சாமந்தி

சாமந்தி

முனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தார். அப்படி ஒரு காட்சியினை அவர் தனது வாழ்நாளில் கண்டதும் இல்லை! கேட்டதும் இல்லை! என்ன மாமா இது? பெரிய கூத்தா இருக்கு! என்றபடி அருகில் வந்து நின்றான் பக்கத்து நிலத்துக்காரன். அந்த மழை நாளின் அதிகாலையில் இன்னமும் லேசாக தூறல் தூறிக் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அந்தக் காட்சியைப் பார்க்க ஊரே வந்து விடும்.
தனது வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு, அந்த சகதியில், நிலத்தில் இறங்கி அதன் அருகில் சென்று பார்த்தார். கரும்பு நட்டிருந்த தளைக்கும், சாமந்திப் போட்டிருந்த தளைக்கும் நேர் குறுக்கில் அந்த இராட்சதக் குழாய் சரிந்து விழுந்திருந்தது. குழாயின் அருகில் சென்று பார்க்கும் போது, அது இன்னமும் பிரம்மாண்டமாக தோற்றமளித்தது. ஒரு ஆள் முழுசாக உள்ளே நின்று கையைத் தூக்கலாம்! அத்தனை அகலம் இருந்தது! நீளமோ, எப்படியும் நாற்பது அடி இருக்கும். முனுசாமி இன்னமும், நடந்ததை நம்ப முடியாமல் தலையை உயர்த்திப் பார்த்தார். அந்தக் குழாயை ஏற்றி வந்த அந்த இராட்சத லாரி, ஒன்றும் தெரியாதைப் போல அப்பாவியாக, சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது.
முனுசாமிக்கும், அவரது தம்பிக்குமான அந்த எட்டு ஏக்கர் நிலமும், இன்னமும் பாகம் பிரிக்கப் படாமலேயே இருந்து வருகிறது. அதுவும், அவரது தம்பி இறந்து போய், தம்பி மகன், வாத்தியார் வேலை கிடைத்து குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்ற பிறகு, இரண்டு பேர் பாகத்திலும், இவரேதான் பயிர் வைத்து பராமரித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில்தான், அவர்களுடைய நிலத்துக்கு நேர் குறுக்கில் புதிய பை பாஸ் சாலை ஒன்றினைப் போட்டு, அரசாங்கமே பாகம் பிரித்து வைத்தது. சாலை என்றால், வெறுமனே சாலை அல்ல! பத்தடி உயரத்திற்கு மண்ணைக் கொட்டி உயரமாக்கி, கீழிருந்து பார்த்தால், வாகனங்கள் ஏறக்குறைய விண்ணுக்கு அருகில் மிதந்து சென்றன!
முனுசாமி, அதிர்ச்சியுடன், தனது கண்களில் ஈரம் கட்ட, அந்தக் குழாயைச் சுற்றி வந்து பயிர் சேதத்தைப் பார்த்தார். ரோட்டை ஒட்டி கீழ் தளையில் போடப் பட்டிருந்த சாமந்திச் செடிகள் ஏறக்குறைய எல்லாமும், ஒரு பாதி குழாயின் கீழே சிக்கிக் கொண்டிருந்தன! இன்னும் ஒரு வாரத்தில் பூ கட்ட இருந்தச் செடிகள் அவை! குழாயின் இன்னொரு பாதி, கரும்பு நட்டிருந்த தளையில் இருந்தது. ஆக, முனுசாமிக்கு சகதியுடன் கூடிய நிலத்தை மட்டும் மிச்சம் வைத்து, பயிர் அனைத்தையும் விழுங்கியிருந்தது அந்தக் குழாய்!
இப்போது என்ன செய்வது என்று முனுசாமி திகைத்துப் போய் நின்றிருந்த நேரத்தில், மேலே சாலையில் நின்றிருந்த லாரிக்கு பின்னால், வேகமாக ஒரு ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து, இரண்டு பேர் குதித்து, அந்த சரிவில் சரிந்தபடி இறங்கி ஓடி வந்தனர். அதில் ஒரு இளைஞன், மை காட்! என்று தலையில் கை வைத்தபடி, அப்படியே அந்த ஈர வரப்பின் மீது அமர்ந்து விட்டான். மற்றொருவன், அந்தக் குழாயின் எல்லாப் புறமும், சுற்றிச் சுற்றி ஒடி வந்தான்.
முனுசாமி, யாரிடம் சென்று என்ன கேட்பதென்று தெரியாமல் திகைத்து நிற்க, பக்கத்து நிலத்துக்காரன் வரப்பில் அமர்ந்திருந்தவனிடம் சென்று, ஏம்பா! இந்த கொழா உன்தா? என விசாரித்தார்.
அவன் நிஜமாகவே, நிலைகுலைந்து போய் அமர்ந்திருக்க, இன்னொருவன் அவரிடம், யோவ்! யாரோடதா இருந்தா என்ன? அப்படி தள்ளிப் போய் நில்லுய்யா! எனச் சொல்லியபடி, கையில் இருந்த செல்போனில் தொடர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டே இருந்தான்.
லாரியை ஓட்டி வந்த சர்தார்ஜியோ, எந்த பரபரப்புமின்றி அந்தப் பெரிய லாரியின் அடியிலேயே ஒரு ஸ்டவைப் பற்ற வைத்து டீ போடத் துவங்கியிருந்தான்.
செல்போனில் பேசி முடித்தவன், முனுசாமியின் அருகில் வந்து, பெரியவரே! இங்கே எல்லாம் நிக்க கூடாது! அப்படி தள்ளி போய் நில்லுங்க! என்று விரட்டியவுடன் முனுசாமி நிஜமாகவே பயந்து போய் தன்னுடைய நிலத்தில் இருந்து வேகமாக வெளியேறி வரப்புக்கு வெளியே நின்று கொண்டார்.
சற்று நேரத்தில் ஜீப்பில் வந்த இருவரின் செல்போன்களும் மாறி மாறி ஒலிக்கத் துவங்க, கிராம மக்கள் மெல்ல அங்கே கூடத் தொடங்கினர்.
அந்த இருவரும், அங்கிருந்த யாரையும் முனுசாமியின் நிலத்தில் கால் வைக்க அனுமதிக்க வில்லை. பத்து மணிக்கு மேல், விஏஓ வந்து அவர்களிடம் பேசிய பின்புதான் அனைவருக்கும் லேசாக விஷயம் புரிந்தது. அந்த குழாய் மத்திய அரசாங்கத்துடையதாம்! திருச்சியிருந்து, பெங்களூருக்கு செல்லும் வழியில், இரவு பெய்த மழையில் அந்த நீண்ட வாகனம் சாலையின் வளைவினில் வேகமாகத் திரும்ப, கட்டப் பட்டிருந்த கம்பிகளில் இருந்து நழுவி குழாய் முனுசாமியின் நிலத்தில் விழுந்து விட்டிருக்கிறது.
நல்ல வேளைப்பா! நடு ராத்திரியில் இது நடந்திருக்குது! பள்ளிக்கூட நேரத்தில் இது மாதிரி நடந்திருந்தா பசங்க கதி என்னாகிறது? என்று பேசியபடி பெரும்பாலோனோர் அங்கேயே அமர்ந்து வேடிக்கைப் பார்க்கத் துவங்கினர்.
விஷயம் கேள்விப் பட்டு, போதை தெளியாத கண்களுடன் தாமதமாக வந்த ஊர்த் தலைவரின் புத்தி, இதில் ஒரு நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று கணக்கிட்டது. அந்த ஜீப் இளைஞர்களிடம் சென்று, ஏம்பா! யாராயிருந்தாலும், கொழாய எடுத்துட்டுப் போவதற்கு முன்னால, நிலத்துக்காரருக்கு பயிருக்கான நஷ்ட ஈடு கொடுத்துட்டுதான், கொழாய்ல கை வைக்கணும்! சொல்லிட்டேன் என்றார்.
செல்போனில் பேசிக் கொண்டிருந்த அந்த இருவரும் தலைவரை நிமிர்ந்து, அற்பமான ஒரு பார்வை பார்த்தனர். சற்று நேரத்தில் சிகப்பு விளக்கு வைத்த கார்களில், மாவட்ட ஆட்சித் தலைவரும், போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். ஊர் தலைவர் உட்பட அனைவரும், அங்கிருந்து விரட்டப்பட, யாரோ ஒரு அதிகாரி, பெரிய மனதுடன் முனுசாமியை மட்டும் அங்கே இருந்த ஒரு புங்க மரத்தடியில் அமர்ந்து கொள்ள அனுமதித்தார்.
கலெக்டர் வந்து பார்வையிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் முனுசாமியின் நிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டது. ஜீப் ஆசாமிகள், இருவரும் விடாமல் புகை பிடித்துக் கொண்டிருந்த போது, லாரிக்கு எதிர் திசையில் இருந்து வேகமாக ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய குளிர் கண்ணாடி அணிந்திருந்த உயரமான உருவத்தைப் பார்த்ததும், இருவரில் ஒருவன்
போச்சுடா! டிசோசா வந்திருக்கான்! செத்தோம் நாம்! என்றான்.
சாலையின் மேலிருந்த படியே, விழுந்திருந்த குழாயை தனது கேமிராவில் படம் எடுத்துக் கொண்ட டிசோசா, மெல்ல சரிந்த படி அந்த மேட்டிலிருந்து கீழே இறங்கி வந்தார். இருவரும், அவர் அருகில் சென்று வணங்க,
என்னய்யா? ப்ரசாத்! என்ன காரியம் பண்ணி வச்சுருக்கீங்க? பெரியவர் பயங்கர மூட் அவுட்!
இல்லை சார்! மழையில் வண்டி ஸ்லிப்ப்பாயிடுச்சு! கண்டிரோல் பண்ண முடியலை!
எப்படியா கண்டிரோல் பண்ண முடியும்? நீங்கதான் அப்போ பாண்டிச்சேரியில் தண்ணியடிச்சுட்டு இருந்தீங்களே?
இல்லை சார்! பின்னாடியேதான் வந்துட்டு இருந்தோம்!
கிழிச்சீங்க! ஜிபிஎஸ் ரெக்கார்ட் பார்த்துதான் வந்திருக்கேன். ராத்திரி 3.15க்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கு! காலையில் 6.15க்கு இன்ஃபார்ம் பண்றீங்க! பெரியவர் டீடெயில்ட் ரிப்போர்ட் கேட்டிருக்கார்.
சாரி சார்! வண்டியை நிறுத்தச் சொல்லிட்டுத்தான் தூங்கினோம். ஹைவேதானேன்னு, சர்தார்ஜி எடுத்துட்டு வந்துட்டான். காப்பாத்துங்க சார்! ப்ளீஸ்.
பார்க்கலாம்! என்ன? பாண்டியில வெறும் தண்ணி மட்டும்தானா? இல்லை வேறெதாவதுமா?
அதெல்லாம் இல்லை சார்! வெறும் தண்ணிதான்.
யோவ்! பெங்களூரில் கிடைக்காத சரக்கா? ஏன்யா? மானத்தை வாங்குறீங்க! வேற எதுவும் இல்லையா?
ப்ரசாத் புரிந்து கொண்டான். அதெல்லாம் பெங்களூரிலேயே அரேஞ்ச் பண்ணிடலாம் சார்!
எங்கே? எப்போ?
இந்த வீக் எண்ட்லேயே வச்சுப்போம் சார்! தேவனஹள்ளியில் நம்ம ரெட்டியோட ஃப்ளாட் சும்மாதான் இருக்கு! நான் ஏற்பாடு பண்ணிடறேன் சார்!
நிலமை சகஜமாகி விட்டது. டிசோசா தனது ஷீ, சாக்ஸ் எல்லாவற்றையும் கழற்றி விட்டு, பேண்டை முழங்கால் வரை தூக்கி விட்டுக் கொண்டு, சேற்றில் இறங்கி பல முறை குழாயைச் சுற்றி வந்தார். ஒரு மரக்கிளையை ஒடித்துக் கொண்டு, சேற்றில் குத்தி எத்தனை ஆழம் குழாய் இறங்கியிருக்கிறது என்று சோதித்தார்.
பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, ப்ரசாத்! எனக்கு 80 டன் கிரேன் வேண்டும்! அதுவும் இரண்டு க்ரேன்! 50 மீட்டர் அயர்ன் ரோப் கூட எடுத்துட்டு வரச் சொல்லு! டைம் ஆஃபீஸுக்கு போன் பண்ணி, இன்சார்ஜ் கிட்ட ஓசூர் கிரேன் கம்பெனி நம்பர் வாங்கி உடனே சொல்லு! ரேட் எதுவும் பேசிட்டு இருக்காதே! என்ன கேட்டாலும் ஒப்புத்துக்க! அஞ்சு மணி நேரத்தில் எல்லாம் இங்க இருக்கணும். இருட்டுவதுக்குள்ள, வெளியே எடுத்தாகணும் என்று உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இன்னொருவனிடம், யோவ் மண்டு! இங்க வா! என்ன உன்னோட பேரு?
அறிவழகன் சார்!
என்ன எழவோ? போ! போய் சாப்பிட ஏதாச்சும் அரேஞ்ச் பண்ணு! இந்தப் பக்கமெல்லாம் நாட்டுக் கோழி நல்லா செய்வாங்க. அதுக்கு ஏற்பாடு பண்ணு! என்றபடி பக்கத்து நிலத்து மோட்டரில் தனது கால்களை கழுவச் சென்றார்.
அறிவழகன் முனுசாமியிடம் வந்து, பெரியவரே! கவல படாதீங்கோ! ஆஃபீஸர் வந்துட்டாரு! இனிமே இவரு பார்த்துப்பாரு என்றபடி சிரித்தான்.
எதற்கு சிரிக்கிறான்? என்பது முனுசாமிக்குப் புரிய வில்லை.
அறிவழகன், முனுசாமியிடம் கையில் ஐநூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து, பெரியவரே! உங்க ஊரில் ஏதாவது ஓட்டலில் மதியம் சாப்பாடு சொல்லி விட்டு வாங்களேன்! நான் இங்கிருந்து வெளியே போக முடியாது என்றான்.
ஓட்டலா? அதெல்லாம் இங்க இல்லைங்க! டீ கடைதான்! அதுவும் ஊருக்கு வெளியே ரோட்டு ஓரத்தில் இருக்கு.
அய்யய்யோ! இவங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யணுமே? என்று திகைத்தவன், பெரியவரே! உங்க வீட்டிலதான் ஏதாச்சும் செஞ்சு எடுத்துட்டு வாங்களேன்! எவ்வளவு செலவாகுதோ, அதுக்கு மேல ஆயிரம் ரூபாய் வாங்கிக்குங்க. ஒரு ஐந்து பேருக்கு, மதியம் சாப்பாடு, ராத்திரி சாப்பாடு. அவ்வளவுதான்!
முனுசாமி வீட்டுக்குத் திரும்பி வரும்போது சமையல் நடந்து கொண்டிருந்தது. முதல் பஸ்ஸுக்கு பெரிய பெண் வந்திருக்கிறாள் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டார். இவரைக் கண்டவுடன் பேத்தி ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டாள். பெரியவள், வெளியே வந்து, என்னப்பா? நம்ம நிலத்திலே ஏதோ விழுந்திருச்சாமே? என்றாள். அவள் முகம் கறுத்திருந்தது.
இவர் மவுனமாக தலையாட்டிக் கொண்டு வீட்டினுள் சென்றார். முற்றத்திலேயே மனைவி படுத்துக் கொண்டிருந்தார். நீண்ட நாள் நோயாளி! எப்போவாவது மூட்டு வலி குறையும் சமயத்தில் சமைப்பது உண்டு. பெரும்பாலும் முனுசாமியின் சமையல்தான். இளைய மகள், உள் அறையில் இருந்த டிவியின் அரசு சின்னத்தை எதையோ வைத்து சுரண்டிக் கொண்டிருந்தாள். தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்த பழைய சோற்றினை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு, உறியில் இருந்த தயிரை எடுத்து அதில் உற்றிப் பிசைந்து கொண்டே, பெரியவளிடம் நடந்ததைச் சொன்னார்.
சாமந்தி நல்ல விலை போவுது. இந்த நேரத்தில் பூ வித்தா எப்படியும் பறிக்கிற கூலி போக ஒரு இருபதாயிரம் வரும். உன் பெண்ணுக்கு ஒரு பவுன் கம்மல் வாங்கி போட்டுடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமா உனக்கு செஞ்சு முடிச்சுட்டு, அடுத்தவளைப் பார்க்கலாம்னு நினைச்சா, அதுக்குள்ள இப்படி! என்றார். போதாகுறைக்கு இவனுங்களுக்கு சமைச்சுட்டு வேற வரணுமாம். ஆயிரம் ரூபாய் மேலே தரேங்குறான்! நம்ம ஊட்டுப் பணம் இருபதாயிரத்தை அழிச்சுட்டு, ஆயிரம் ரூபாய் சேர்த்தி தரேன் சொல்றது என்ன ஞாயம்னு தெர்லே!
அதுக்கென்னப்பா? நான் சமைச்சுத் தரேன். ஆயிரம் ரூபாயாவது கிடைக்குது இல்லை! என்றாள் பெரிய மகள்.
பின் மதியத்தில், கோழிக் குழம்பும், சுடு சோறும் சமைச்சு பெரியக் கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு முனுசாமி தன் நிலத்துக்குப் போகும் போது உடன் இன்னொரு பாத்திரத்துடன் அவருடைய சின்னப் பெண்ணும் சென்றாள். காலையில் இருந்தபடி அப்படியே இருந்தது அந்தக் குழாய். புங்க மரத்தடியில், பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப் பட்டிருந்த பாட்டில்களில் ஒன்று திறந்திருக்க, டிசோசோ சொல்லிக் கொண்டிருந்த கதையை மரியாதையுடன் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர் மற்ற இருவரும்.
நல்ல காரசாரமாக கோழி குழம்பு சாப்பிட்ட மகிழ்ச்சியில் டிசோசா, புகைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது சின்னப் பெண் அவரிடம் சென்று குட்மார்னிங் சார்! என்றாள்.
சே! குட் ஈவினிங்! உன்னோட பேர் என்ன? என்றார்.
எம். அலுமேலு சார். ஆறாம் வகுப்பு பி பிரிவு.
வெரி குட்! நல்லா படி என்றபடி நகரப் போனவரிடம் எதுக்கு சார் இம்மாம் பெரிய குழாய்? என்றாள்.
அதுவா! இதுதான் ராக்கெட். இதுக்குள்ள இன்ஜினை வச்சுதான் ஆகாயத்துக்கு அனுப்புவாங்க. இது கொண்டுட்டு போய் மேல வைக்கிற சாட்டிலைட் வழியாதான் நீ உன் வீட்டில டிவி பார்க்குறே! என்றார்.
இன்னாது? இதுதான் ராக்கெட்டா? என்று வாய் பிளந்தாள் அவள். அவளது அறிவியல் பாடத்தில், கீழே பெரிய புகையுடன், ராக்கெட் வானத்தை நோக்கிச் செல்லும் படம் ஒன்று இருந்தது அவள் நினைவுக்கு வந்தது.
வேகமாக, அந்தக் குழாயின் அருகில் சென்று அதன் இரு புறங்களிலும் பொறிக்கப் பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களைத் தடவிப் பார்த்தாள். பிறகு அதை, ஒவ்வொரு எழுத்தாக கூட்டி “ஐஎஸ்ஆர்ஓ” என்று சத்தமாக படித்தாள்.
மாலையில் இன்னும் சில வாகனங்களில் ஆட்கள் வந்து சேர்ந்தனர். கிரேன் வருவதற்குள் இருட்டத் துவங்க டிசோசாவிற்கு அதற்குள் பல முறை பெரியவரிடம் இருந்து போன் வந்திருந்தது.
வேறு வழியின்றி, இரவிலேயே ராக்கெட் கேஸை தூக்கி விடுவது என்று முடிவெடுத்தனர். பக்கத்து டவுனில் இருந்து ஜெனரேட்டர், ஃபோகஸ் லைட்கள் எல்லா வரவழைக்கப் பட்டு, வேலைகள் மும்முரமாக்கப் பட்டன.
அறிவழகன் வேகமாக முனுசாமியைத் தேடி வந்தான். பெரியவரே! ராத்திரி சாப்பாடு எப்படியும் 25 பேருக்குத் தேவைப் படும். பத்துக் கோழி வாங்கிடுங்க. அப்படியே முட்டை பொறியல் செஞ்சுடுங்க. எதுக்கும் மூணு கோழியை வறுத்துடுங்க என்று சொல்லிச் சென்றான். முனுசாமிக்கு தலை கிறுகிறுத்து விட்டது.
வீட்டுக்கு திரும்ப வரும்போது, செட்டியார் கடையருகில் ஷண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டார். சண்முகம், நீண்ட நாட்களாக முனுசாமியின் நிலத்தின் மீது கண் வைத்துக் காத்திருக்கும் ரியல் எஸ்டேட் கொக்கு.
என்னண்ணே! உன் நிலத்திலே ஒரே களேபரமா இருக்காமே? என்றான்.
என்னப்பா செய்யுறது! எல்லாம் விதி! கேட்டால் மத்திய அரசாங்கங்குறாங்க. கலெக்டர், தாசில்தார்னு ஒரே அதிகாரிங்க மயம். நாம கேட்கறது யார் காதுல விழுது! அங்கே அவுங்க சொல்றதுதான் சட்டம்!
சமையல்கூட உம்ம வீட்டில இருந்துதானா? கஸ்தூரி சொல்லிச்சு!
வீட்டில பார்த்தியா? ஆமாம்! கூட அது ஒரு செலவு! உழைப்பு! பணம் தரேன் சொல்லியிருக்கான்! இருந்தாலும், நாமதானே முன்னால பணம் போட்டு செய்ய வேண்டியிருக்கு!
அட கிரகமே! அது வேறயா? சரிண்ணே! இந்தா எதுக்கும் ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவுக்கு வச்சுக்க! காலையில் வாங்கிக்கிறேன்.
எதுக்குப்பா? இப்ப இதெல்லாம்!
வச்சுக்கண்ணே! இந்த நேரத்தில் யார் கிட்டே போய் கேப்பே? நான் நாளைக்கு மதியம் டவுனுக்கு போவும்போது வாங்கிட்டுப் போறேன் என்றபடி பணத்தை முனுசாமியிடம் கொடுத்துச் சென்றான். இருவருக்கும் இடையே பேசப்படாத சொற்களில் அந்தப் பணத்துக்கு ஒரு ‘நாள் வட்டி’ என்று எழுதப் பட்டிருந்தது.
அன்று இரவு, தனது ஒற்றை மாட்டு வண்டியில், சில அண்டாக்களில் சமையல் செய்து வைத்துக் கொண்டு, முனுசாமி ஓட்டிக் கொண்டு செல்வதை ஊரே பார்த்தது. கோழிக் குழம்பின் வாசம் ஊரில் இருந்த அத்தனை நாய்களையும் வண்டிக்குப் பின்னாலேயே அழைத்துச் சென்றது. ஊரின் மொத்த கவனமும் தன் மீது குவிவதில் முனுசாமிக்குக் கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.
மீண்டும் ஆரம்பித்திருந்த லேசான தூறலில், முனுசாமி தனது நிலத்துக்குச் சென்று சேர்ந்த நேரத்தில், அங்கே பல உமிழ் விளக்குகளை வைத்து, அந்த இரவைப் பகலாக்கியிருந்தனர். குழாயைச் சுற்றி பெரிய இரும்புக் கம்பிகள் கட்டப் பட்டுக் கொண்டிருக்க, அந்தக் கம்பிகளின் மறுமுனையை இரண்டு பெரிய கிரேன்கள் தாங்கிக் கொண்டிருந்தன. இப்போது மழை லேசாக வலுக்கத் துவங்கியது.
சேறாகி விட்டிருந்த நிலத்திலிருந்து, அந்த இரவில், குழாயைத் தூக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்து விட்டது. இரண்டு கிரேன்களும் ஒரே நேரத்தில் இழுக்க வேண்டிய கணக்குப் பிசகி போனதில், ஒரு கிரேனில் கட்டப் பட்டிருந்த இரும்புக் கம்பி துண்டாகி அறுந்து விழுந்தது. மழையின் ஈரமும், சேற்றுப் பிசுக்கும் ஊறிப் போன உடலும் படுக்கச் சென்றவர்களுக்கு அந்த இரவின் ஒரே ஆறுதல் முனுசாமி வீட்டுச் சுடு சோறும் கோழிக் குழம்பும்தான்.
இன்னொரு கனத்த இரும்புக் கம்பிக்காக மொத்தக் குழுவும் காத்திருந்த மறுநாள் காலை வேளையை, முனுசாமியின் பெரிய மகள் கஸ்தூரி சுட்டனுப்பிய இட்லிகளும், ஆட்டுக் கறி குழம்பும் மேலும் அழகாக்கியது. மதியம் மீன் குழம்பு கிடைக்குமா? என்று சிலர் முனுசாமியிடம் கேட்ட போது, முனுசாமிக்கு பெருமை பிடிபடவில்லை. ஏரி மீன் குத்தகைக்கு எடுத்திருந்தவர்களிடம் சொல்லி விட்டு வர விரைந்தார்.
மேற்கொண்டு பணம் கேட்க முனுசாமி, அறிவழகனைத் தேட முயற்சித்தார். ஆளாளுக்கு ஒரு பக்கம் விரைந்து கொண்டிருந்த அந்தப் பரபரப்பான சூழலில் அறிவழகனை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவர் அலைமோதிக் கொண்டிருப்பதைக் கண்ட ப்ரசாத், முனுசாமியிடம் வந்து விஷயத்தைக் கேட்டான். தனது பையிலிருந்து மேலும் ஒரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தவன், மொத்தப் பணத்தையும் கடைசியில் பெற்றுக் கொள்ளுமாறு கூறிச் சென்றான்.
அன்று மாலை, மீண்டும் குழாயைக் கட்டி மேலே இழுக்கும் போராட்டம் துவங்கியது.
ஒவ்வொருவரும் ஒரு யோசனையை சொன்னதாலும், நன்கு சேற்றில் புதைந்து போயிருந்த குழாயினை ஒரு சேர சுண்டி இழுக்கும் சுதி கூடி வராததாலும், இரண்டாம் முயற்சியும் வெற்றி பெற வில்லை. பல்வேறு யோசனைகளுடன் டிசோசா குழுவினர் இரவு உணவுக்குக் கலைந்தனர்.
நடு இரவில்,ஜீப்பில் படுத்துக் கொண்டிருந்த ப்ரசாத் குழுவினரை, லாரியின் டிரைவர் சர்தார்ஜி வந்து எழுப்பினார். டிசோசோ தூக்கம் கலைந்து வெளியில் வந்து பார்க்க, அங்கே இராட்சத கிரேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஒரு பெரிய தொழிற்சாலையின் நிர்மாணப் பணிக்காக சாலையில் சென்று கொண்டிருந்த கிரேனை சர்தார்ஜி கண்டு நிறுத்தியுள்ளார். அந்த கிரேனின் பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து அனைவருமே உற்சாகமடைந்தனர்.
அந்த இரவில் அனைவரும் எழுப்பப் பட்டு, விளக்குகள் மீண்டும் ஒளியூட்டப்பட்டது. குழாயின் கம்பிகள் அந்தப் பெரிய கிரேனின் கொக்கியில் இணைக்கப் பட்டன. கம்பிகளின் அனைத்து முனைகளும் அந்த ஒரே கிரேனிலேயே இணைக்கப் பட, தேர்ச்சி பெற்ற அந்த கிரேன் ஆபரேட்டர், சரியான தருணத்தில் மிக நேர்த்தியாக அந்தக் குழாயை கவ்வி இழுத்தார்.
சேற்றில் அழுந்த ஊன்றிய செருப்பு, ஒரு சப்தத்துடன் வெளியே வருவதைப் போன்று க்ளக் என்ற பெரும் சப்தத்துடன் குழாய் சேற்றிலிருந்து மெல்ல எழும்பி மேலே வந்தது.
மொத்தக் குழுவும் கைத்தட்டி கரகோஷம் எழுப்பிய அந்த நடுநிசியில், முனுசாமியும் அவர் பெண்களும் முழு நாளும் சமைத்துக் களைத்த அயற்சியில் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கிரேனுக்கும், விளக்குகளுக்கும் தேவையான பணத்தைக் கொடுத்து முடித்து, குழாய் ஏற்றப் பட்டிருந்த லாரியை முன்னால் அனுப்பி வைத்து விட்டு, டிசோசா குழுவினர் பின்னாலேயே புறப்பட்டுச் சென்றனர்.
மறுநாள் அதிகாலையில், வாடகைக்கு எடுத்திருந்த பெரிய டீ கேனில், அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு தனது நிலத்துக்கு முனுசாமி வந்து சேர்ந்த போது, அங்கே குழாய் விழுந்திருந்ததின் அடையாளமாக நிலத்துக்குக் குறுக்கே, ஐந்தடி ஆழத்தில் ஒரு பெரிய பள்ளம் மட்டும் மிச்சமிருந்தது.
சாமந்தி பூக்களின் அழுகல் நாற்றம் அதிலிருந்து குபீரென வீசியது.

5 thoughts on “சாமந்தி

  1. அந்தக் குழாய் (ராக்கெட்) விழுந்தது வயலில் அல்ல. தமிழ்மக்களின் மீது.
    குறியீடு குறியீடு!
    நிலத்தினையும் நாசப்படுத்தி அவன் காசிலேயே தின்று கொழுக்கும் அரசாங்கம்.
    ISRO பெயர் உபயோகத்தைத் தவிர்த்திருக்கலாமோ? நேரடியாக குற்றம் சுமத்தும் தொனி இருக்கிறதே?
    வழமை போல் தெளிவான நடையுடனான கதைச்சொல்லல்.
    இன்னும் ஆழமான கருத்துக்களோடு அடுத்த கதையை எதிர்நோக்குகிறேன்.

  2. அங்கே மிச்சம் இருந்தது ஐந்து அடி பள்ளம் மட்டுமல்ல… என் கண்களின் ஓரத்தில் என்னையும் அறியாமல் வெளிவந்த ஒரு துளி கண்ணீரும் தான்…

  3. அற்புதமான விவரிப்பு. மடைதிறந்த வெள்ளமாய்பாய்கிறது உணர்ச்சியூட்டும் தமிழ்.

  4. the story tells the real face of corporate people. The innocence of commn man.

Comments are closed.