ததும்பும் நீர் நினைவுகள்

ததும்பும் நீர் நினைவுகள்

 
நீரின்றி அமையாது….  
 
நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் பழகிப் போய்விட்டது.
என் மகள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் ஓடியாட வசதியாகவும், பல ரக வெளிநாட்டு கிளி வகைகள் மற்றும் குருவி வகைகளுக்கான இயற்கையான கூண்டு அமைக்கப் பட்டிருக்கும் இடமாக இப்போதைய இடம் அமைந்திருப்பது ஒரு கூடுதல் வசதி.
அங்கு இருக்கும் சில பெரிய வேப்பமரங்களில் வசிக்கும் பல நூறு பச்சைக் கிளிகள், உடன் வசிக்கும் அரிய செம்போத்து பறவைகள், அருகில் இருக்கும் குன்றில் இருந்து கொண்டு எந்நேரமும் எங்கள் வீட்டையே சுற்றி வரும் நூற்றுக்கணக்கான குரங்குகள், அபூர்வமாக பெரிய மலையில் இருந்து இறங்கி வந்து இங்கே காலார நடை பயிலும் சிங்க முக குரங்குகள், ஏராளமான மைனாக்கள், எந்நேரமும் சர்வ நிச்சயமாக பார்க்க முடியும் மரங்கொத்தி பறவைகள், நெற்பயிர் நிலமெங்கும் அமர்ந்திருக்கும் கொக்குகளும், சில நாரைகளும்..என நான் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நேரில் பார்த்தால் மட்டுமே உங்களால் நம்பமுடியும்.
காலை, மாலையில் எனக்கான நடைப் பயிற்சி செய்ய ஏராளமான இடம், சுத்தமான காற்று, எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் பறவைகளின் சத்தம், அதற்கு பல நூறு தென்னை மரங்களின் தலையசைப்புகள், மாலை சூரியனின் இளம் சிவப்பு, இரவினில் தவளைகளின் பெரும் சத்தம் என இந்த இடம் எனக்கான குட்டி சொர்க்கம்.
ஒவ்வொரு நாளும் நான் பணி முடிந்து திரும்பி வீட்டுக்கு வருவது, எனக்கு ஒவ்வொரு முறையும் விடுமுறைக்காக புதுப்புது இடத்துக்கு செல்வதைப் போன்ற ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. நகருக்கு மிக அருகில் இருந்தும் கூட, ஒரு வசீகரமான தனிமையை தன்னிடம் தக்க வைத்திருக்கும் எங்கள் பண்ணை தோட்டம்தான் இப்போதைக்கு என்னுடைய மனம் கவர்ந்த இடமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இதே தோட்டத்தில்தான், எனது அப்பா அம்மா புதைக்கப்பட்ட சமாதிகள் இருப்பது ஒரு முக்கியமான, உணர்வுபூர்வமான காரணம் ஆகும்.
இந்த பண்ணைத் தோட்டத்தினிலேயே, எனக்கான ஒரு புதிய வீடு கட்டுவதாக ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் துவக்கப் பட்டிருக்கின்றன. புதிதாக கட்டப்பட இருக்கும் புதிய வீடு, நவீனமாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும், விசாலமாக, காற்றோட்டமாக, பசுமை வீடாக, வாஸ்து தோஸ்து என இன்னும் என்னன்னமோவாக எல்லாம் இருக்க வேண்டும் என அனைவரும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நான், இந்த இடத்தினில் ஏற்கனவே கிடைக்கும் நிறைய காற்று, சூரிய வெளிச்சம், ஏராளமான ஆகாயத்துடன், நல்ல நீர்வளமும் இருக்க வேண்டும் என மிகவும் விருப்பப் பட்டேன். இரண்டு மிகப் பெரிய கிணறுகள் இங்கு அமைந்திருந்தாலும் கூட, வீடு அமைய இருக்கும் இடத்தினிலிருந்து வீட்டுக்குத் தேவையான அளவு சுத்தமான நிலத்தடி நீர் ஆழ்துளை மூலம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை.
ஒரு மாபெரும் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் என்பதால், வேண்டும் இடத்தினில் எல்லாம், வேண்டிய நீர் கிடைக்கும் என்ற நிலை இங்கு இல்லை. பாறைகளுக்கு இடையேயான நீரின் ஓட்டத்தை துல்லியமாக கணித்து சொல்ல இன்னமும் எந்த அறிவியலும் உத்தரவாதம் அளிக்க வில்லை. எங்கள் ஊரின் நில அமைப்பில்,பொதுவாக, அறுபது அடி முதல், நூற்று இருபது அடிக்குள் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், அப்படி நீர் கிடைக்கவில்லையென்றால், பின் எத்தனை அடி உள்ளே சென்றாலும் நீர் கிடைக்காது என்றும் அனுபவசாலியான எனது மாமா சொல்வார்.
சென்ற வாரத்தில் ஒரு நாள், ஆழ்துளை கிணறு அமைக்கும் இரண்டு இராட்சத வண்டிகள் வரவழைக்கப் பட்டன. முதல் முயற்சியாக வடகிழக்கு மூலையில் ஒரு இடத்தினை தேர்வு செய்து பூமியை துளைத்தனர். முதல் அடி முதல் நானூறு அடி வரை கருங்கல்லின் மிகச் சன்னமான தூள்கள் மட்டும் வந்து கொண்டே இருந்தது. நீரைக் காணோம். முதல் முயற்சி தோல்வி.
அடுத்து இடம் தேர்வு செய்யப் பட்டு மீண்டும் ஒரு முறை பூமி துளைக்கப் பட்டது. கீழே முழுவதும் பாறை இருக்கிறது என்பது மீண்டுமொருமுறை உறுதி செய்யப் பட்டது.
லேசான மனசோர்வு தலை காட்டத் துவங்கியது. எனது தங்கை தொலைபேசியில் அழைத்து, கவலைப் படாதே! நம் குடும்பத்துக்கு எப்போதுமே தண்ணீர் இராசி உண்டு! சீக்கிரம் கிடைத்து விடும் என்று ஆறுதல் சொன்னார்.
அங்கே தண்ணீர் எடுத்தே தீர வேண்டும் என்பதில் எனது மாமாவுக்கு மிகுந்த முனைப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கு பூமியின் கீழே நமது கண்ணுக்குத் தெரியாத நிலப்பரப்பின் நிதர்சனங்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
பிறகொரு நாள், ஒரு நல்ல காலை வெளிச்சத்தில், தெளிந்த மனத்துடன் நானும், அவரும் ஒன்றாக அங்கு சென்றடைந்தோம். மீண்டும் ஆழ்துளை இடுவதற்காக அங்கு அனைவரும் தயாராக காத்திருந்தனர். நீயே சென்று, உன் விருப்பப் படி இரண்டு இடத்தை தேர்வு செய் என்று எனது மாமா என்னிடம் சொன்னார். மனம் போன போக்கில் ஒரு இடத்தை சொல்லி இங்கே போடுங்கள் என்று சொன்னேன். வேலை ஆரம்பிக்கப் பட்டது.
அனைவரும் ஆர்வத்துடன் அந்த வெண்ணிறப் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனது மாமா துளையிடும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பூமியின் நில அமைப்புக்கேற்ப துளையிடும் சத்தம் மாறும் என்பது அவரின் அவதானிப்பு. நான் மட்டும், இந்த இடத்தினில், இப்போது தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், இங்கே வீடு கட்டும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும் என அந்தக் கணத்தில் தீவிரமான முடிவெடுத்தேன்.
பளீரென்ற அந்த சூரிய வெளிச்சத்தில் மலையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு நாரைக் கூட்டத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கணத்தில், எனக்கான நீரின் சத்தம் எனது ஆழ்மனதுக்குள் கேட்டது. துல்லியமான அந்த நீரின் அலசல் அந்தக் கணத்தில் துளையிடப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியின் உள்ளிருந்தும் கேட்கத் தொடங்கியது.
பாறைகளினூடே தண்ணீரை அந்த இயந்திரம் தொடும் சத்தம் கேட்டு மாமா எனது தோளை இறுகிப் பிடித்துக் கொண்டார். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரின் முகத்திலும் வெளிச்சம் புன்சிரிப்பாய் மலர்ந்து கொண்டிருந்தது.
ஏதோ ஒரு மாயக் கணத்தில், எனது தாய் தந்தையின் ஆசியுடன், அந்த பூமியிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. பாறை, நீர், பாறை, நீர் என மாறி மாறி தண்ணீர் கட்டுக்கடங்காமல் பொங்கி பொங்கி வந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அங்கே அனைவரிடமும் நிலவிய உற்சாகத்தினை என்னால் எழுத்தினில் கொண்டு வர முடியாது.
என் மாமா என்னை இறுகக் கட்டிக் கொண்டார். உனக்கு ரொம்ப நல்ல தண்ணீர் ராசி இருக்குடா கண்ணு! நமக்கு வேண்டும் போதெல்லாம் தண்ணீர் கிடைத்திருக்கிறது என்று தமது பழைய அனுபத்தையெல்லாம் நினைவுப் படுத்திச் சொன்னார்.
நூறு அடிக்கு மேலேயே அங்கு துளையிட முடியாத அளவுக்கு தண்ணீர் வந்து விட்டது. போதும் என்ற அளவுக்கு தண்ணீர் கிடைத்து விட்டாலும், எதற்கும் இருக்கட்டும், இன்னொரு இடத்தைக் காட்டு என்றார்கள். நேரெதிர் திசையை சொன்னேன். அங்கும் பிறகு ஏராளமான தண்ணீர் கிடைத்தது.
சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, காலணிகளை கழற்றி விட்டு விட்டு பொங்கி வரும் நீரின் அருகே சென்றேன். சற்று செந்நிறமாக, குளிர்ச்சியாக இருந்த அந்த நீரை எனது இரு கைகளினாலும் அள்ளிக் கொண்டேன். தண்ணீரின் மேலே வானமும், தண்ணீரின் உள்ளே பூமியையும் என்னால் பார்க்க முடிந்தது. சட்டென ஒரு கை நீரை அள்ளிப் பருகினேன்.
இனி, அது எனக்கும் எனது சந்ததிக்குமான உயிர்நீர்.
 
 
 
 
 
 
 
 
 

6 thoughts on “ததும்பும் நீர் நினைவுகள்

  1. அழகிய அமைதியான இடத்தில் வசிக்க ஆசைப் படுவதே அபூர்வமாகிவிட்ட இந்நாட்களில், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
    அதிலும் நீர் வரும் இடத்தில் புது வீடு, ‘ஆல் தி பெஸ்ட்’ வாழ்த்துக்கள்.
    பதிவு மனதை தொட்டது..
    வணக்கம்.

  2. உலக நீர் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் உங்களின் நீர் ராசி அதிசயம் தான் :)

  3. அன்பான கருணா,
    நீங்கள் வீடிருக்கும் சூழல் நன்றாக பரிச்சயமானாலும் எல்லோரையும் ஏங்க வைக்கும் வார்த்தைப்ரயோகம்.மனிதம் அந்த அற்புத இடம் நோக்கி இயற்கையை நோக்கிப் பயணப்பட வேண்டியிருக்கிறது.
    ‘உயிர் நீர்’ படித்துவிட்டே எழுத நினைத்து வேறொரு இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். மொழி உங்கள் காலடியில் ஒரு பதுங்கின விலங்கினைப் போல, சுருண்டு கிடக்கும் பாம்பினைப் போல எப்பொதும் சீறக் காத்திருக்கிறது. வாசிப்பின் உச்சம் முகிழ்ந்து எழுத்தாய், சொற்களாய், வரிகளாய்,நினைவுகளாய், சித்திரங்களாய் விரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
    மலையின் மீது பறக்கும் நாரைக்கூட்டங்களுக்கிடையில் எனக்கான நீரின் சப்தத்தை என் ஆழ் மனதும், துல்லியமான நீரின் அலசல்(அற்புதமான வார்த்தை) பூமிக்குள்ளிருந்தும் கேட்டது என்ற வரிகள் ஒரு பெரிய கேன்வாஸில் வரையப்பட்ட ஓவியம். எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள் கருணா.

  4. waaaw, this is very beautiful!! I was almost transported to the exact location and felt myself immersed with the joy of finding water amidst the rocks!! Great experience!!
    Good writing style – and the flow is very good!!!
    Ancient times, tribals were gifted with this capacity to identify water…. its an intuitive blessing for the one who is blended with nature!!! I
    Great Mr. Karuna!!! Good luck for your new house!!!

  5. எழுத்தாளருக்கு என் பணிவான மாலை வணக்கங்கள் நீங்கள் நிறையவே புத்தகங்களுடன் அளவளாவி இருப்பவரென்பது தங்கள் வர்ணிக்கும் வரிகளிலே காணக்கிடைத்துவிட்டது . எங்களை மேலும் படிக்கவும் எழுதவும் தூண்டும் தங்களது சிறுகதைக்கும் தங்களுக்கும் கோடி நன்றிகள் அய்யா…

Comments are closed.