சன்மானம்

சன்மானம்

சன்மானம்

எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது ‘சைக்கிள் டாக்டர்’ கதைக்கான சன்மானமாக ரூபாய் மூவாயிரத்திற்கான காசோலையும் இருந்தது. அதுதான் எனது 44 வயதில் நான் சொந்தமாக சம்பாதிக்கும் முதல் பணம் என்பதை உணர்வதற்கு, ஒரு ஐஸ்கிரீம் முழுவதுமாக உருகுவதற்கான நேரம் ஆனது!
vikatan_cheque
நான் ஏழாம் வகுப்புக்கு சென்ற முதல் நாளன்று, எனது நைனா என்னை அழைத்துச் சொன்னார்! இன்னையில இருந்து நீ ஸ்கூல் முடிஞ்சப்புறம், தினமும் ஷெட்டுக்கு (எங்கள் பஸ் கம்பெனி) வந்துடணும். அப்படித்தான், எனது 12 வயதில் நான் எனக்கென தீர்மானிக்கப் பட்டிருந்த தடத்தில் காலெடுத்து வைத்தேன்.
சின்ன முதலாளி வந்திருக்கார்! உங்களோட வச்சுக்குங்க! என்று அலுவலக மேலாளரிடம் ஒப்படைக்க வில்லை! மாறாக, வொர்க் ஷாப்பின் உள்ளேயிருந்த மெக்கானிக், டிரைவர்களை அழைத்து அவர்களிடம் நைனா என்னை ஒப்படைத்த அன்று முதல் எனது வேலை, அனைவருக்கும் சில மணிக்கொரு முறை சென்று டீ வாங்கி வந்து கொடுப்பது. அப்படியே டூல் பாக்ஸ் சுத்தம் செய்வது, டயர்களுக்கு காற்றுப் பிடிப்பது என்று ஒன்பதாம் வகுப்புவரை வந்து விட்டேன்.
அப்போதெல்லாம், மாத சம்பளம் வாங்குபவர்கள் லாரி டிரைவர்களும், மெக்கானிக்குகளும்தான். மற்ற அனைவருக்கும் தினச் சம்பளம்தான். பெரும்பாலும், அவர்களில் யாருக்குமே கையெழுத்துப் போடத் தெரியாது. கையில் இருக்கும் பணத்தை எண்ணத் தெரியாது. எனவே சம்பளம் கொடுக்கும் கணக்குப் பிள்ளை மேற்கண்ட காரணத்தால், அவர் எப்போதுமே வளமாக இருப்பது வழக்கம். அவ்வப்போது நைனாவிடம் மாட்டிக் கொள்வதும் உண்டு. தொழிலாளியை ஏமாற்றுவது என்பது அவருக்கு மிகுந்த கோபம் வரவழைக்கும் பெரும் தவறு.
ஏதோ ஒரு நாள், ஷெட்டில் நைனாவிடம் வழக்கம் போல திட்டு வாங்கியதால் கணக்குப் பிள்ளை கோபித்துக் கொண்டு வேலைக்கு வராத ஒரு பொழுதில் என்னை அழைத்து அலுவலகத்தின் உள்ளே உட்காரச் சொன்னார். முதல் நாளிலேயே, கணக்கு நோட்டில் எனது முத்தான கையெழுத்தைப் பார்த்து மயங்கிப் போன அவர், நிரந்தரமாக ஒரு நாற்காலியைக் கொடுத்து, அதில் அமரச் செய்தார். முதன் முதலில் அவர் என்னிடம் கொடுத்த வேலை, எங்கள் கம்பெனியில் பணி புரியும் அனைவரின் சம்பளத்தையும் கணக்கிட்டுக் கொடுப்பதுதான்.
இப்படித்தான், எனது 13ஆவது வயதில் நான் சம்பளம் கொடுக்கத் துவங்கினேன். எத்தனையோ பேர்களுக்கு முதல் சம்பளம் கொடுத்திருக்கிறேன். சிலர், சொந்தமாக லாரி வாங்கிக் கொண்டு முதலாளியாக செல்லும் போது அவர்களுக்குக் கடைசி சம்பளமும் கொடுத்து இருக்கிறேன். எங்கள் கம்பெனியில் எழுதப் படாத ஒரு சட்டத்தின் படி, பல ஊழியர்களின் சம்பளம் அவர்களின் மனைவியின் கையில்தான் கொடுக்கப்படும்.
ஆக, என் வாழ்நாள் முழுக்க சம்பளம் வாங்கும் கைகளை நான் பார்த்துக் கொண்டே வளர்ந்திருக்கிறேன். சிலர் கைகள் நடுங்கும். சிலர் என் கண் முன்னேயே நேராக கடன்காரர்களுக்குக் கொடுக்கும்படி சொல்லி விடுவார்கள். நோயுற்ற சிலரின் சம்பளத்தை நான் அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுத்து வர நேரிடும். விபத்தில் இறந்து விட்டவர்களின் கடைசி மாத சம்பளத்தை, மேலும் சில ஆயிரங்கள் சேர்த்து அவர்களின் வீட்டுக்கு சென்று கொடுத்து வந்திருக்கிறேன்.
இந்த வேலை எனக்குத் தொழிலாளர்களுடனான நேரடித் தொடர்பை ஏற்படுத்தியது. ஒரு மாத சம்பளம் என்பது ஒரு குடும்பத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை நான் முழுவதுமாக உணர்ந்து கொள்ள நேரிட்டது. நைனா, இந்த வேலையை திட்டமிட்டு எனக்குக் கொடுத்தார் என்று நினைக்க வில்லை. ஆனால், ஒரு நிறுவனத்தை நடத்தும் முதலாளியாக இருப்பவரின் முதல் கடமை, தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை சரியாகவும், முறையாகவும் கொடுப்பது என்பதை நான் இங்குதான் கற்றுக் கொண்டேன்.
அன்று முதல், இன்று வரை ஏறக்குறைய முப்பத்தி இரண்டு வருடங்கள் எனது வாழ்வில் நான் தவறாமல் செய்து வந்த செயல், ஒவ்வொரு மாதத்துக்குமான சம்பள செலவுக்கு திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்வது. நான் கல்லூரியில் படிக்கும் போது கூட, அவ்வப்போது ஊருக்கு வந்து இந்த வேலைகளை செய்து விட்டுச் செல்வது வழக்கம். எனது தந்தை இறந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறாம் வருடம் முதல் இன்று வரை அந்தப் பொறுப்பு முழுவதுமாக எனதாகி விட்டது.
என்றேனும், அரிதாக எனக்கு மனச் சோர்வு ஏற்படும் சமயத்தில் கூட, இத்தனை தொழிலாளர்கள் குடும்பம் நம்மைச் சார்ந்து இருக்கிறது என்ற எண்ணம், எனது வாழ்வின் ஒவ்வொரு கடினமானக் கட்டத்தையும் தாண்டி வர உதவியிருக்கிறது. எங்கள் நிறுவனங்கள் சார்ந்த, ஒரு பெரிய குடும்பத்தை முன் நின்று நடத்தி வருபவன் என்பதில் எப்போதுமே எனக்கு பெருமிதம் உண்டு.
இன்று ஆனந்த விகடனில் இருந்து வந்திருக்கும் எனது உழைப்பிற்கான இந்த சன்மானம் எனக்கு சொல்ல இயலாத ஆனந்தத்தை அளிக்கிறது. எங்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சம்பளம் பெறுகின்றனர். நானே பல இளைஞர்கள் படிப்பதற்கு உதவி செய்து, அவர்களுக்கு வேலையும் கொடுத்து இருக்கிறேன். அவர்கள் தங்களின் முதல் சம்பளத்தை வாங்கும் போது எத்தனை பெருமிதமாக உணர்ந்திருப்பார்கள் என்பதை இன்றுதான் நான் அனுபவப் பூர்வமாக உணர்கிறேன்.
எனது நண்பர்கள், மாணவர்கள் என இன்னும் எத்தனையோ பேர் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்து, தங்கள் உழைப்புக்கும் திறமைக்குமான சம்பளத்தை பெறும் போது அவர்களுக்குக் கிடைக்கும் பெருமிதத்தின் ஒரு துளி இப்போது முதல் முறையாக இத்தனை வயதுக்குப் பிறகு, எனக்கும் கிடைத்திருக்கிறது. இதை சாத்தியப் படுத்தியது எனது வாசிப்பும், அதன் வாயிலாக வந்த எழுத்தும்.
எனது முதல் சிறுகதையை முதன் முதலில் படித்துப் பார்த்து, அதில் ஒரு கதை உள்ளது என அடையாளம் கண்டு கொண்ட நண்பர்கள் பவா.செல்லதுரை ஷைலஜாவுக்கும், எனது கதையை தேர்வு செய்து பிரசுரித்த ஆனந்த விகடனின் ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள்.
இப்போது எனது கையில் இருக்கும் ரூ.3000 க்கான காசோலை பல கோடிகளுக்கு மதிப்புள்ளதாக தெரிகிறது. என் சந்தோஷத்தைப் பார்த்து, இதை அப்படியே ஒரு ஃப்ரேம் போட்டு வைத்துக் கொள்ளச் சொல்லி நண்பர்கள் ஆலோசனை தருகின்றனர். செய்யலாம்தான்! ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியம், தமிழக அரசிடம் இருந்த நட்ட ஈடாகப் பெற்ற ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அப்படி செய்து வைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். பத்திரிக்கை உலகின் பிதாமகரான அவரது பெயர் வேறு, இந்தக் காசோலையில் இருக்கிறது.
அப்படியெல்லாம் செய்ய இது ஒரே ஒரு முறை நடக்கும் சம்பவம் அல்ல. இன்னும் பல கதைகளை எழுதி, இன்னமும் பல சன்மானங்கள் உங்களுக்கு வரப் போகிறது என்கிறார் பவா.செல்லதுரை. ஒரு வேளை அப்படியும் நடக்கலாம். எப்படி இருந்தாலும், இது எனது திறமைக்கும், சில மணி நேர உழைப்பிற்க்குமான ஊதியம். அதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் ஏற்படுகிறது.
அதே உற்சாகத்தில், எனது மகனிடம் உனக்கு என்னவெல்லாம் வேண்டும்? வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன். ஒவ்வொன்றாக யோசித்து ஒரு பட்டியல் கொடுத்துள்ளான். அவன் கொடுத்திருக்கும் பட்டியலை பூர்த்தி செய்ய, நான் இன்னும் ஏழாயிரத்து நானூற்று ஐம்பது சிறுகதைகள் எழுத வேண்டும். அத்தனையும் ஆனந்த விகடனில் வெளி வரவேண்டும். அத்தனை காசோலைகளையும் நான் மாற்றி பணமாக்குவதற்குள், தற்போதைய விலைவாசியும், பணவீக்கமும் மேலும் உயராமல் இருக்க வேண்டும்.
பார்க்கலாம்.
1.எனது முதல் சிறுகதை ‘சைக்கிள் டாக்டர்’ ஆனந்த விகடனில் வெளிவந்து, அதற்கான சன்மானத்தைப் பெற்ற போது, உணர்ச்சிப் பூர்வமாக எழுதப் பட்ட கட்டுரை இது. எப்படியே, தவறிப் போய் டிராஃப்டிலேயே சிக்கிக் கொண்டு, இப்போது வெளியே வருகிறது.
2.எனது அடுத்த சிறுகதையும் ‘கெட்டக் குமாரன்’ ஆனந்த விகடனில் வெளிவந்து சில மாதங்களாகி விட்டன. எனவே, இன்னும் எழுத வேண்டியிருப்பது ஏழாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது மட்டுமே.

18 thoughts on “சன்மானம்

  1. சம்பவங்களின் கோர்வை ஒரு அருமையான சிறுகதையைத் தரும்- இதை நிரூபிக்கிறது இந்தப் பதிவும். உண்மையைச் சொன்னா, சிறுகதையை விட இந்தக் கதை அபாரம் :)

  2. உங்கள் தந்தை உங்களை விட்டு அவ்வளவு சீக்கிரமாகப் பிரிந்து விட்டாரா? வருத்தமாக உள்ளது.
    மாதச் சம்பளம் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று அந்த சிறு வயதிலேயே நீங்கள் உணர்ந்தது உங்களின் empathyயைக் காட்டுகிறது.
    என் தந்தை ஒரு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி நடத்தும்போது ஒரு சமயத்தில் பெரும் பணக் கஷ்டத்துக்கு உள்ளானோம். அப்பொழுது மாதா மாதம் தொழிலார்கள் சம்பளத்துக்கு முதலில் ஏற்பாடு செய்த பிறகு என் தந்தைக்கு மூச்சே வரும்.
    உங்கள் முதல் சம்பளத்துக்கு என் வாழ்த்துக்கள் :-) எப்படி அனைத்து பாலோவர்களுக்கும் ட்ரீட் தரப் போகிறீர்கள்? ஒரு கமர்கட்டாவது வேணும் :-)
    amas32

  3. அருமை ஆன விஷயம் அதை அனுபவித்து எழுதி இருப்பது இப்பொழுது நினைத்தாலும் மட்டற்ற மகிழ்ச்சி யில் திளைக்க வாழ்த்துக்கள் அண்ணா.

  4. மாதச்சம்பளம் ஒரு குடும்பத்திற்க்கு எவ்வளவு மிமுக்கியம் – மேலோட்டமாகத் தெரிந்தாலும் எவ்வளவு கருத்தாழம் புதைந்த வார்த்தைகள்….

  5. பேசாமல் ஒரு புத்தகமாய் அனைத்தையும் போட்டு விடுங்கள். அப்போ தான் பையன் ஆசையை சீக்கிரம் நிறைவேற்ற முடியும்.

  6. வாழ்த்துக்கள்…..தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி….மேலும் பல சிறுகதைகள் பல புத்தகங்களில் வெளிவர வேண்டும்…..

  7. இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு உங்களின் இயல்பான மனிதம் வெளிப்படையாய் தெரிகிறது. அன்னார்ந்து பார்க்கின்ற பெரிய நிறுவனத் தலைவரிடம் எவ்வளவு எளிமை, வெளிப்படை? இதனை உன்னதத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லும் முதல் படியாகப் பார்க்கிறேன். படைப்புக்களை கண்ணுற்று கருத்துப்பதிவிடுகிறேன். நன்றி…….!

  8. மிக்க மகிழ்ச்சி கருணா!
    தங்களுடைய எழுத்துப்பணி மென்மேலும் மெருகோடு மிளிர என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!!

  9. சார், தங்களது எழுத்து நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் அ. சிவராமன் – மேட்டூர் அனல் மின் நிலையம் II. மேட்டூர் அணை.

  10. great. kangalin oor oramai kanneer varalama vendama ene… kathirukka .. migap perumayai irukkiradhu.. ungalin indha thagudhi.. udane kidaithuvidavillai.. enepurigiradhu.. vazhthukkal karuna.. ungal maganin asai vegu viraivil niraiverattum………….. Begalorilirundhu a,g,rajkumar.

  11. இந்த கட்டுரையில் படர்ந்து இருக்கும் அந்த மெல்லிய அறம் சார்ந்த உணர்வு ரொம்ப அருமை. அது தான் கண்ணீர் கதைகளும், நிகழ்வுகளும் தராத ஒரு நெகிழ்வை தந்து செல்கிறது. அதுவும் எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து அது பரவுவது இன்னும் அருமை.

  12. எனக்கும் உங்களிடம் சன்மானம் வாங்க ஆசை

Comments are closed.