கருப்புக் கொடி

கருப்புக்கொடி

கருப்புக் கொடி
அது 86ஆம் வருடம்! நவம்பர் மாதம் என்று நினைவு!

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை!

பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்து இறங்கி, நேராக எம்.ஜி.ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோகாரர் கே.சி.தாஸ் (ரசகுல்லா கடை) அருகிலேயே இறக்கி விட்டு சென்று விட, காலாற நடந்து பிரிகேட் ரோடின் (தற்போதைய கேஃப்சி எதிர் தெரு) முனையில் திரும்பும் போதுதான் கவனித்தேன். தெருவே வெறிச்சோடிப் போயிருந்தது. எங்குப் பார்த்தாலும் போலீஸ் காவல்! என்ன நடக்கிறது என்று சுதாரித்துக் கொள்வதற்குள், எனக்கு அருகில் இருக்கும் ஒரு கடையில் (அது ஒரு பெரிய பொம்மைக் கடை) இருந்து ஒரு தம்பதி வெளியே வந்தனர்.

இவரை நமக்குத் தெரியுமே? என்று யோசித்தவுடனே நினைவுக்கு வந்து விட்டது! அது அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனேவும், திருமதி ஜெயவர்தனேவும்! அவர்களுக்கு, நான் ஒற்றைக் கையால் வணக்கம் வைக்க, தங்கள் இருக் கரங்களையும் கூப்பி, தம்பதியர்கள் எனக்கு வணக்கம் வைத்து விட்டு, என்னைக் கடந்து சென்றனர். அத்தனை அருகில் ஜெயவர்தனேவைப் பார்த்ததில் திகைத்துப் போன நான், எனது தோளில் மாட்டியிருந்த பையை கழற்றி, உள்ளேயிருந்த நோட்டை எடுத்து ஆட்டோ கிராஃப் வாங்க எத்தனித்த நேரத்தில், (நேரில் பார்த்ததற்கு சாட்சி வேண்டுமே?) பல கரங்களால் இழுக்கப்பட்டு ஒரு கடையினுள் அடைக்கப் பட்டேன்.

இந்த நேரத்தில் ஒரு சிறு குறிப்பு: இலங்கைப் பிரச்சனை அப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்.

பெங்களூருவில் சார்க் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. மாநாட்டிற்கு ஜெயவர்த்தனே வருவதற்கு, கலைஞர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, முதல்வர் எம்ஜிஆர் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, இறுதி முடிவினை மத்திய அரசிடம் விட்டு விட்டார். பிரதமர் ராஜீவ் காந்தி தனிப்பட்ட முறையில் ஜெயவர்த்தனேவை வரவேற்று, பிடிவாதமாக மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு புறம் கலைஞரின் கடுமையான எதிர்ப்பு! மறுபுறம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், டெலோவின் தலைவர் சிறி.சபாரத்தினம், ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்பனாபா போன்ற தமிழீழ போராட்டக் குழுத் தலைவர்கள் எல்லாம் தமிழகத்தில் சகல சக்திகளுடனும் வலம் வந்து கொண்டிருந்தக் காலம்! ஒட்டு மொத்த தமிழக அமைப்புகளும் கிளர்ந்து எழுந்து ஜெயவர்த்தனேவுக்கு கருப்புக் கொடி காட்ட முடிவு செய்திருந்தனர்.

இதன் காரணமாக சார்க் மாநாடு நடக்க இருந்த மொத்த பெங்களூரும், ஒரு இரும்புக் கோட்டை போல காவல்துறையினரின் கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப் பட்டிருந்தது. ஒரே ஒரு கருப்புக் கொடி கூட ஜனாதிபதி ஜெயவர்தனேவின் கண்களுக்குத் தென்படக் கூடாது என்பது பிரதமர் ராஜீவ் காந்தியின் கண்டிப்பான உத்தரவு.

மாநாட்டின் ஏதோ ஒரு நாளின் போது, ஜெயவர்த்தனே தம்பதியர் ஷாப்பிங் செல்வதற்கு விருப்பப் பட, பெங்களூரின் அப்போதைய (இப்போதும்!) வசீகரமான கடை வீதிகளுள் ஒன்றான பிரிகேட் ரோடு மொத்தமாக பொதுமக்களுக்குத் தடை செய்யப் பட்டு, இலங்கை ஜனாதிபதியின் வருகைக்காக மட்டும் தயாராக காத்திருந்தது.

ஒரு இருட்டு அறையினுள் இழுத்து வந்து அடைக்கப்பட்ட எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. யார் என்னை இழுத்து வந்தது என்று கூட நான் கவனிக்க அவகாசம் இல்லை. அதிர்ச்சி அடைந்து போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். சற்று நேரத்தில் அங்கு சில விளக்குகள் போடப் பட ஷட்டரை திறந்து கொண்டு பல போலீஸ் அதிகாரிகள் உள்ளே வந்தனர். என்னைப் போலவே அவர்களும் அதிர்ந்து போயிருந்தனர்.

நான் எப்படி அங்கு வந்து சேர்ந்தேன்? எப்படி ஜனாதிபதிக்கு அத்தனை அருகில் என்னால் செல்ல முடிந்தது என்பதைப் பற்றி பெரிய சப்தத்துடன் அவர்களுக்குள்ளாக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு உயர் அதிகாரி வந்தவுடன், அனைவரும் சற்று அமைதியாக, அவர் நேராக என் எதிரில் வந்து அமர்ந்தார்.

உன்னுடைய பெயர் என்ன?

கருணாநிதி!

அத்தனை சலசலப்புகளும் நின்றுப் போக, அங்கு ஒரு பேரமைதி நிலவியது. அத்தனை அதிர்ச்சியான போலீஸ் முகங்களை ஒரு சேர நான் அதுவரை பார்த்ததில்லை.

எப்படி? பேரைக் கேட்டாலே, ச்சும்மா அதிருது இல்லை?’ போன்ற டயலாக் அப்போது இல்லை. ஆனால், உண்மையில் எனது பெயருக்கு அப்படியே அதிர்ந்து போய் விட்டார்கள்.

கேள்விகள் தொடர்ந்தன!

நீ எப்படி இங்கு வந்தே?

இதே, ரோடு வழியாதான் சார்!

உன்னை யாரும் தடுக்க வில்லையா?

இல்லையே! யாராவது தடுத்து இருந்தா நான் ஏன் இங்கே வரப் போகிறேன்?

உயர் அதிகாரி, திரும்பி மற்றவர்களை அற்பமாக ஒரு பார்வை பார்த்தார். அனைவரும் தலைக் குனிந்து கொண்டனர்.

சரி! நீ ஏன் உன் தோளில் இருந்த பேக்கை கழற்றினாய்?

அதற்குள் என் பேக் என்னிடம் இருந்து அகற்றப் பட்டு, சோதனை செய்யப்பட்டு, மொத்த பொருட்களும் பக்கத்து மேசையின் மீது வைக்கப் பட்டிருந்தது.

ஆட்டோகிராஃப் வாங்க!

உயர் அதிகாரி அந்த மேசையைப் பார்த்தார். ஒரு நோட்புக், சில சுஜாதா புத்தகங்கள், ஒரு ஸ்வெட்டர், பேனா போன்றவை இருந்தன.

ஏன் உன்னுடைய பேக் இந்தக் கலரில் இருக்கு?

அப்போதுதான் கவனித்தேன்.

என்னுடைய பேக் சுத்தமான கருப்புக் கலரில் இருந்தது.

உயர் அதிகாரி, எழுந்து நின்று, கன்னடத்தில் அங்கிருந்தவர்களை பின்வருமாறு, கண்டபடி திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

“நாம் ஒரு துண்டு துணியைக் கூட உள்ளே வர விடாமல் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலேஜ் பையன், நேராக பிரசிடெண்ட் எதிரில் வந்து நின்று வணக்கம் வைத்து விட்டு, தோளில் இருந்து கருப்புப் பையை எடுத்து அவர் முன்னாடி காட்டுகிறான்.

சிம்பிள்! நம்ம செக்யூரிட்டி எல்லாம் காலி! நீங்க எல்லாம் முட்டாள்! நான் ஒரு லூஸு! அதுதானே அர்த்தம்?

இவன் பேர் வேறு கருணாநிதி. ப்ரெஸுக்குத் தெரிந்தா அவ்வளவுதான்! நாம காலி!”

மூச்சு வாங்க என் எதிரில் அமர்ந்தவர், சுற்றிலும் பார்த்தார்.

அது ஒரு பியர் பார்லர்! (பப்)

யோவ்! எல்லா லைட்டையும் போடுங்கய்யா! நாம என்ன டான்ஸ் ஷோவா பார்த்துட்டு இருக்கோம்?

அனைத்து விளக்குகளும் போடப்பட்டன. என்னையே பல பேர் உற்றுப் பார்த்தனர்.

எத்தனை முறை என் முகத்தை உற்றுப் பார்த்தாலும், அதே பால் வடியும் முகம்தான்.

அதற்குள் கல்லூரியில் இருந்து என்னைப் பற்றிய அடையாளம் உறுதி செய்யப் பட்டு விட, ஒரு வழியாக சில மணி நேரங்களுக்குப் பிறகு, என்னிடம் சில கையெழுத்துகளைப் பெற்றுக் கொண்டு என்னை விடுவித்தனர்.

இப்போ, எங்கே போகப் போகிறாய்? என்று ஒரு அதிகாரி கேட்டார்.

ஊருக்குதான்! மெஜஸ்டிக் போய் பஸ் பிடித்துப் போய் விடுவேன்! என்றேன்.

வா! நான் வந்து மெஜஸ்டிக்கில், உன்னை விட்டு விடுகிறேன்.

இப்படியாக, பிரிகேட் ரோட்டில் இருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு ஒரு போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கினேன். நேராக திருவண்ணாமலை பஸ் அருகிலேயே இறக்கி விட்டனர்.நான் இறங்கி, அவருக்கு நன்றி கூட சொல்லத் தோன்றாமல் வேகமாக பஸ் உள்ளே ஏறிக் கொண்டு விட்டேன். எனது பஸ் புறப்படும் வரை என்னையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பிறகு அந்த ஜீப் விலகிச் சென்றது.

மடிவாலா தாண்டி, பஸ் ஓசூர் நோக்கி விரைந்தது. சில்லென பெங்களூர் காற்று என் முகத்தில் வேகமாக வீச, கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தேன். அதுவரை நடந்ததை என்னால் முழுவதும் கிரகித்துக் கொள்ள முடியாமல் அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தேன். தமிழக எல்லையைக் குறிக்கும் ஒரு பெரிய வளைவு (Arch) என் முன்னால் தெரிந்தது. அதனூடாக பஸ் புகுந்து தமிழகத்தினுள் நுழைந்தது.

கடைத் தெருவை வேடிக்கப் பார்க்கச் சென்ற என்னை, போலீஸ் கமாண்டோக்கள் இழுத்து ஒரு அறையினுள் வைத்துப் பூட்டியது முதல், போலீஸ் ஜீப்பில் வந்து பஸ் நிலையத்தில் விடும் வரை ஒரு சலனமும் காட்டாமல் அமைதியாக இருந்த நான், ‘தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது” என்ற பலகையை பார்த்த உடன், தலையைக் கவிழ்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.

19 thoughts on “கருப்புக் கொடி

  1. சூப்பர் நரேஷன் சார். பக்கா த்ரில்லர். நெஜமாவே நடந்துச்சா?
    //கருப்பு பேக், நீங்க மட்டும் பாதுகாப்பு வளையத்த உடைச்சது ;) …

    1. நிஜமாகவே நடந்ததுதான்! மறந்து போய், நினைவின் ஆழத்தில் இருந்து வெளியில் வந்தது! :)

  2. 1. போலிஸ் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் ஒருவன் அதை மீ றி உள்ளே புக வாய்ப்பு உள்ளது. அந்த ஒருவன் தீவிரவாதி எனில் விபரீதம் நிகழ்கிறது. அப்பாவி எனில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்தான்.
    2. அது சரி, இது கதையா? அல்லது உண்மைச் சம்பவமா?

  3. என்றோ நடந்த ஒரு சிறு நிகழ்வு என்றாலும் அதை சுவைபட உங்கள் பாணியில் சொல்லிய விதம் அருமை. அதுவும் இப்பொழுது உள்ள காமன்வெல்த் மாநாடு சூழ்நிலையில், மிக பொருத்தமாக, உங்களின் ஆழ்மனதிலிருந்து நினைவு படுத்தி மிக பொருத்தமாக தந்துள்ளீர்கள். “‘எப்படி? பேரைக் கேட்டாலே, ச்சும்மா அதிருது இல்லை? போன்ற டயலாக் அப்போது இல்லை” , “யோவ்! எல்லா லைட்டையும் போடுங்கய்யா! நாம என்ன டான்ஸ் ஷோவா பார்த்துட்டு இருக்கோம்? , ” ஹஹஹாஹா

  4. நீங்கள் மிகச் சிறந்த ஒரு சிறுகதை எழுத்தாளர். என்ன அழகாக ஒரு நிகழ்வைக் கதையாக் கொடுத்து இருக்கிறீர்கள். என்ன காரணத்தினாலோ படித்து முடித்ததும் உடல் புல்லரிக்கிறது. உங்கள் பெயர் கருணாநிதி என்பதே இத்தனை நாளாக எனக்குத் தெரியாது :-) மனதில் நீங்கள் SKP கருணா :-)
    Super post :-)
    amas32

  5. //எத்தனை முறை என் முகத்தை உற்றுப் பார்த்தாலும், (இப்போது போலவே) அதே பால் வடியும் முகம்தான்! //
    ரணகளத்திலயும்……..!!!
    உங்களிடம் நல்ல ஆட்டோகிராப் தொகுப்பு இருக்குமென்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டோகிராபுக்கு பின்னாலும் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான பிண்ணனி இருக்கும். ஒவ்வொன்றாக எழுதலாமே? :)

  6. நல்ல விறுவிறுப்பான பதிவு. உண்மையில் ரொம்ப நாகரிகமாக நடந்ததிருக்கின்றனர் அந்தக் கால கர்நாடக காவல் துறை, இருந்தாலும் ஒரு அனுபவம் தான். இந்தக் காலமாக இருந்தால் இதுவே ஒரு பயங்கர அனுபவமாகவும் மாறியிருக்க வாய்ப்புண்டு. நல்ல நடை அதைவிட நடந்த நிகழ்ச்சி. இவ்வளவு நாள் அதைப் பகிராததே ஆச்சர்யம் தான்.

  7. very super sir.
    it was interesting to your article namely karuppu kodi and enjoying all the Readers who came across your thoughtful sites.” Really your are rocking” in article writing.

  8. படித்தவுடன் டிவிட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ பகிர்வதற்கு உங்கள் இந்த வலை பக்கத்தில் அதற்குரிய பட்டன்ங்கள் இல்லை . அநேகரின் வலை பக்கங்களில் உள்ளது. தற்போது ட்விட்டரில் பகிர வேண்டுமென்றால், Copy Web Page Address and past it in Twitter செய்ய வேண்டுமாக உள்ளது. நண்பர்கள் படித்தபின் அதை ட்விட்டரில் பகிர்ந்தால், அது அவர்களின் எண்ணற்ற ஃபாலோயர்களுக்கு உடனே சென்றடையுமே. நன்றி

    1. அந்த வசதி என் வலைப்பக்கத்தில் இருக்கிறது என்றே எண்ணி வந்தேன்!
      உடனே செய்ய முயல்கிறேன்!

  9. மிக தனித்துவமான அனுபவம். இருந்தாலும் சற்றும்
    மிகைப்படுத்தப்படாத பதிவு.

  10. “கடைத் தெருவை வேடிக்கப் பார்க்கச் சென்ற என்னை, போலீஸ் கமாண்டோக்கள் இழுத்து ஒரு அறையினுள் வைத்துப் பூட்டியது முதல், போலீஸ் ஜீப்பில் வந்து பஸ் நிலையத்தில் விடும் வரை ஒரு சலனமும் காட்டாமல் அமைதியாக இருந்த நான், ‘தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது” என்ற பலகையை பார்த்த உடன், தலையைக் கவிழ்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.” – இதுவரை மிக நகைச்சுவை உணர்வுடன் படித்துக் கொண்டே வந்தத நான், திடீரென்று அடிபட்ட உணர்வு. இயல்பான ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்பட்ட அழுத்தத்தின் வெடிப்பினை வெளிப்படுத்திய கடைசி வரிகள். தாய், வேதனைப் படும் தன் குழந்தையை, மடியில் போட்டு வருடிக் கொடுக்கும் உணர்வை உங்களுக்கு கொடுத்த “‘தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது” பெயர்ப்பலகை, எங்களுக்கும் அதே உணர்வை ஏற்படுத்தியதே உங்கள் எழுத்தின் சக்தியாக நான் கருதுகிறேன். – அன்புடன் கண்ணன்

  11. உங்களுக்கு மட்டும் எப்படி அமைகிறதோ .. Bharathiraja Sujatha Jawavarthane .. raasi :)

Comments are closed.