உயிர் நீர்

உயிர் நீர்

 
வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரும் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் இடையேயான வெளிச்சம் மட்டும் மங்காமலேயிருந்தது.
பகல் இன்னமும் முடியவில்லை என பறவைகள் கூட்டுக்குத் திரும்பாமல் தனது இரையைத் தேடிக் கொண்டிருக்க, இரவு கவிழத் துவங்கி விட்டதென ஓநாய்களும், சிறுத்தைகளும், தனக்கான வேட்டையைத் தேடி நிலமெங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்தக் காட்சி தேர்ந்த வேடனுக்கும் மிகுந்த அச்சமூட்டுபவையாக இருந்தது.
சூரியன் இல்லை. நிலவு இல்லை. மேகங்கள் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. ஆதலால் வானம் என்ற ஒன்றும் இல்லாமலே இருந்த காட்சி மக்களுக்கு மரணத்துக்கு பிறகான தனது ஊழ்வினை போல காட்சியளித்தது. கேள்விகளின் பாரம் தாங்காமல் மக்கள் அனைவரும் திரண்டு சென்று வியாச முனிவரிடம் முறையிட்டனர்.
தர்மத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு, இந்த உலகம் இதுவரை காணாத ஒரு பெரும் போர் நடக்க இருக்கிறது என்று சொன்னார். எதன் பொருட்டு என்று மீண்டும் ஒரு முறை கேட்டனர் அந்த வார்த்தையின் கனம் அறியாத அம்மக்கள் . வனம் புகுந்து திரும்பி வந்தால் மீண்டும் அவர்களுக்கான இராஜ்ஜியத்தை அளிப்பதாக சொன்ன துரியோதனன், இப்போது அதனை பாண்டவர்களுக்கு அளிக்க மறுப்பதால் இந்தப் போர் என்றார் வியாசர்.
வாக்கைக் காப்பாற்றாமல் போவனதற்காகவா இயற்கையை அழித்து இத்தனை பெரிய போர் என்று அந்த எளிய மக்கள் திகைத்து நின்றனர். தர்மத்தை அழிப்பதற்கான முதல் அம்பு அல்லவா வாக்குத் தவறுதல் என்றார் மாமுனி. குவியும் படைகளுக்காக உங்கள் பயிர்களையும், கால்நடைகளையும் அப்படியே விட்டு விட்டு நீங்கள் சென்று காட்டினுள் புகுந்து கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களில் பாரதப் போர் என்றார்.
 
தொலைவினில் இருக்கும் துவரகாவில் ஆண்கள் யாருமற்று தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கொண்டிருந்தது. போருக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறான் கண்ணன் என்றனர் துவராகவின் மாளிகைக் காவலர்கள். இன்று அவனை சந்தித்தே தீர வேண்டும் என்னும் பதைப்புடன் வருணன் வெளியில் காத்துக் கொண்டிருக்க, பாலின் பெரும் சுகந்தம் ஏதும் காற்றினில் இல்லாமல், கோகுலாபுரி தனது அடையாளத்தை முற்றிலுமாக இழந்திருந்தது.
வெளியே வந்த கண்ணன் முதலில் கண்டது வருணனைதான். அவைக்குள்ளே அழைத்து அவன் வந்திருப்பதின் காரணம் கேட்க, பஞ்ச பூதங்களின் சகல இயக்கங்களையும் நிறுத்தி வைக்க இந்திரனுக்கு உத்தரவிட்டிருப்பதன் பொருள் என்னவென்று அறிந்து கொள்ளலாமா? என்றான்.
நீ மழைக்காமல் இருக்க வேண்டிய காரணம் எதுவென்று மட்டும் சொல்கிறேன் கேள் என்றான் கண்ணன்.
ஏனென்று வருணன் கேட்க, போரிட உலர் நிலம் வேண்டாமா? என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான்.
இது வரை இப்படி நடந்ததில்லையே கண்ணா? மழை இல்லாமல் ஆறுகளுக்கு எப்படி நீர் வரும்?
போரின் குருதி பெரும் புனலாய் மாறி பொங்கி வரும். கவலை விடு வருணா!
காடுகளுக்கு, மலைகளுக்கு?
போரிடும் வீரம் சொரிந்த படை வீரர்களின் வியர்வைத் துளிகள் அக்குறையை போக்கி விடுமே!
வீடுகளில் பசித்து அழும் குழந்தைகளுக்கு உணவு சமைக்க, சமையல் பாத்திரங்களை நிரப்பவேனும் மழை நீர் வேண்டாமா கண்ணா?
தனது தகப்பனை, சகோதரனை, ஆருயிர் கணவனை இழந்து பெண்கள் ஆறாய் வடிக்கும் கண்ணீர் இருக்கும் வரை இனி ஒரு யுகத்துக்கு அந்த கவலை வேண்டாம் உமக்கு என்றான்.
திகைத்து நின்றான் வருணன். தருமத்தின் இறுதிப் போரில் எனக்கான இடமே இல்லையா கண்ணா என்றான்.
போர் என்பதே அதர்மம்தானே! அதர்மம் தழைக்கும் எந்த இடத்திலும் உனக்கான தேவை இல்லை வருணா. இந்த யுகத்தின் நோக்கம் தர்மம். நோக்கமில்லாமல் வாழ்வதற்கு மனித இனம் அனுமதிக்கப் படவில்லை இன்னும். மேலும் சொல்கிறேன் கேள்!
வருணா! பொய்க்காமல் நீ பொழியும் மழையால் ஆறாக, குளமாக பெருகி அதில் வரும் நீரால் உயிர் வளர்க்கும் இந்த இனம் தர்மத்தின் பாதையிலிருந்து விலக விலக, நீ மழைப்பதை குறைத்துக் கொண்டே வருவாயாக.
ஒடிச் செல்லும் நீரை அள்ளிக் பெருகும் கைகள், அதர்மம் தலை தூக்கும் காலங்களில் தேங்கிக் கிடக்கும் நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் குடிக்கும் காலம் வரும். சமவெளிகளை விட்டு பயிரிட மேடுகளையும், மலைகளையும் தேடி மனிதர்கள் ஓடுவர். தண்ணீருக்காக பூமியின் பாறைப் பிளவுகளை குனிந்து நோட்டமிட்டுக் கொண்டு, தம் வாழ்நாளை கழிப்பதே இனி மனிதர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது.
தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும். அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரே தீர்மானிக்கட்டும்.
தகுதியில்லாத மனிதன் அடையும் புகழ் எப்படி ஒரு புகையைப் போல நிலைக்காமலிருக்குமோ அப்படியே தர்மமில்லாத மனிதனுக்கு கிடைக்கும் நீரும் ஆகட்டும்.
வருணா! இனி, யுகம் யுகமாக, உனது கடமை தவறாமல் பூமியெல்லாம் நீ பொழிந்து வந்த நீர் வெறும் மழை நீர் அல்ல. இனி அது அவர்கள் வாழ்வின் உயிர் நீர்!!
மெய் சிலிர்த்துப் போன வருணன், பின்னகர்ந்து பவ்யமாக சர்வம் கிருஷ்ணார்ப்பணம்என்றான்.
போருக்கு ஆயுத்தமாக பார்த்தனின் சங்கொலி அப்போது அண்ட வெளியெங்கும் ஒலித்தது.
 
 
 

11 thoughts on “உயிர் நீர்

  1. //ஒடிச் செல்லும் நீரை அள்ளிக் பெருகும் கைகள், அதர்மம் தலை தூக்கும் காலங்களில் தேங்கிக் கிடக்கும் நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் குடிக்கும் காலம் வரும். சமவெளிகளை விட்டு பயிரிட மேடுகளையும், மலைகளையும் தேடி மனிதர்கள் ஓடுவர். தண்ணீருக்காக பூமியின் பாறைப் பிளவுகளை குனிந்து நோட்டமிட்டுக் கொண்டு, தம் வாழ்நாளை கழிப்பதே இனி மனிதர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது.//
    கருணா, உங்கள் மனம் போன பாதையை தொடர முடிகிறது , கதை அல்லது இந்த பகுதியின் கரு உண்மையில் பிரமாதம் , நீரை மட்டுமல்ல , வேறுபலவற்றையும் பொருத்திக்கொள்ளலாம்,
    (சிறுகதை என்ற வடிவுக்குள் இது வரவில்லை எனினும் முதல் புனைவு என்றவிதத்தில் மகிழ்ச்சி )
    3 மாதத்திற்கொன்றுதான் எழுத உத்தேசமா ? :)

  2. அருமையான நடை . அற்புதம்! தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்

  3. சார் உங்களுடைய இந்த சிறுகதை ரொம்ப நல்லா இருக்கு, தமிழ் இலக்கியத்தில் இதுவரைக்கும் புராணக்கதைகளை மையமாக வைத்து அந்த சட்டகத்திற்குள்ளே நின்று நிறைய புனைவுகள் எழுதியிருக்கிறார்கள். அந்த புனைவுகளை நாம சில வகைகளாக பிரித்துவிடலாம் 1. அந்த கதையை அல்லது கதா பாத்திரங்களை சமகால அறிவைக்கொண்டு விமர்சனம் செய்வது கேள்வி கேட்பது, 2. அந்த கதைகளை வைத்து சமகால வாழ்வியல் அறம் சார்ந்து பேசுவது, 3. புராணக்கதைகளை அப்படியே அந்த கதைகளாகவே கூறுவது 4. அந்தக் கதைகளைக்கொண்டு மத பரப்புரை செய்வது, 5. அந்த கதைகளுக்குள் எழுத்தாளன் நின்று விவரணைகளின் மூலமாகவும், அவனது மன ஓட்டத்தையும் புகுத்தி எழுதுவது இப்படி சொல்லிகிட்டே போகலாம், நீங்கள் இந்த புனைவில் சம கால மனித அவலத்தை அவனது குரூர எண்ணத்தால் செயலால் சந்திக்கும் நெருக்கடிகளை பேசுவதால் நிச்சயமாக இங்கே மகாபாரதம் மறைந்து, கிருஷ்ணனின் உரை மறைந்து எழுத்தாளராக நீங்கள் ரூபம் கொள்கிறீர். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய அதர்வம் சிறுகதையை இந்த உயிர்நீர் தாண்டிவிட்டது. ஜெ.மோவின் அதர்வம் ஒருவகையில் அது வெறுப்பை விதைக்கக்கூடிய புனைவு. இழைக்கப்பட்ட அவமானத்திற்கு பழிதீர்ப்பது அதற்காக எவ்வளவு பெரிய பயங்கரத்தையும் உருவாக்கலாம் என்பதை நியாயப்படுத்துவது. ஆனால் உங்களுடைய புனைவு மனித இனம் தர்மம் பிறழும்போது சந்திக்க நேரிடும் பயங்கரத்தைக் குறித்து எச்சரிக்கை செய்வது… நிச்சயமாக ஜெ.மோ.வை தாண்டிவிட்டீர்கள். ஆனால் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று முடிக்கும்போது வைதீகத்தின் குரலாக மாறி இந்த புனைவின் உச்சம் சரிவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை… நீங்கள் ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்று யாராவது கேட்கும்போது, வாசகன் வாசகனாக மட்டுமே இருந்து விட்டால் தமிழ் இலக்கியச் சூழலில் நிறைய பரமார்த்த குருக்கள் தோன்றிவிடுகிறார்கள்… நிச்சயமாக உங்களுடைய இந்த புனைவு உச்சம்தான்…

    1. பாலாஜி! முதலில் எனது இந்தக் கட்டுரை ஒரு சிறுகதை வடிவில் அமைந்திருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. புனைவு என்பதனால், வேறு பிரிவில் சேர்க்க இயலாமல் இதை சிறுகதை என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
      ஜெயமோகன் எழுதிய சிறுகதையுடன் இதை ஒப்பிட்டு, இதுவே அதைக் காட்டிலும் சிறந்தது எனச் சொல்வது ரொம்ப ஓவர்!
      கடைசியாக ‘சர்வம் கிருஷ்ணார்ப்பனம்’ என்னும் வார்த்தையில் இத்தனை அரசியலை நான் எதிர்பார்க்கவில்லை. வருண பகவான் கிருஷ்ணரின் ஒரு கட்டளையை அப்படி சொல்லித்தான் ஏற்றுக் கொண்டிருப்பார் என்பது எனது அனுமானம்.

  4. அன்புக்குரிய கருணாவுக்கு,
    போர் தர்மம் நம்க்குப் புகட்டும் பாடம். இந்திய இதிகாசத்திலிருந்து மிக அற்புதமான காட்சியை உருவாக்கியிருக்கிறிர்கள். மகாபாரதம் எல்லாவிதமான தத்துவவிசாரங்களுக்கும் இடம் கொடுக்கும் அற்புதமான காவியம். உண்மையில் காலம்தோறும் மகாபாரதம் உருவாக்கப்பட்டதே இப்படியாகத்தான். கிளைக்கதைகள், கிளைக்கதையில் கிளைக்கதை என்று விரியும் எண்ணிறந்த கதை முடிச்சுகளை உடையது. எந்தக்காலத்துக்கும் பொதுவான ஒரு தத்துவம் இருக்கவே முடியாது என்பதை அதுதான் முறியடிக்கிறது. ஏனென்றால் அதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் புதுப்பித்து வந்திருக்கிறார்கள். தொன்மமும் நவீனமும் அதில் பின்னிக் கிடக்கிறது. அந்த மகாகாவியத்தில் நீங்கள் சில வசனங்களைச் சேர்த்திருக்கிறீர்கள்.

    1. முழுக்க முழுக்க உண்மை. நான் மீண்டும் மீண்டும் படித்த, படிக்க விரும்பும் கதைகள் எல்லாமே பாரதக் கதைகள்தான். நமது நாட்டின் உண்மையான பொக்கிஷம் என நான் கருதுவதும் இந்த இதிகாசங்களைத்தான். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

  5. அன்புள்ள கருணா,
    சில வரிகள் மிக அருமையாக வந்துள்ளன.
    ”போர் என்பதே அதர்மம்தானே! ”
    “தர்மத்தை அழிப்பதற்கான முதல் அம்பு அல்லவா வாக்குத் தவறுதல்”
    கதை காப்பியத்திலிருந்தல்லாது ஒரு நாட்டார் கதையிலிருந்து, நாட்டார் நம்பிக்கையிலிருந்து எழுந்ததைப்போலிருக்கிறது. அதாவது ஒரு தர்மம் தழைக்காத இடத்தில் மழை, நீர் கிடைக்காது என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் காப்பியம் பேசும் அறங்கள் இந்த எளிய நம்பிக்கைகளை தாண்டிச் சென்றுவிட்டவை. ஆகவே உங்கள் கதைக்கு ஒரு எளிய நாட்டார் கதையின் தன்மை உள்ளது. வசனங்களில் உள்ள நாடகத்தன்மை சில பழைய புராணப் படங்களை நினைவுறுத்துகிறது. ஆனால் தமிழில் பழங்கதைகள் இவ்வாறே எழுதப்படுகின்றன என நினைக்கிறேன். ஊர் பேச்சுவழக்கில் இதை எழுதியிருந்தால் இன்னும் கச்சிதமாக வந்திருக்கலாம். ஏனென்றால் ஒரி எளிய தத்துவத்தைச் சொல்ல எளிய மொழி போதுமானது.
    அரங்கர் சொன்னதைப்போல நல்ல முதல் முயற்சி.
    துவக்க பத்தி கொஞ்சம் தேய்வழக்கு பிரயோகங்களைக் கொண்டுள்ளது எனத் தோன்றியது.
    ”வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. ” மிகச் சாதாரண துவக்கம் என்றே நினைக்கிறேன்.

  6. சார், மிகவும் அருமையான புனைவு. தொடர்ந்து எழுதுங்கள்.
    அன்புடன்
    சிவராமன்
    சவுதி
    ரியாத்

    1. மிக்க நன்றி. வெகு தூரத்தில் இருக்கும் ஒருவர் என்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் சற்று பயமாகவும் இருக்கிறது.

  7. Dear Mr. Karuna,
    The message comes across very powerful in your writing!!!
    I am amazed with the way you have beautifully connected the present with the past. It brings out the challenges Earth is facing now and how our own actions create our reality!!!
    This is like a wake-up call for everybody – and you have done this with the beauty of simplicity and wisdom. With your words you urge everybody to re-think their choices in the light of Dharma.
    Thankyou, I loved reading and re-reading your work!!!
    Tulsi

Comments are closed.