விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்.

விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்.

விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்

கடந்த சில வாரங்களாக எனது நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனைகளைப் பற்றி நான் எந்த கருத்தையும் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்று மிகவும் பொறுமை காத்தேன். குறிப்பாக ஃபேஸ் புக்கில்.
அங்கேதான், அந்தத் திரைப்படத்திற்கோ, கமலுக்கோ அல்லது பொதுவான கருத்து சுதந்திரத்திற்கோ கூட ஆதரவாய் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்தாலோ, அல்லது வேறொருவரின் கருத்தினை பகிர்ந்து கொண்டாலோ கூட, எழுந்த எதிர்வினைகள் எனக்கு அதிர்ச்சியூட்டியது. நான் மிதவாதிகள் (Moderate) என்று எண்ணியிருந்த (தமிழ் மொழிபெயர்ப்பு சரிதானே?) எனது நண்பர்கள் சிலர் கூட, இத்தனை பொஸஸிவ் ஆக வெளிப்பட்டது எனக்கு ஆச்சர்யம் அளித்தது.
எல்லாக் களேபரமும் முடிந்து அடங்கிய பின், எனது அவதானிப்புகளை மொத்தமாக ஒரு கட்டுரையாக எழுதிப் பார்க்கலாம் என்றிருந்தேன். அதிலும் கூட, நீதிமன்றத் தீர்ப்பினையொட்டித்தான் நான் எழுத வேண்டியிருக்கும் என்று கணித்திருந்தேன். இப்படி, ஒரு பஞ்சாயத்து தீர்ப்பையொட்டி எழுதுவேன் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
இத்தனை நாட்களுக்கு பின் இந்தத் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளை மீண்டும் ஒரு முறை பேசிப் பயனில்லை என்பதால், ஒரு புது மாதிரியாக இந்த விஸ்வரூபம் திரைப்படத்தால் பல்வேறு தரப்பினர்கள் பெற்றதும், இழந்ததும் என்ன என்பதைப் பற்றி எழுதிப் பார்க்கிறேன்.
ஒரு தொழில் முனைப்பாளன், என்ற முறையில், இந்த லாப, நட்டக் கணக்கினை எனது பார்வையில், எனது கவனத்துக்குள் வந்த விஷயங்களை வைத்து எழுதுகிறேன்.
ஜனவரி 13ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தத் திரைப்படம், இன்று (பிப்ரவரி 7) வெளியாகிறது. முதலில் தமிழகத்தில் மட்டும் 410 திரையரங்குகளில் வெளியிட உத்தேசித்திருந்த இந்தப் படத்தை 600 திரையரங்குகளில் வெளியிடுவது, இந்த கணக்கின் முடிவை உத்தேசமாக சொல்லிவிடுகிறது.
இந்த விவர அறிக்கையின் முக்கிய அம்சங்களாக, கமலஹாசன், சென்சார் போர்ட், 24 அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள், நீதிமன்றம், அரசு, ஊடகம், ரசிகர்கள், என பலர் இருக்கின்றனர்.
எனவே, முதலில், விஸ்வரூபம் திரைப்படம்:
சில வாரங்களுக்கு முன் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி (அதுவும் பஞ்சாயத்துக்குட்பட்டு) நூறு கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதற்கு பின் வெளியாகும் விஸ்வரூபம் படத்திற்கு அந்த துப்பாக்கியின் வசூல் சாதனை பெரும் சவாலாக இருந்தது. பொதுவாகவே, தமிழகத்தில் ரஜினிக்கு பின் கமல் என்ற நிலை மாறி,( வியாபாரத்தில்! நடிப்பில் அல்ல) விஜய், அஜீத் என்று பட்டியல் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், கமலுக்கு மொத்த இந்தியாவிலும் வியாபாரம் இருக்கிறது என்பதால், இந்தப் படத்தை 95 கோடி செலவு செய்து தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் விலை மிகவும் அதிகம் என்பதாலும், இப்போதைய சூழ்நிலையில் கமல்ஹாசனுக்கு அத்தனை வியாபாரம் இல்லையென்பதாலும், திரைப்பட வியாபாரிகள் இந்தப் படத்தை வாங்கத் தயங்கினார்கள். எனவே, கமல் வேறு வழியின்றி, DTH போன்ற புதிய வழிகளை முயற்சி செய்து பார்த்து, அதுவும் எடுபடாமல் போக, தானே திரையரங்குகளில் சொந்தமாக திரையிட திட்டமிட்டிருந்தார்.
அப்போது கிளம்பிய இந்த தடை பூதங்களால், இந்தப் படத்துக்கு கிடைத்த விளம்பரம், இந்தத் திரைப்படத்தை இந்திய அளவில் பெரிய சினிமாவாக மாற்றி விட்டது. நாடு முழுக்க உள்ள பல்வேறு செய்தி ஊடகங்களால், இடைவிடாது இந்தப் படத்தைப் பற்றி பேசப்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறை விளம்பரங்களின் மதிப்பு சற்றேறக்குறைய ரூபாய் 250 கோடி மதிப்புள்ளது என்றொரு ஆய்வினைக் கண்டேன்.
ஆக, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான ஒரு செயலாக இந்த மாநில அரசின் தடை உத்தரவு, இஸ்லாமிய குழுத் தலைவர்களின் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகள் ஆகியவை தோற்றமளித்தாலும், முடிவில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அது மிகப் பெரிய அளவினில் விளம்பரத்தின் மூலம், ஆதாயம் தேடிக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.
அடுத்து,
இந்தப் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்:

ஒரு பகல் பொழுதினில், கமலஹாசன் தனது வீட்டினில் இருந்து அனைத்து ஊடகங்களுக்கும் கொடுத்தப் பேட்டி, சில மணித்துளிகளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலையையே பெரும் பாதிப்புள்ளாக்கியது. இதுகாறும், கமலஹாசனை எதிர்த்தவர்களும் கூட சற்றே ஸ்தம்பித்துப் போனார்கள்.
காரில் பயணித்துக் கொண்டிருந்த நான் இந்த செய்திக் கோர்வைகளை ஐபேடில் படித்தபோது ஏற்படாத உணர்வு, பின்னர் கமலஹாசனின் பேட்டியை தொலைகாட்சியில் பார்த்தபோது ஏற்பட்டது. அவர் சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஒரு தீராத துக்கமாக மாறி என்னை அமைதியிழக்கச் செய்தது. 30 ஆண்டு காலமாக எனது ஆதர்ச நாயகனான கமல், தனது உணர்வுகளைச் சொல்லி அறச்சீற்றம் கொண்ட விதம், தமிழகத்தின் மனசாட்சியையே அசைத்துப் பார்த்துவிட்டது. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. எனது நண்பர்கள் பலரும் கூட அன்று உறக்கம் இழந்தாகச் சொன்னார்கள்.
நடந்து கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாவுக்கு ஏற்படும் வழமையான இடையூறுகள் என்ற அளவில் இருந்து, கமலஹாசன் என்னும் அபாரமான கலைஞனை முழுவதும் இழந்து விடலாம் என்னும் நிலைக்கு அந்தப் பேட்டி மாற்றி விட்டது. அதுவரை, தனக்கு பாதகமாக இருந்த வெவ்வேறு நிலைகளையும், தனக்குச் சாதகமாக மாற்றிய கமலின் அந்தப் பேட்டியில் அவரிடம் காணப்பட்ட உள்ளார்ந்த சோகமும், அவர் உபயோகப்படுத்திய நேர்மறை வார்த்தைகளும், பேட்டியின் போது அணிந்து கொண்டிருந்த உடை முதல் முகத்தில் தேக்கி வைத்திருந்த சிரிப்பு வரை எல்லா அம்சங்களும் கமலஹாசன் எத்தனைப் பெரிய புத்திசாலி என்பதை நிரூபித்தது.
தமிழகத்தில் தனது படத்தைத் திரையிட முடியாது என்றாகிவிட்ட பின்பு, இந்தியா முழுக்க தனது படத்தை வெளியிட்டுக் காட்டி, பின் பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம் நாடு முழுக்க தனது நிலையினை தெளிவு படுத்தி கமல்ஹாசன் தன்னந்தனியாக செய்து காட்டிய போராட்டம் ஒரு அசாத்தியமான சாதனை!
பிற்பாடு, ஒரு சமாதான ஏற்பாட்டின்படி, சில காட்சிகளை அவரே முன்வந்து நீக்கியிராமல், தனக்கான நீதியினைத் தேடி கடைசி வரை போராடியிருப்பாரேயானால், இங்கிருக்கும் பலரும் சமூக, அரசியல் அழுத்தங்கள் தாளாமல் திண்டாடியிருக்கக் கூடும். அப்படியான ஒரு வழியில் கமலஹாசனுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்திய அளவில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பார்.
இந்த போராட்ட மிரட்டல்கள், தடைகள், வழக்குகள், பின் திரையரங்கங்களின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, திரையரங்க உரிமையாளர்களின் மீது ஏவப்பட்ட மிரட்டல்கள் என கமலஹாசன் மீது ஏவப்பட்ட பல்வேறு அம்புகளால், அவர் மிகுந்த காயப்பட்ட போதிலும், இறுதியில், தன்னுடைய ஆளுமையினால் அதிலிருந்து மீண்டதோடு, தான் சமீபகாலமாக இழந்திருந்த தனது சூப்பர் ஸ்டார் மதிப்பினையும் மீண்டும் கைப்பற்றி விட்டார்.
24 அமைப்புகளைச் சார்ந்த கூட்டமைப்பின் தலைவர்கள்:

இவர்கள் ஊடகங்களின் மூலம் தங்கள் தரப்பு நியாயங்களாக எடுத்து வைத்த விஷயங்களைப் பற்றி இங்கே ஆராயப் போவதில்லை. அந்த விஷயங்களில் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது என்பதாலும், இறுதியில் கமலஹாசனே சிலவற்றை முன்வந்து ஏற்றுக் கொண்ட காரணத்தினாலும் இவர்களின் குற்றச்சாட்டுக்குள் போகப் போவதில்லை.
ஆனால், இந்த விவாதங்களின் போது என்னை மிகவும் நெருடியது, இவர்கள் அவ்வப்போது குறிப்பிட்ட “ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் சார்பாக” என்னும் வாசகம்தான். இது பற்றி, எனது இஸ்லாமிய நண்பர்களிடமும் பேசிப் பார்த்தேன். நம் எல்லோரையும் போலவே அவர்களும் மூன்று பிரிவாகத்தான் இருக்கிறார்கள். முதல் பிரிவு, கமலை எதிர்ப்பவர்கள், இரண்டாவது பிரிவு நடுநிலையாக சமாதானம் கோருபவர்கள், பின்பு மூன்றாவது பிரிவாக தீவிர கமல் ஆதரவாளர்கள். இதில் எங்கே இருக்கிறது இந்த 24 அமைப்புத் தலைவர்களும் உரிமை கோரும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆதரவு?
மேலும், இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக நடைபெற்றக் கூட்டத்தில் எனக்குப் பிடித்த பேச்சாளரான ஒரு இஸ்லாமியத் தலைவர் பேசிய தரம் தாழ்ந்தப் பேச்சுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவரது சகத் தோழர்களும் கூட அந்தப் பேச்சுகளுக்காக வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இறுதியாக, எங்கிருந்தோ வந்த உத்தரவின் பேரில், தாங்கள் பல்வேறு விவாதங்களில் வலியுறுத்திச் சொன்ன கருத்துகளை எல்லாம் ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் இவர்கள் இழந்தது, தங்களின் சொந்த சமூகத்தில் இருக்கும் நடுநிலையாளர்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மைச் சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நடுநிலையாளர்களின் ஆதரவு.
பெற்றது, பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம் இந்தத் தலைவர்களுக்குக் கிடைத்த அளவில்லாத விளம்பரம்.
சென்சார் போர்ட்:
இந்திய அரசின் தன்னாட்சிப் பெற்ற இந்த நிறுவனம் வழங்கிய சான்றிதழே ஒரு மோசடிச் சான்றிதழ் என்றும், இவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முறைகேடாகப் பெறப்பட்டது என்றும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், ஒரு திறந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய பின்னும் தீவிர எதிர்வினை ஆற்ற வழியின்றி இருக்கும் இவர்களை என்னச் சொல்ல? இவர்கள், பேசாமல் எஸ்.ஜே.சூரியாவின் அடுத்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்கும் வேலையை பார்க்கலாம்!
இந்தப் பிரச்சனையின் ஒட்டு மொத்த இழப்பு இவர்களுக்குத்தான்!
பின்னே! போனது மரியாதையாயிற்றே?
சுழன்று, சுழன்று பணியாற்றிய ஊடகங்கள்:
சும்மாவே பரபரப்பைத் தேடியலையும் ஊடகங்களுக்கு, இது கருத்துச் சுதந்திரம் சார்ந்த பிரச்சனை என்பதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் இரவு ப்ரைம் டைமில் இது தொடர்பான பல விவாதங்களை நடத்தி, அதன்மூலம் பல பேச்சாளர்களை புகழ்பெறச் செய்தது தொலைகாட்சி ஊடகங்கள். சிலக் குறிப்பிட்ட புதிய காட்சி ஊடகங்கள், இந்த விவாதங்களின் மூலம் தானும் புகழ் பெற்றன என்பதை மறுப்பதற்கில்லை.
எனக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே பெரிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த கடும் மிரட்டல்களை எதிர்த்து இவர்கள் ஒரு ஒட்டு மொத்தக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கலாம். இத்தனைக்கும் மனுஷ்யபுத்திரன் ஒரு பத்திரிக்கை ஆசிரியரும் கூட!
எப்படியிருப்பினும், கருத்து உருவாக்குதல், வெவ்வேறு அறிஞர்களை பேட்டி காணும் அனுபவம், களப்பணி என பலவகையில் பயனடைந்தவர்கள் இந்தியா முழுவதும் உள்ள செய்தி, காட்சி ஊடகங்களே!
மாநில அரசு:
திரும்பத் திரும்ப எல்லா நிகழ்வுகளுக்கும், ஒருவரையே குற்றம் சாட்டுவது மிகுந்த அலுப்பூட்டும் வேலை. கமலின் அந்த உணர்ச்சி மிகுந்த பேட்டி நாடெங்கிலும் ஏற்படுத்திய பல கேள்விகளை எதிர்கொள்ள தமிழக முதல்வரே களம் காண வேண்டியிருந்தது. இவரும் தனது முழுத் திறமையுடன், நன்றாகவே அவரின் பேட்டியினைக் கையாண்டார் என்றாலும் கூட, அந்த புள்ளி விவரக் கணக்கு அதற்கு திருஷ்டியாகப் போய் விட்டது.
மாநிலமெங்கும் படம் திரையிடப்பட உள்ள 500 திரையரங்குகளுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனில், அதற்கு 58640 காவல் துறையினர் வேண்டும் என்று அவர் பேட்டியளித்ததை பக்கத்து மாநில முதல்வர்கள் பார்த்து பெருத்த அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். ஏனெனில்,அந்தக் கணத்தில், அந்த மாநிலங்களில் எல்லாம் ஒரு காவல் துறையினர் கூட பாதுகாப்பளிக்காமல், அனைத்துத் திரையரங்குகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது.
அதிலும் குறிப்பாக, நம் மாநிலத்தை விட இஸ்லாமிய மக்கள் விகிதம் அதிகம் இருக்கும் கேரளத்தில், தமிழிலேயே வெளியிடப்பட்டு, மாநிலமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கேரளத்தில், முஸ்லீம் லீக் ஆதரவில்தான் அந்த மாநில அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
வெறும் 500 திரையரங்களின் பாதுகாப்புக்கே ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் தேவையென்றால், நமது மாநிலத்தில் இருக்கும் பல கோடி பெண்கள், சிறுபான்மையின மக்கள், வியாபார கேந்திரங்கள், வங்கிகள், மத வழிபாட்டு இடங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசுக்கு மிகப் பிரியமான டாஸ்மாக் கடைகள், இவையத்தனைக்கும் எத்தனை இலட்சம் காவல்துறையினர் தேவையோ! நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.
இந்தப் பேட்டியில், கமலஹாசனுக்கு ஒரு செய்தி இருந்தது. அது, கமலஹாசனுக்கு வயது 58 ஆகி விட்டது எனவும், அதனால் சொந்தக் காசில் ஏகப்பட்ட பொருள் முதலீட்டில் அவர் படம் எடுத்தால், அதன் லாப,நட்டங்களுக்கு அவரே பொறுப்பு என்றும், தமிழக முதல்வர் அவர்களே அறிவுறுத்தினார்.
அப்பாடா! ஒரு கமல் ரசிகனாக, இதைத்தான் நானும் அவரிடம் சொல்ல விரும்பினேன். இந்த அறிவுரையை கமல் தனது கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் இழந்தது என்ன என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில், தாம் பெற்றது இன்னென்ன என்று அவர் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்! அத்தனை தன்னம்பிக்கை கொண்டவர் அவர்!
சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள்:
யாராவது மைக்கில் எங்காவது பார்த்துக் கொண்டு ஆவேசமாகப் பேசினாலே, தன்னைப் பார்த்துதான் பேசுகிறார் போலும் என்று நம்பி மரியாதைக்காக மணிக்கணக்கில் உட்கார்ந்து கேட்கும் அப்பாவி இவர்கள். இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள்.
பாபர் மசூதியை இடித்து அங்கே இராமர் கோவில் கட்ட முற்பட்ட வேளையில், நாடு முழுக்க மதக் கலவரம் மூண்டு பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட இங்கு தமிழகத்தில், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொண்டு, அமைதியாக திரையரங்களில் ஒற்றுமையாக சினிமா பார்த்தக் கொண்டிருந்த பெருமை நம் மாநில மக்களுக்குண்டு!
அந்த காலக்கட்டத்தில் வெட்டி மாய்ந்து கொண்டிருந்த மாநிலங்களில் எல்லாம் அமைதியாக இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்க, அமைதிக்கும், மதநல்லிணத்திற்குப் பெயர் பெற்ற பெருமைமிகு மாநிலமான தமிழகத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது ஒரு பெரும் முரண்நகை!
எப்படியாகினும், இவையெல்லாம் தங்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை பாதிக்க இடம் கொடாமல், அமைதியாக இப்பொழுதும் தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும், ஞானிகளான இவர்களுக்கு, உண்மையில் இந்தப் பிரச்சனையால் எந்த லாபமுமில்லை! நட்டமுமில்லை!
திரைப்பட அரசியல்:
இப்படியாக இந்த ஒற்றைத் திரைப்படம், சிலருக்கு லாபத்தையும், பலருக்கு நட்டத்தினையும் அளித்திருந்தாலும், தமிழக அரசியல் களத்தினில் ஒரு புது பிரிவினையைத் துவக்கியிருக்கிறது.இதுவரை இங்கு மக்கள் அளிக்கும் வாக்குகளை, இது திமுக வாக்கு, அது அதிமுக வாக்கு என்று கட்சியளவிலேதான் பிரிக்கப்பட்டு வியூகம் அமைக்கப்பட்டு வந்தது.
இனி, முஸ்லீம் வாக்குகள், இந்து வாக்குகள் என்று மதங்களின் பேரால் பிரித்து அதையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும்,ஒரு தந்திரமான வேலையினை இந்தத் திரைப்பட பிரச்சனையின் மூலம் சில நுண்மதி அரசியல்வாதிகள் முயன்று பார்க்கின்றனர்.
பெரியார் பூமி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் நடுநிலைவாதிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது!

53 thoughts on “விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்.

  1. //சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள்:இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள்.//
    மிகச் சரியான பார்வை.
    இந்தப் பிரச்சனையில் கமல் இழந்தது எதுவுமில்லை. பெற்றதுதான் அதிகம். குறிப்பாக, முதலமைச்சரின் பேட்டி. அவரை இந்த அளவு ஒரு பேட்டிக்காக உழைக்க வைத்த முதல் உயிரினம் கமலாகத்தான் இருக்க வேண்டும்!
    படம் சிங்கப்பூரில் இன்றுவரை ஹவுஸ்ஃபுல் என்று கேள்விப்பட்டேன்!

  2. நான் கேட்டறிந்த வரையில் 90 % இஸ்லாமிய நண்பர்களும் ஆதரவு மட்டுமே அளித்துள்ளனர்… இவர்கள் பெயரை வைத்து அந்த அமைப்பின் தலைவர்களும் சில அரசியல்வாதிகளும் மட்டுமே ஒரு நல்ல திரை படத்தை வைத்து நன்கு குளிர் காய்ந்து உள்ளனர் என்பது அனைவருக்கும் புலனாகும் உண்மை….
    இது தவிர எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…. சிலமாதங்களுக்கு முன்பு ” வானம் ” என்னும் திரைப்படம் வெளிவந்த போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள் என்பதே…… ஒரு வேலை அந்த படத்தை சர்சைக்குள்ளாக்கினால் இவர்களுக்கு லாபம் இல்லை என்று எண்ணி இருப்பார்களோ……?

  3. All the topics and their content says with faith only in his heart as a god to done every process to release this film in tn ,
    all the topic had true words only but my special one is last topic sir,
    no words to say about your writing skill sir because all the topics and their content has linearly or (corvaiya iruku) ordered words only.

  4. //இது தவிர எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…. சிலமாதங்களுக்கு முன்பு ” வானம் ” என்னும் திரைப்படம் வெளிவந்த போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள் என்பதே…… ஒரு வேலை அந்த படத்தை சர்சைக்குள்ளாக்கினால் இவர்களுக்கு லாபம் இல்லை என்று எண்ணி இருப்பார்களோ……?//
    ஏன் இப்படி கிச்சு கிச்சு மூட்டறிங்க. போய் வானம் படத்தை இன்னொரு முறை பாத்துட்டு வாங்க! அதில் காவல்துறையின் இந்துத்துவ மனப்பான்மையும் தோலுரித்து காட்டப் பட்டிருக்கும்.

  5. இந்த திரைப்பட சர்ச்சையால் நானும் இழந்தேன்,முகப்பதிப்பு நண்பர்கள,.நன்றி “விசுவரூபம்”.சில நண்பர்களின் “நிஜரூபம்” தெரிந்தது.

  6. http://mathimaran.wordpress.com/2013/02/07/613/
    விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..
    இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.
    உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.
    மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம்.
    ‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.
    நீக்கச் சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.
    இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.
    ‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அருளுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
    படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.
    விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்?’ என்று எழுதியிருந்தேன்.
    என் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.
    ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.
    கமலே ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.
    அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.
    ‘பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு’ என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்’ என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் ‘Like’ செய்கிற இந்து அறிவாளிகளைப்போல்,
    இஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;
    இன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;
    அதுபோல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு ‘ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..?’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
    ஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், ‘இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்’ என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.
    சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை; அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், ‘குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..’ என்பாரே அதுப்போல்;
    அமெரிக்கர், அமெரிக்க காவல்துறை, கமல் இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, ‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
    கமல்ஹாசன் ‘பாய்’ கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.
    இதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.
    தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ‘விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.
    பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.
    **
    இஸ்லாமிய வெறுப்பும் அமெரிக்க விசுவாசமாகவும் படம் நகர்கிறது. ‘நகர்கிறது’ என்கிற இந்த வார்த்தையை நேரடியாக புரிந்து கொள்ளுங்கள். திரைக்கதை அமைப்பு அப்படி மந்தமாக இருக்கிறது. அதுவும் பிற்பகுதி… ‘பப்புள்காமில் செய்த பிலிம்ரோல்…’
    ஒரு படத்தை பலமுறை பார்க்கிற சினிமா விரும்பியாக இருக்கிற கமல் ரசிகர்களுக்கே இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது; காரணம் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்பதற்காக அல்ல; நான் சொன்ன அந்த ‘நகர்கிறது’ பிரச்சினைதான். படத் துவக்கதில் ‘ஆரவாரத்தோடு படம் பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்து, போக போக.. கமல் வசனத்தைவிட, ரசிகர்கள் பேசுகிற வசனமே அதிகம் தியேட்டரில் எதிரொலித்தது.
    இடைவேளையின் போது, என்னிடம் பேசிய ஒரு ரசிகர், ‘தலைவரு தப்பான வேசத்துல நடிக்கிறாரு.. காதல் மன்னன்.. இன்னும் ஒரு கிஸ்கூட அடிக்கல..’ என்று ஆதங்கப்பட்டார்.
    நண்பர் நவினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கமல் ரசிகர்கள், படத்துவக்கதில் படம் பார்ப்பதற்கு இடைஞ்சலாக யாராவது கதவைத் திறந்து வெளியில் போனாலோ உள்ளே வந்தாலோ அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள்.
    அவர்களே பாதி படத்திற்குமேல், மற்றவர்கள் படம் பார்பப்பதற்கு இடையூறாக கத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் நவினிடம் ‘அண்ணே நாங்க போறோம்.. ஒன்னும் புரியல..’ என்றார்.
    நவின் ‘இருங்க படம் முழுக்க பாருங்க.. புரியும்’ என்றார். நவின் பேச்சை கேட்காமல் 30 நிமிடத்திற்கு முன்பே கிளிம்பி விட்டனர் கமல் ரசிகர்கள்.
    ஆனாலும் இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், படம் முடிந்த பிறகு, ‘படம் சூப்பர், என்னங்க தமிழ்நாட்ல மட்டும்தான் முஸ்லீம் இருக்காங்களா?’ என்று ஆவேசமாக பேசினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நிறையபேர் கமல் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு பார்க்க முடிந்தது.
    (தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே திரையரங்கு நிரம்பி வழிந்தது)
    ஆக, விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவதற்கு வாய்பில்லை. அதற்கான காரணத்தை கமல் தரப்பினர் இஸ்லாமியர்கள் மீதே போடலாம்.. ‘படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் கட் பண்ணதாலே..’ என்று.
    ஆனால், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள்.
    காரணம், அமெரிக்க சார்பு கொண்ட கமலின் மனநிலையும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனநிலையும ஒன்றாக சங்கமிப்பதுதான்.
    அமெரிக்க இந்தியர்கள் இந்தியாவில் தாங்கள் படித்த படிப்பின் தொடர்ச்சியாக அதற்கான ஆய்வு செய்வதற்கோ, அதை குறித்த தேடுதலுக்கோ போகவில்லை.
    தங்களின் கல்விக்கு இந்தியாவைிட அதிகம் சம்பளம் கிடைக்கிறது, அதை ஒட்டிய சொகுசான வாழ்க்கை..’ என்று காரணத்திற்காகவே சென்றிருக்கிறார்கள்.
    அது அமெரிக்காவில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைகிறது வாழ்க்கை. அதை பொருளாதார ரீதியாக இன்னும் தரம் உயர்த்துவதற்கும் சில நேரங்களில் தக்கவைத்துக் கொள்வதற்குமான வாழ்க்கையாக அமைகிறது. ‘இந்த வாழ்க்கை அமெரிக்காகாரனால்தான்’ என்ற அந்த நன்றி அவர்களிடம் நிறைந்திருக்கிறது.
    அதனால்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வந்தால், அமெரிக்க அரசின் பொது ஒழுங்கு, சாலைகள் பராமரிப்பு, சாலை விதிகள், ஒழுங்கு இவைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு அமெரிக்க புகழை பேசி பேசி வியக்கிறார்கள். (அறுக்கிறார்கள்)
    மாறாக சர்வதேசிய அரசியலில், மூன்றாம் உலக நாடுகளிடமும், அரபு நாடுகளிடமும் எவ்வளவு இழிவாக மூன்றாம் தர பொறுக்கியைப் போல் அமெரிக்கா நடந்து கொள்கிறது, என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
    அதற்கு நேர் எதிராக அமெரிக்கவிற்கு எதிரான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
    ‘இவனுங்களாலதான் அமெரிக்காவுல நிம்மதியே போச்சு..’ என்று கோபப்படுகிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் விஸ்வரூபத்தை பார்த்தால், ‘இல்லாததை ஒன்னும் காட்ல.. இருக்கிறதைதான் காட்டியிருக்கார் கமல்’ என்று கருத்து சுதந்திரவாதிகளாக, கருத்து சொல்கிறவர்களாக அவர்களின் அமெரிக்க வாழ்க்கை முறை உருவாக்கியிருக்கிறது.
    இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே அமெரிக்க வாழ்க்கையை வாழ்கிற, ‘இந்திய வாழ் அமெரிக்கர்களிடம்’ அதாவது ‘இன்னும் நமக்கு அமெரிக்க போவதற்கு வாய்பில்லையே..’ என்று KFC சிக்கனும் கோக்கும், பிட்ஸாவும் கோக்கும், தோசையும் கோக்கும், தயிர் சாதமும் கோக்குமாக வாழ்கிற இந்திய உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தப் படம் நிறைய பிடிக்கும்.
    நன்றி
    வே .மதி மாறன்

    1. நஃபீஸா,
      நான் விஸ்வரூபம் திரைப்படத்தைப் பற்றி எழுதவில்லை.
      விஸ்வரூபம் ஒரு கலைப் படைப்பு என்றோ, தமிழ் சினிமாவின் உச்சம் என்றோ சொல்லவில்லை.
      அது நிச்சயம் ஒரு அமெரிக்க சார்புத் திரைப்படம்தான். கமலுக்கு அமெரிக்கர்களை கவருவதில் ஏதோ ஒரு
      நோக்கம், ஆசை உள்ளது போலும்!
      என்னுடைய கட்டுரை, விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைப் பற்றித்தான்.
      இத்தனை நீண்ட பதிலுக்கு நன்றி.
      (அமெரிக்காவில், அமெரிக்கத் தயாரிப்பு கார்கள் இருப்பது வியப்பல்லவே! மேலும், மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க ஜப்பான் தயாரிப்பு கார்கள் தான் இருக்கிறது!)
      அன்புடன்,
      கருணாநிதி.

    2. mr.nafeesha
      naanum en friend muhamadum intha film parthom enna vida avan than intha film romba interest ah parthan
      note:two days ah house full
      thank u
      by sathish

  7. நீங்கள் நினைத்தமாதிரியோ, மனுஷ்ய புத்திரன் நினைத்த மாதிரியோ இத்திரைப்படம் தடைசெய்யப்பட வில்லை என்பது அரசியலற்ற மதஉணர்வு கொண்ட எந்த முஸ்ஸீகளுக்கு நன்கு தெரியும் என்பது உலகறிந்த விடயம். இதில் தவறான கணக்கீடு செய்து தாழ்ந்து போனது அஇஅதிமுக மட்டுமே…..

  8. Samooga prachanai patriya oru miga sirandha aaraichi.. edhu epadi irupinum islam&indhu nanbargalai idhu endha vagailum baadhika villai..

  9. 1.கமர்ஷியல் கலையுலகில் விலையிழந்திருந்த கதாநாயகன் கமலுக்கு படஎதிர்ப்பு நல்ல விளம்பரத்தைத் தந்தது என்பதை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்!
    2. தன் மீது இரக்கம் ஏற்படும் அளவு தன்னைத் தாழ்த்திக் கொண்டது கமலின் தந்திரம் அதற்கு கண்ணீர் வடித்தது உங்களைப்போன்ற அப்பாவி இரசிகர்கள்
    3.(பிற்பாடு, ஒரு சமாதான ஏற்பாட்டின்படி, சில காட்சிகளை அவரே முன்வந்து நீக்கியிராமல், தனக்கான நீதியினைத் தேடி கடைசி வரை போராடியிருப்பாரேயானால், இங்கிருக்கும் பலரும் சமூக, அரசியல் அழுத்தங்கள் தாளாமல் திண்டாடியிருக்கக் கூடும். அப்படியான ஒரு வழியில் கமலஹாசனுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்திய அளவில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பார்.) யாருக்குத்திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும் கமல் என்ன சக்தியாக உருவெடுத்திருப்பார்? உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கலாமே
    4. சூப்பர் ஸ்டார்?
    5.(24 அமைப்புகளைச் சார்ந்த கூட்டமைப்பின் தலைவர்கள் ஊடகங்களின் மூலம் தங்கள் தரப்பு நியாயங்களாக எடுத்து வைத்த விஷயங்களைப் பற்றி இங்கே ஆராயப் போவதில்லை. அந்த விஷயங்களில் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது என்பதாலும், இறுதியில் கமலஹாசனே சிலவற்றை முன்வந்து ஏற்றுக் கொண்ட காரணத்தினாலும் இவர்களின் குற்றச்சாட்டுக்குள் போகப் போவதில்லை)
    இங்கேதான் உங்களின் கட்டுரையின் உள் நோக்கம் வெளிப்படுகிறது. தமிழகத்தில் சினிமா சிம்மாசனத்தைத் தீர்மானிக்கும் வரை சக்தியாக உள்ளது அதன் ஈர்ப்புகளில் முஸ்லிம்களும்தான் அடக்கம். சினிமாவின் பிரதான பிரச்சினையப் பேசாமல் நழுவி அதன் விளைவுகளில் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்
    6. (பாபர் மசூதியை இடித்து அங்கே இராமர் கோவில் கட்ட முற்பட்ட வேளையில், நாடு முழுக்க மதக் கலவரம் மூண்டு பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட இங்கு தமிழகத்தில், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொண்டு, அமைதியாக திரையரங்களில் ஒற்றுமையாக சினிமா பார்த்தக் கொண்டிருந்த பெருமை நம் மாநில மக்களுக்குண்டு!
    அந்த காலக்கட்டத்தில் வெட்டி மாய்ந்து கொண்டிருந்த மாநிலங்களில் எல்லாம் அமைதியாக இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்க, அமைதிக்கும், மதநல்லிணத்திற்குப் பெயர் பெற்ற பெருமைமிகு மாநிலமான தமிழகத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது ஒரு பெரும் முரண்நகை!) அந்த அளவிற்கு மாமன் மச்சானாக உறவுகலந்துறவாடும் போக்கில் இது போன்ற படங்களின் கருத்துக்கள் ,மக்களின் மனதில் சக நண்பர்களான முஸ்லிம்களின் மீது மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்துகிறதே என்று எதிர்வினை காட்டுவது முராணாகாது
    7.(னக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே பெரிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த கடும் மிரட்டல்களை எதிர்த்து இவர்கள் ஒரு ஒட்டு மொத்தக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கலாம். இத்தனைக்கும் மனுஷ்யபுத்திரன் ஒரு பத்திரிக்கை ஆசிரியரும் கூட!)
    தன் இன சகோதரனாக இருந்தாலும் சமூக நல்லிணக்கம் சிதைவதற்குத் துணைபோனால் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு மனுஷ்யனும் ஒரு எடுத்துக்காட்டுத்தான்(அவர் நாத்திகர் எனில் இஸ்லாமியர் அல்ல என்பது தனிக்கதை அது முஸ்லிம்களுக்கேத் தெரியாது. ஏனெனில் இஸ்லாம் இன மொழி சார்ந்ததல்ல கொள்கை சார்ந்தது)

    1. நண்பர் சங்கை ஹசனி இப்னு நூரி,
      மிக நீண்ட பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள்.
      நன்றி.
      உங்கள் கேள்விகளின் வரிசைப்படி பதிலளிக்க முயல்கிறேன்.
      1.ஆம்! நான் கட்டுரையில் குறிப்பிட்டதது போல விஸ்வரூபம் படத்திற்கு இந்த பிரச்சனை மிகப் பெரிய அளவில் விளம்பரம்தான்.
      2.யார் கண்ணீர் விட்டாலும், கலங்கி நின்றாலும் உடன் வருந்தி ஆறுதல் கூறுதல் தமிழன் பண்பாடு. இன்னமும் இந்திராகாந்திக்காகவும்,
      இராஜீவ் காந்திக்காகவும் அனுதாபப்பட்டு ஓட்டுகள் போடும் அளவிற்கு இளகிய மனம் கொண்டவர்கள் அல்லவா நாம். அதனால்தானே,குஜாராத்
      கலவரமானாலும், இலங்கையில் அப்பாவி மக்கள் படுகொலையானாலும், ஏன் எப்போதுமே பகைமை பாராட்டும் பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்திற்கும்கூட
      துடித்து அழும் பண்பாட்டின் வழியல்லவா நாமெல்லாம்!
      கமல் கலங்கி நின்றால் மட்டும், விலகிப் போக அவர்மீது அப்படியொன்றும் இங்கு யாருக்கும் பகைமை இல்லையே?
      3.இந்திய அளவில் சினிமா சம்பந்தப்பட்ட காப்பிரைட் பிரச்சனை முதல், விருதுகள், சென்சார் மேல்முறையீட்டு குழு வரை பிரச்சனையென்றால்
      மத்திய அரசு அழைத்து கருத்து கேட்பது புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி, ஜெயாபச்சன் போன்றாரைத்தான். அவர்களுக்கெல்லாம்
      தலைமை தாங்கும் இடத்திற்கு கமல் வந்திருக்க வாய்ப்பிருந்தது என்ற கருத்தில் எழுதினேன்.
      இப்போது, உங்களின் சுட்டிக் காட்டலுக்கு பின், நீங்கள் நினைப்பது அரசியல் அதிகாரம் என்பதை புரிந்து கொண்டேன். வடிவேலு படத்தில் வருவதைப் போல
      ‘அந்த வேலைக்கெல்லாம் இவன் சரிப்படமாட்டான்’!
      4.ஒரு துறையின் முன்னணி சாதனையாளர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள்! தமிழ்நாட்டில் அந்தப் பட்டத்திற்கு ரஜினிகாந்த் ஒருவர்தான். ஆனால், அகில இந்தியாவிலும்
      இப்படி பலர் அழைக்கப் படுவதுண்டு.
      5.குரான் வாசகங்களைப் பற்றிய சர்ச்சைகள் கூட இதில் எழுப்பப்பட்டன! நான் எப்படி அதில் கருத்து சொல்ல முடியும் நண்பரே?
      மேலும், நான் படத்தைப் பற்றியே பேசவில்லை. படம் எழுப்பிய விளைவுகளைத்தான் பேசுனேன்.
      மற்றபடி, உண்மையான கரிசனம் உங்கள் பார்வையில் நீலிக்கண்ணீர் என்றால், பெரும்பான்மை இனத்தை சார்ந்த சொந்தங்களிடமிருந்து வேகமாக
      விலகிச் செல்கின்றீர்கள் என்று பொருள்!
      6.நான் எனது கட்டுரையில் சொன்னது போல முஸ்லீம் சமுதாயத்தில் எல்லோரும் இப்படி நினைக்க வில்லையே? எனக்குத் தெரிந்த பல இஸ்லாமிய நண்பர்கள், இந்தப் படத்தில்
      ஆட்சேபிக்கும்படியோ,இஸ்லாமியர்களை புண்படுத்தும்படியோ அப்படி எந்த காட்சியும் இல்லை என்றுதானே சொல்கிறார்கள்! அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அனுப்பி வைக்கட்டுமா?
      மேலும், இந்தியா முழுதும், எந்தக் காட்சிகளும் ஒலிகுறைப்பு செய்யப்படாமல் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே? ஆட்சபத்திற்குரிய காட்சிகள் இருந்தால்
      பிற மாநில இஸ்லாமிய சகோதரர்கள், குறிப்பாக தென்மாநில இஸ்லாமிய மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
      (உங்களை புண்படுத்த இதை குறிப்பிடவில்லை! உண்மையாகவே,தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்! பிற மாநில இஸ்லாமிய மக்கள் ஏன் இப்படத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு எனக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்!)
      7.கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த மிரட்டல்களுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று அவர் துறை சார்ந்த பத்திரிக்கை, ஊடக நண்பர்களைத்தான் கேட்டேன்.
      அதற்கு, நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள். “இஸ்லாம் இன மொழி சார்ந்ததல்ல! கொள்கை சார்ந்தது” என்று.
      திருமறை அரபியில் இருக்கலாம்.
      பைபிள் அராமிக் மொழியில் இருக்கலாம்.
      கீதை சமஸ்கிருதத்தில் இருக்கலாம்.
      ஆனால், மூல நூல்களுக்கு மதிப்பளித்து, அதே நேரத்தில் நம் தாய்மொழியில் படித்து, புரிந்துகொண்டு அதன்படி நடப்பதல்லவா
      தமிழர்தம் நாகரீகம். நம் மொழியல்லவா நம்மை எல்லாம் ஒன்றிணைக்கிறது!
      மனிதன் என்பதற்க அடையாளமே சிந்திப்பதுதானே? அப்படி, நம்மை சிந்திக்க வைக்கும் நம் தாய்மொழியை நாம் எப்படி கொள்கைக்காக புறம் தள்ளலாம்?
      நண்பரே! உங்கள் கொள்கையை நான் மதிக்கிறேன். இஸ்லாம் போற்றுதலுக்குரிய உலகளாவிய மதம் என்பதையும் நான் அறிவேன்.
      ஆனால், இனமும், மொழியும் வேறு என்று எண்ணி, எங்களையெல்லாம் விட்டு தனிமைப்பட்டு போய்விடாதீர்கள்.
      நமது முன்னோர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
      குறிப்பு: நம் இருவருக்கும் நேரடி அறிமுகம் கிடையாது. இருந்தும் கூட எனது கட்டுரையை ஏற்க மறுத்து கருத்து தெரிவிப்பதும்,
      நான் அதற்காக உங்களுக்கு விளக்கம் அளிப்பதும்கூட, நாம் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கும், நமது நீண்ட பண்பாட்டின் தொடர்ச்சிதான்.
      உங்களுடன் உரையாடியதற்கு மகிழ்ச்சி.
      மீண்டும் சந்திப்போம்.
      அன்புடன்,
      கருணாநிதி.

      1. படுகொலைகள்,கலவரங்கள்,பூகம்பங்கள் இவற்றால் பாதிக்கப் பட்டோர் கண்டு இரங்குவதற்கும், ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களின் மீது தவறான புரிதலை ஏற்படுத்துதல் மூலம் பரபரப்பான சினிமா வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுக்கு இரங்குவதற்கும் வித்தியாசம் இல்லையா?
        அதைத் தான் தன் மீது இரக்கம் ஏற்படும் அளவு தன்னைத் தாழ்த்திக் கொண்டது கமலின் தந்திரம் அதற்கு கண்ணீர் வடித்தது உங்களைப்போன்ற அப்பாவி இரசிகர்கள் என்று கூறினேன்
        படப்பிரச்சினையில் திருக்குர் ஆன் சம்பந்தமாக அதன் நம்பிக்கை கொண்டோரின் மன வருத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறுவது , திருக்குர் ஆனுக்கு புது விளக்கம் கூற கூப்பிட்டது போல் பதில் எழுதியிருக்கிறீர்கள்
        உங்கள் கருத்துப்படியே முஸ்லிம்களில் சிலர் ஆட்சேபிக்க வில்லை என்று வைத்துக்கொண்டால் , ஆட்சேபிப்பவர்கள் தரப்பின் நியாயம் புரம் தள்ளப்படவேண்டுமா?
        திரையிடப்பட்ட பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டது எல்லாருக்குமே தெரியும். தமிழகத்தில் எப்படி இது நாள் வரை ஒருசமூகம் தவறாக சித்தரிக்கப் படுவதையும், அதன் விளைவுகளும் கண்டு உள்ளத்தில் வேதனைப்பட்டு அது ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளதோ அச்சூழல் பிற இடங்களிலும் மனதளவில் குமுறலோடும் வெளிப்படுத்தும் சூழல் எதிர்பார்த்தும் மனம் நோகித்தான் இருக்கிறார்கள் களத்திற்கு வரர்ததால் ஆதரவு என்றில்லை
        மனுஷ்ய புத்திரன் எனும் ஊடகவியலாளருக்கு அத்துறையைச் சார்ந்தவர்கள் ஏன் ஆத்ரவு த்ரவில்லை என்று மட்டும் கேட்டிருந்தால் என் பதில் தவறுதான்,
        ((எனக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே பெரிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு ….)) என்ற வரிகளுக்குத்தான் எனது பதில்பொருந்தும்
        அதோடு தமிழ் புறந்தள்ளப்பட்டது போல எழுதியிருக்கிறீர்கள். உலகிலேயே எல்லாமொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு அவரவர் தாய்மொழியில் திருக்குரான் க்ருத்துக்களை உள்வாங்கித்தான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் அதில் தமிழ் பேசும் உல்க முஸ்லிம்களும் அடக்கம். இஸ்லாத்தில் இன் மொழி நிற பாகுபாடுகளும் கண்மூடித்தனமான ஆதரவும் கிடையாது அதே நேரம் அவரவர் மொழியை நேசிப்பதற்கு எதிர்ப்புக் கிடையாது
        மொழியால் தமிழனாகவும், இனத்தால் திராவிடனாகவும், தேசத்தால் இந்தியனாகவும், கொள்கயால் முஸ்லிமாகவும் வாழ்வதில் உங்களைவிட்டு எப்படி தனிமைப்படுவோம்
        மனுஷ்யபுத்திரனைப்பற்றி நீங்கள் எழுதிய வரிகளை எடுத்துப்போட்டு தங்களின் link தரப்பட்டுள்ளதால், அதுபற்றிய பொது நல பார்வைக்காகவே இங்கு கருத்துப்பதிய வந்தேன் .. நன்றி!

  10. @jeeva natarajan
    வானம் படம் இஸ்லாமியர்கள் தரப்பு நியாயத்தைச் சொன்ன படம். அது ஆர்.எஸ்.எஸ். காரர்களின் தோலுரித்த படம். இதை ஏன் இஸ்லாமியர்கள் எதிர்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? வானம் குறித்தும் தெரியாது. விஸ்வரூபம் குறித்தும் தெரியாது என்றால் எதற்கு கருத்திட வேண்டும்?
    எந்தப் படத்தையும் சர்ச்சைக்குள்ளாக்கினால் லாபம் படத்தைத் தயாரித்தவருக்குத்தான் என்று குழந்தைக்குக்கூட தெரியும். இதனால் இவர்கள் கண்ட லாபம்தான் என்ன? ஒன்றே ஒன்று உள்ளது. இனி இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்க தயங்குவார்கள். இது ஒன்றுதான் நடக்கும். இது ஒன்றுதான் லாபம். இதுதான் நோக்கமும் கூட. நீங்கள் குட்ட குட்டக் குனிய வேண்டுமா ஒரு சமூகம்?
    @கருணா
    பக்கா கமல் ரசிகராகவே பதிவு எழுதியுள்ளீர்கள். இதில் எந்த அரசியல் பார்வையும் வெளிப்படவில்லை. கமல்ஹாசனின் லாப நஷடக் கனக்கை நீங்கள் பார்ப்பது வியப்பாகத்ததான் இருக்கிறது. இஸ்லாமியர்களின் எதிர்ப்பை இப்படி தட்டையாக விளங்கிக்கொள்வது துரதிஷ்டவசமானது. கமல் நாட்டை விட்டுப் போனால் என்ன ஆகப் போகிறது? கிரீன் கார்டு கொடுத்து அமெரிக்கா வரவேற்கும். இங்கே எந்த இஸ்லாமியனுக்கும் வீடு கிடைப்பதில்லை. பாரதிபுத்தகாலயம் சிராஜிடம் கேளுங்க. ஒரு வீடு கிடைக்க அவர் பட்ட பாட்டை. ஏதோ கமல்ஹாசன் வீடு போகப் போகிறதென்றவுடன் இத்தனை துயரம் என்று எழுதுகிறீர்கள். ந்லல்து. ஆனால் இந்த இஸ்லாமியர்களை நினைத்துப் பார்தால் உங்களால் கமலுக்கு இப்படி ஒரு சராசரி ரசிகர் போல ஆதரவு தெரிவிக்க முடியாது. உங்கள் கட்டுரை மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.

    1. நண்பர் கவின் மலர்,
      நான் கமல் ரசிகன் என்பதைத்தான் கட்டுரையிலேயே பலமுறை சொல்லியிருக்கிறேனே!
      கமலின் லாப, நட்டக் கணக்கை மட்டுமல்லாமல், இது தொடர்பான மற்ற பலரும், பெற்றது என்ன? இழந்தது என்ன? என்றுதான் எனது பார்வையில் எழுதியுள்ளேன்.
      இந்த இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைப்பது ஒரு போராட்டமாக இருக்கிறது என்பதைப் பற்றி விரிவாக நிச்சயம் பேச வேண்டும். அதற்காக, அவர்கள் தரப்பின் நியாயங்களை
      பிற சமூக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன்.
      அதை யார் செய்ய வேண்டும்?
      ஒரு திரைப்படத்தைப் பற்றி மேலோட்டமாக கட்டுரை எழுதும் என்னைப் போன்றவர்களா?
      அல்லது
      தனது சமுதாயத்திற்காக எதையும் செய்வோம் என்று பொங்கி எழுந்து போராடினார்களே
      அந்த இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களா?
      இதுநாள் வரை இந்தப் பிரச்சனையை இவர்கள் வேறு எங்காவது சொல்லி, இதற்கு தீர்வு கோரியுள்ளார்களா?
      அதை நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா?
      பல விஷயங்களை பொதுவெளியில் பேச ஆயாசமாக உள்ளது!
      தமிழகத்தில்தான் சினிமா படம் எடுப்பதும், இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைப்பதற்கும் தொடர்பு படுத்தப் படுகிறது.
      பிற, மாநிலங்களில் எல்லாம், இந்தப் பிரச்சனை அவர்களுக்கு இல்லையா?
      இது தொடர்பாக, நாம் தனியாக பேசலாம், எழுதலாம்.
      ஆனால், இந்தக் கட்டுரை ஒரு திரைப்படத்தின் வழியே உருவாக்கப்பட்ட அரசியலைப் பற்றி.
      வீட்டை கட்டி இஸ்லாமியருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளவன்
      என்ற முறையில்,
      அன்புடன்,
      கருணாநிதி.

  11. சுதந்திர போராட்ட தியாகி கமலஹாசன் நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு….. நாட்டு தலைவர்களும் சமுக அக்கறையுள்ள பத்திரிக்கையாள்ர்களும் பெருங்கவலை….
    உதட்டோடு உதடும முத்தங்கள், பாப் டிஸ்கோ டான்ஸ், காந்தியை கொல்வதில் புதிய விளக்கம் என தமிழ் மற்றும் இந்தியாவின் பாரம்பறிய கலாச்சரத்தை உலக அளவில் பரப்பியும்,
    சொந்த மண்ணுக்கு போராடுபவர்களை திவிரவாதிகள் என்றும், அன்னிய மண்ணை ஆக்க்ரமிதித்திருக்கும் அமெரிக்காவை நல்லவர்கள் என புதிய கருத்து சுதந்திரத்தை உருவாக்கிய கமலகஹாசன் அவர்கள்,
    100 ரூபாய் 200 ரூபாய் டிக்கெட்டு கொடுத்து வாங்கியபிறகு, ரசிகனை முட்டாளாக்கி படத்தை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய அறிவார்ந்த புத்திகூர்மைக்கு அகிலஇந்திய ஊடகங்களும், சமுகமுன்னுரிமைவாதிகள் பாராட்டு….
    கோடிக்கணக்கான முஸ்லிம்கள் எதிர்த்து போராடினாலும், இலட்சகணக்கான முஸ்லிகள் கைதாவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கயை குறை கூறியும்,
    அதை ஏற்படுத்திய பிறகு கைதுகளும், தண்ணீர் பீய்த்து அடித்தும், லத்திசார்ஜ் பண்ணியும் ஏன் துப்பாக்கி சூடு நடத்தி தமிழகத்தை
    துக்கத்தில் ஆழ்த்தியேனும் விஸ்வருபம் ரிலிஸ் செய்தால்தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் கருத்துசுதந்திரம் பாதுகாக்கப்படும் என குக்குரல் எழுப்பிய மனுசபுத்திரர்கள், ரமேஸ்கிருஸ்ணாக்கள், கருணானிதிகளை, சமுகஉரிமையாளர்கள் இருகரம்கூப்பி பாராட்டுகிறார்கள்…..
    சுதந்திர போராட்ட தியாகி கமலஹாசன் அவ்ர்களுக்கு பாரதரத்னா எனும் விருது வழங்கப்படவேண்டும் என ரமேஸ்திவாரி போன்ற மத்தியாமைச்சர்கள் பிரதமரிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என நடுனிலைவாதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்….

    1. நண்பர் மொய்தீன்,
      ஒருவரை வசைபாடும் போது கூட, நல்ல வார்த்தைகள் கூறி வைவது தமிழர் பண்பாடு.
      எனது கட்டுரையையும், அதன் கருத்துகளையும் மொத்தமாக நிராகரிக்கிறீர்கள்.
      அதனையும் கூட, வெகு நயமாக, உயர்வு நவிற்சியில் எழுதியுள்ளீர்கள்.
      எத்தனை உயரிய பண்பு!
      வாழ்த்துகள்.
      (இதில் உள்ள பகடியை மிகவும் ரசித்தேன்.)
      அன்புடன்,
      கருணாநிதி.

  12. என் மனதில் தோன்றிய பல விதமான கேள்விகளுக்கு உங்களின் இந்த கட்டுரையில்
    நிறையவே பதில் கிடைத்தது. உங்களின் அதிகமான வேலை சுமையிலும், இந்த கட்டுரையை மிக நேர்த்தியாகவும்
    சுவாரஸ்யமாகவும் , வடித்திருப்பது, நீங்கள் கமலின் மீது கொண்டுள்ள அன்பையும் நேசத்தையும் காட்டுகின்றது.
    இதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இது போன்ற சமூக சிந்தனைகளை நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்
    என்ற வேண்டுகோளையும் பதிவு செய்து கொள்கிறேன்.
    நன்றி வாழ்க வளமுடன்!!!!!!

  13. sir
    your calculation about Tamilnadu police so good
    the same time state chief minister was try to prove his situation for one film and actor
    so in tamilnadu one top most actor can do scarred the chiefminister

  14. the way in which you have written this article is astonishing.Being an engineer and chairman of an engineering college,you have proved that you are an literarian also.keep up this good work and keep on writing these kind of valuable articles. all the best for your future endeavours

  15. கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை
    அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
    ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
    ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
    தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்
    அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்

    1. நண்பர் ஹாலித் மா,
      உண்மை. இது அமெரிக்கர்களை கவர,அமெரிக்க பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.
      ஒரு சில டெக்னிகல் விஷயங்களுக்காக இந்தப் படம் தமிழில் பேசப் படுமே தவிர இதன் கதையம்சத்திற்தாக அல்ல.
      கருத்துக்கு நன்றி.
      அன்புடன்,
      கருணாநிதி.

  16. 360 டிகிரி பார்வை ! அனைத்து தரப்பையும் ஒரு பதிவில் கொண்டுவந்துவிட்டீர்கள். உங்களுடைய வலைப்பூவில் ஒரு ‘ஜெம்’ ஆக ஜொலிக்கப்போகும் பதிவு !!!

  17. சிறந்ததொரு கட்டுரை. சிறப்பான விளக்கத்தை அளித்துள்ளீர்கள். அதிலும் “நான் மிதவாதிகள் என்று எண்ணியிருந்த (தமிழ் மொழிபெயர்ப்பு சரிதானே?) எனது நண்பர்கள் சிலர் கூட, இத்தனை பொஸஸிவ் ஆக வெளிப்பட்டது எனக்கு ஆச்சர்யம் அளித்தது.” உண்மைதான் ஐயா. நான் இலங்கையைச் சேர்ந்தவன். ஊடகத்துறையைச் சார்ந்தவன். என்னுடன் இருந்த முஸ்லிம் நண்பர்களை இவ்வளவு காலமும் மதவாதிகள் அல்ல மிதவாதிகள் என்றே நம்பி பழகி வந்தேன். ஆனால், விஸ்வரூபம் அவர்களை வெளிச்சமிட்டு காட்டிவிட்டது. என்னதான் இருந்தாலும் நடிகர் கமலுக்கு நன்றி.
    மற்றொன்று மதவாதிகளிடம் நான் கேட்பது,
    இதுவரை முஸ்லிம் இனத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளை (தீவிரவாதிகள் அல்ல.) எந்தத் தமிழ் திரைப்படத்திலும் காட்டியதில்லையா? சரி… தலிபான்கள், அல்-குவைதா, லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் பயங்கரவாதிகள் இல்லையா? அவர்கள் என்ன போராளிகளா? முதலில் இந்த அமைப்பினரின் ஆரம்பத்தை அறிந்தால் புரியும். ஒசாமா பின்லேடன் ஏன் அமெரிக்கா மீது போர் தொடுத்தான் என்ற காரணத்தை அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்கா மீதான இவரின் சாகச தாக்குதலால் உரிமைகளுக்காக, தூய இலட்சியத்துக்காக போராடிய எத்தனை போராளிக்குழுக்கள் அழிவை சந்தித்தன.
    தயவுசெய்து உங்களது (மதவாதிகள்) செயற்பாடுகளால் நியாயமான கொள்கைகளுக்காக, இலட்சியத்துக்காக போராடும் அமைப்புகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

    1. உண்மைதான் ராஜேஷ்! இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின் உலகமெங்கும் இருக்கும் விடுதலைப் போராளிகளையும் கூட
      தீவிரவாதிகள் என்றக் கோணத்தில் அமெரிக்காவும், அதன் ஆதரவு அரசுகளும், சர்வதேச ஊடகங்களும் பார்க்க ஆரம்பித்து விட்டன!
      பல கடல் வழிகள் கண்காணிக்கப்பட்டு, விமான நிலையங்களின் சோதனைகள் இறுக்கப்பட்டு சர்வதேச சரக்கு போக்குவரத்தும்,
      சர்வதேச நாணய போக்குவரத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
      இதனால் மிகுந்த பாதிப்படைந்தவர்கள் விடுதலை புலிகள் இயக்கமும் ஒன்று.
      உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

  18. இன்ப அதிர்ச்சி உங்கள் எழுத்தைப் பார்த்து.நன்றாய் வந்த ஒரு பதிவு;வாழ்த்துகள்.உங்கள் அனுமானங்கள் இது சார்ந்த கருத்துகள் சரி.இந்த படத்தின் வழியாக மதவாதிகள் தவிர்த்து,படைப்பாளிகள் என்று நாம் அறிந்த சிலர் தம்மையும் இசுலாமியர் என்ற நோக்கில் உணர்ந்ததும் பேசியதும் அவர்கள் மனநிலையில் பிறழ்வு ஏற்பட்டதும் வருத்தம் தருகிறது.இதனை நாம் சரி செய்ய முயல வேண்டும்.

    1. நன்றாகத்தான் எழுதுகிறேன் போலும் என்று உங்களைப் போன்றவர்கள் பாராட்டும் போது எண்ணத் தொன்றுகிறது.
      மிக்க நன்றி.

  19. Very good Analysis. But one point was missing. In fact no one has touched this aspect. including you. On this issue though Kamal Hassan had many supporters and stiff opposition from many quarters, no one from the film industry raised their voice in support of Kamal Hassan.

    1. Why should we worry about this Dinesh?
      It is a problems between kamal and his industry!
      I am only concerned about the adverse effects created in the name of a Movie.
      that’s all.
      thank you for you comment.
      regards,
      karunanithi.

  20. Dear karuna,
    i like your views about the film. tell me frankly ,as a kamal fan do you appreciate the film? forget about the politics behind that.As a fan i didnt expect these type of movie from him.
    regards

  21. நேற்றே இரவே நான் எழுதிய் பின்னூட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் 4கவ்து நபராகக் க்ருத்து எழுதியிருந்தும் இதுவரை வெளியிடப்பட வில்லை

  22. எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இது போன்ற சமூக சிந்தனைகளை நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்
    என்ற வேண்டுகோளையும் பதிவு செய்து கொள்கிறேன்.

  23. தங்கள் வலை பூவில் விஸ்வரூபம் பற்றி கட்டுரை எழுதி இருந்தீர்கள் .சற்று நீளமான கட்டுரையாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஆய்வு செய்து எழுதியது சிறப்பாக இருந்தது .சிறந்த கல்வியாளர் மட்டும் இன்றி சிறந்த கட்டுரையாளராகவும் வளர்ந்து வருகிறீர்கள் .நன்று .
    -S.Nagarajan,
    AP/ECE

  24. The analysis was thought provoking. Great narration! I felt disturbed by reader’s comments. This is after all another movie which anyone who wish can watch else do not watch.
    Freedom of expression is what we have won from the imperialists, this we can not afford to loose at any cost. Kamal fought for this and won. Now Karuna is put on the same situation in his own site to express himself On what he thinks about a topic.
    He is humble enough to publish the counter arguments and answers them.
    Let us do dialogue not monologue please.

  25. அண்ணே , கட்டுரை அருமை எதன் அடிப்படையில் என்றால் நீங்கள் கமலின் ரசிகர் மற்றும் தொழில் ரீதியாய் விதைத்து அறுக்கும் “வலி” தெரிந்தவர் என்கிற ரீதியில் மட்டுமே. இப்பிரச்சினையில் முதலில் இசுலாமிய அடிப்படைவாதிகள் என அழைத்துகொள்வோர் மற்றும் அழைக்கப்படுவோர் ஆகியோரின் நிலைப்பாடும் செயலும் படுஅபத்தம். ஹாசன் என்று பெயரின் பின்பகுதி இருப்பதால் மட்டுமே நிர்வாணமாய் இரண்டு மணி நேரம் விமானநிலைய சோதனை அறையில் கமல்ஹாசனை நிற்கவைத்த அமெரிக்க அதிகாரிகளின் செயல் எவ்வளவு கண்டிக்கதக்கதோ அதற்கிடானதுதான் படம் வெளிவரும் முன்பே “அத நான் பார்க்கனும் “என இவர்கள் பிடித்த “சிறுபான்மை சண்டியும்”. இது சரியென்றால் அதும் சரியே !
    அடுத்ததாக கமலின் பேட்டியில் நானும் நெகிழ்ந்தேன், “நம்ம சனங்களுக்கு மூக்க சிந்திகிட்டே ஒட்ட குத்தினாத்தான் திருப்தி”என்று அமைதிபடையில் ஒரு வசனம் வரும் அது போல நாமளும் மூக்க சிந்திகிட்டு அப்புறம் யோசிச்சு பாத்த எம்பூட்டு லொள்ளு அந்த பேட்டியில தான் பிறந்தது ராமநாதபுர அரன்மனையில் என்கிற பெருமிதமும் அந்த ராஜவம்சத்துக்கு சொந்தமான இந்த வீடு கடனுக்கு போகப்போகிறது என்கிற ஆற்றாமையாலும் கடைசி பேட்டி என்றும் என்னனென்ன சென்டிமென்ட் சீன் ஓடியது. கொளத்து வேலைக்கு போயிட்டு வாங்கின சம்பளமெல்லாம் குடித்து சீரழிந்துகொண்டிருக்கும் சமூகம் குறித்தோ கவலையில்லாமல், பற்றியெரியும் அணு உலை பிரச்சினையில் மக்களின் நியாயம் பற்றியோ, இன்றுவரை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சுகுழி அடைக்கும் நம் பிள்ளைகளுக்கும் பேரர்களுக்கும் நாம் வீழ்ந்த கதையை மட்டும் விட்டுசென்ற ஈழத்துயரை பற்றியோ கிஞ்சிற்றும் கவலையில்லாமல் “உலகநாயகன் நான் பரதேசம் போறேன் ” என்று கண்ணீர் சிந்தியது உங்களைப்போலவே துவக்கத்தில் எனக்கும் நெகிழ்த்தியது .
    இன்னும் படம் குறித்தும் எழுதினால் நீண்டுவிடும் ஒரு பதிவினைப்போல.
    உங்களை “நம்மவர்”கமலஹாசன் என்று குறிப்பிட்டேன் நேரடியாக, காரணம் அந்த கதைநாயகனைப்போல காலத்திற்கு ஏற்ப இலகுதன்மையுடனும் இளமையாகவும் இருக்கிறது உங்கள் நிர்வாகம், நேர்மையான கருத்து இதுதான்.
    கமலின் படமும் சரி படத்திற்கு முன்பு நடந்த சிறுபான்மை சட்டாம்பிள்ளைத்தனமும் அபத்தம்

    1. செந்தில்,
      The Last Emperor என்றொரு படம். Bernardo Bertolucci இயக்கியது. 9 ஆஸ்கர் விருது வாங்கிய இந்தப் படத்தில்,
      ஒரு சின்ன பையன், தான் சக்ரவர்த்தியாக இருந்த அதே அரண்மனைக்கு ஒரு டூரிஸ்ட் கைடாக வேலை செய்ய வருவான். அவன்
      நாட்டை இழந்த சோகத்தை, அதன் காரணமான அரசியல் மாற்றத்தை, Bertolucci, அந்த அரண்மனை (வீட்டை) இழந்ததை
      வைத்துதான், கதையாக சொல்லியிருப்பார்.
      தான் வாழ்ந்த வீட்டை இழப்பதின் சோகத்தை,முழுமையாக அந்தத் திரைப்படத்தின் மூலம்தான் நான் உணர்ந்தேன். பின்னாளில்,
      பல படங்கள், குறிப்பாக படையப்பா படத்தில் சிவாஜிகணேசன் போன்றோர் அதே பொன்ற காட்சியில் நடித்து காட்டினாலும் கூட, என்னால் மறக்க முடியாதது
      அந்த சின்ன பையனின் முகம்தான்.
      கமல் வீட்டை இழப்பது நமக்கு ஒரு பிரச்சனையில்லைதான். ஆனால், உண்மையில் அதுதான் நம் எல்லோரின் மனதினையும் கரைத்தது.
      காரணம், நாம் பல ஆண்டுகளாக பார்த்து ரசித்த எந்த ஒரு உறவும், நட்பும் அந்த நிலைக்கு வருவதை நம் உள்மனம் விரும்புவதில்லை!
      கமல், அவரது சொந்த சோகத்தை சொல்லப் போக, தமிழ்நாடு முழுக்க மக்களின் அனுதாப அலைக்கு அதுவே காரணமாகிவிட்டது.
      அன்று இரவு, தமிழகம் முழுவதும் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரே விஷயம் அதுதான்!
      அந்த அனுதாப அலை கொடுத்த அழுத்தம்தான், முதல்வரே ஒரு தனிப்பேட்டி அளித்து நிலமையை சமாளிக்க வேண்டியிருந்தது.
      மற்றபடி, படத்தில் எனக்கும் பல விமர்சனம் உண்டு. நம்மை போன்றவர்கள் கமலிடம் எதிர்பார்ப்பது, அன்பே சிவம் போன்ற க்ளாசிக்குகளையும்,
      மை.ம.காமராஜன், பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம் போன்ற தரமான நகைச்சுவையையும்தான்.
      விஸ்வரூபம் வெறும் மசலாப் படம்!
      இவர்கள் எல்லோரும் சேர்ந்து அளித்த விளம்பரம், படத்தை பெரும் வெற்றிப்படமாக மாற்றி விட்டது. அவ்வளவுதான் விஷயம்.
      உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்திருந்தது மகிழ்ச்சி.

  26. arasiyal puyalum madhavaathanokkum anuthapa alaiyum visvarupathai parkkathudi
    vittana. illaiyandral padam anaivaraiyum irthuirukkaathu….

  27. தற்போது தான் உங்கள் பதிவை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, முதலில் இந்த பிரச்சனைக்கு மூலக்காரணமான சாட்டிலைட் உரிமத்திற்கான நிழல் யுத்தம் குறித்தும் சொல்லிருக்கலாம், துப்பாக்கி, விஸ்வரூபம் படத்திற்கும் வந்த பிரச்னை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருந்த வேலாயுதம் படத்திற்கு வராதது ஏன் என்று யோசித்தால் புரியும், ஒரு முஸ்லீமாக எனக்கு அந்த 24 அமைப்புகள் மீது தான் அதிக வெறுப்பு, இது போன்ற திரைப்படங்களை எதிர்க்கும் போது அதில் அவர்கள் அரசின் ஒரு கைப்பாவை போலவே செயல்படுகின்றனர், கமலும் இது போன்ற மசாலா குப்பையில் கவனம் செலுத்துவதை விட்டு 80,90களில் வந்த மகாநதி,புன்னகைமன்னன் போன்ற சிறந்த படங்களை தருவது தான் அவர் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்வதாய் அமையும்..நன்றி

  28. . //இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள். // இந்த வாசகம் ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது. தாம் நியமிக்கப்பட்டது தெரியாமல் வீணாகிப்போன தொண்டர்கள் அதிகம், அதைவிட இந்த நியமனத்தால் சீரழிந்தது நாடும் அதன் மக்களும்.
    என்ன தீர்க்கமான கட்டுரை.இந்த பொறுப்புணர்வும் சத்தியமும் அதிகாரத்தில் இருப்பவரிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குகிறது மனது.

    1. எனது வலைப்பக்கக் கட்டுரைகளை பொறுமையாக படித்துப் பார்த்து, அதற்கு பின்னூட்டமும் இடுவதற்கு மிக்க நன்றி.
      கருணா.

Comments are closed.