நைனா…..
நேற்று மீண்டும் அப்பாவைப் பற்றி பேச்சு வந்தது எங்களின் உரையாடலில். சமீபகாலமாக அதுவும் என் நண்பர் பவா செல்லதுரையின் அப்பாகட்டுரை படித்ததில் இருந்து இந்த நினைவுகளும், அதன் தொடர்பான பேச்சுக்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. குளத்தின் அடி ஆழத்தில் உள்ள மாசுபடாத நீரை தன் தேவைக்கு வெளியே கொண்டு வரும் நீர்த் தாவரம் போல மனது அவர் தொடர்பான நினைவுகளை வெளிக் கொணரத் தொடங்கியுள்ளது. நான் பேசும்போது அந்நீர் திவலைகள் என் கண்களிலும் தென்பட ஆரம்பிக்கிறது.
எழுதலாம் என்ற எண்ணமும், எழுதியே தீர வேண்டும் என்கிற பவாவின் தொடர்ந்த தூண்டுதலுக்கும் பின் எழுத ஆரம்பிக்கிறேன். எதை சொல்ல? எதை விட.
அவர் தொடர்பான நினைவுகள் அத்தனையும் வரிசைப்படி எழுதிவிட முடியாது. அது ஒருவேளை அவரின் சரிதையாக மாறி விடலாம். அல்லது எனது சுய சரிதையின் ஆரம்பமாகவும் போய் விடலாம். அல்லது எனது மகனின் எதிர்கால வாழ்விற்கு ஒரு கட்டுப்பாட்டுக் கோடாகவும் மாறிப் போய்விடலாம்.மூன்றுமே நான் விரும்புவது அல்ல என்பதால், அவரின் நினைவுகளை என் போக்கிற்கு பல்வேறு நிகழ்ச்சித் தொகுப்புகளாக எழுதலாம் என்றிருக்கிறேன்
என்னைத் தவிர அவரிடம் வேலை செய்த, அவரை அறிந்த மற்ற எல்லோராலும் அப்பா என்று அழைக்கப்பட்டு , நான் மட்டும் நைனா.. என்று அழைத்த அந்த மனிதரைப் பற்றி வரும் நாட்களில் எழுதுகிறேன்.