சீனுவின் சைக்கிள்

சீனுவின் சைக்கிள்.
– எஸ்கேபி. கருணா
(இது ஆனந்த விகடனில் வெளி வந்த “சைக்கிள் டாக்டர்” என்ற எனது சிறுகதையின் மூலம்! எங்கள் ஊரைப் பற்றிய கூடுதல் வர்ணனைகள், ஒரு சில நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கை சம்பவங்கள் தவிர, வேறு எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது! மூலக் கதையினை மிகக் கச்சிதமாகவே விகடன் தொகுத்து (எடிட்) வெளியிட்டுள்ளது!சீனுவின் சைக்கிள் என்ற கதையின் தலைப்பினையும், சைக்கிள் டாக்டர் என்று மாற்றம் செய்திருந்தனர்.
நான் எழுதிய முதல் கதை என்ற வகையில் இது எனக்கு முக்கியமான ஒன்றாக ஆகிறது. எனவே, மூலக் கதையினையும் இந்த வலைப் பக்கத்தில் பதிவிட்டால், அது பத்திரமாக இருக்குமே என்ற வகையில் இங்கே பதிந்து வைக்கிறேன்!)
———————————————————————————————————
அது எப்படி மனைவியும், மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம்முடைய வீடுகள் வாழுமிடம் என்பதிலிருந்து வெறுமனே வசிப்பிடமாக மாறி விடுகிறது?
கோடை விடுமுறைக்கு சென்றிருக்கும் மகனைப் பார்த்து ஐந்து நாட்கள் இருக்கும். வீட்டின் எல்லா இடங்களையும், தனது பல்வேறு சாகசங்களால் நிரப்பிக் கொண்டிருந்தவன் இல்லாமல், வீடும் மனதும் வெறுமையாக இருக்கிறது.
கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அழைக்க வேண்டும் என்ற ஒரு கடுமையாக உத்தரவு, மனைவியிடமிருந்து ஊருக்குச் செல்வதற்கு முன்னமே இடப்பட்டிருந்தது. இரவு வர இன்னும் ஒரு பகல் முழுதாக மிச்சமிருந்தது. அவர்கள் ஊரில் இல்லாத இந்த சில நாட்களில், தாறுமாறாக இருக்கும் என்னுடைய நூலகத்தையாவது ஒழுங்கு செய்து வைக்குமாறு கெஞ்சலான ஒரு கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையாவது செய்வோம் என்று நானும் என் டிரைவரும் புத்தக அலமாரிகளின் மேலிறிந்து எல்லாப் புத்தகங்களையும் கீழிறிக்கினோம். தமிழ்-ஆங்கிலம் அகராதி மட்டும் பத்துக்கும் மேலிருந்தது.
ஒன்றினை மட்டும் வைத்துக் கொண்டு, மீதமுள்ள அகராதிகளை பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து விடுவோம் என்று எண்ணி எனக்கான ஒன்றினை தேர்வு செய்ய முயலும்போதுதான், பழைய அகராதி ஒன்றிலிருந்து அந்தக் கடிதம் தட்டுப்பட்டது. பழைய கடிதங்களைப் படிக்கும் ஆர்வம் இன்னமும் மீதமிருப்பதால், எல்லா வேலைகளையும் விட்டு விட்டு, அக்கடிதத்தைப் படித்தேன். யாருடைய கடிதம் இது? யாருக்கு எழுதப்பட்டுள்ளது? எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அக்கடிதம் இருந்த அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். டாக்டர் ___ என கையால் எழுதப் பட்டிருந்த பெயரின் கீழே அரசு மருத்துவமனை, திருவண்ணாமலை என்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதிக்கப் பட்டிருந்தது.
என்னுடைய பன்னிரெண்டாவது வயதில், என்னை வந்தடைந்த அகராதி அது. முப்பது வருடமாக என்னுடைய பழையப் புத்தகங்களுடன் ஒளிந்திருந்து, இன்றைய காலைப் பொழுதில், என் நினைவடுக்குகளை திறக்க முயல்கிறது. வறண்ட கிணற்றினில், ஏதோ ஒரு ஒற்றைக் கல் அகற்றப்படும் போது ஊற்று நீர் பொங்கி வருமே? அது போன்ற ஒரு கல்லாய் இன்று அந்தக் கடிதம் என் கைகளில் இருக்கிறது. பொங்கி வரும் ஞாபகங்களின் கனம் தாளாமல், எனது உள்ளம் நெகிழத் தொடங்கியது.
ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அரை டிராயர் மாணவனின் சாகச நினைவுகள் அவை. அந்த வயதில் நாங்கள் எந்நேரமும் கிசுகிசுத்துக் கொண்டிருந்த ரகசியங்கள், வெயிலும், வியர்வையும் அறியாப் பொழுதுகள், பொய்யான நம்பிக்கைகள், அர்த்தமற்ற பயங்கள் என எல்லாமும் ஒரு கலவையாகக் கலந்த பால்ய கால ஞாபகங்களின் நீரோட்டம் இது.
க்ளீஷேவாகத்தான் இருக்கும்! இருப்பினும் இப்படியே ஆரம்பிக்கிறேன்!
இன்றிலிருந்து முப்பது வருடத்துக்கு முன் ஒரு நாள்,
“நானும், சீனுவும் ஒரு வெளிச்சம் குறைவான அறையில், அந்த டாக்டரின் முன்பு கைகட்டி நின்று கொண்டிருந்த போது, எங்கள் பள்ளிகூடத்தின் ப்ரேயர் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தது.
இன்னும் ஐந்து நிமிடங்களில், எங்களைப் பார்த்து, சரி! இப்போது போய் விட்டு நாளைக்கு காலையில் வந்து விடுங்கள் என்று சொல்லுவார். அதன் பின், வியர்த்துப் போய் வெளியில் வரும் நாங்கள், திருவூடல் தெருவிலிருக்கும் அந்த வீட்டிலிருந்து, எங்களின் டேனிஷ் மிஷன் பள்ளிக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் சென்றடைய வேண்டும்.
இப்படி நடப்பது இது ஏழாவது நாள்!
நான் எப்படி இதில் வந்து மாட்டினேன் என்பது இப்போது எனக்கு தெளிவாக நினைவுக்கு வருகிறது. ஆறாம் வகுப்பிலிருந்தே எனது வீட்டில் எனக்கென தனியாக சைக்கிள் வாங்கித் தந்திருந்தார்கள். சீனுவும் அவன் வீட்டில் கெஞ்சி ஏழாம் வகுப்பின்போது சைக்கிள் வாங்கி விட்டான். காலை பள்ளிக்கு நாங்கள் இருவரும் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு போய் சேருவோம். அதுவும், திருவூடல் தெரு மேட்டிலிருந்து, அந்தத் தெருவின் கீழேயிருக்கும் கடலைக்கடை மூலை வரை, ஹாண்டில்பாரிலிருந்து கைகளை எடுத்துக் கொண்டு ஓட்டுவது எங்களின் முக்கிய பொழுது போக்கு!
அதற்கேற்றார் போல, திருவூடல் தெருவும், இப்போது போல முக்கிய வணிக வீதியாக இல்லாமல், முழுவதுமான குடியிருப்புப் பகுதியாக இருந்தது! வியாபாரம் என்று பார்த்தால், தெருவின் கீழ்கோடியின் வலது புறம் ராம் சில்க் பேலஸும், அதற்கு எதிரில் இருந்த அன்னை மெடிக்கல்ஸ் மற்றும் அதன் அருகில் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டும்தான். பிறகு வரிசையாக பொரி, கடலைக் கடைகள். எனவே, அந்த இடம் கடலைக்கடை மூலை என்றானது. எதிரிலேயே வரிசையாக குதிரை வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அருகினில், அதற்கான புற்கள் விரிக்கப்பட்டிருக்க, குதிரை சாணத்தின் ப்ரத்யெகமான வாசமுடன், எங்கள் ஊரின் ஒரே காய்கறி மார்க்கெட் இருந்தது.
நாங்கள் திருவூடல் தெருவின் மேட்டில் கைகளை எடுத்து விட்டால், கடலைக் கடை திருப்பம் வரை சைக்கிள் ஹாண்டில்பாரில் கை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. எப்போதாவது, குதிரைகளை தண்ணீர் குடிக்க, எதிரிலிருக்கும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்கு அழைத்து செல்வார்கள். அப்போது மட்டும் கொஞ்சம் நிதானிக்க வேண்டியிருக்கும். குதிரையின் மீது சைக்கிளை மோதிவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்போம்.
இருந்தும், நான் உடன் செல்லாத ஒரு நாள் காலைப் பொழுதில் அந்த சம்பவம் நடந்தே விட்டது. குதிரை மீது மட்டுமல்லாமல், ஒரு லேம்ப்ரெட்டார் ஸ்கூட்டரின் மீதும் சேர்த்து சீனு, சைக்கிளை மோதி விட்டிருக்கிறான். ஸ்கூட்டர் அரசு மருத்துவமனையின் ஒரு டாக்டருக்கு சொந்தமானது. கூடுதல் சோதனையாக, டாக்டரும் அந்த ஸ்கூட்டரின் மேலிருந்துள்ளார். சீனு, சைக்கிள், குதிரை, புற்கட்டு, ஸ்கூட்டர், மற்றும் டாக்டர் என ஒரு கலவையாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கிடந்ததால், யாரால் இந்த விபத்து என்று யாருமே உறுதியாக கணிக்க முடியாமல் போய்விட்டது.
அரை டிராயர் போட்டிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவன் விபத்தில் சம்பந்தப் பட்டிருந்ததால், விபத்துக்கு அவனே காரணமானான். அவனுடைய பள்ளிக்கூடப் பையை எடுத்துக் கொண்டு, அவனையும் அழைத்துக் கொண்டு, டாக்டர், அதே தெருவிலிருக்கும் அவருடைய வீட்டுக்குச் சென்று விட்டார். ஸ்கூட்டரை பொறுக்கி எடுத்துக் கொண்டு, அந்த குதிரையும், குதிரைக்காரரும், தங்களின் வண்டியில் ஏற்றிக் கொண்டு மெக்கானிகல் ஷெட்டிற்கு சென்று விட்டனர்.
வீட்டுக்கு அழைத்து சென்ற டாக்டர், அழுது கொண்டு நின்றிருந்த சீனுவிடம், அவன் அப்பாவின் பெயர், விலாசம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டர் ரிப்பேர் செலவுக்கு பணம் வாங்கி வந்த பின்பு, ஸ்கூல் பேக்கையும், அவனது சைக்கிளையும் மீட்டுச் செல்லுமாறு சொல்லிவிட்டார். இத்தனை களேபரத்திலும் அவனுக்கும், அவனது சைக்கிளுக்கும் ஒரு சிறு சிராய்ப்புக் கூட இல்லை! டாக்டருக்குத்தான் ஏகப்பட்ட இரத்தக் காயங்கள்.
சீனுவுக்கோ, அவனுடைய அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அடி, உதைகள் விழுவதோடு, பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் சலுகையும் துண்டிக்கப்பட்டு விடும் என்ற பயம்! ஊரிலிருந்த திரும்பி வந்திருந்த என்னை வந்துப் பார்த்து நடந்த விஷயத்தை சொன்னான்! உன் சைக்கிள் ரிப்பேர் என்பதால், என்னோட சைக்கிளை உனக்குக் கொடுத்திருக்கிறேன் என்று வீட்டில் சொல்லி வைத்திருக்கிறேன். இப்ப என்ன பண்றதுன்னே தெரியவில்லை என்றுத் தேம்பினான்.
அந்த டாக்டரிடம் போய் நீயே, கேட்டுப் பார்க்க வேண்டியதுதானேடா என்றேன். தொடர்ந்து நாலு நாட்கள் போனானாம்.
என்ன சொன்னார்?
எதுவுமே பேச மாட்டார்டா! நான் கைகட்டிக் கொண்டு நிற்பேன். என்னையே பார்த்துக் கொண்டிருப்பார். ரொம்ப நேரம் கழித்து, போயிட்டு நாளைக்கு வா என்று சொல்லி விட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு போய்டுவார்டா என்றான்.
என்னுள் இருக்கும் ஒரு சமாதானத் தூதுவனை முதலில் அடையாளம் கண்டு கொண்டவன் என்ற முறையில் சீனுவுக்கு உதவி செய்வது எனக்குக் கட்டாயமாயிற்று. நாளை காலை பள்ளிக்கு போகும் போது, வழியில் டாக்டர் வீட்டுக்கு சென்று உன் விஷயமாக பேசுகிறேன் என ஆறுதல் சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். மறுநாள், காலை ஆறு மணிக்கே என்னை அழைத்துச்
செல்ல என் வீட்டிற்கு வந்து விட்டான்.
ப்ரேயர் ஒன்பது மணிக்கு. எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். வழக்கம் போல, திருவூடல் தெரு மேட்டில், ஹாண்டில் பாரிலிருந்து நான் கைகளை எடுக்க, சீனு, டேய்! டேய்! வாணாம்டா எனக் கதறினான். போனால் போகட்டும் என எல்லோரையும் போல நானும் சைக்கிளை ஓட்டிக் கொண்டு டாக்டரின் வீட்டுக்குப் போனோம்.
அந்த நீண்டத் தெருவின், சரி பாதியில் அவர் குடியிருந்த வீடு இருந்தது. வீட்டின் வாசலில் நின்று கொண்டு பார்த்தால், அந்த வீட்டின் பின்புறம் கண்ணுக்குத் தெரியாது. அத்தனை நீளம். எங்கள் ஊர் பெரியக் கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் அப்படித்தான்! தெருவின் ஒரு கோடியில் வாசலென்றால், மறு கோடி பின்புறத் தெருவில் இருக்கும். ஆனால், இந்த வீட்டின் அகலம் குறைவு! குறைவென்றால் அத்தனைக் குறைவு! அதிகபட்சம் பதினைந்தடி இருக்கலாம்! எனவே, வெளிச்சம் எந்த வழியிலும் உள்ளே வர வழியின்றி எப்போதுமே ஒரு இருளுடனே இருந்தது.
வீட்டின் தாழ்வாரத்தில், சீனுவின் சைக்கிள் ஒரு சங்கிலியால் கிரில் கேட்டில் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதை பரிதாபமாக கண்கலங்கப் பார்த்துக் கொண்டே, சீனு காலிங்பெல்லை அழுத்தினான். யாரும் வரவில்லை! எங்களை உள்ளே வரச் சொல்லியும் யாரும் கூப்பிடவில்லை. இவனே, சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு, முன்னறையில் இருக்கும் டாக்டரின் சின்ன டேபிளின் முன்பு போய் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான். தினமும் இப்படித்தான் போலும் என எண்ணிக் கொண்டேன்.
டாக்டர் குனிந்து கொண்டு என்னவோ எழுதி கொண்டிருந்தார். நீண்ட நேரம் கழித்து நிமிர்ந்து எங்களைப் பார்த்தார். நீ யார்? என பார்வையிலேயே என்னைக் கேட்டார். எதற்கென்றே தெரியவில்லை! படக்கென,நானும் எனது கைகளை கட்டிக் கொண்டேன். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வராததால், அவனுடைய நண்பன் என்று கட்டிக் கொண்டிருந்த கைகளினாலேயே சொன்னேன்.
அதற்கு பின்பும் எதுவும் பேசவில்லை! ப்ரேயருக்கு சரியாக ஐந்து நிமிடம் இருக்கும் போது, எங்களைப் பார்த்து இப்போது போய் விட்டு நாளைக்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டார். நாங்கள் வெளியில் வந்த சிறிது நேரத்தில், அவரும் வெளியில் வந்தார். பின்னாலேயே, வேலைக்காரப் பெண்ணும் வெளியில் வந்து, கேட்டை இழுத்துப் பூட்டினார். பின்பு, டாக்டர் பூட்டை இழுத்துப் பார்த்து விட்டு, தன் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். பிறகு, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த தனது ஸ்கூட்டரில்(ஷெட்டிலிருந்து வந்து விட்டிருந்தது!) மருத்துவமனைக்கு கிளம்பினார்.
நான் சீனுவைப் பார்த்தேன்!
தினமும் இப்படித்தாண்டா நடக்குது என்றான் பரிதாபமாக!
எனக்கு சீனுவின் பிரச்சனையைத் தீர்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தினமும், அவனுடன் நானும் சென்று டாக்டரின் முன்னாடி நின்று கொண்டிருப்பது எனக்கும் சலித்து விட்டிருந்தது. நாம் ஏன் அவனுடன் தினமும் போய் டாக்டர் முன் இப்படி நிற்க வேண்டும் என்று நான் யோசித்தது சீனுவுக்கு தெரிந்து விட்டது போலிருக்கு! மெல்ல என்னிடம் அந்த திகில் செய்தியை சொன்னான்! டாக்டர்கள் கூப்பிட்டு போகவில்லையென்றால், என்னைக்காவது நமக்கு ஜுரம் வரும் போது விஷ ஊசி போட்டு விடுவாங்களாம்!
எனக்கு அதைக் கேட்டவுடன் வேர்த்து விறுவிறுத்து விட்டது. எனக்கு சின்னதாக ஜலதோஷம் பிடித்தால் கூட, என் அம்மா எங்கள் டாக்டரிடம் எப்போதும் சொல்வது, டாக்டர் சார்! ஒரு ஊசி போட்றுங்க! எனக்கோ அடிக்கடி ஜலதோஷம் வரும்! எப்படியும் வருஷத்துக்கு பல ஊசிகள் நிச்சயம் உண்டு! அதில் எந்த ஊசி, விஷ ஊசி என்று கண்டு பிடிப்பது?
மறுநாள், சீனு வருவதற்குக் கூட காத்திராமல், முதல் ஆளாக நான் போய் நிற்க ஆரம்பித்தேன். (விஷ ஊசி!). மெல்ல அந்த வீட்டைப் பற்றிய பல நுணுக்கமான விஷயங்கள் எங்களுக்குத் தெரியத் துவங்கின. டாக்டர் அங்கே தனியாகத்தான் இருக்கிறார். அந்த வீடு கூட ஏதோ ஒரு அரசு மருத்துவர் வாடகைக்கு எடுத்து, பின்பு தொடர்ந்து அங்கே மாறுதலாகி வருபவர்களுக்கு கிடைத்து வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு இன்னமும் நினைவிருப்பது, அந்த வீட்டின் நேர்த்தியும், டாக்டரின் நேரம் தவறாமையும்தான்!
மிகச் சரியாக காலை ஆறு மணிக்கு அந்த வீட்டின் கதவு திறக்கப் படும். வேலைக்காரி உள்ளே நுழைந்த பின் மூடப்பட்ட கதவை எட்டு மணியளவில் எங்கள் இருவரில் ஒருவர்தான் போய் திறப்போம். அப்போது, குளித்து முடித்து தன்னுடைய டேபிளில் அமர்ந்து எழுதத் துவங்கியிருப்பார். வேலைக்காரி சமைத்து முடித்து சுத்தம் செய்த பின்பு, கட்டி வைத்த உணவை எடுத்துக்கொண்டு புறப்பட்டாரேயானால், அப்போது சரியாக நேரம் காலை 8.55.
அந்த வீட்டில் கூட, ஒரு பொருள் இடம் மாறியிருக்காது. ஒரு இடத்திலும் தூசி, அழுக்கு தென்படாது! செருப்பு முதல் கடைக்கோடியில் இருக்கும் குளியலறை சொம்பு வரை வைத்த இடத்தில் வைத்தபடியே இருக்கும். விடுமுறை நாட்களில், வீட்டையே தலைகீழாக மாற்றி விடும் வல்லமை கொண்ட எங்களுக்கு இந்த ஒழுங்கு ரொம்ப புதிதாகத் தெரிந்தது.
சீனு பொறுமையிழக்க ஆரம்பித்தான். ஒரு நாள், வெளியே வரும்போது, டாக்டரின் செருப்பை கூடவே கொண்டு வந்து விட்டான். மறுநாள், காலை அதே இடத்தில் அதே போன்ற ஒரு புது செருப்பு. அடுத்த நாள், அவரின் டேபிளில் இருக்கும் ஒரு சின்ன தலையாட்டி பொம்மையை எடுத்து வந்தான். மறுநாள், அதே இடத்தில் வேறு ஒரு தலையாட்டி பொம்மை! சீப்பு, பேனா என்று எதை கொண்டு வந்தாலும் அவைகள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும். இத்தனைக்கும் எங்களை சந்தேகித்து, ஒரு கேள்வி கிடையாது!
எங்கள் பஸ் ஷெட்டிற்கு நெரெதிரில்தான் அரசு மருத்துவமனையின் பின்புறக் கதவு. அங்கேதான் பிணப் பரிசோதனை அறை இருந்தது. பிணத்திற்கு எதற்காகப் பரிசோதனை என, நான் அப்போது நிறையப் பேரை கேட்டிருக்கிறேன். பிணங்களை அறுத்து, பின்பு தைத்து புது காடாத்துணியில் சுற்றிக் கொடுக்கும் காசி அண்ணன் எனக்கு நல்ல பழக்கம்.
சோமு டீ கடையில் என்னுடைய நைனாவுக்கு டீ வாங்கி வருவது என்னுடைய முக்கிய வேலை. அங்கே காசி அண்ணன் தரையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பார். பையில் எப்போதும் சில பாட்டில் சாராயம் இருக்கும். பிணங்களை அறுக்கும் கூலிக்கு சன்மானமாக அவருக்கு எப்போதும் சாராயம்தான் தரப்படும். தான் குடித்தது போக, மீதத்தை அங்கே வரும் வெளியூர்காரனுக்கு விற்று விடுவார். அப்படி விற்றால்தான், டீ குடிக்க அவருக்கு காசு! எனவே, அவ்வப்போது நான் டீ வாங்கித் தருவேன்.
அவரிடம் கேட்டேன்!
ஏண்ணே! தினமும் ஸ்கூட்டரில் வருவாரே! அந்த டாக்டரை உனக்குத் தெரியுமா?
ஓ! தெரியுமே.
அவர்கிட்ட விஷ ஊசி இருக்குமா?
கண்டிப்பா இருக்குமே! ஏன் கண்ணு கேட்கிறே? என்றார்.
நான் அதிர்ந்து போய் நின்றேன்.
ஆனா, அந்த டாக்டர் ரொம்ப நல்ல மனுஷன்! என் சர்வீஸ்ல, காசு வாங்காத ஒழுக்கமான டாக்டர் இவர்தான் என்றார்.
அதெல்லாம் என் காதில் ஏறவில்லை!
அன்றிரவு, என் வீட்டு மொட்டைமாடியில் சீனுவுடன் நடந்த முக்கிய ஆலோசனையில், இன்னும் எத்தனை நாளைக்குடா அந்தாள் வீட்டுக்கு போய் நிற்பது என்றேன்.
நீ இந்த விஷயத்தை உன் நைனாவிடம் சொல்லிடுடா! அப்புறம் பாரு! அந்த டாக்டர் தினமும் உங்க ஷெட்டில் வந்து உன் நைனா முன்னாடி, நின்று கொண்டிருப்பான் என்று சொல்லி சிரித்தான்.
அவன், இதை எப்பவோ என்னுடைய பிரச்சனையாக மாற்றி விட்டிருந்தான். அவனோட அம்மா ஒரு நாள் என்னை தெருவில் பார்த்த போது, உன்னோட சைக்கிள் ரிப்பேராகி வந்துருச்சா? என்று கேட்டதற்கு, இன்னும் வரலைக்கா! என்று சொல்லி விட்டேன். அவர்களும், சரி! சரி! வரும்போது வரட்டும். அதுவரை, இவன் சைக்கிளை நீயே வச்சுக்க என்று சொல்லி விட்டார்கள்.
இதுக்கப்புறம், சீனு தன்னோட சைக்கிள் கவலையெல்லாம் என்னிடம் விட்டு விட்டு, என்னுடைய சைக்கிளில், என் கூடவே பள்ளிக்கு சென்று வர ஆரம்பித்து விட்டான்.
அவ்வப்போது, இந்த விஷ ஊசி மேட்டரை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பான். சாதாரணமா எங்க குடும்ப டாக்டர் ஊசி போடுவதற்கே, குறைந்த பட்சம் மூன்று பேர் என்னை பிடிக்க வேண்டியிருக்கும்! அது எப்படிடா, இவர் ஒத்த ஆள் எனக்கு விஷ ஊசி போட முடியும்? என்று சீனுவிடம் கேட்டேன்!
அதற்கு அவன் சொன்ன பதில் இருக்கே! அடடா! உலகக் கற்பனை அது!
டேய்! டாக்டர்கள் எல்லாம் படிச்சு முடிச்சு, காலேஜ்ல இருந்து வெளிய வர அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து நிறைய உறுதி மொழி எடுத்துக்குவாங்கடா! அதிலும் முக்கியமா, ஒருவருக்கு ஒருவர் எப்பவுமே விட்டுக் கொடுத்துக்க மாட்டோம் என்று அவங்கவங்க அம்மா மேல சத்தியம் பண்ணிட்டுதான் காலேஜ்ல இருந்த வெளியவே வருவாங்க! இப்ப! உனக்கு விஷ ஊசி போடணும்னா, அவர் வந்து உனக்கு போட வேண்டியதில்லை! உங்க டாக்டருக்கு ஒரு லெட்டர் போட்டா போதும். மவனே!உனக்கு விஷ ஊசிதான்!
அன்றிலிருந்து நான் ஆத்திகனானேன். மறுநாள் காலையிலேயே குளித்து, பெரிய விபூதிப் போட்டும், நடுவில குங்குமமும் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பூஜையறையில் சாமி கும்பிட்டுக் கொண்டு நின்றிருந்த என்னிடம், என்னடா! புதுசா சாமியெல்லாம் கும்பிடுறே? என்றார் அம்மா. இனிமே எனக்கு எப்பவுமே காய்ச்சல், ஜலதோஷம் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிறேம்மா என்று சொல்லி விட்டு வழக்கம் போல, டாக்டர் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
ஏதோ ஒரு நன்னாளில், சீனுவுக்கு அவனுடைய சைக்கிளைத் திருப்பிக் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அவன் டாக்டர் வீட்டுப் பக்கமே வருவதில்லை. ஆனால், நான்தான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். டேய்! என்னைப் பார்த்துதான், இனிமேல் வரத் தேவையில்லை என்று சொன்னார்! உன்னையில்லை! நீ ஒழுங்கா போயிடுடா! அந்த விஷ ஊசி! ஞாபகமிருக்கட்டும் என்று வேறு சொல்லி விட்டு சென்றான்.
நானும் ஒழுக்கமாக, போய் நின்று கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம், டேபிளில் எனக்காக ஸ்வீட் வகைகள், மிக்ஸர், சேவு வகைகள் தயாராக வைக்கப் பட்டிருக்கும். நிற்பதற்கு பதில், ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொள்ளவும் ஆரம்பித்தேன். அவ்வப்போது, எழுந்து வீட்டினுள் உலா வரவும் தைரியம் பெற்று விட்டிருந்தேன். ஆனால், டாக்டரைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை! தினமும், சரியான நேரத்துக்கு என்னைப் போகச் சொல்வதைத் தவிர வேறு எந்த வார்த்தைகளும் என்னிடம் பேசியதே இல்லை!
காலை வேளையைத் தவிர, வேறு எப்போதும், திருவூடல் தெருவில் நான் சைக்கிளில் செல்வதை நிறுத்தி விட்டிருந்தேன். அந்த சம்பவத்திற்கு பின்பு, வேறு எப்போதுமே சீனு திருவூடல் தெருவிற்கு வருவதில்லை. திருவூடல் தெருவில் திரும்புவதற்கு பதிலாக, நேராக பேகோபுரத் தெருவில் சென்று, பெரியத் தெரு வழியாக பள்ளிக்கு போய் வருவான்.
அப்படித்தான், ஒரு சனிக்கிழமை மாலை, நாங்கள் இருவரும் டியூஷன் போகும் போது, பெரியத் தெரு மேட்டின் திருப்பத்தில், அந்தப் பெரிய கால்வாயின் ஓரத்தில் டாக்டரின் ஸ்கூட்டர் விழுந்து கிடப்பதைப் பார்த்தோம். லேசான இருட்டிக் கொண்டிருந்த வேளையானதால், வேறு யாரும் அதை கவனிக்கவில்லை! அப்போதெல்லாம், பெரியத் தெரு கால்வாயில் காரே விழுந்து விட்டாலும், வெளியேத் தெரியாது! அத்தனை பெரிய அகலமான கால்வாய் அது!
இருவரும், சைக்கிளை போட்டு விட்டு, ஓடிச் சென்று பார்த்ததில், டாக்டர் கால்வாயினுள் விழுந்து கிடந்தார். சீனு பெரிதாக சத்தம் போட்ட பின்பு, அங்கே இருந்தவர்கள் ஓடி வந்து, கால்வாயினுள் குதித்து, டாக்டரை வெளியில் தூக்கினார்கள். அவர் உடுத்தியிருந்த வழக்கமான வெள்ளை பேண்ட், கருப்பு பெல்ட், வெள்ளைச் சட்டை முழுக்க வாந்தி எடுத்து விட்டிருந்தார். அங்கங்கே ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முழுதாக சுய நினவின்றி இருந்ததால், அவர் யார் என்று நாங்கள்தான் அடையாளம் சொன்னோம். சிலர், அவரை அங்கே வந்த ஒரு குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவருடைய வீட்டுக்கு கொண்டு சென்றார்கள்.
ஞாயிறு கழிந்து, திங்கள் கிழமை டாக்டர் வீட்டுக்குச் சென்ற போது வீடு வெளிப்புறத்தில் பூட்டியிருந்தது. செவ்வாய், புதன் என்று தினமும் போய் பார்த்தேன். பின்பு, எப்போதுமே அந்த வீடு திறந்திருக்க வில்லை. பின்னாளில், அடுத்த வீட்டுக்காரர் ஒருவர், இந்த வீட்டை வாங்கி, இடித்து தன் வீட்டுடன் இணைத்துக் கொண்டார். எப்போது, அந்தத் தெருவில் சென்றாலும், தன்னிச்சையாக அந்த வீடிருந்த இடத்தைப் பார்க்க நான் தவறுவதேயில்லை.
அதற்குப் பின்பு வேறெங்குமே, அந்த டாக்டரை நாங்கள் பார்க்கவேயில்லை! எங்களின் வழக்கமான மொட்டை மாடிக் கூட்டத்தில், எப்போதுமே நாங்கள் இருவரும் இதைப் பற்றிதான் பேசிக் கொண்டிருப்போம். ஏன்! பணம் வாங்காமல், சைக்கிளைத் திருப்பித் தந்து விட்டார்?
ஏன்! ஒரு நாள் கூட, சீனுவின் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்லவில்லை?
ஏன்! ஒரு முறை கூட எங்களிடம் வெறெதுவும் பேசவேயில்லை?
ஏன்! ஏழாம் வகுப்புப் படிக்கும் இரண்டு மாணவர்களை இப்படி தினமும் மிரட்டி வர சொல்ல வேண்டும்? இப்படி, பல கேள்விகள் எங்களிடம் இருந்தன!
உண்மையாகவே அவர் விஷ ஊசிப் போட்டிருப்பாரா? என்ற சந்தேகத்தை மட்டும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவேயில்லை.
சீனு, டாக்டர் வீட்டிலிருந்து தான் களவாடியப் பொருள்களையெல்லாம், ஒரு பையில் போட்டு எடுத்து வந்திருந்தான். அவற்றினுள், இந்த ஆங்கில அகராதியும் இருந்தது. அதிலிருந்த ஒரு இன்லேண்டு கடிதத்தை எடுத்து என்னிடம் கொடுத்தான். ஏற்கனவே பிரித்து படிக்கப்பட்டிருந்த கடிதம் அது!
இதை படிச்சுப் பாரு என்றான்! அந்த குறைந்த வெளிச்சத்தில் அக்கடிதத்தை படிக்கத் துவங்கினேன்.
“ மதிப்பிற்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மருமகப்பிள்ளைக்கு,
உங்கள் மாமனார் அநேக ஆசிர்வாதங்களுடன் எழுதிக் கொள்வது,
என்னெவென்றால்,
இங்கு மகள் ஜானகி, பேரப்பிள்ளை சிவக்குமாரன் உட்பட எல்லோரும் சவுக்கியம்!
அது போல் தங்களின் சவுக்கியத்தையும் பெரிதும் வேண்டுகிறேன். இந்நேரத்திற்கு, புதிய இடத்தில் வேலை நன்றாகப் பழகியிருக்கும் என நம்புகிறேன். தாங்கள் வைத்தியம் பார்க்கும் நோயாளிகளின் நலம் வேண்டுவதே எந்நேரமும் என்னுடைய பிரார்த்தனையாக இருக்கிறது.
பேரப்பிள்ளையைகூட, இங்கேயே பக்கத்திலிருக்கும் பள்ளியில், ஏழாம் வகுப்பு சேர்த்து விட்டிருக்கிறோம். அந்தப் பள்ளியில் ஹெட்மாஸ்டர், என்னோட ஸ்நேகிதர் என்பதால், பழைய பள்ளி சான்றிதழ்கூட இல்லாமல் சேர்த்துக் கொண்டுள்ளார்.
நிற்க!
ஜானகி இன்னமும் அப்படியேதான் இருக்கிறாள். சென்ற மாதம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதத்தை படிப்பதற்குக்கூட பிடிவாதமாக மறுத்து விட்டாள். உங்கள் மாமியார்தான், கோவிலுக்கு போயிருந்த போது, கடிதத்தின் சங்கதிகளை அவளுக்கு சொல்லியிருக்கிறாள். அதையும் கூட காது கொடுத்து கேட்கவில்லையாம்!
மன்னிக்கவும்.
அவளுக்கு இன்னமும் கொதிக்கிற பால் தன் முகத்தில் பட்டு விட்டது மறக்கவில்லை! இரவுப் பொழுதுகளில், தூக்கத்தில் தவறாமல் அனத்துகிறாள். பால் நேரத்துக்கு கொதிக்காதது என் தவறா? அதற்குப் போய் யாராவது இப்படி கோபப்படுவார்களா? என்று புலம்பி தீர்க்கிறாள். சின்ன பெண்தானே! ஆம்பிளைகளின் கோபம் எதற்கு வரும்? எப்போது வரும்? என்பது இன்னமும் அவளுக்கு புரியவில்லை.
பேரன் சிவக்குமரனோ, அதற்கும் மேலாகப் பிடிவாதம் பிடிக்கிறான். விளையாட்டு பொம்மையை, விளையாடிய பின்பு எடுத்து அதனுடைய இடத்தில் வைக்காதது பெரியத் தவறுதான். கொஞ்சம் நாள் போயிருந்தால் ஒரு வேளை அப்படியான நல்ல பழக்கங்களைப் பழகியிருப்பானோ? என்னவோ?
தாங்கள் அவனைத் திருத்த வேண்டி, அந்தப் பிள்ளையை அடித்ததையெல்லாம் இன்னமும் மறக்காமல், படுத்தியெடுக்கிறான்.
உங்களின் போட்டோவைப் பார்த்தாலே, ஜன்னி கண்டு உடலெல்லாம் வெதிர்ப்பதால், வீட்டுக் கூடத்தில் மாட்டியிருந்த உங்களின் கல்யாண போட்டோவைக்கூட கழற்றி உள்ளே வைத்திருக்கிறோம்.
மன்னிக்கவும்.
நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது. நல்ல ஒழுக்க குணங்களும், கண்டிப்பும், நேர்மையும் கொண்ட உங்களை என்னுடைய மருமகனாக்கிக் கொடுத்தது, என் பிரார்த்தனைக்கு இறைவன் கொடுத்தக் கூலி என்று எண்ணி சந்தோஷமடைந்திருந்தேன்.
ஆனால், நான் பெற்ற பெண்ணோ, அவ்விதமான நற்குணங்களை போற்றத் தெரியாப் பெண்ணாயிருக்கிறாளே! நான் என்ன செய்யப் போகிறேன்?
எனக்குக் கல்யாணமாகி ரொம்ப வருஷம் கழிச்சுப் பிறந்த ஒரே பெண் என்பதால், மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்து விட்டிருக்கிறேன்.
இப்பவும் கூட, அவளிடம் மாப்பிள்ளையிடம் போய் சேர்! என்று கடுமையாகச் சொல்ல எனக்கு வாய் வரவில்லை! அம்பாளே பார்த்து அவளுக்கு நல்ல புத்தி கொடுக்கும் வரை தாங்களும் பொறுத்திருக்குமாறு உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
அநேக கோடி ஆசிர்வாதங்களுடன்,
S.வைத்தியநாதன்.
எனக்கு ஒண்ணும் புரியவில்லை! உனக்காவது ஏதாச்சும் புரிந்ததா என்று என்னைக் கேட்டான் சீனு!
அவன் கேட்ட போது, எனக்கும் கூட ஒன்றும் புரிந்திருக்கவில்லை.
ஆனால், இப்போது, அந்த டாக்டரின் வயது எனக்கு! இன்று, எனக்கு அந்தக் கடிதத்தில் புரிந்து கொள்ள சில செய்திகள் இருந்தன. கடிதம் எழுதப்பட்ட தேதியைப் பார்த்தேன். நாங்கள் டாக்டரை சென்று பார்த்துக் கொண்டிருந்த காலத்திற்கும், ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.
தினமும் எங்களை, அவரின் வீட்டிற்கு வரவழைத்துக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்ததின் காரணம், வெறும் ஐந்து நாட்களாக மகனைப் பார்க்காமல் இருப்பதற்கே, பதைத்துப் போயிருக்கும் எனக்கு இப்போது புரிகிறது.
இப்போது டாக்டர் இல்லை! சீனுவும் இல்லை!
மனித வாழ்வின் மாபெரும் சோகமான புத்திர சோகத்தின் மவுன சாட்சியாக அந்தக் கடிதமும், எனது பால்ய கால நினைவுகளும் மட்டுமே என்னிடம் இருக்கிறது.
இப்போது கூடுதலாக, இந்தக் கதையும்.

3 thoughts on “சீனுவின் சைக்கிள்

  1. எடிட் செய்யாமலேயே வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. விகடனில் பெரிய சிறுகதை(?)யாக இருந்தால் கூட சற்றே பெரிய சிறுகதை என வெளியிடுவார்கள்!
    என்னவானால் என்ன!
    விகடன் கொண்டான் என்ற பட்டத்தை இக்கணம் உங்களுக்கு அளிக்கிறேன்! :)

  2. பிரசுரமான கதையைவிட இது சிறப்பாக உள்ளது. இதை உங்கள் வலைத்தளத்தில் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு.

  3. Sir,
    Superstory…..very interestingly to read what will happn next……..please keep on writing……soon publish a book sir written by U.

Comments are closed.