SKP Karuna

Karuna Thoughts

ராயல் சல்யூட்

 

பாரதி மணி என்றொரு சுவாரஸ்யமான தமிழர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் எனும் செய்தியை பெரும்பான்மைத் தமிழர்கள் அறியாமலேயே இந்தக் காலத்தேர் உருண்டு போகிறது. ஒருவேளை தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சராக (பாபா) வருவாரே! அவர்தான் என்றால் கூடுதலாக மேலும் சிலர் அறியக் கூடும்.

நான் சந்தித்துப் பழகிய வெகு சில பன்முகத் திறமையாளர்களுள் பாரதி மணி ஒருவர். இசை, இலக்கியம், சமையல், பயணம், மனிதர்கள் என எதைக் குறித்தும் அவருடன் நாளெல்லாம் பேசலாம். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுத்தாளராக உருவெடுத்து இவை அனைத்தையும் எழுத்தில் பதிவும் செய்து விட்டுப் போனதில் அவரது வாழ்வு சாகா வரம் பெற்று விட்டது. காலம், பாரதி மணிக்கு அமைத்துக் கொடுத்த சந்தர்ப்பங்கள் நம்ப முடியாத காவியத் தன்மை வாய்ந்தது.

தென் கோடி குமரியில் இருந்து தனது 21 வயதில் டெல்லிக்கு சென்றவர் தனது பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பியிராவிட்டால் அவைகள் ஒன்று கூட பதிவாகி இருந்திருக்காது. அவரது பணி நிமித்தம் அறிமுகம் ஆகும் பிர்லாவுக்கு முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போக பிர்லா ஹவுஸில் சேர்மனின் அலுவல் தொடர்பாளராக இணைகிறார். அந்த இடத்தில் இருந்து அவர் பார்த்த உலகம் அதிகார மையத்தின் அதிசய பக்கங்கள். எடுத்தவுடன் அதில் இணைந்து விடும் அவருடைய அனுபவத் தொகுப்புகள் நிச்சயம் சிண்டிரல்லா தேவதைக் கதைகளுகு ஒப்பானவை.

டெல்லியில் மறைந்து வாழ்ந்த வங்கதேசத் தந்தை முஜீபுர் ரஹ்மான் மகள் ஷேக் ஹசினா குடும்பத்துக்கு டாக்காவில் இருந்து ஹீல்சா மீன் வாங்கி வருமளவு நெருக்கமான நண்பராக இருந்து உள்ளார். பின்னாளில் வங்கதேச அதிபர் ஆன ஷேக் ஹசினா பாரதி மணியை மோனி தாதா என்றே அழைப்பாராம்!

ஒரு நாடக விழாவின் இறுதியில் நண்பர் ஒரு பெண்ணை அழைத்து வந்து, இந்தப் பெண் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவி. இவருக்கு ஏதோ விசா பிரச்சனையாம்! கொஞ்சம் உதவி செய்ய முடியுமா என கேட்டவுடன் அப்பெண்ணை உடன் அழைத்துச் சென்று மூன்றாண்டு விசா நீட்டிப்பு செய்து தருகிறார். அந்தப் பெண் பின்னாளில் மியான்மரின் பிரதமர் ஆன நோபல் பரிசு பெற்ற ஆங் கான் சுகி.

எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திராவின் தனிச்செயலாளர் அறையில் அமர்ந்திருக்கிறார். செயலாளரை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதாகத் திட்டம். பிரதமர் ஒரு கோப்பில் கையொப்பம் இட்டவுடனே தான் வர முடியும் என சொல்ல, என்ன பெரிய கையெழுத்து! நான் போடுகிறேன் பார் என ஒரு பேப்பரில் பிரதமரின் கையெழுத்தை அச்சு அசல் அப்படியே போட, பின்னால் இருந்து அந்தப் பேப்பரை பிடுங்கிப் பார்க்கிறார் இந்திரா. அட! அப்படியே என்னோட கையெழுத்தைப் போலவே இருக்கே! இனிமே நான் வெளியூர் போனால் மணி இடமே கையெழுத்தை வாங்கிடுங்க என்கிறார் சிரித்துக் கொண்டே! அப்படியே செக் புக்கையும் தரச் சொல்லுங்க இந்திராஜி என்கிறார் இவர்.

திரைப்படங்களுக்கான தேசிய தேர்வுக் குழுவுடன் இருக்க நேர்கிறது. அந்த ஆண்டின் சிறந்த படமாக ஒரு வங்காளிப் படத்தை தேர்வு செய்ததை அறிகிறார். ஆனால், அதே ஆண்டில் வெளிவந்து விருதுப் போட்டியில் கலந்து கொண்ட செம்மீன் எனும் மலையாளத் திரைப்படம் அதைக் காட்டிலும் சிறந்தது என்பதை பாரதி மணி அறிவார். தேர்வுக் குழுத் தலைவர் ஒரு வங்காளி. அவரிடம் பேசிப் பயனில்லை. வெளியே வந்து தனது ப்ரஸ் பீரோவின் தலைவரான தனது நண்பரை அழைக்கிறார்.

அவருக்கு மட்டும் செம்மீன் படத்தையும், அந்த வங்காளப் படத்தையும் தனிப்பட்டக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்து பார்க்க வைக்கிறார். பிறகு நடந்தது ஒரு மேஜிக். தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் விமர்சிக்கப் படுகின்றன. மீண்டும் திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன. விந்திய மலைக்கு தெற்கே உள்ள மொழி திரைப்படங்களில் முதன்முதலாக மலையாளத் திரைப்படமான செம்மீன் திரைப்படத்துக்கு அந்த ஆண்டின் தேசிய விருது கிடைக்கிறது. இத்தனைக்கும் பாரதி மணிக்கு செம்மீன் படக்குழுவில் அதுவரையில் யாரையும் தெரியாது.

ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தின் அருகே எப்போதும் தங்குவதற்கென சொந்தமான சொகுசு அறை, தில்லியில் பணிக்கு வரும் தமிழர்கள் யார் மரணம் என்றாலும் பாரதி மணி முன் நின்று அடக்கம் முதல், இறப்புச் சான்றிதழ் வரையில் செய்து தந்த தொண்டுகள், அடிமைப் பெண் படபிடிப்புக்கு லொகேஷன் பார்க்க வந்த எம்.ஜி.ஆருக்கு உடன் இருந்து உதவியது, எப்போது சிவாஜி கணேசன் தில்லிக்கு வந்தாலும் அவருக்கான ஸ்காட்ச் விஸ்கியுடன் அவர் ஊர் திரும்பும் வரை உடன் இருந்து கவனிப்பது, குருதத், தேவ் ஆனந்த் முதல் ஹேமமாலினி வரையிலான பாலிவுட் பிரபலங்களுடனான நட்பு என பாரதி மணியின் அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையுமே அவர் தனது புள்ளிகள் கோடுகள் கோலங்கள் தொகுப்பில் பதிவு செய்திருந்தாலும், அதில் பதிவாகாத பல சுவாரஸ்யமான விஷயங்களை தனிப் பேச்சில் எனக்குச் சொன்னது நான் பெற்ற பேறு. எனக்கும் அவருக்குமான உரையாடல்கள் எழுத்தாளர்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள் என பரந்துபட்ட வீச்சு கொண்டது. அவரே ஒரு நாடகக் கலைஞர் என்பதால் இறுதியாக அவருக்குப் பிடித்தமான சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகத்தை நடத்திட விரும்பினார். அதுவும் பார்வையாளர்கள் யாரும் இன்றி. அவருக்காக அவரால் நடத்தப்படும் ஒரு நாடகம். நானும், நண்பர் பவா செல்லதுரையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தோம்.

அந்த நாளில், தனது குழுவுடன் மேடையேறி தில்லியில் அவரது நண்பர் பூரணம் விஸ்வநாதன் நடித்த அந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். எதிரே பார்வையாளர்கள் இடத்தில் நாங்கள் வெகு சில நண்பர்கள் மட்டும் கைத்தட்டி ரசித்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

பாரதி மணி ஓரு தனித்த ஆளுமை. வலது கையில் பைப், இடது கையில் ஸ்காட்ச் விஸ்கியுடன் அமர்ந்து கொண்டு அவர் பேசும் அந்த மாயக் கணத்தில் அவர் எதிரே ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மொரார்ஜி, இந்திரா, ராஜீவ், ராஜ்கபூர், எம்ஜிஆர், சிவாஜி, ஷப்தர் ஆஸ்மி, பிர்லா, அம்பானி என ஆளுமைகள் வந்து அமர்ந்து விட்டுச் செல்வார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்று நாயகர்கள் அத்தனைப் பேருடனும் பேசிப் பழகிய ஓர் அற்புதமான மனிதருடன் நாமும் பழகி உள்ளோம் எனும் அந்த உணர்வெழுச்சிக்கு ஈடில்லை.

போய் வாருங்கள் மணி சார். உங்கள் வாழ்வனுபவங்கள் உயிர்ப்புடனே இங்கிருக்கும்.

-எஸ்கேபி. கருணா

One thought on “ராயல் சல்யூட்

Leave a Reply

Your email address will not be published.