்தனை வருடங்களில், அவரை நான் பல சந்தர்ப்பங்களில், பல இடங்களில் சந்திருக்கிறேன். இடைப் பட்ட நாட்களில், எனக்கு திரைப்படத் துறையில் பல நண்பர்கள் கிடைத்திருந்தாலும், அவர் அளவிற்கு என்னிடம் யாரும் உரிமையாக பழகியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைத் துறையினை சார்ந்த எனது நண்பர்கள், மனோபாலா, பார்த்திபன், லிங்குசாமி, மிஷ்கின் போன்ற அனைவருக்குமே, பாரதிராஜா போன்ற ஒரு பெரிய இயக்குநருடனான எனது நட்பு இன்னமும் ஒரு வியப்பான விஷயமாகவே இருக்கிறது.
அந்த அபிமன்யு படபிடிப்பிற்கு பின் ஒரு முறை படபிடிப்பு நடந்த அதே அரிசி ஆலையில் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்து கொண்டாடினோம். ஏறக்குறைய தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் அவர் மிகுந்த உற்சாகத்துடன், என்னையும், பவாவையும் தனது இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு வலம் வந்தது எங்களுக்கு மிகுந்த பெருமையளித்தது.
அவர் மிகவும் நெகிழ்ந்திருந்த ஒரு கணத்தில் நான் அவரிடம், சார்! என்னை முதன் முதலில் எங்கு பார்த்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டேன். அவர், எங்கே என்று என்னை திருப்பிக் கேட்டார். பதினைந்து வருடத்திற்கு முன்பு பிர்லா கோளரங்கத்திற்கு அவர் வந்திருந்ததை நினைவு படுத்தினேன். மனோஜை அவர் அங்கு அழைத்து வந்திருந்தது அவருக்கு நினைவிருந்தது. அப்போது, உங்களையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகனை அழைத்து கடிந்து கொண்டீர்களே அதுதான் நான் என்றேன். என்னை சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு அந்த சம்பவம் எனக்கு நினைவில்லையே! என்றார். நினைவிருக்கிறது என்று சொல்லியிருந்தால் நான் நம்பியிருந்திருக்க மாட்டேன். மகா கலைஞர்கள் எதனாலும், எதன் பொருட்டும் பொய் சொல்வதில்லை
திருவண்ணாமலைக்கு பாரதிராஜா எப்போது வந்தாலும் என்னையும், பவா செல்லதுரையையும் அழைத்து கொள்வார். கடைசியாக சில வருடங்களுக்கு முன் வந்தபோது, அவரின் ஹோட்டல் அறையினில் எங்களுக்குள் நடந்த விவாதங்கள் வார்த்தைக்கு வார்த்தை எனக்கு நினைவிருக்கிறது.
சில படங்களின் தோல்விகளுக்கு பின் அவர் சற்றே மனம் வருத்தமுற்றிருந்த நேரம் அது. ஏதோ சில காரணத்தினால், அவர் எம்.ஜி.ஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதாவுடனான அவரின் நட்பு மற்றும் நெருக்கம் குறித்தே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தார். அத்தகைய நட்புகள் எங்கள் முன் அவரின் ஆளுமையினை மேம்படுத்தி காட்டும் என்று அவர் நினைத்தது போல எங்களுக்குத் தோன்றியது.
அவரின் சாதனைகள் காலத்தை கடந்தவை. இனி அவர் பெறப் போகும் எந்த வெற்றிகளும், அல்லது அவர் சந்திட்ட எந்த தோல்வியும் அவருக்கான இடத்தினை நிர்ணயக்க முடியாது என்று நம்புகிறேன்.
அந்த அறையுனுள் இருந்த ஒற்றை நாற்காலியில் அவரை அமர வைத்து, அந்த மகாக் கலைஞனின் காலடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஏன் தெரியாமல் போனது, அவரின் இடம் என்னைப் போன்ற பல ஆயிரம் ரசிகர்களின் இதயத்தில் என்பது?
 
 
 

15 thoughts on “பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

  1. Ungal Ezuthai mudhan mudhalaga vasikka Nerndhadil,
    Ungalin neenda vasippu anubavam inda katturayil milirgiradhu.
    thodarndhu vasikkum Avaludan
    C.B

  2. பாரதிராஜா கரடு முரடானவர் என கேள்விபட்டுயிருக்கிறேன். ஆனால் அவர் சிறு குழந்தை போல் பழக கூடியவர். எதற்த்தமான மனிதர் என அவருடன் பேசிய நண்பர்கள் கூறி கேள்விபட்டுயிருக்கிறேன். இந்த பதிவு இன்னும் அதிகமாக நம்ப வைக்கிறது.

  3. கருணா….உன்னைப்போலவே எனக்கும்…மன்னிக்கவும் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆதர்ச இயக்குனர் இந்த தேனி தந்த இயக்குனர் இமயம் பால் பாண்டி தான். அது 1977ஆம் வருடம் என்று நினைக்கிறேன். நான் ஏழாவது படித்துக்கொண்டு இருந்த சமயம். பதினாறு வயதினிலே ரிலீஸ். அதன் பிறகு தான் எனக்கு இல்லை….இல்லை எங்களுக்கு பைத்தியம் பிடித்தது. அது பாரதிராஜா பைத்தியம். ஒரு படத்திற்கு இயக்குனர் என்பவர் ஒருவர் இருக்கிறார் என்பதே பாரதிராஜாவை அறிந்துகொண்ட பிறகுதான். தினமும் அவரைப்பற்றிய விவாதம் பள்ளியிலே ஆரம்பித்தது. அதற்கு முன்பு வந்த படங்களில் எல்லாம் கிராமம் என்றாலே புதிய துணி உடுத்திய பண்ணையாரும், முனை மழுங்காத ஏரை ஏந்தி செல்லும் விவசாயியுமாக இருந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை நறுக்கென்று உணர்த்தியவர். இன்னும் எனக்கு பதினாறு வயதினிலே பட வசனங்கள் மனப்பாடம். குருவம்மாவிற்கும், வெள்ளயம்மாவிற்கும் நடக்கும் தெருச்சண்டையை மறக்க இயலுமா?
    பிறகு வந்த கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் (முதல் இரண்டு கிராமிய படங்களுக்கு பிறகு மேற்கத்திய பாணியில் வந்த மிகச்சிறந்த படைப்பு), நிறம் மாறாத பூக்கள் (மெட்ராஸ் கேர்ள் என்று விஜயன் உருவத்தில் பாரதிராஜாவின் குரல்), புதிய வார்ப்புகள் (என்ன ஒரு படைப்பு!!! கவுண்டமணியின் உள்ளத சொல்றேங்க…..) என்று ஒரு படத்தையும் விடாமல் பார்த்த அனுபவம்…..
    எனது மலரும் நினைவுகளை தூண்டியதற்கு மிக்க நன்றி……
    அன்புடன்,
    அ.மு.வருசை முகமது

    1. நன்றி வருசை. இத்தனை வருடங்கள் கழித்து நாம் இருவருக்கும் ஒரே இயக்குநர் ஆதர்சமாக இருந்தது நம் இருவருக்கும் தெரிய வருகிறது.
      நீ சொல்வது சரியே! நாமெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்டு, பாரதிராஜா படங்களை பார்த்து வளர்ந்த தலைமுறை. இனி, எத்தனை வருடங்கள்
      ஆனாலும், அந்த உணர்வுள் நம் நினைவுகளில் இருந்து விலகாது!
      நான் எழுதுவதை தொடர்ந்து படித்து, விமர்சிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.

  4. Arunprasad Kandaswamy அய்யா, மிக சிறந்த பதிவு… காலத்தை பின்னோக்கி பார்த்த ஒரு நினைப்பு அதில் ஒரு சிலிர்ப்பு…
    பாரதிராஜா என்ற பெயருக்கு சிங்க குரலோன் என்று பொருள் படும் போல …
    கிழக்கு சீமைலே படம் வந்த காலத்தில் எனக்கு பெரியதாய் வயது ஒன்றும் ஆகிஇருக்க வில்லை. ஆனால் அந்த படம் முடிந்து வெளி வரும்போது என் தாய் தளுதளுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. எங்களை போன்றவருக்கு எல்லாம் ஆய்த எழுத்து பாரதிராஜா வைத்தான் மிக பிடிக்கும். நேர்த்தியான நடிப்பு… ரெட்டச்சுழி திரைப்படமும் அவரின் நடிப்பு திறமைக்கு ஒரு சான்று..

  5. Arun Kumar Subramanian
    Sir, I am really amazed by the flow of your articles in tamil (sorry, I dont know how to type in tamil in my laptop, otherwise I would have commented in tamil too). It looks like your sentences have been framed in a much much easy way. Well, being in research, we are involved in the business of writing. On that basis, I felt like this. Good going. Please write more articles that nurtures common person’s interest in science, in a very interesting way (i.e., like your “history of cancer” article).

  6. Sir, very nice to see this “NINAIVALAIGAL OF KARUNA”. Sorry to say your name sir in this

  7. i have seen mr.karuna when he is donate ambulance to t.v.malai lions club,that program is started in front of the temple (T.V.MALAI) thengai udaithu arambithu vaithar , that time only i had seen first time ,i thing he is also regular crorpathi family younguster ,,after getting popularity he may return to his yard, i think like this only but continuously lisen his intres hobbies it is very great ,,and a man who want s to live with normal peopple life and understanding also give respect to the people, i say mr.karuna is a samanya manithan in the big historical backround family.thankyou.

Comments are closed.