விரல்

விரல்

இன்னும் ஐந்து மணி நேரத்தில், திருமணம் நடக்கவிருக்கும் அந்த மணவறையை சுற்றிலும் ஒரே ரத்தம். அந்த ரத்தத்தைதான் அந்த நடு இரவில் நாங்கள் கழுவிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் என்றால், நான், எனது நண்பன் ஶ்ரீகாந்த் மற்றும் அந்த திருமண மண்டபத்தில் வேலை செய்யும் ஒரு பாட்டி. நண்பனின் திருமணத்திற்கு விருந்தினர்களாக சென்ற வேறு யாரும், இப்போது நாங்கள் செய்யும் வேலையை செய்திருக்க மாட்டார்கள்! இப்படி, ரத்தக் கறையை கழுவித் தள்ளுவது!
தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரத்தில் நடக்கவிருந்த எனது கல்லூரி தோழனின் திருமணத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் செல்வதென்று முடிவு செய்தோம். நண்பர்கள் ஶ்ரீகாந்தும், இளங்கோவும் உடன் வர, எனது வாழ்நாளின் மறக்க முடியாத அந்தப் பயணம் துவங்கியது.
மதுரை பஸ் நிலையத்துக்கு அருகில் வந்து, நிமிர்ந்து பார்! என்னோட வீடு தெரியும் என்று சொல்லியிருந்தான். நிமிர்ந்து பார்த்தோம். அந்த வீடு தனித்து தெரிந்தது. காரை விட்டு இறங்கும் போதே, அவனுடைய அப்பாவை பார்த்து விட்டோம். ஒரு புல்லட் மோட்டர் சைக்கிள் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு, தொடர்ச்சியான உத்தரவுகளை அங்கிருந்தவர்களுக்கு பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
தம்பியோட காலேஜ் சிநேகிதர்களாம்! என்று அங்கிருந்த ஒருவர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
என்னைப் பார்த்தார். பிறகு நான் ஓட்டி வந்த காரைப் பார்த்தார். அதையொட்டி, ஶ்ரீகாந்த் இன்னமும் அணைக்காத சிகரெட் ஒன்றினை தன் கைக்குள் வைத்திருப்பதையும் பார்த்தார்.
வாங்கப்பா! எல்லோரும் வாங்க! என்று எங்களை வரவேற்று, வீட்டுக்குள் சத்தமாக டேய் பர்மா என்று யாரையோ அழைத்தார். ஒரு ஒல்லி இளைஞன் உள்ளேயிருந்து ஓடி வந்தான். அவனிடம், தம்பியோட சினேகிதர்கள்! மாடிக்கு அழைச்சிட்டு போ என்று சொல்லிவிட்டு புல்லட்டை உதைத்துக் கிளம்பினார்.
அதுவரை, நான் பார்த்ததிலேயே பர்மாதான் மிகவும் உற்சாகமான இளைஞன். அந்த வீடு ஏனோ காலியாக இருந்தது. பர்மாவிடம் கேட்டதற்கு, இவங்க எல்லாம் எப்பவோ புது வீட்டுக்குப் போயாச்சே! இந்த வீடு சும்மா குடோன் மாதிரிதான் வச்சிருக்கோம்! கீழே மட்டும்தான் குடோன்! மேலே எங்க செட்டோட கிளப்! சீட்டு, தண்ணி எல்லாம் இங்கதான் என்று சொல்லிச் சிரித்தான்.
மாப்பிள்ளை எங்கப்பா? என்று இளங்கோ பர்மாவிடம் கேட்டான். புது வீட்டில நலங்கு நடக்குதுண்ணே! அங்கிருந்து நேரா பொண்ணு ஊருக்குதான்! புறப்படுவதற்கு முன் வந்து உங்களை பார்க்கிறதா ப்ளான் என்றான்.
அதிருக்கட்டுங்க! மணி 3ஆகுது! இன்னமும் மதிய சாப்பாடே சாப்பிடலை நாங்க! பக்கத்தில ஏதாச்சு ஓட்டல் இருக்கா? என்று கேட்டதற்கு, எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சுண்ணே! வாங்க என்று எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
மாடிக்குப் போகும் படியெங்கிலும், ஏதேனும் ஒரு பொருள் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு சாமானும் உருண்டோடாமல் பர்மா,எங்களை மிக சாமர்த்தியமாக இரண்டாம் மாடிக்கு அழைத்து சென்றான். அங்கிருந்த ஒரு பெரிய துணி மூட்டையை அவன் விலக்க, அங்கே இருந்த ஒரு பெரிய மரப் பெட்டி முழுக்க ஐஸ் கட்டிகள் நிரப்பப் பட்டிருக்க, அதனுள்ளே வரிசையாக பியர் பாட்டில்கள் அடுக்கப் பட்டிருந்தன. உற்சாகத்தில், இளங்கோ, அவனை அப்படியே கட்டிக் கொண்டான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், கோனார் கடை கறி தோசை முதல், அயிரை மீன் குழம்பு சாப்பாடு வரை அங்கே கடை பரப்பப் பட்டது. நீங்க நடத்துங்கண்ணே! இதோ வந்துடறேன் என்றுச் சொல்லி பர்மா சென்றான். மதிய உணவு மாலை வரை நீண்டு கொண்டு போக, மாப்பிள்ளையோ, பர்மாவோ வந்த பாடில்லை! காரிலிருந்து எதையோ எடுப்பதற்காக கீழே வந்த போது, பர்மா வேகமாக ஓடி வந்தான்.
சீக்கிரம் காரை எடுங்கண்ணே! அவசரமா கொஞ்சம் வெளிய போய் வரணும் என்றான்.
அப்போதுதான் அங்கே சைக்கிளில் வந்திறங்கிய ஒரு வக்கீலும், காரில் ஏறிக் கொண்டு, சீக்கிரமா தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் போங்க என்றார்.
காவல் நிலையம் எந்த ஒரு பரபரப்புமின்றி அமைதியாகத்தான் இருந்தது. காரை நான் நிறுத்துவதற்குள் வேகமாக இறங்கி சென்றவர்கள், சற்று நேரமாகியும் வராததால், என்னவென்று பார்க்க நான் உள்ளே சென்றேன். உள்ளே, ஒரு பெஞ்சில் அந்த ஒல்லி இளைஞன் அமர்த்தப் பட்டிருந்தான். அவனது சட்டை ஒரு புறம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, அசுவாரஸ்யமாக ஒரு பழைய பேப்பரை துண்டு துண்டாகக் கிழித்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு நாட்களில் திருமணமாக இருக்கும் எனது நண்பனின் தம்பி என்று அவனை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது, என்னைப் பார்த்துப் பளீரென்று சிரித்தான்.
நீங்க யாருங்க? என்று இன்ஸ்பெக்டர் என்னைக் கேட்டார்.
இவனோட அண்ணன் கல்யாணத்துக்கு வந்திருக்கேன் சார்! என்றேன்.
ஓ! விருந்தாளியா? கல்யாணத்துக்கு வந்த பாவத்துக்கு நீங்களும் ஒரு ஜாமீன் கையெழுத்து போட்டுட்டுப் போங்க என்றார் கோபத்துடன்.
என்ன சார் நடந்தது என்று கேட்க நினைத்து, கேட்காமல் அதில் கையெழுத்தைப் போட்டேன்.
அவரே சொன்னார்! புதுசா கார் ஓட்டக் கத்துகிட்டவன் எப்படி ஒழுக்கமா வண்டியை ஓட்டணுங்க? ராஸ்கல்! இவன் காரை சைடு வாங்கிட்டாங்கிறதால, காரை ஓட்டிட்டுப் போன மனுஷனை, நடு தெருவில கீழே தள்ளி அந்தாள் சட்டையை கிழிச்சு அடிச்சுருக்கான். அவன் அப்பன் பேரை கெடுத்து குட்டிச் சுவராக்கணும்னே வந்து பொறந்திருக்கான் பாருங்க! என்றார். திரும்பி அவனைப் பார்த்தேன். இன்னமும் அதே சிரிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவனை திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்லும் போது, ஏதோ ஒரு தெரு முனையில் சில பேர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். முன் சீட்டில் உட்காந்திருந்த அவன், அங்கிட்டு பார்த்தீங்களாண்ணே! என்னை போட்டுத் தள்ளத்தான் உட்கார்ந்துட்டு இருக்காங்க! அடி வாங்கனவனோட, கூட்டாளியா இருப்பானுவ! என்று சொல்லி சிரித்தான். அவன் அண்ணனை நினைத்துப் பார்த்தேன். கல்லூரியில் அவன் இருக்கும் இடம் தெரியாது! அத்தனை அமைதியானவன்!
வீட்டுக்கு வந்த போது, அங்கு ஒருவரும் இல்லை. எல்லோரும் புறப்பட்டு போய் விட்டதாக அங்கிருந்த ஒருவர் சொன்னார். என் மூஞ்சியை பார்க்கறதுக்குள்ளாற எல்லாரும் போயிடணும்னு எங்க அப்பா சொல்லியிருப்பாரே? என்று சிரித்தான். என்னடா பர்மா? அப்படிதானே சொல்லிட்டு எல்லோரும் பொறப்பட்டு போயிருப்பாங்க என்றான்.
பின்ன என்னடா? நீ பண்ற காரியத்துக்கு, வாசல்ல இருந்து ஆரத்தியா எடுப்பாங்க! குளிச்சுட்டு வா! நாம கிளம்புவோம் என்றான் பர்மா.
மறுநாள் காலையில் நாங்கள் புறப்பட்டு, ஒரு மதியப் பொழுதில் அந்த ஊரை அடைந்தோம். தங்கும் விடுதியின் வாசலிலேயே, ஒரு லாரியில் இருந்து வரிசை சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தான் பர்மா. எங்களைப் பார்த்து ஓடி வந்து, ஒரு அறையின் சாவியைக் கொடுத்து, அண்ணே! எல்லா ஐட்டமும் ரூமிலேயே வச்சுருக்கேன். சாப்பிட்டு கொஞ்சம் தூங்குங்க! சாயங்காலம் பார்ப்போம் என்றான்.
அதெல்லாம் சரி! இந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டியிருக்காதே?
அது யாருக்குண்ணே தெரியும்? தேவைன்னா, போய்தானே வரணும் என்றபடி சென்றான்.
மாலையில், மாப்பிள்ளை அழைப்பிற்கு சென்றோம். வாடா! வந்து இரண்டு நாளாச்சு! இப்பத்தான் என்னை வந்து பாக்கறீங்க? என்ன ரெண்டு நாளா ஒரே பார்ட்டியா? என்று கேட்டான் மாப்பிள்ளை! நடந்தது, அவனுக்குத் தெரியுமா? தெரியாதான்னு ஒரே குழப்பம். அந்த நேரத்தில் அவனை எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நன்றாக அலங்கரிப்பட்ட ஒரு வாகனத்தில், மணமக்கள் அழைப்புப் புறப்பட்டது. ஊரின் மிக முக்கிய வணிக வீதிகளின் நடுவே ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் சென்று கொண்டிருக்க, வரிசைத் தட்டுகள் எடுத்துச் செல்லும் சில இளம் பெண்களுக்கு நடுவே மாப்பிள்ளையின் தம்பி, தனது சட்டையை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு, பேண்டு வாத்திய இசைக்கு நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
ஊர்வலத்தை முன்னே விட்டு, சிகரெட் பிடிக்க ஒரு டீக்கடையில் நின்ற போது, பட்டு சட்டை அணிந்த இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து, மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட்ஸாண்ணே நீங்க? என்றான். உடன் இன்னும் சில இளைஞர்களும் இருந்தனர்.
ஆமாம்! என்னப்பா விஷயம் என்றான் இளங்கோ.
அந்த நாய்கிட்ட சொல்லி வைங்கண்ணே! வெளியூருக்கு வந்தா ஒழுக்கமா இருக்கணும்! எங்க ஊருக்கு வந்து, எங்க ஃபிகருங்களையே கரெக்ட் பண்ண பாக்குறான்! அப்புறம் எதையும் பாக்க மாட்டோம்! போட்டுத் தள்ளிருவோம் என்று எடுத்தவுடன் டாப் கியரில் எகிறினான்.
இளங்கோ பதறாமல், இருப்பா! யார்கிட்ட, என்ன சொல்ல சொல்றே? என்றான்.
அதாண்ணே! அந்த பொறுக்கி, மாப்பிள்ளையோட தம்பி இருக்கானே? அவன்கிட்டதான்!
எனக்கு மூச்சு ஒரு கணம் நின்று விட்டது. பதறிப் போய், அவனிடம், நீ யாருப்பா? என்றேன்.
இவருதாங்க பொண்ணோட தம்பி! என்றான் உடனிருந்தவன்.
பரபரப்பாக பம்பரம் போல இயங்கிக் கொண்டிருந்த பர்மாவை, ஊர்வலத்தின் ஏதோ ஒரு சமயத்தில் பிடித்து இழுத்து, விஷயத்தை சொன்னேன். அட விடுங்கண்ணே! இப்ப நாம போய் அவனுக்கு அறிவுரை சொன்னா அப்புறம் வேணும்னே, ரொம்ப ஓவராப் போவான்! விட்டுத் தள்ளுங்க! என்ன இருந்தாலும் நாம மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதானே? அவங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவட்டுமே! இத்தனை வருஷம் நாம போகலையா? என்றபடி அங்கிருந்து விலகிச் சென்றான். அந்த நேரத்தில், மாப்பிள்ளையோட அப்பாவும், பொண்ணோட அப்பாவும் கைகோர்த்தபடி சிரித்துப் பேசிக் கொண்டு ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தனர்.
மச்சான் அந்தப் பசங்க ரொம்ப வேகமா இருக்காங்க! இந்த ராஸ்கலோ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கான்! நாம ஏதாச்சும் செய்தாகணும்! நான் போய் அந்தப் பையன் கிட்ட சொல்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லவா என்றான் இளங்கோ. எனக்கு காரில் அவன் பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வந்தது. வேணாம்டா! நம்ம மரியாதையை நாம்தான் காப்பாத்திக்கணும்! என்று தடுத்து நிறுத்தி விட்டேன். இளங்கோவும் ரொம்ப கோபக்காரந்தான்!
நாம இங்கயே நின்னுட்டு இருந்தா, எல்லா பஞ்சாயத்தும் நம்ம தலையில்தான் விழும். நாம ரூமுக்குப் போய் நம்ம வேலையைப் பார்ப்போம். நாளைக் காலையில் கல்யாணத்துக்கு வந்தாப் போதும் என்றான் ஶ்ரீகாந்த். இதுவல்லவோ யோசனை என்று அவனை மெச்சியபடி, அறைக்குத் திரும்பினோம்.
வழக்கம் போல அறையில் எல்லாம் தயாராக இருந்தது. பர்மாவின் முன் யோசனையை மிகவும் பாராட்டியபடி, இரவு உணவை முடித்து தூங்கச் செல்லும் போது நேரம் நடு இரவைத் தாண்டியிருந்தது. இளங்கோவும், ஶ்ரீகாந்தும் படுத்தவுடன் உறங்கி விட, நான் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வேகமாக கதவுத் தட்டப் பட, திறந்தால், அழுதபடி அங்கே பர்மா நின்று கொண்டிருந்தான். அண்ணே! எல்லாம் நாசமாப் போச்சு!
ஶ்ரீகாந்த் எழுந்து கொண்டான். இளங்கோவை எழுப்ப முடியவில்லை. இப்ப எதுவும் சொல்ல நேரமில்லை! தயவு செய்து கொஞ்சம் எங்கூட வாங்கண்ணே! அங்க மாப்பிள்ளை அழுதுட்டிருக்கான் என்று பதறினான். காரில் செல்லும் போது என்னென்னவோ புலம்பிக் கொண்டிருந்தானே ஒழிய, கோர்வையாக அவனிடமிருந்த வார்த்தைகள் எதுவும் வரவில்லை. கல்யாண மண்டபத்திற்கு சென்று அடையும் போது காலை மூன்று மணி. மாப்பிள்ளை வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன், ஓடி வந்து கையை இறுக்கிப் பிடித்து, உள்ளே அழைத்துச் சென்றான். மணமேடையருகே, எல்லா நாற்காலிகளும் உடைந்து கிடக்க, மணப்பந்தலின் கீழே எங்கு பார்த்தாலும் ரத்தம்.
எனக்கு விஷயம் புரிந்து விட்டது! ஶ்ரீகாந்த், மாப்பிள்ளையிடம் என்னடா ஆச்சு இங்கே? என்றான். மாப்பிள்ளை லேசாக விசும்பிக் கொண்டே, நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
நாங்கள் அறைக்குத் திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே இரண்டு தம்பிகளுக்கும் இடையே முட்டிக் கொண்டு விட்டிருந்தது. உடனே இரு தரப்புப் பெரியவர்களும் வந்து சமாதானம் செய்து, அனுப்பியுள்ளனர். பெண்ணின் தம்பி மட்டும் கடுமையாக அங்கேயே கண்டிக்கப் பட, நம் தம்பியை யாராலும் எதுவும் சொல்ல முடியாமல், பர்மாவை விட்டு அந்த இடத்திலிருந்து அப்புறப் படுத்தியுள்ளனர். விஷயம் இதோடு முடிந்தது என்று மணமக்கள் ஊர்வலத்தை முடித்துக் கொண்டு அவரவர் தங்குமிடத்திற்கு சென்று விட்டனர். மணமகனும், மணமகளும் மட்டும், தத்தம் தாயாரோடு திருமண மண்டபத்திலேயே தூங்கச் சென்று விட்டனர்.
நடு இரவில், யார் சென்று யாரை வம்புக்கு அழைத்தனர் என்று தெரியவில்லை! இரு தரப்பு தம்பிகளும், அவரவர் நண்பர்களுடன் நல்ல குடிபோதையில் மண்டபத்திற்கு அருகிலேயே நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். வழக்கமான வாய் சண்டை, கை சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, உள்ளூர் பசங்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்திருக்கிறது. அந்த நேரத்தில், எங்கிருந்த வந்ததென்றே யாருக்கும் தெரியாமல், மாப்பிள்ளையின் தம்பி கையில் அரிவாள் வந்திருந்தது. இப்போது, நிலைமை மாறி, எல்லோரும் தப்பி ஓடத் துவங்க, துரத்தில் அருகிலிருந்த திருமண மண்டபதிற்குள்ளே வந்து முடிய, சரியாக மணமேடையின் கீழே மாப்பிள்ளையின் தம்பி, பெண்ணின் தம்பியையும், அவனது நண்பர்களையும் கண்ட இடங்களில் வெட்டியிருக்கான்!
இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமால், பர்மா குனிந்து இரத்தம் தோய்ந்த அந்தக் கருங்கல் தரையையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது நானும், ஶ்ரீகாந்த்தும் முழுதுமாக வியர்வையில் நனைந்திருந்தோம். எனது உடல் லேசாக நடுங்கியது இன்னமும் எனக்கு நினைவிலிருக்கிறது.
அப்புறம் என்னாச்சு? எங்கே அவங்க? என்றேன் பர்மாவிடம்!
ரத்த காயம் பட்ட இரண்டு பேரை, ஒரு லோடு வேனில், வெளியே ஒரு குடோனிலிருந்த கூலியாட்கள் சிலர், ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர். பெண்ணோட தம்பிக்கு முதுகில வெட்டு! அவன் இன்னும் ஆளை கூட்டி வர போயிருக்கான். மீதி இருந்த பசங்க எல்லாம் கல்யாண மண்டபத்தில இத்தனை ரத்தத்தைப் பார்த்தவுடன் தலை தெறிக்க ஓடி விட்டார்கள் என்றான்.
இத்தனை களேபரத்தில், நீங்க மட்டும்தான் இங்கே இருக்கீங்க! மற்ற பேரெல்லாம் எங்கேடா?
நல்ல வேளையாக, அவங்களுக்கெல்லாம், மாடியில் பின்பக்கத்து அறைகள்! யாருக்கும் இந்த சத்தம் கேட்கலை போலிருக்கு! எல்லாம் இன்னமும் தூங்கிட்டுதான் இருக்காங்க. நாந்தான் போய், மாப்பிள்ளையை மட்டும் தனியா எழுப்பி அழைச்சிட்டு வந்தேன் என்றான் பர்மா.
சரி! பெண்ணோட அப்பா, பையனோட அப்பாவெல்லாம் எங்கே? அவங்களுக்கு இங்க நடந்தது எல்லாம் தெரியுமா?
இன்னும் தெரியாது! பெண்ணோட அப்பா, அவங்க வீட்டில இருக்காரு! இவனோட அப்பா நம் ஹோட்டலில்தான் தூங்கிக் கொண்டிருக்கார். இவன்தான், முதலில் உங்ககிட்ட விஷயத்தை சொல்லச் சொன்னான் என்றான்.
ஏண்டா? உங்கப்பாவுக்கு சொல்லாம எப்படிடா இருக்க முடியும்? என்று மாப்பிள்ளையிடம் கேட்டதற்கு, என் கையைப் பிடித்துக் கொண்டு, அவருக்கு மட்டும் இது தெரிஞ்சா என் தம்பியை இங்கேயே வெட்டி சாய்ச்சுபுடுவாருடா! ப்ளீஸ்! நீதான் ஏதாச்சும் ஐடியா பண்ணனும்டா என்று கெஞ்சினான்.
உன் தம்பியை வெட்டி சாகடிப்பதுதாண்டா உண்மையிலேயே நல்ல ஐடியா என்றான் ஶ்ரீகாந்த்!
எனக்கு சட்டென்று, அவன் ஞாபகம் வந்தது. அந்த நாய் எங்கேடா? என்றேன் பர்மாவிடம்.
இங்கேதாண்ணே, தாம்பூலப் பை மூட்டைங்க நடுவே படுக்க வச்சுருக்கேன். ரூமைப் பூட்டி சாவி எங்கிட்ட தான் இருக்கு! ஒரு வேளை, உள்ளூர்காரங்க அரிவா, கம்போட வந்து அவனை கேட்டா என்ன பண்றதுன்னுதான் ஒரே பயமாக இருக்கு என்றான்.
சாவியை எங்கிட்ட கொடு! நான் அவனை மிதிச்சே சாகடிச்சுடுறேன் என்றான் ஶ்ரீகாந்த்.
ஒரு கணம் யோசித்தேன். அடிபட்டவர்களை அரசு மருத்தவமனைக்குத்தான் அழைத்துச் சென்றிருப்பார்கள். எப்படியும் இது போலீஸ் கேஸ்தான். ஆனால், அதெல்லாம் நாளை காலைதான். நல்ல வேளையாக பெண்ணோட தம்பி உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை! சமாளிப்போம் என்று முடிவெடுத்தேன். அந்த நேரத்தில் மாப்பிள்ளையின் தம்பி விழித்துக் கொண்டு, பூட்டியிருந்த அந்த பெரிய கதவை திறக்கச் சொல்லி உள்ளிருந்து உதைத்துக் கொண்டிருந்தான்.
ஶ்ரீகாந்த், நீ காரிலேயிருந்து நம்ம சரக்கை எடுத்து, உள்ளே போய் அவனுக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்து அங்கேயே தூங்க வை என்றேன். கரெக்ட்! எனக்கும் ரெண்டு பெக் போட்டாதான் ஒழுங்கா மூச்சு விட முடியும் என்றபடி, சென்றான்.
பர்மா! நீ என்ன பண்ணுவியோ தெரியாது! உள்ளூர்காரன் யாரையாவது கூட கூட்டிக்கோ! எப்படியாவது அந்தப் பையனைப் பிடிச்சு தடுத்து நிறுத்தப் பாரு! மண்டபத்துக்கு போலிஸ் வந்தாச்சுன்னு சொல்லு! கூட இருக்கும் பசங்க அதுக்கு பயப்படுவாங்க! அப்படியே, அவனை அவன் வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு, கேட்டுக்கு வெளியிலேயே படுத்துக்கோ! எக்காரணத்தை கொண்டும், இன்னைக்கு ராத்திரி அவன் மறுபடியும் இந்த மண்டபத்துக்கு வரக் கூடாது என்று சொல்லியனுப்பினேன்.
மாப்பிள்ளையிடம், நீ போய் தூங்குடா! இங்க நடந்தது எதுவுமே உனக்குத் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்க வேண்டாம். எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம் என்றேன்.
அந்த மண்டபத்தின் அலங்கோலத்தைப் பார்த்தபடி, எப்படிடா? என்றான்.
அதை நான் பார்த்துக்குறேன்! நீ போய் தூங்கு என்று அவனை அனுப்பி வைத்தேன்.
சற்று நேரத்தில் அங்கே மீதமிருந்தது, நானும், மண்டபத்தில் வேலை செய்யும் ஒரு பாட்டி மட்டுமே. நான் எதுவும் சொல்லாமலேயே, பாட்டி, அங்கே சிதறிக் கிடந்த நாற்காலிகளை எடுத்து வைக்கத் துவங்கினார்.
எல்லா நாற்காலிகளையும், ஒழுங்கு வரிசையாக போட்டு விட்டு, உடைந்து கிடந்த சில நாற்காலிகளை மட்டும் அங்கிருந்த அப்புறப் படுத்தினோம். அதே நேரத்தில், ஶ்ரீகாந்தும் திரும்பி வர, நாங்கள் மூவரும் தரையிலிருந்த இரத்தக் கறைகளை கழுவத் துவங்கினோம். மண்டபத்தின் பின்கட்டிலிருந்த கிணற்றுத் தண்ணீரை பாட்டி, ஒரு வாளியில் சேந்திக் கொடுக்க, அதை இன்னொரு பக்கெட்டில் கொண்டு வந்து ஶ்ரீகாந்த் மண்டபத்தின் தரையினில் வீசியடிக்க, அங்கிருந்த ஒரு தென்னந் துடைப்பத்தில், அந்த இரத்தக் கறையை தேய்த்து கழுவி விட்டேன். பிறந்ததிலிருந்து, இன்று வரை வேறெந்த சந்தர்ப்பத்திலும், துடைப்பத்தை தொட்டுக் கூட இராத எனக்கு, ஒரு திருமணத்திற்கு விருந்தாளியாக போயிருந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது!
அந்தக் கால கருங்கல் தரையும், தூண்களையும் கொண்ட ஒரு சிறிய மடம் அது. பெரிய செல்வந்தர் குடும்பமாக இருந்தாலும், குடும்ப வழக்கம் கருதி அந்த சின்ன மண்டபத்தில் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். தண்ணீர் அப்படியே எங்கெங்கோ அமைக்கப் பட்டிருந்த வடிநீர் கால்வாய்களின் வழியே சென்றோடி மறைந்தது. ஓரளவு சுத்தமாகி விட்டது என்று எங்களுக்கு திருப்தியான பின்பு, கையில் கிடைத்த துணிகளால் ஒரு முறை தரையினை துடைத்து முடித்தோம்.
உடலெங்கும் வியர்வையும், தண்ணீரும் பட்டு வழிந்து கொண்டிருக்க, அப்படியே மண்டபத்தின் வாசலில் அமர்ந்து ஒரு சிகரெட் பிடிக்கும் போது, மணமேடையை அலங்கரிக்க பூக்களுடன் சிலர் ஒரு வண்டியில் வந்திறங்கினர்.
நானும், ஶ்ரீகாந்த்தும் அப்படியே மூச்சைப் பிடித்து அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் நேராக சென்று மணவறையில் பூக்களை இறக்கி, அலங்கரிக்க ஆரம்பித்தனர். ஶ்ரீகாந்த் முதல் முறையாக என்னைப் பார்த்து புன்னகைத்து, கலக்கிட்டோம்டா! என்றான். எவ்வளவு வற்புறுத்தியும், அந்தப் பாட்டி எங்களிடமிருந்து எந்தப் பணத்தையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
நானும், ஶ்ரீகாந்தும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல், எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம். எப்போது தூங்கினோம் என்று நினைவில்லை. எழுந்திருக்கும் போது மதியத்தைத் தாண்டியிருந்தது. இளங்கோ அமர்ந்து கொண்டு செய்திதாளை படித்துக் கொண்டிருந்தான்.
என்னைப் பார்த்து, என்னடா ஆச்சு உங்களுக்கு? எவ்ளோ நேரம் எழுப்பிப் பார்ப்பது? நாம கல்யாணத்துக்கு போக வேண்டாமா? என்றவுடன் தான், எனக்கு காலையில் நடக்கவிருந்த கல்யாணமே நினைவுக்கு வந்தது. எழுந்து வெளியே ஓடிச் சென்று பார்த்தேன். கீழே ஒரு வேனில், மண்டபத்திலிருந்து சில குடும்பங்கள் வந்திறங்கிக் கொண்டிருந்தது. யாரிடம் சென்று என்னவென்று கேட்க?
ஶ்ரீகாந்தையும் எழுப்பி அழைத்துக் கொண்டு, வெறுமனே முகம் கழுவி கொண்டு, ரூமையும் காலி செய்து கொண்டு காரில் மண்டபத்துக்கு சென்றோம். வாசலிலேயே, நாற்காலிகளை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தனர். காரை மண்டபத்திலிருந்து தள்ளி நிறுத்தி விட்டு, நான் மட்டும் இறங்கி மெதுவாக மண்டபத்தின் அருகே சென்றேன். முதல் திண்ணையில் பர்மா படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனை சிரமப்பட்டு எழுப்பினேன். என் குரல் கேட்டு ஒரு வழியாக எழுந்தவன், என்னை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
என்ன ஆச்சு பர்மா? அழாதேடா! என்ன ஆச்சு? என்றேன்.
கல்யாணம் நடந்து முடிஞ்சாச்சு அண்ணே! என்று சொல்லி முடித்தவன் இன்னமும் சத்தமாக அழ ஆரம்பித்தான். நானும் கூட பதற்றம் தணிந்து ஆசுவாசமடைந்தேன். அப்படியே அவனை காருக்கருகில் அழைத்துச் சென்று, இந்தப் பசங்க என்ன ஆனாங்க? என்று கேட்டேன்.
அதுதாண்ணா ஆச்சரியம்! ஓண்ணுமே நடக்காத மாதிரி, காலையிலிருந்து இரண்டு பேரும் இங்கதான் இருந்தானுங்க! அதுவும் பக்கத்துப் பக்கம் உட்கார்ந்து கொண்டு! என்றான்.
இங்க யாருடா மடையனுங்க? அவனுங்களா? இல்லை நாமளா? என்றான் ஶ்ரீகாந்த்!
மாப்பிள்ளை காலையிலிருந்து உங்களைத்தான் கேட்டுட்டே இருந்தாண்ணே! வீட்டிலதான் இருக்காங்க! அங்கே போகலாம் வாங்கண்ணே.
எனக்கு அந்தக் கணம் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றால் போதும் என்று இருந்தது. பர்மாவிடம், நான் அப்படியே திருச்செந்தூருக்கு போய் விட்டு, திரும்ப ஊருக்கு போகும் போது மதுரைக்கு வந்து பார்க்கிறேன் என்று அவனிடம் சொல் என்று கூறி விட்டு காரில் ஏறினேன். காரை நகர்த்தும் போது, எனது கையைப் பிடித்து, நீங்கள் இல்லையென்றால் இந்தக் கல்யாணம் நடந்து இருக்காதுண்ணே! எப்பவும் நான் இதை மறக்க மாட்டேன் என்று சொல்ல, அந்த ஊரை விட்டுக் கிளம்பினேன்.
என்னடா? கல்யாணத்தையே நீங்கதான் நடத்தி வச்ச மாதிரி பேசறான் பர்மா? ராத்திரி என்ன ஆச்சு? என்றான் இளங்கோ.
சொல்றேன்! முதல்லே நாம எங்க போலாம்னு சொல்லுங்க.
நாம குளிக்க மூணு கடல் தண்ணி வேணும்டா! நேர கன்யாகுமரிக்கு போ! என்றான் ஶ்ரீகாந்த். காரை கன்யாகுமரி நோக்கித் திருப்பினேன்.
பயங்கர நாத்தம் அடிக்குது! உங்க மேலிருந்தா? வண்டியிலிருந்தான்னுதான் தெரியலை என்றான் இளங்கோ.
எனக்கும், ஶ்ரீகாந்துக்கும் வாசனை கண்டு பிடிக்கும் மனநிலை இல்லை. வண்டியை ஒரமாக நிறுத்து! பின்னாலிருந்து கொஞ்சம் சரக்கை எடுத்துக் கொள்கிறேன் என்று இளங்கோ சொல்ல, ஒரு பெரிய மர நிழலில் காரை நிறுத்தினேன். நாங்கள் இருவரும், கீழே இறங்கி உடல் வளைத்து சோம்பல் முறிக்கும் வேளையில், கார் பின்புறக் கதவை திறந்த இளங்கோ, ஒரு பெரிய துணிக்குவியலை எடுத்து, என்னடா இது? என்றான்.
பின்புறம் சென்றுப் பார்த்தேன். இரவு, மண்டபத்தைக் கழுவி முடித்தப் பின்பு துடைத்த துணி அது! எப்படி, யார் கொண்டு வந்து காரில் கொண்டு வைத்தோம் என்பது எங்கள் இருவருக்குமே நினைவிலில்லை! இந்த மாதிரி கழிசடையெல்லாம் காரில் கொண்டு வைத்தால், நாத்தமடிக்காமல், மல்லிகைப் பூ வாசமா அடிக்கும் என்றபடி, அந்தத் துண்டைக் கீழே போட்டான். அதிலிருந்து ஏதோ துள்ளிக் கொண்டு வெளியில் வந்து விழ, இளங்கோ கீழே குனிந்து அதை தன் கையில் எடுத்து, என்னிடம் இது என்னன்னு பாரு? என்றான்.
அது துண்டிக்கப்பட்ட ஏதோ ஒரு விரல்!