நான் கார்ட் தேய்த்த கதை

நான் கார்ட் தேய்த்த கதை

#Cashless இந்தியா
சின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார்.
அன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் சிலைகள் விற்கும் கடை எங்களை ஈர்த்தது.
முதலில் ஒரே ஒரு சின்னதாக தவழும் குழந்தை கிருஷ்ணர் சிலை வாங்கத் துவங்கி அது சற்றேப் பெரிய ராதாகிருஷ்ணன் சிலை வரை நீண்டு கொண்டுச் சென்றது. கடைக்காரரிடம் எனது கையில் கேஷ் இல்லை. கார்ட் வாங்கினால்தான் நான் பொருள் வாங்குவேன் எனத் தெளிவாகப் பேசியப் பிறகே ஷாப்பிங்கை துவக்கியிருந்தேன். பில் தொகை மொத்தம் 9600 ரூபாய்.
கார்டை எடுத்து நீட்டினேன். கடைக்கார இளைஞன் இறங்கி வந்து செருப்பை மாட்டிக் கொண்டு, வாங்க போகலாம்! என்றான்.
எங்கே? என்றேன் திடுக்கிட்டு.
இதோ, பக்கத்துலே இருக்குற எங்க மாமா கடைக்கு. அங்க கார்டு மெஷின் இருக்கு.
அவன் நிலைமை புரிந்தது.
சரி! வா.. போகலாம் என்று புறப்பட்டேன்.
அது ஒரு குன்றின் மீதேறிச் செல்லும் சிறிய சாலை. இருமங்கிலும் கடைகள் அடைத்துக் கொண்டிருந்ததால், பார்க்கும்போது உயரம் தெரியாது. சிறிது தூரத்திலேயே எனக்கு மூச்சு வாங்கியது. அவனுக்கோ பெரிய வியாபாரத்தை செய்து முடித்த உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்தான்.
நம்ம பிரதமர் எவ்வளவு பெரிய மனுஷன்! அவரே நம்ம நாட்டு மக்களிடம் தனது சீர்திருத்த முயற்சிகளுக்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார். நம்ம பிரதமருக்காக இந்த மேட்டைக் கூட ஏறக்கூடாதா? எல்லையிலே எவ்வளவு ராணுவ வீரர்கள் இதைவிட எத்தனைப் பெரிய மேடுகளை ஏறுகிறார்கள் என யோசித்துக் கொண்டு மேடு ஏறும்போதே மாமா கடை வந்துவிட்டது.

மாமா இல்லை. கார்டு மெஷின் இருந்தது.
ஆனால், கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கடைப்பையன் சாவியைத் தர மறுத்து விட்டான். இவன் சிறிது நேரம் மராத்தியில் அவனுடன் போராடிப் பார்த்துவிட்டு, என்னிடம் ஹிந்தியில் இவன் மாமாவோட சின்னவீட்டுப் பையன். அதான் தரமாட்டேங்குறான். எங்க மாமா இருந்திருந்தா கடை சாவியே என்னிடம் தருவார் என்றான். அவனோட ஹிந்தி எனக்குப் புரிந்ததை விட அந்தப் பையனுக்கு நன்றாகப் புரிந்தது. சட்டென அவன் கல்லாப்பெட்டியின் மீது அமர்ந்து கொண்டான்.
இனி பேசிப் பயனில்லை.
நீங்க வாங்க அண்ணா. எங்க பெரியப்பா கடையிலே பில் போட்டுறலாம் எனப் புறப்பட்டான்.
அது எங்கே?
அதோ! என அவன் கைகாட்டியது இன்னொரு குன்று.
நான் பேசவதற்குள் அவன் ஏற மன்னிக்கவும், ஓட ஆரம்பித்து விட்டான்.
உச்சிவெயில். வேர்த்து கொட்டுகிறது. இந்த மாசத்துலே பாம்பே பக்கம் குளிரா இருக்கும்.. ஸ்வெட்டர் எடுத்துக்கோன்னு எவனோ சொன்னானே! அது யாருன்னு யோசிச்சிட்டே நடக்க ஆரம்பித்தேன்.
இது நிஜமாவே பெரிய குன்று. நேற்றெல்லாம் எல்லோரா குகைகளை நடந்து அலசி ஆராய்ந்ததில் பழுதுபட்டிருந்த கால்களில் ஒற்றைக் கால் நரம்பு ஒன்று இழுக்க ஆரம்பித்தது.
நம்ம நாடு முழுக்க டிஜிட்டல் இந்தியாவா ஆகிட்டா, கருப்புப் பணம் மொத்தமா ஒழிஞ்சுரும்னு நம்ம பிரதமர் சொல்லியிருக்காரே! கருப்பப் பணம் இல்லைன்னா, நாம யாருக்கும் லஞ்சம் தர முடியாது. நாம தரலைன்னா சின்னது முதல் பெரியது வரை மொத்த ஊழலும் ஒழிஞ்சுருமே! ஆஹா.. ஊழல் இல்லாத இந்தியா. இதுவல்லவோ ராமராஜ்யம். அதிலே வாழ நாம இந்த மேடு என்ன? இமயமலையே ஏறலாமேன்னு நினைப்பு வந்தவுடனே உடம்பெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது.
பாரத் மாதா கீ ஜே! என கத்தியபடியே ஓடிச் சென்று அவனைப் பிடித்துவிட்டேன்.
பெரியப்பா கடையில் பெரியப்பாவைத் தவிர மத்த எல்லாப்பேர்களும் இருந்தார்கள்.
ஒரு ஏழெட்டுப் பேர் சுற்றிலும் அரை வட்டமாக தரையில் அமர்ந்து கொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவனைப் பார்த்தவுடன் நிஜமாகவே மகிழ்ச்சியுடன் ஆவோ..ஆவோ.. என வரவேற்றனர். கடைக்காரத் தம்பி என்னை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
அனைவரும் எழுந்து நின்று என்னை வரவேற்று உட்காரச் சொன்ன பணிவு பிடித்திருந்ததாலும், அதற்கு மேல் நிற்க முடியாதளவு முதுகு வலித்ததாலும் நானும் அவனுடன் உள்ளே சென்று அரைவட்டத்தை முழுவட்டமாக்கினேன். அவர்கள் தந்த ஒரு கோப்பை டீயை அருந்தியபடியே எனது கண்கள் கார்டு ஸ்வைப்பிங் மெஷினைத் தேட ஆரம்பித்தது.
எல்லோரும் அதைத் தவிர மத்த எல்லா கதைகளும் பேசத் தொடங்கினர். அடேய்! என் வேலையை கவனிச்சு அனுப்புங்கடா என்று சொல்லுமளவு எனது ஹிந்தி ஒத்துழைக்காததால் இறுக்கமா அமர்ந்திருந்தேன்.
அங்கிருந்து ரெண்டு மலைக்கு கீழே எங்கேயோ எனது குடும்பத்தை தனியா நிற்க வைத்துவிட்டு நான் இங்கே வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன். திருப்பி அனுப்பிச்சாகூட தனியா போக வழியா தெரியாதேன்னு நினைச்சவுடனே எனக்கு கண்கள் கலங்க ஆரம்பிச்சிடுச்சு.
ஒரு கார்ட் தேய்க்கிறது எவ்ளோ சிம்பிளான வேலை! எத்தனை முறை தேய்ச்சிருக்கோம்! நம்ம பிரதமர்கூட அது ரொம்ப சிம்பிள்னு சொன்னாரே! நமக்கு மட்டும் ஏன் இப்படி இவ்ளோ கஷ்டமாயிருக்குன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது நம்ம கடைபையன் கார்டு மெஷின் எங்கேன்னு கேட்டான்.
அப்படியொரு சிரிப்பை நான் கேட்டதேயில்லை. நான் திடுக்கிட்டுப் போகும்படி அத்தனைப் பேர்களும் வெடிச்சுச் சிரிச்சாங்க.
அதிலே ஒருத்தன் அங்கே ஒரு மூலையிலே சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு ப்ளாஸ்டிக் பையைக் காட்டினார்கள். இவன் எழுந்து போய் பிரிச்சுக் கொட்ட, அதிலிருந்த சிலபல பாகங்களாக ஒரு ஸ்வைப்பிங் மெஷின் கொட்டியது.
அவனுங்க சிரிச்சு, சிரிச்சு சொன்னது இதுதான்.
ரெண்டு வாரத்துக்கு முன்னர், பெரியப்பா தனது 80 ஆண்டுகால வியாபார அனுபவத்துக்குப் பிறகு காலத்தின் கட்டாயமாக ஒரு ஸ்வைப்பிங் மெஷின் வாங்கியிருக்கார். பதினஞ்சு நாள் கழிச்சு கார்டு மெஷின் தந்த வங்கிக்கு நேற்று சென்று அதுவரையிலும் வியாபாரமான தனது பணத்தைக் கேட்டிருக்கார்.
அங்க ஒரு அதிகாரி, பெருசு! இது பேங்க். ஒன்வேதான். நீங்க எவ்ளோ பணம் வேணும்னாலும் கட்டலாம். ஆனா, நாங்க எந்தப் பணத்தையும் தரமாட்டோம். வேணும்னா ஆர்டிஜிஎஸ், டிடி, பே ஆர்டர்னு கேளுங்க! தரோம்னுருக்கார்.
பெரியப்பா, நேரா கடைக்கு வந்து ஸ்வைப்பிங் மெஷினை எடுத்து தெருவிலே விட்டெறிஞ்சுருக்கார். இவனுங்க ஓடிச் சென்று பொறுக்கிக் கொண்டு வச்சதுதான் இந்த மீதி பாகங்கள்.
பையன் புறப்பட்டான்.
நானும் எழும்போது, நம்ம பிரதமர் ஒவ்வொரு படித்த இளைஞனையும் அருகில் இருக்கும் படிப்பறிவற்றவர்களுக்கு #cashless இந்தியா குறித்தும், ஸ்வைப்பிங் மெஷின் பயன்படுத்துவது குறித்தும் கற்றுத்தரச் சொன்னது நினைவுக்கு வந்தது. இன்னும் சற்று நேரம் இருந்து பெரியப்பா வந்தவுடன் அவருக்குப் புரியும்படி விளக்கிட்டுப் போகலாமான்னு ஒருகணம் சிந்திதேன்.
என் குடும்பம் எனது கண்ணில் வர, நானும் அவனுடன் புறப்பட்டேன்.
அண்ணே! வழியிலே என் ஃப்ரெண்டு கடையிலே பில் போட்டுட்டுடலாம்னான்.
நான் திரும்பி இன்னொரு குன்று இருக்கான்னு மேலே பார்த்தேன்.
இல்லையில்லை. போற வழிதான்னு கீழே இறங்கினான்.
ஃப்ரண்டு கடை பூட்டியிருந்தது. வியாபாரம் இல்லையாம்! சினிமாவுக்குப் போயிருக்கான்னு சொன்னார்கள். சரி! டிஜிடல் இந்தியாவில் இதுவும் ஒரு கட்டம் போலிருக்குனு நினைச்சுக்கிட்டேன்.
பிரதமர் கேட்ட அந்த 50 நாள் முடிய இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு மனக்கணக்குப் போட ஆரம்பித்தேன். போனமாதம் 8 ம்தேதி என்றால், இந்த மாதம் 8 வரை 30 நாள். பதினெட்டு வந்தா 40 நாட்கள். தேதி இருபத்தெட்டு வந்தா ஆயிடும் அந்த 50 நாட்கள். அப்புறம் சுத்தமா பிரச்சனை இருக்காதுன்னாரே? என யோசிச்சிட்டே கீழிறங்கி புறப்பட்ட இடத்துக்கே வந்து விட்டேன்.
மனைவி,மகள்,மகன் அனைவரும் நலம்.
தான் செய்த வியாபாரம் போயிடுமேன்னு இப்போது கடைக்காரப் பையன் நிஜமாவே கலவரமாயிட்டான்.
அதற்குள் பொருட்களை காரில் கொண்டு வைத்திருந்த எங்கள் டிரைவரிடம் அவற்றைத் திரும்பக் கொண்டு வரச் சொல்ல நினைக்கும்போது, டிரைவரே, சார்! என்கிட்ட 8000 ரூபாய் இருக்கு., அப்புறமா எனக்கு அனுப்பிச்சுடுங்க என்றபடி தந்தார்.
எங்களிடம் மீதமிருக்கும் பணத்தையெல்லாம் சேர்த்து ஒருவழியாக 9,600 ரூபாய் தாள்களை எண்ணி அவனிடம் தந்து விட்டுப் புறப்பட்டோம்.
கடைக்காரப்பையன் பின்னாடியே தெருவுக்கு ஓடிவந்து இருகரங்களையும் கூப்பி என்னிடம் மன்னிப்புக் கேட்டதோடு, சட்டென என் மனைவியின் காலைத் தொட்டு வணங்கியதைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.
இந்தப் பணிவும் பண்பும் நம் மக்களிடம் இருக்கும்வரை நம் தேசத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரித்த (விரும்பிய) எந்தப் புரட்சியும் வரவே வராது எனத் தோன்றியது.
இந்த இளைஞனுக்காவாவது நீங்கள் உறுதியளித்த அந்தப் புதிய ஊழலற்ற இந்தியாவின் ஒரு பாதியையாவது எங்களுக்குத் தாருங்கள் பிரதமரே!
உங்களின் ஒற்றை வரி உத்தரவுக்குக் கட்டுப்பட்டு முற்றும் முழுவதுமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தும்கூட, பொறுமை காக்கும் எளிய மனிதர்களுக்கான குறைந்தபட்ச நன்றியாக அது மட்டுமே இருக்க முடியும்.
– எஸ்கேபி. கருணா

11 thoughts on “நான் கார்ட் தேய்த்த கதை

  1. இந்த இளைஞனுக்காவாவது நீங்கள் உறுதியளித்த அந்தப் புதிய ஊழலற்ற இந்தியாவின் ஒரு பாதியையாவது எங்களுக்குத் தாருங்கள் பிரதமரே!
    உங்களின் ஒற்றை வரி உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத் தங்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுவதுமாக இழந்தும்கூட, பொறுமை காக்கும் எளிய மனிதர்களுக்கான குறைந்தபட்ச நன்றியாக அது மட்டுமே இருக்க முடியும்.

  2. Really Suberb sir , no words to describe I enjoyed the whole article thanks a lot . Keep going :(

  3. நல்ல பகடி சார்…மோடி ஜீ நமோன்னு சொல்லிட்டு போவோம் இல்லனா தேச பக்த் எல்லாம் ராணுவ வீரர்கள்னு ஆரம்பிப்பாங்க..
    சிறப்பான கட்டுரை சார்

  4. ஆஹா…. இன்னைக்குத் தான் கண்ணில் பட்டது. (ஏடிஎம் வாசல்கள்லயே நின்னுட்டிருந்ததாலன்னு சொல்ல ஆசை தான்!)
    உங்களோட அந்த நகைச்சுவை உணர்வை மட்டும் விட்டுறாதீங்க. நான் மறுபடியும் துபாய்க்கே போறேன்.

  5. நவம்பர் 8 கதைகள்
    என்ற புது தொகுப்பு கொடுவரலாம் … ,,

Comments are closed.