அ.முத்துலிங்கத்தின் பாராட்டுக் கடிதம்.

அ.முத்துலிங்கத்தின்

அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கத்தின் பாராட்டு
எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் மிகவும் முக்கியமான எழுத்தாளரும் கூட! அவரது கதைகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகளும் கூட உலகத் தரம் வாய்ந்தது. தமிழில் புதுப் புது சொல்லாடல்கள், கதை ஒன்றினை எங்கெங்கிருந்தோ துவக்கும் உத்திகள், பழந்தமிழ் கதைகளை, சம்பவங்களை மிக நாசூக்காக தன் கதையினுள் புகுத்தி, வாசகனை மேம்படுத்தும் குறும்புகள், தனது அனுபவங்களை சுய எள்ளலுடன் சொல்லிச் செல்லும் பாங்கு, என பல விஷயங்களை அவர் தொடர்ந்து செய்வதைக் கண்டு வியந்து வாசிக்கும் ஒரு வாசகன் நான்!
ஒரு முறை, எனது வலைப் பக்கத்தில் நான் எழுதியிருந்த நீரின்றி அமையாது உலகு என்ற கட்டுரையை பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அன்று நான் பட்ட சந்தோஷம் சொல்லி மாளாது! எனது தந்தை உயிரோடு இருந்து, நான் எழுதியதைப் படித்து,  ஒரு தலையசைத்திருந்தால் வந்திருக்குமே? அதற்கு ஈடான சந்தோஷம் அது!
முதன் முதலில் நான் சிறுகதை எழுதியதையும், அது ஆனந்த விகடனில் வெளி வரப் போவதையும் அவரிடம் சொல்லிப் பகிர்ந்து கொண்டேன்! ஆர்வ மிகுதியில்தான்!
அதற்கு, பாராட்டுத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல்! பின்பு, கதையைப் படித்து விட்டு ஒரு மின்னஞ்சல்! என ஒரு கதைக்கு இரண்டு முறை பதக்கம் அணிவித்து விட்டார்! எனது வாழ்நாள் சாதனையின் ஆதாரம் இது! வழக்கமான பின்னூட்டத்தில் இட்டு வைக்க மனதில்லை! தனியாக ஒரு பதிவாக இட்டு வைத்தால், வீட்டு வரவேற்பறையில், நாம் பள்ளிக்கூடத்தில் பரிசு பெற்ற புகைப் படத்தை மாட்டி வைப்போமே! அப்படி வரும் காலத்தில் இங்கு வரும், பார்வையாளர்களுக்கு காட்டி மகிழ வாய்ப்பாக இருக்குமே! என இங்கே பதிவிடுகிறேன்!
என்னுடன் இணைந்து, எனக்காக மகிழும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

நான் அவருக்கு எழுதியக் கடிதம்: 
மதிப்பிற்குரிய அ.முத்துலிங்கம் அவர்களுக்கு,
         இந்த வாரம் வெளி வந்த ஆனந்த விகடனில் நான் எழுதிய முதல் சிறுகதை, ‘சைக்கிள் டாக்டர்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.
இது நான் எழுதிய முதல் சிறுகதை!
அது ஆனந்த விகடனில் பிரசுரம் ஆனது கண்டு, திகைத்துப் போய் இருக்கிறேன்.
ஒரு வாசகனாக தமிழின் சில கதைகளைப் படிக்கத் துவங்கி, மெல்ல மெல்ல, பல சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்து,
இப்போது உங்கள் படைப்புகளில் உறைந்து நிற்கும் ஒரு வாசகன் நான்.
அவ்வப்போது, நான் எழுதும் சில கட்டுரைகளை நீங்கள் வாசித்துப் பாராட்டியதும், நான் எழுதுவதற்கு ஊக்கம் பெற ஒரு காரணமாகும்.
வாய்ப்பு கிடைக்கும் போது எனது ஆனந்த விகடன் கதையை படித்துப் பார்க்கவும்.
மேலும், இந்த கதை வெளிவந்த உற்சாகத்தில், ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளேன்,
நேரம் இருக்கும் போது படித்துப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.
இது அந்தக் கட்டுரைக்கான சுட்டி!
உங்கள் வாழ்த்துகளைக் கோரும்,
கருணாநிதி.கு
(எஸ்கேபி கருணா)

————————————————-

அன்புமிக்க பிரபல எழுத்தாளர் எஸ்.கே.பி.கருணா அவர்களுக்கு.
வணக்கம்.
ஆனந்த விகடன் கதையை இன்னும் படிக்கவில்லை. ஆனால் எனக்கே ஒரு விருது கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் கருணா.
நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சிறுகதைக்கும் கட்டுரைக்கும் உள்ள கோட்டை அழிக்க முயன்றபடியே எழுதிவந்திருக்கிறீர்கள். கட்டுரையாகத் தொடங்கியது சிறுகதையாக மலர்ந்துவிட்டது. எனக்கும் அப்படி பலமுறை நடந்திருக்கிறது. வருடக்கணக்கில் மற்றவர்கள் முயல்வார்கள். ஆனால் உங்களுக்கு தொடக்கத்திலேயே இப்படியான opening கிடைத்துவிட்டது. இனி என்ன வேண்டும்?
இன்னும் ஒன்று சொல்லவேண்டும். நீங்கள் தமிழை தேடிப் போகவில்லை. அது உங்களை தேடி வருகிறது. இயற்கையாக அப்படி அமைந்துவிட்டது.
சில நல்ல கதையையோ கட்டுரையையோ பார்க்கும்போது ‘ஓ இப்படியெல்லாம் எழுதுகிறார்களே. நான் எழுதி என்ன பிரயோசனம். நிறுத்திவிடுவோம்’ என்று நினைப்பேன். பின்னர் இப்படி எண்ணுவேன். பெரிய ஆலமரம் உள்ள காட்டில்தான் சிறு புல்லும் இருக்கிறது. அது அதற்கு ஓர் இடம் உண்டு. பெரிய எழுத்தாளர்கள் எழுதுகிறார்களே இப்படியெல்லாம் சொல்கிறார்களே என்றெல்லாம் நினைக்கவேண்டாம்.
உங்கள் இடம் நிச்சயமாகிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ஆ.வி கதையை படித்தவுடன் மீண்டும் எழுதுவேன்
அன்புடன்
அ.முத்துலிங்கம்
————————————————————————–
அன்புள்ள கருணா
வணக்கம்
இன்று காலை 20 மைல்தூரம் சென்று ஆ.விகடன் வாங்கி வந்தேன், உங்கள் கதையை படிப்பதற்காக. முதல் வேலையாகப் படித்தேன். அதிசயிக்க வைத்தது. கட்டுரையாகத் தொடங்கி சிறுகதையாக எழுதியதை நம்பமுடியவில்லை. முற்றிலும், வடிவத்திலும் சொல்முறையிலும் சிறுகதையாகவே பரிணமித்திருக்கிறது.
பல்வேறு சாகசத்தால் நிரப்பித் திரிந்தவன் , வீடும் மனசும் வெறுமையாக இருந்தன’ அருமையான ஆரம்ப வரிகள். அதுவே சிறுகதைக்கு அழகான setting அமைத்துவிட்டன.
ஆங்கிலத்திலேயோ தமிழிலேயோ நான் முன்பு எப்பவுமே படித்திராத புதுவிதமான கருவை உள்ளடக்கிய சிறுகதை. ’எப்படி முடியும், எப்படி முடியும்’ என்று ஆர்வமாகவும் வேகமாகவும் வாசித்துக்கொண்டு போனபோதும் முடிவை ஊகிக்கவே முடியவில்லை. சிறுகதையில் வெற்றி construction கட்டுமானம் என்று சொல்வார்கள். அதில் முழு வெற்றி கிடைத்திருக்கிறது. ‘தினமும் வீட்டுக்கு அழைத்து கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த’ காரணத்தை சொல்லியிருக்காவிட்டாலும் கதை புரிந்திருக்கும். வாழ்த்துக்கள்.
அன்புடன்
அ.முத்துலிங்கம்

 
 
 
 
 
 
 
 

2 thoughts on “அ.முத்துலிங்கத்தின் பாராட்டுக் கடிதம்.

  1. வசிஷ்டர் வாயாலயே பிரம்மரிஷின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இருக்கு இந்த பாராட்டு. இன்னும் நிறைய எழுதுங்கள் – எங்களுக்கு கதைகளும், உங்களுக்கு பாராட்டுகளும் குவியட்டும் – வாழ்த்துக்கள் சார் !!!

  2. ஐயா அ.முத்துலிங்கம் அவர்களின் பாராட்டு பல இலக்கிய விருதுகளைவிட மேலானது, வாழ்த்துகள் அண்ணா…

Comments are closed.